சனாதனமானது எதுவுமில்லை, எல்லாமிங்கு மாற்றத்திற்குட்பட்டதுதான்

இலஞ்சி.அ.கண்ணன்

“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால் புறக்கணிக்கப்படுகிறது, அரசாங்கம் பொறுப்பேற்பதில்லை. அச்சமூகத்திற்கு எவ்விதப் பாதுகாப்போ நீதி, நியாயம், சமசந்தர்ப்பம் கிடைக்குமென்ற உத்தரவாதமோ கிடையாது. உங்களுக்கென்று தனிப் பாதுகாப்பு ஏதும் கிடையாது என அச்சமூகத்தினர் கூறப்படுகிறார்கள். பாதுகாப்புக் கேட்பதில் நியாயம் இல்லை என்பதால் அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தங்கள் கோரிக்கைகளுக்குப் பின்பலமாக, அரசியல் ரீதியாக இணைந்து உருவாகவில்லை என்பதால் அவர்களைப் பொய் சொல்லிச் சமாளித்து ஏமாற்றிவிடலாம் என்பதே உரிமை வழங்கப்பட்டுள்ள அடாவடி வகுப்பின் தற்போதைய எண்ணம்” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்1.

மேற்கண்ட கூற்றை ஒடுக்கப்பட்டவர்களுக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் புதிரை வண்ணார் சமூக மக்களின் இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கலாம். காரணம், படிநிலைப்படுத்தப்பட்ட சாதியக் கட்டமைப்பில் அடிநிலையில் இருப்பதினால் அதிலிருந்து மேலெழுந்து வர முடியாத அளவிற்கு இந்துமதத் தத்துவம் அம்மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து சிதைத்திருக்கிறது. மேலும், மக்கள்தொகை அடிப்படையிலும் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். அதனால் அரசியல் அதிகாரமும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. சாதிய எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்டவர்களுக்குள்ளே பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தேவேந்திரர், பறையர், அருந்ததியர் சமூகத்தவர்களுக்கே போதிய அரசியல் பிரதிநிதித்துவம் இன்னும் சாத்தியமாகாத சூழலில், இவர்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் சட்டப்பூர்வமாகத் தீர்வு காண்பதற்கு, ‘பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்’ என்கிற அமைப்பின் மூலம் பேராசிரியர் கல்யாணி போன்றவர்கள் தன்னலமற்று உதவிப் புரிவதைப் போல, புதிரை வண்ணார் சமூகத்தவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற சாதியத் தாக்குதல்களையும் தீண்டாமைக் கொடுமைகளையும் தட்டிக் கேட்பதற்கு அவர்களுக்கென்று எந்தவோர் அமைப்போ, ஆதரவு சக்திகளோ இல்லை. முற்போக்குப் பேசும் தலித்திய அமைப்புகளும் இவர்களைக் கைவிட்டுவிட்டன. மேலும், இவர்களுக்காக அமைக்கப்பட்ட நல வாரியமும் இவர்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதில்லை. இதன்பொருட்டே வருவாய் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால், “வண்ணானுக்குக் கழுதை இருக்கணும், துணி மூட்டை இருக்கணும், குலத்தொழில் செய்யணும். கார வீட்டில் வாழ்கிறவனுக்கும் தங்கச் சங்கிலி அணிந்திருப்பவனுக்கும் எப்படிச் சாதிச் சான்றிதழ் வழங்க முடியும்” என்கிற பகட்டுத்தனமான கேள்வியைக் கேட்க முடிகிறது.

