கடந்த வருடம் செங்கல்பட்டு பகுதியில் டாஸ்மாக் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவுக்கும் மது வாங்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “டாஸ்மாக்கில் மதுபானங்கள் பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது, அதைத் தட்டிக் கேட்காமல் எங்களை ஏன் மிரட்டுகிறீர்கள்” என்று மது வாங்க வந்தவர் கேட்க, அவரைத் தலையிலும் கன்னத்திலும் அடித்து விரட்டினார் அந்த உதவி ஆய்வாளர். அவரது உடல் மொழியில் வெளிப்பட்ட ஆணவம், அதிகாரம் மிக மோசமானது. ‘மது வாங்க வந்தவரை இவ்வளவு மோசமாக நடத்துகிறோம், அது மொபைல் கேமராவில் படம்பிடிக்கப்படுகிறது’ என்கிற அடிப்படை எச்சரிக்கை உணர்வு கூட இல்லாத அளவு அவரது உடல்மொழி வெளிப்பட்டிருக்கிறது.
இந்த ஆணவம் எங்கிருந்து வருகிறது? காவல்துறையினருக்கு வழக்கமாக இருக்கும் அதிகார வரம்பு மீறல் என்கிற அளவில் மட்டுமே இதைப் பார்த்துவிட முடியுமா? சமூகப் படிநிலையில் இயல்பாகவே சிலர் மீது அதிகாரம் செலுத்தப்படுகிறது. அந்த அதிகாரம் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படக் கூடிய அதிகாரத்திற்குச் சமூகவெளியில் அங்கீகாரமும் தார்மீக நியாயத் தோற்றமும் கிடைக்கிறது. சமூகம் கொடுக்கும் இந்தச் சலுகைகளிலிருந்துதான் சட்டம் கொடுக்காத ஓர் அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்கிறோம். இதில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் மீது இந்தச் சமூகமும் அரசும் எடுத்துக்கொள்ளும் ஏளனம் வன்முறையின் உச்சம்.
‘மது அருந்துபவன், மதுபான கடைக்கு வந்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது?’ என்கிற எண்ணம்தான் அந்தக் காவல்துறை ஆய்வாளருக்கு இருக்கிறது. ஏனெனில், மதுபானக் கடையில் மரியாதைக்கு என்ன வேலை என்பதாகத்தான் டாஸ்மாக் குறித்தும், மது அருந்துவோர் குறித்துமான பொது உளவியல் இங்கு நிலவுகிறது.
ஒரு சமூகத்தில் மதுவிலக்கு வேண்டுமா வேண்டாமா? அதனால் விளையும் தீங்கு, அதைத் தடுப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட விவாதங்கள் நெடியவை. மதுபானங்கள் சமூகத்தின் அங்கமாக இருக்கின்றன, அவை புழக்கத்தில் இருக்கும்போது அதன் விளைவுகளை மட்டுமே நாம் பேச முடியும். ஒவ்வோர் ஆண்டும் தமிழக மதுவிற்பனை வருமானம் கூடிக்கொண்டே போகிறது. ஓராண்டு இடைவெளியில் மது விற்பனை இலாபம் இரண்டாயிரம் கோடி அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் பெரும் மூலதனத்தைக் குறிவைத்து மதுபானக் கடைகளை அரசே நடத்தும்போது, அதனால் எதுவுமே கிடைக்காததைப் போல இருப்பதும், சமூகத்தில் குடிப்பழக்கம் இருப்பதை அரசு விரும்புவதில்லை என்பதைப் போல காட்டிக்கொள்வதுமே கூட பாவனைதான். இதுவொருபுறமிருக்க, கள்ளச்சாராய விற்பனையை அரசு கண்காணித்து தடுக்க மட்டுமே முடியும், அதன் தரம் குறித்து அரசு எந்த இடையீடும் செய்ய முடியாது. ஆனால், தமிழ்நாடு அரசால் விற்கப்படும் மதுபானங்களின் தரம் குறித்தே அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
தமிழ்நாட்டில் பல லட்சம் உழைக்கும் வர்க்கத்தினர் அருந்தும் மதுபானங்களின் பெயர் கூட யாருக்கும் தெரியாது. விலைதான் பெயராக இருக்கிறது. அவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன? அவற்றின் தரம் என்ன? உற்பத்தி மதிப்பு, சந்தை மதிப்பு என எவையுமே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. குடிப்பவருக்கும் இதுகுறித்து யோசிக்க நேரமில்லை, அரசுக்கும் அக்கறையில்லை.
