அலவ்தான்*
பதிமூன்றில்
“அவன் அலவ்தான்” என்று ஒலித்து
அறிமுகமான சொற்கள்
பதினெட்டில்,
இருபத்திமூன்றில்,
இருபத்தியேழில்,
எனத் தொடர்ந்து
முப்பத்தி நான்காவது வயதிலும் ஒலிக்கிறது.
வெறும் சொல்லென நினைத்தது
இத்தனை தூரம் கட்டி இழுத்து வரும்
கயிறு எனப் புரிகிறது.
சொன்னவர்களைச்
சபித்திருக்கிறான் என்பதுதான்
பெரும் பிழை.
அலவ்தான் சொன்ன
உதடுகளே போற்றி
உள்ளங்களே போற்றி.
*அலவ்தான் – அவ்வளவுதான்
illustration : inkling illustration
கருப்பு
பிடித்த நிறம் எது
எனும்போதெல்லாம்
சூழும் சிறு தடுமாற்றம்
நிறங்கள் குறித்தான
அதன் குணங்கள் பற்றியான
ஆராய்தலுக்குத் தூண்டியது.
அந்தி மஞ்சள் வானத்தை ரசித்தபடி
அதையே பிடித்த நிறமாய்
முடிவெடுக்க எண்ணியபோது
தாழப்பறந்து
தலையில் பட்டுவிடும்படியாய்ப்
பறந்து சென்றது ஒரு காகம்.
மஞ்சள் வானத்தால்
எடுப்பூட்டிய கருப்பும்
நிலத்தில் ஊர்ந்து நகரும்
அதன் நிழலின் கருப்பும்
ஏதோ செய்ததில்தான்
பிடித்த நிறம்
கருப்பென்று நிலைப் பெற்றது.