பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா, அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இருவரும் வெற்றி பெற்றிருந்தாலும், கார்த்திகா ஊடகம் மற்றும் சமூகவலைதள வெளிச்சத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம், அவரை உருவாக்கிய கண்ணகி நகர்.
சென்னை நகரின் நவீன வளர்ச்சிக்காக இலட்சக்கணக்கான மக்கள் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின்படி நகருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டுவந்தனர், அப்படி உருவானதுதான் கண்ணகி நகர். வாழ்விட மேம்பாடு எனப் பெயரிடப்பட்டாலும், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாதவை. நகரத்திலிருந்தும், அதன் உபரிப் பொருளாதாரத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட இந்த மக்களின் பாடுகள் குறித்து விரிவான கட்டுரைகள், ஆவணப்படங்கள், செய்திகள் ஆகியவை தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், பெரிய அளவிலான எந்த மாற்றத்தையும் செய்ய அரசுகள் முன்வரவில்லை என்பதே எதார்த்தம்.
இந்தப் பின்னணியிலிருந்து வந்த கார்த்திகா, கண்ணகி நகரைச் சேர்ந்த ரமேஷ் (சென்ட்ரிங் மேஸ்திரி) – சரண்யா (தூய்மைப் பணியாளர், ஆட்டோ ஓட்டுநர்) ஆகியோரின் மகளாவார். கண்ணகி நகரில் மட்டும் மொத்தம் பதினொன்று பேர் கபடிப் போட்டியில் பேர் பெற்றவர்கள். இவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். இன்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் இவர்கள் பயிற்சி செய்வதற்கு அடிப்படை வசதி கொண்ட இடம் என்று எதுவுமில்லை. திறந்தவெளி பூங்காவொன்றில் மண் தரையில் பயிற்சி செய்துவருகிறார்கள். அங்கு உடை மாற்றுவதற்கான வசதிகள் ஏதுமில்லாததால் வீட்டிலிருந்தே கபடி உடையை அணிந்து வருகிற சூழலில் வாழ்பவர்கள். மழைக்காலங்களில் விளையாட்டுப் பயிற்சி என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.
ஆசிய அளவில் வெற்றி பெற்று இன்று தங்கம் வென்றிருக்கிற நிலையில், அவரது பின்னணியும் சேர்த்தே இந்த சாதனை மதிப்பிடப்படுகிறது. கண்ணகி நகர் கார்த்திகா எனக் குறிப்பிடப்படுவதே தனக்குப் பெருமை, அதுவே தன் அடையாளம் எனச் சொல்கிறார் கார்த்திகா. கண்ணகி நகர் குறித்துச் சமூகவெளியில் இருக்கும் சித்திரத்தின் பின்னடைவுகளைச் சந்திக்கும் இரண்டாம் தலைமுறை இவர். அவர்களது பின்னடைவாக எது கருதப்படுகிறதோ அதையே ஆற்றலாக மாற்றி, அதைப் பிரகடனப்படுத்தியும் இருக்கிறார்.
கார்த்திகாவின் வெற்றியை முன்வைத்து இங்கு இத்தகைய உயரங்களைத் தொடுவதற்கான சூழல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கொள்ள முடியாது. ஒருவகையில் கார்த்திகா விதிவிலக்கு என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையில் எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்துப் பார்ப்பதின் வழியாகத்தான், திறமைகள் பல இருந்தும் உரிய இடத்தை அடைய முடியாத ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை நாம் வென்றெடுக்க முடியும்.
விளையாட்டு என்பதை அங்கீகாரம், வெகுமதி உள்ளிட்டவற்றுக்கு அப்பால், அடிப்படையில் குழந்தைகள், இளைஞர்கள் என எல்லோருமே விளையாடுபவர்களாக இருக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான புறச் சூழல் வேண்டும். பெரு நிறுவனங்களால் நடத்தப்படுகிற தனியார் பள்ளிகளே பெரும்பாலும் பெரிய மைதானங்களையும், அதிகமான விளையாட்டுச் சாதனங்களையும் கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பு மாநகராட்சிப் பள்ளிகளுக்குக் கிடையாது. இந்தச் சூழல் களையப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் பெருமளவு கிடைக்கப்பெறுவதற்கான வாய்ப்புகளை மைய / மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். மைதானங்களை உருவாக்குவதில் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கடந்த நாற்பதாண்டுகளில் தலைகீழாக உருமாறி நிற்கும் இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் குழந்தைகள், இளைஞர்கள் கூடி விளையாடும் இடம் என்று ஒன்று இல்லாமலே போய்விட்டது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் எப்போதும் இல்லாத அளவு குடி கலாச்சாரம் உருவெடுத்து, தற்போது கஞ்சா உள்ளிட்ட இன்னபிற பெயர் தெரியாத போதை வஸ்த்துகள் தெருவெங்கும் புழங்கி, பள்ளிகளில் சகஜமாகக் கிடைக்கும் அபாயகரமான இடத்தை அடைந்திருக்கிறது. இந்த இரண்டு மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்கிறது.