தேவேந்திரர், பறையர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அவர்களுக்குச் சலவைத் தொழில் செய்வது, இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வது, சவரத் தொழில் செய்வது போன்ற வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்விடங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இன்றளவும் இருக்கிறது. அதாவது, ஊருக்கு ஓரிரு குடும்பங்களே இருக்கும். இத்தகைய சூழலில் வாழும் இவர்கள் மீது இடைநிலைச் சாதியினர் மட்டுமல்லாது, பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட சாதியினரும்கூட ஆதிக்கம் செலுத்திவருவது புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. தொடர் சாதிய அடக்குமுறைகளையும் அதனால் ஏற்பட்ட சொல்லொண்ணாத் துயரங்களையும் தாங்கிக்கொள்ள முடியாமல் சொந்த மண்ணைவிட்டு மனவிரக்தியில் நிறைய குடும்பங்கள் இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள்தான் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்திற்கு உட்பட்ட திருத்தங்கல் என்கிற ஊரில் இன்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்துவருகிறார்கள். தற்போது இவர்கள் யாரும் இந்துமத சனாதன தர்மத்தின்படி திணிக்கப்பட்ட தொழில்களைச் செய்வதில்லை. மாறாக, மாற்றுத் தொழில்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

“புதிரை வண்ணார்னா எல்லோரும் கேவலமா பேசுறாங்க. ‘புதிர’ என்றால் ‘பூர்வீகம்’னு தமிழ் அகராதி சொல்லுது. ‘வண்ணான்’ என்றால் வண்ணம் தீட்டுபவர், வண்ணக் கலைஞர். அந்தக் காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையைத்தான் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். சாதி வந்த பின் அழுக்குத் துணியையும் முட்டுத் துணியையும் துவைப்பது எங்களுக்கு விதிக்கப்பட்டது” என்கிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் முத்து2. அந்த வகையில், பூர்வீக வண்ணக் கலைஞர்களாகக் கோலோச்சியவர்கள், படிநிலைப்படுத்தப்பட்ட இந்துமதச் சமூகக் கட்டமைப்பின் மூலம் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனாலேயே இன்றுவரையிலும் இவர்கள் மீது திணிக்கப்பட்ட சடங்காச்சாரங்களும் வசைபாடும் இழிசொற்களும் குறைந்தபாடில்லை.

‘இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா’ என்பதற்கும் ‘சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களே சாதிப் பார்ப்பாங்களா’ என்பதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. இரண்டும் ஒன்றுதான். ‘பள்ளப்பய, பறப்பய, சக்கிலிப்பய’ எனச் சாதிப் பெயர்களால் தலித்துகள் தாழ்த்தப்படுவதுபோல, ‘புதரப்பய’ என்ற சொல் தலித்துகள் மத்தியில் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது3.” இவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற்றால் மட்டுமே இவர்களுடைய இழிநிலையை மாற்ற முடியும் என்கிற சூழலில், அக்கல்வியைப் பெறுவதற்கு அச்சாரமாக இருக்கக்கூடிய சாதிச் சான்றிதழைப் பெறுவதிலேயே இவர்களுடைய காலங்கள் கடந்துபோகின்றன. புதிரை வண்ணார் என்கிற சாதியே கிடையாது என்று சொல்லுகிற இக்காலத்தில் அப்படியொரு சாதி இருக்கிறது; சமூக, பொருளாதார, கல்வி நிலையில் இன்றும் மேம்பாடு அடையவில்லை; இன்றுவரையிலும் அச்சாதியினர் மீது நிகழ்த்தப்படுகின்ற சாதிய ஒடுக்குமுறைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் குறைந்தபாடில்லை என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், சாதியின் பெயராலும் பொருளாதாரத்தின் பெயராலும் யாரொருவர் ஒடுக்கப்பட்டாலும் அவர்களின் பக்கம் நிற்பதே அறம்.

சாதியினாலும் பொருளாதாரத்தினாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்விதான் மிகப்பெரிய ஆயுதம். அதனாலேயே தந்தை பெரியாரும் “கல்வியறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடைக்கும் மக்களை உயர்த்தும்” என்றார். இவ்வாறு முழங்கிய ‘பெரியாரின் சமூக நீதி மண்ணில்’தான் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், தடையின்றிக் கல்வியைத் தொடர்வதற்கும் சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குக்கூட புதிரை வண்ணார்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது, கல்வி நிலையங்களில் அரசினுடைய சலுகைகளைப் பெறுவதற்குச் சாதிச் சான்றிதழ் கட்டாயம் என்கிற நடைமுறை இன்றுவரையிலும் இந்தியாவில் இருந்துவருகிறது. அவ்வாறு கொடுக்காத பட்சத்தில் அவர்களுக்கான கல்விக்கான சலுகைகள் யாவும் தடைபடுகிறது. இதனால் கல்வியைத் தொடர முடியாமல் போனவர்களின் எண்ணிக்கையும் இச்சமூகத்தினரிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது.

