நாமேன்
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு குடியாயிருக்கோம்
அதுவா
ஒரு ஊருக்கு
ஒரு ராஜாதானே இருக்க முடியும்
மகனே.
வெத்து மயிருகள்
மூடப்பட்ட சலூனில்
வெட்டுவாங்கிய மயிர்களனைத்தும்
மாநாடு போட்டது
நானே உயர்ந்ததென்றது
அரசியல் மயிர்
நானே உயர்ந்ததென்றது
நீதி மயிர்
நானே உயர்ந்ததென்றது
ஆண்டை மயிர்
நானே உயர்ந்ததென்றது
சினிமா மயிர்
நானே உயர்ந்ததென்றது
பக்தி மயிர்
நானே உயர்ந்ததென்றது
பணக்கார மயிர்
நானே உயர்ந்ததென்றது
அதிகார மயிர்
சின்ன குப்பையிலிருந்து
பெரிய குப்பையில்
சலூன்காரர் கொட்டும் போது பேசிக்கலாம்
மூடிக்கிட்டுப் படுங்கடா
மயிரு என்றது
ஒரு அப்பாவி மயிரு.
சவரக்கத்தி திருமகன்
சாதாரணக் கடை வைப்பதும்
சவரக்கடை வைப்பதும் ஒன்றல்ல
மகனே!
காலையில
தனியாருல படிச்சா
கலெக்டர் ஆகலாம்
வக்கீலாகலாம்
இன்ஜினீயர் ஆகலாம்
போலீஸாகலாம்
அரசுல படிச்சாதான்
மனிசனாகலாமென்று
அரசுக்காதரவா
சொம்படிக்கணும்
மாலையில
தனியார்ல படிக்கிறவன்
டாக்டரானால்
அரசுல படிக்கிறவன் நோயாளியாவான்
தனியார்ல படிக்கிறவன்
இன்ஜினீயரானால்
அரசுல படிக்கிறவன்
கொத்தனாராவான்
தனியாருல படிக்கிறவன்
வக்கீலானால்
அரசுல படிக்கிறவன்
குற்றவாளியாவான்
தனியாருல படிக்கிறவன்
போலீஸானால்
அரசுல படிக்கிறவன்
பொறுக்கியாவான்
அரசே தனியார் பள்ளியை நிறுத்து
அரசுப் பள்ளியை உயர்த்துன்னு
அரசுக்கெதிராகக் கம்புசுத்தணும்
சாதாரணக் கடைவைப்பதும்
சவரக்கடை வைப்பதும் ஒன்றல்ல
மகனே!