பாடப்புத்தகத்தில் புதிர்ப்பாதையின் கீழிருக்கும் நாய்க் குட்டி அதன் வீட்டை மறந்துவிட்டதாகவும் அதற்கு வழிகாட்டுமாறும் ஆசிரியர் சொன்னார். அவன் நன்கு உற்றுப் பார்த்தான். நாய்க்குட்டி அவனைப் போலவே இருந்தது. “ஐ… நான் நாய்க்குட்டி நாய்க்குட்டி” என்று கத்தினான். எல்லோரும் அவனையே பார்க்க ஆசிரியர் கரும்பலகை அழிப்பானை எறிந்தார். பவுடர் அப்பிய முகத்தில் நீரொழுக எழுந்து சென்றான்.
அடுத்த நாள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் பாதை அவனுக்குச் சுத்தமாக மறந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் நினைவில் வரவில்லை. அவனது அம்மா அவனுக்கான சரியான பாதையை வரைந்து உதவுவதாகச் சொன்னாள். அப் பாதையைப் பின்பற்றிச் சென்றதில் அது ஒரு லாரிப் பட்டறையில் போய் முடிந்தது. அங்கிருந்து கெண்டைக்காலை முத்தமிடப் பறந்துவந்த சுத்தியலிடமிருந்து நாசூக்காக விலகி மீண்டும் வீடு நோக்கி நடந்தான். அவன் வருவதற்கு முன்பே வீடு அங்கிருந்து காலி செய்து கிளம்பிவிட்டது. அல்லது அவன் இம்முறை வீட்டுக்கான பாதையையும் மறந்துவிட்டான்.
♣
ஏசு
எல்லாப் பாவங்களையும்
இரத்தத்தால்
கழுவுவார் என்று
முப்பது வருடங்களாகக் கூறும் அம்மா
இன்னும்
பாத்திரம் கழுவ
நான்கு தெரு தள்ளிப் போய்தான்
நீர் சுமந்து வருகிறாள்
பாவத்தோடு சேர்த்துப்
பாத்திரங்களையும் கழுவினால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
எனக் கேட்கையில் சொல்கிறாள்
“சாத்தானே
அப்பாலே போ.”
♣
அப்பா என்றெழுதிக்
கண்ணீரால்
கிரீடம் வரைந்த மகளுக்கு
என் பற்களைக் கோத்துப்
பாசி மாலையெனத் தந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
மகளுக்குப் பிடிக்காது எனினும்
வாழ்க்கைக்குப் பிடிக்கும்
என்னைப் பொக்கை வாயோடு பார்ப்பது.
♣
பகல் முழுக்க
எங்கு சுற்றினாலும்
இரவு வீட்டுக்கு வந்துவிடும்
அன்புமிகுக் கொசுக்கள் பசியாற
குச்சிக் கிழங்கு போன்ற
எங்கள் கால்களும்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற
எங்கள் குழந்தைகளின் கால்களும்
தயாராகவுள்ளன.