தமிழகத்தில் டாஸ்மாக் வந்த பிறகு கடந்த இருபது வருடங்களாக உருவாகியிருக்கும் குடிக்கலாச்சாரம் குறித்துச் சமூக ரீதியாக ஆராய வேண்டும். சமீப ஆண்டுகளாக அதிகரித்துவரும் போதை பழக்கங்களும் இதனுடன் தொடர்புகொண்டவை என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய மரணம் குறித்த சட்டமன்ற விவாதத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அரசு மதுபானத்தில் போதை இல்லாததால் கள்ளச்சாராயத்தைக் குடிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இது மட்டுமே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசு விற்கும் தரமற்ற மதுவை தொடர்ந்து குடித்ததின் விளைவாக, அந்தப் போதை பழக்கமாகி அடுத்தகட்ட போதையை நோக்கி கடும் குடிப்பழக்கம் கொண்டோர் போயிருக்கலாம். இந்தக் கோணத்திலும் அரசு சிந்திக்க வேண்டும்.
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குக் கருப்பு வெள்ளையாகத் தீர்ப்பெழுத வேண்டுமானால் மதுவிலக்கு ஒன்றே தீர்வு என்று சொல்லலாம். ஆனால், அது சாத்தியப்படுமா, அப்படிச் சாத்தியப்பட்டால் அதன் விளைவுகள் என்னவென்பது ஆய்வுக்குட்பட்டது. எப்படியாயினும் அது உடனடியாக நடக்கப்போவதில்லை. அதற்கிடையே கோடிக்கணக்கில் மது வாங்குவதும் அதை விற்பதும் மட்டுமே அரசின் வேலையல்ல. அரசின் தலையாய பணி அவற்றைக் கண்காணிப்பது. மது விற்கப்படுகிறது, குடிக்கப்படுகிறது, உடல் சிதிலமைடைகிறது என்கிற தட்டையான பிரச்சினை அல்ல இது. இதற்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளை ஆராய வேண்டும். சமூக அமைப்பில் நிகழ்ந்த எந்த மாற்றத்தால் இது நிகழ்ந்தது என்கிற அக்கறையோடு அணுகுவதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும். தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகளுக்கு அஞ்சி அவசர அவசரமாக நிவாரணம் அறிவிப்பதைப் போல செய்துவிட்டு அடுத்த வேலையை நோக்கிப் போவது அரசினுடைய வேலையல்ல.
இந்தப் பொறுப்புணர்ந்து செயல்பட்டிருந்தால் கடந்த வருடம் மரக்காணத்தில் 17 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோனபோதே அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியும். கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மதுபானத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைகிறவர்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்பட மாட்டார்கள், அவை எண்ணிக்கையிலேயே சேராது. கடந்த ஓராண்டில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் 80 பேர் மட்டுமல்ல. வீட்டிற்குச் சராசரியாக இரு குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால் கூட 160 குழந்தைகளின் எதிர்காலம் என ஒரு தலைமுறையே இதனால் அழியக்கூடிய வாய்ப்புள்ளது.
வரலாற்று காலந்தொட்டு மது சமூகத்தின் அங்கமாய் இருக்கிறது. ஆனால், அவை ஒரே போல, ஒரே தன்மை கொண்டு, ஒரே காரணத்திற்காக அருந்தப்பட்டதில்லை. காலத்திற்குக் காலம் வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக உருவாகிவரும் போதைக் கலாச்சாரம் என்பது வழக்கமான ஒன்று அல்ல, இதை அரசு தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘இதையெல்லாம் தெரிந்தே செய்கிறவர்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்கிற குடிக்கலாச்சாரத்தின் மீது சமூகத்தில் நிலவும் பொது எண்ணத்தையே மூலதனமாக வைத்து இலாபம் ஈட்டாமல், அவர்களை மோசமாக நடத்தாமல், அவர்கள் குறித்த அக்கறையோடு அரசு இயங்க வேண்டும்.