போதையை ஒழிப்பதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் அண்மைக் காலமாக அரசுகள் செய்யும் செலவீனங்கள் முன்னெப்போதும் இல்லாதவை. எதன் பொருட்டு இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக அரசுகள் அணுகியிருந்தால் இளைஞர்கள் கூடி விளையாடுவதும், அத்தகைய சூழல் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதும் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றெனத் தெரிந்திருக்கும். ஆகையால் விளையாட்டு என்பதை வெற்றி, மாநில பெருமை, பதக்கங்கள் என்பதாக மட்டும் அல்லாமல், அவை பண்பாட்டு ரீதியாக பரவலாக்கப்பட வேண்டும். விளையாட்டுத்துறையில், குறிப்பாக கபடி, கால்பந்து, கேரம் ஆகிய விளையாட்டுகளில் சாதிப்பவர்கள் பெருமளவு விளிம்புநிலைச் சமூகத்தவராகவே இருக்கிறார்கள். எவ்வளவு வசதி, வாய்ப்பு, திறமை இருந்தாலும் இந்தியாவின் விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் உண்மையான அரசியலை விட குரூரமானது. இதையெல்லாம் எதிர்கொள்ள இருப்பவர்களுக்குக் குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளை அதிகரித்து தமிழகத்தின் விளையாட்டுத்துறையைப் பிரமாண்டமான வாய்ப்பாக மாற்ற வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு அதற்கான சூழல் உருவாக்கித் தரப்பட வேண்டும்.
கால்பந்து – Senior National Championship போட்டியில் ஆண்கள் பிரிவில் இதுவரை நாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால், பெண்கள் பிரிவில் இரண்டுமுறை வெற்றி பெற்றிருக்கிறோம். 2024இல் பதினேழு வயதிற்குட்பட்ட பிரிவில் (School Games Federation of India) தேசிய அளவில் நடந்த போட்டியில் கண்ணகி நகரைச் சேர்ந்த காவியா மற்றும் சுஜி தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜூனியர் நேஷனல் கபடி போட்டியில் கார்த்திகா மற்றும் சுஜி இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான Khelo India போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய கண்ணகி நகர் கபடி வீராங்கனைகள் சுஜி, கார்த்திகா, காவியா, அபிநயா ஆகியோர் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
தொடர்ந்து சாதிக்கும் இந்த இளம் மனங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்த வெற்றி இன்னும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கும், அவை வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு நவீன சமூகத்தில் உருப்பெறும் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவும் பயன்படும்.
இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் வெற்றி பெற்று, தன்னை ‘கண்ணகி நகர் கார்த்திகா’ என அடையாளப்படுத்திக்கொள்ளும் கார்த்திகாவின் வெற்றி உண்மையில் அவரது வெற்றி மட்டுமே அல்ல. அவர் பல இளைஞர்களின் வினையூக்கி. பல மணிநேர பிரச்சாரங்கள் சமூகத்தில் நிகழ்த்த முடியாத மாற்றத்தை கார்த்திகா போன்றவர்களின் வெற்றி நிகழ்த்தும். அதற்கான சூழலை அரசும், இதன் முக்கியவத்துவம் அறிந்த ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும்.
வீராங்கனை கார்த்திகா, அவரது பெற்றோர் சரண்யா, ரமேஷ் மற்றும் அவரது பயிற்சியாளர் ராஜ் உள்ளிட்டவர்களுக்கும், கண்ணகி நகர் மக்களுக்கும் நீலம் தனது உணர்வுப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய்பீம்.