பொதுவாக, சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கும்போது, மற்ற சாதியினருக்கு வருவாய் வட்டாட்சியர்கள் எளிதாக வழங்குவதைப் போல் இம்மக்களுக்கு வழங்கிவிடுவதில்லை. அதேபோல, மற்ற சாதியினரிடத்தில் அதிகாரிகள் ‘நீங்கள் குலத்தொழில் செய்கிறீர்களா’ என்கிற கேள்வியையும் கேட்பதில்லை. ஆனால், புதிரை வண்ணார் சமூக மக்களிடத்தில் மட்டும் இவர்கள் கேட்கின்ற கேள்விகள் மிகவும் பிற்போக்குத் தன்மையானவை, சாதி ஆதிக்க மனநிலை கொண்டவை: “நீங்கள் உங்க குலத்தொழிலாகிய சலவைத் தொழில் செய்கிறீர்களா, வெள்ளாவி போட்டு இருக்கிறீர்களா, உங்களிடம் கழுதை இருக்கிறதா?” அதோடு மட்டுமல்லாது, இவர்கள் சலவைத் தொழில் செய்யக்கூடிய தேவேந்திரர், பறையர் சமூகத்தாரிடமிருந்து ‘நாங்கள் உங்களுக்குத்தான் சலவைத்தொழில் செய்தோம் / செய்கிறோம்’ என்கிற சான்று வாங்கிவரச் சொல்கிறார்கள். முன்பொரு காலத்தில் இம்மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவந்தார்கள், இன்றைக்குச் செய்வதில்லை. இதனால் தேவேந்திரர், பறையர் சமூக மக்கள், ‘நீங்கள் இப்போது எங்களுக்குத் தொழில் செய்வதில்லை, ஆதலால் சான்று தர முடியாது’ என்கிறார்கள். இதை ஒரு காரணமாக வைத்து அரசு அதிகாரிகள் இவர்களுடைய விண்ணப்பங்களை நிராகரிக்கிறார்கள். இந்நடைமுறை வேறு எந்தச் சாதியினருக்கும் கிடையாது. இவ்வாறு அலைகழிக்கப்பட்டவர்கள் சாதிச் சான்றிதழே வேண்டாம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் ‘அனைவருக்கும் கட்டாயக் கல்வி’, ‘இல்லம்தோறும் கல்வி’ என்கிற அரசு திட்டங்களின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில வருவாய் வட்டாட்சியர்கள். மேலும், ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி அறிவு பெற்றுவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து செயல்படுகிறார்கள். இம்மக்களிடம் கேட்பது போல் மற்ற சாதிக்காரர்களிடம் ‘ஏன் குலத்தொழில் செய்யவில்லை’ எனக் கேட்பார்களா? ஏன் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் எனச் சொல்லிக்கொள்வோரிடம் (EVWS) சான்றிதழுக்காக, “பூணூல் போட்டு இருக்கின்றீர்களா?” என்கிற கேள்வியைக் கேட்க முடியுமா? மாறாக, எளிய மக்களிடத்தில் மட்டுமே அதிகாரத்தைச் செலுத்துவதென்பது வெட்கக்கேடானது, ஆளுமையற்ற பண்பிற்கு ஈடானது, சமூக நீதி பேசுகின்ற அரசின் கொள்கைக்கு எதிரானது.

