மண்மேடாகக் கிடக்கும்
இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன்
திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும்
உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம்
அவர் கம்பீரத்தின் சின்னம்
பானை ஓடுகள் உடைந்து மூடிக்கிடக்கும் அடுப்பங்கரைதான்
அம்மா விழி மூடாமல் உழைக்கும் உலைக்களம்
வீட்டின் மீது சாய்ந்து கிடக்கும் கூரைகளைக் கேட்டால்
வாழ்க்கை முழுவதும் எங்களுக்காகவே வாழ்ந்த
என் அம்மாவின் வலிகளைச் சொல்லிக்கொண்டேயிருக்கும்
கேட்பாரற்றுக் கிடக்கும் தேக்குமர மேஜைக்குத்தான் தெரியும்
என் அண்ணன் தம்பிக்கும் எனக்குமான சண்டைகள்
கூடம் போன்ற அமைப்பில் இடிந்து கிடக்கும்
தரையில் விரித்த ஜமுக்காளத்தில்தான்
என்னை அமரவைத்துப் பெண் பார்த்து நிச்சயம் செய்தார் என் கணவர்
அங்கே கிழக்குத் திசையில்
ஓர் உடைந்த கட்டில் கிடக்கிறதே
அது என் முதல் இரவுப் படுக்கைமட்டுமல்ல
என் குழந்தைகளோடும் கணவரோடும்
விடுமுறை நாட்களைக் கழித்த பொக்கிஷமான நினைவுக் களம்
துண்டு துண்டாக உடைந்து கிடக்கும் சாரங்களைக் கேட்டால்
என் குழந்தைக்குப் பாடிய தாலாட்டுப் பாடல்களைச் சொல்லும்
வடக்குத் திசையில் உடைந்து கிடக்கும் திண்ணையில்தான்
பாட்டி அம்மா அப்பா தம்பி எல்லோரும் சடலங்களாக அமர்ந்திருந்தனர்
எதுவுமே மறக்கவில்லை
இன்றும் பண்டிகை நாட்களில்
யாருமற்றுக் கலங்கி நிற்கிறது கண்ணின் கடைக்கோடி
அனைத்தையும் என் இதயச் சுவரில் நினைவுகளாகப் பதிந்துவிட்டு
என் வீடும் நானும் விதியின் வழிப்பற்றி
வெற்றுச் சுவர்களாக நிற்கிறோம்