Illustration : KeemoArchive

அன்று கட்டாயத்தின் பேரில், விருப்பமில்லாமல் தங்களது மூதாதையர்கள் குறிப்பிட்ட தொழிலைச் செய்துவந்தார்கள் என்பதற்காக, இன்றைய தலைமுறையினரும் அதே தொழிலைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என நிர்ப்பந்திப்பதும் சனாதனம்தான். எல்லோருமிங்கு குலத்தொழில்தான் செய்துவருகிறார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புரோகித தொழில் செய்கின்றவர்கள் ஏன் அவர்களுடைய குலத்தொழிலை மட்டும் செய்யாமல் அரசினுடைய ஒட்டுமொத்த உயர் பதவிகளிலும் கோலோச்சுகின்றனர். குறிப்பாக, 2018 முதல் இன்றுவரை நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 604 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் 79% நீதிபதிகள் (458 நீதிபதிகள்) உயர்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அப்படி இருக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பார்த்து இதுதான் உங்களது குலத்தொழில், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது, சனாதனமானது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை. ஏனெனில், இன்றைய சமூகத்தினர் பகுத்தறிவு பெற்றிருக்கிறார்கள்; சனாதனத்திற்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கரைப் படித்திருக்கிறார்கள். ஆதலால், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை, அவர்கள் மீது திணிக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. சக மனிதரை மனிதராகப் பார்க்காமல் அவர்மீது இழிவான தொழில்களைத் திணிப்பதென்பது பார்ப்பனிய மனநிலை. அது சூத்திர சாதியினரிடத்தில் போலச் செய்தல் விதியின்படி மோசமான மனநோயை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால்தான் புதிரை வண்ணார் மக்களின் சாதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதற்குக் காரணமாக வருவாய் வட்டாட்சியர்கள் தரப்பு சொல்வது, ‘மனுதாரர் குடும்பம் எந்தச் சமுதாயத்திற்குத் துணி வெளுத்தோம் / வெளுக்கிறோம் என்கிற விவரத்திற்கான கடிதம் சமர்ப்பிக்கவில்லை; மனுதாரர் தங்களுக்குரிய குலத்தொழிலைச் செய்துவரவில்லை’ என்பதுதான். இத்தகைய மனநிலையில்தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெருவாரியான வருவாய் வட்டாட்சியர்கள் இருக்கிறார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 24.07.2023 வரை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செ.ரகு என்பவர் தனது மகளின் கல்விக்காகச் சாதிச் சான்றிதழ் வேண்டி பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்திருக்கிறார். ஆனால், காரணமேயின்றி அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 2019 முதல் 2023வரை அவர் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப எண்கள் பின்வருமாறு:

            TN-5201905218801 (15.06.2019)

            TN-5202001302302 (30.01.2020)

            TN-5202002172310 (17.02.2020)

            TN-5202013115104 (11.12.2020)

            TN-5202307241032 (24.07.2023)

ரகு சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். அதனால் அவர் மனைவியிடமிருந்து, ‘தனது கணவரது சாதியின் அடிப்படையிலேயே தனது மகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் தனக்கு எந்தவோர் ஆட்சேபனையும் இல்லை’ என்று நோட்டரி பப்ளிக் வழக்குரைஞரிடமிருந்து தடையில்லாச் சான்று வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதோடு தான் படித்த கலங்காதகண்டி கிராமத்தில் உள்ள அரிஜன் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் 30.11.2010 அன்று ‘ரகு இந்து புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான்’ என்கிற சான்றிதழையும் இணைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ரகு என்கிற தனிநபருக்கு மட்டும் நடந்த நிகழ்வு அல்ல. தமிழகம் முழுவதும் இன்னும் நிறையபேர் தங்களது குழந்தைகளின் கல்விக்காகச் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அதைப் பெற முடியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் நடுக் காலனித் தெருவில் வசித்துவரக்கூடிய திரு.செல்வம் என்பவர் தன்னுடைய மகனின் படிப்பிற்காக, தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடங்களாகச் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துவருகிறார். விண்ணப்ப எண் – TN – 5202212074188. மேலும், விண்ணப்பத்துடன் தந்தையின் பள்ளிச் சான்று மற்றும் தாயின் சாதிச் சான்றிதழ் நகலையும் இணைத்துக்கொடுத்திருக்கிறார். ஆனாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவருடைய மகனின் படிப்புத் தடைப்பட்டுள்ளது. இவர்களைப் போன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் சாதிச் சான்றிதழைப் பெற முடியாமல் கல்வியைப் பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை கடலலலைப் போன்றது.

இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றபின், சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு விண்ணப்பதாரரின் பெற்றோரது சாதிச் சான்றிதழ் (நகல்) இருந்தால் போதுமானது என்று அரசும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும்கூட அதிகாரிகள் இதையொரு பொருட்டாகவே மதிப்பதில்லை. பொதுவாக, இச்சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் பெரும் போராட்டத்திற்குப் பின்னரே சாதிச் சான்றிதழைப் பெறக்கூடிய சூழல் நிலவுவது வேதனைக்குரியது. இதை ஆளும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்; தலித்திய அமைப்புகளும் இம்மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

2009 நவம்பர் 25ஆம் தேதி அன்றைய முதல்வர் கலைஞரால் ‘தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம்’ அமைக்கப்பட்டது. தற்போதைய அரசும் இந்த நல வாரியத்தைச் சமீபத்தில் மறுசீரமைத்துள்ளது. இதற்காக 2023 – 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் இந்தத் தொகை அம்மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதற்கு வெள்ளை அறிக்கைதான் கேட்க வேண்டும். பொதுவாக இந்நல வாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கும் சாதிச் சான்றிதழ் அவசியமாகிறது. ஆனால், இச்சமூக மக்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைப்பதென்பதே பெரும் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இவர்கள் மேற்கண்ட நல வாரியத்தின் மூலம் பயனடைந்தார்களா என்பது கேள்விக்குறியே. இதனுடைய முக்கிய நோக்கங்களில் ஒன்று கல்விப் பயிலும் மாணாக்கர்கள் கல்வியைத் தொடர்வதற்கான சாதிச் சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், அது இன்னும் சாத்தியமாகவில்லை. இதனால் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சாதிச் சான்றிதழைப் பெறுவதற்காக அல்லல்படுவதோடு அரசு அதிகாரிகள் கேட்கின்ற கேள்விகளால் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

அரசு அதிகாரிகள், சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கக் கூடிய இம்மக்களிடம் கேட்கின்ற கேள்வியும் ‘பி.எம். விஸ்வகர்மா’ திட்டத்தின் நோக்கமும் ஒன்றுதான். நாங்கள் இந்தச் சாதிதான் என்று சொல்லிச் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கே பல யுகங்கள் ஆகின்ற இந்நாட்டில், சனாதன தர்மத்தின்படி உங்களுக்கு விதிக்கப்பட்ட குலத்தொழிலைச் செய்யுங்கள் என்று ஊக்குவிப்பது அபத்தமானது. தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கமும் இதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இச்செயல் நாகரிகம் அடைந்த சமூகத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கு ஒப்பானது. ‘பி.எம். விஸ்வகர்மா’ என்கிற பெயரே சாதியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்திற்கு, அதாவது, குலத்தொழிலைச் செய்வதற்கு 13,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். 1950இல் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்திற்கும் இத்திட்டத்திற்கும் என்ன வேறுபாடு இருந்துவிடப் போகிறது. பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு சிஷ்ய பரம்பரைக் கல்வியைப் போதிக்கப்போகிறார்கள். இத்திட்டம் சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே கொண்டுவரப்பட்டதாகும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், படிநிலைப்படுத்தப்பட்ட சாதியக் கட்டமைப்புகள் உள்ளது உள்ளபடியே பாதுகாக்கப்படும்; தீண்டாமை தலைவிரித்தாடும்; பண்ணை அடிமை முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி மறுக்கப்படும். அதேவேளையில் இந்திய தேசத்தைப் ‘பாரத தேசம்’ என்று மாற்றத் துடிப்பவர்கள், நாளை ‘பார்ப்பனிய தேசம்’ என்றுகூட மாற்றுவார்கள். இதனால் புதிரை வண்ணார் சமூக மக்களுக்கு மட்டுமல்ல, நாளை குலத்தொழில் செய்யாத யாருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க மாட்டார்கள்.

உசாத்துணைகள்

  1. டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் (தமிழில்) தொகுதி 2,பக்-178.
  2.  ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி, எதிர் வெளியீடு, பக் – 298.
  3. அதே நூல், பக்-294.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!