பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சினை: உலக நாடுகளின் தற்காலப் போக்கு

நாகூர் ரிஸ்வான்

ல்வேறு இனப்படுகொலைகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நேரலையாகவே காணும் தலைமுறையாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இதை ஒரு புதிய நிகழ்வுப்போக்கு எனலாம். இந்த மாபெரும் மானுடப் பேரழிவுக்கு நாமெல்லாம் மௌன சாட்சிகளாக இருந்துவிடக் கூடாது.

பாலஸ்தீனில் இதுவரை 15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 6,000க்கும் மேல் குழந்தைகள்; 4,000 பெண்கள்; 36,000 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி ஹிரோசிமா, நாகசாகியை அழித்த வரலாற்றை நாம் அறிவோம். இஸ்ரேல் இதுவரை 25,000 டன் வெடி மருந்தைப் பிரயோகித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது இரண்டு அணுகுண்டுகளுக்குச் சமமானது.

காஸாவில் நடைபெறும் பேரவலத்தை நம்மால் மேற்கூறிய உயிரிழப்பின் எண்ணிக்கையைக் கொண்டு மட்டும் உணரவோ புரிந்துகொள்ளவோ இயலாது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இன்று வெறும் எண்களாகச் சுருங்கிவிட்டனர். தற்போது அங்கே வாழ்வோரின் கதியும் படுமோசமாகவே இருந்துவருகிறது. இருப்பிடம், தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருள் என எந்த அடிப்படைத் தேவைகளையும் அவர்களால் பெற முடியவில்லை. காலரா உள்ளிட்ட நோய்களின் பரவல், மாணவர்களின் கல்வி பறிபோயிருப்பது போன்ற கோணங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இஸ்ரேல் நிகழ்த்தும் இந்தக் கோரத் தாண்டவத்திலும் அநீதியிலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் பங்கிருக்கிறது. இந்நாடுகளுக்கிடையில் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், இவை அனைத்தும் குடியேற்றக் காலனிய நாடுகள் (Settler Colonial States); அந்தந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வகுடிகளை அழித்தொழித்து விட்டு உருப்பெற்ற நாடுகள். ஒருபுறம் இந்த வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக நிற்கின்றன. என்றாலும், மறுபுறம் உலக அளவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான பொதுக் கருத்து உருவாகியிருப்பது அவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. அக்டோபர் 7 அன்று ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாது போன்ற இயக்கங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த பின்னணியில் அந்த நாட்டின் வெற்றிப் பயணம் தற்காலிகமாகவேனும் முறியடிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான போர் எந்தெந்த வகையிலெல்லாம் இஸ்ரேலுக்குப் பின்னடைவையும் தோல்வியையும் கொடுத்திருக்கிறது என்பதைப் பகிர நினைக்கிறேன்.

கதையாடலுக்கான யுத்தத்தில் (War of narrative) வெல்வது யார்?

பொதுவாக, சர்வதேச ஊடகங்கள் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே செய்தி வெளியிடும். குறிப்பாக பிபிசி, சிஎன்என் போன்ற மேற்கத்திய செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்பன ஒருபக்கச் சார்பாகச் செய்தி வழங்குவதையே வாடிக்கையாகக் கொண்டவை. தற்போதைய காஸா மீதான போர் தொடர்பான செய்திகளிலும் இதை நீங்கள் கவனிக்கலாம். இஸ்ரேல் என்று வரும்போது ஒரு சொல்லாடலையும், பாலஸ்தீன் பற்றி வரும்போது வேறொரு சொல்லாடலையும் அவர்கள் பிரயோகிப்பார்கள்.

குடிமக்களின் உயிரிழப்பை இணைச் சேதம் (Collateral damage) என்று சுட்டுவார்கள். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படும் செய்திகளில் மனிதக் கேடயமாக இருந்தவர்கள் உயிரிழந்திருப்பதாகச் சொல்வார்கள். இப்படிப் பகிரங்கமாகவே தம் சார்பு நிலையை வெளிப்படுத்துவார்கள். இந்நிலைப்பாட்டைக் கண்டித்து அண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து அன்னி போயர் எனும் புலிட்ஸர் பரிசு பெற்ற கவிஞர், எழுத்தாளர் வெளியேறினார். அவரைப் போலவே, காஸா தொடர்பான செய்திகளில் பக்கச்சார்பு இருப்பதாகச் சொல்லி பிபிசி, சேனல்+ போன்றவற்றிலிருந்தும் பத்திரிகையாளர்கள் வெளியேறியிருக்கின்றனர்.

முன்பெல்லாம் முழுக் கதையாடலையும் மேற்குலக ஊடகங்களே நிர்ணயிக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேல் ஆதரவு ஊடகங்களின் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுவருகிறது.

இஸ்ரேலின் PR வேலைகளுக்கு ‘ஹஸ்பாரா’ எனும் திட்டத்தின் கீழ் பெரும் நிதித் தொகையை ஒதுக்குகிறார்கள். ஹஸ்பாரா என்றால் ஹீப்ரூ மொழியில் விவரித்தல் என்று பொருள். உலக அரங்கில் இஸ்ரேலின் பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் தடுக்கவும், இஸ்ரேலின் குற்றங்களை மறைக்கவுமே இந்தத் திட்டம். அக்டோபர் 7இல் இருந்து இப்போதுவரை பல மில்லியன் கணக்கான டாலர்களை இஸ்ரேல் இந்தப் பிரச்சார நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டு வருகிறது. ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடக விளம்பரங்களுக்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகம்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஆயுதமாகப் போலிச் செய்திகளை இஸ்ரேல் பயன்படுத்துவது வழக்கம். அவற்றைக் கொண்டு தனது படுகொலைகளையும் மனித உரிமை மீறலையும் அது நியாயப்படுத்தும். அப்படிச் சமீபத்தில் இஸ்ரேல் பரப்பிய பல பொய்கள் அம்பலமாகியுள்ளன. தொடக்கத்தில் 40 குழந்தைகளை ஹமாஸ் கழுத்தறுத்துக் கொன்றதாகச் செய்தி பரப்பப்பட்டது. பிறகு, அது போலிச் செய்தி என்று நிரூபணமானது. அதன் பிறகும் அதை அமெரிக்க அதிபர் பைடன் உட்பட பலரும் சொல்லத்தான் செய்தார்கள்.

இப்படியான பல பொய்ச் செய்திகள் மிக எளிதாகக் கட்டுடைக்கப்பட்டிருப்பதை நீங்களும் அவதானித்து இருக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கு நினைவூட்டுகிறேன்.

ரன்திசி எனும் மருத்துவமனையில் ஹமாஸ் பிணைக் கைதிகளை வைத்திருந்ததாகச் சொல்லி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி என்பவர் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் முதன்மை ஆதாரங்களுள் ஒன்றாகக் காட்டியது என்னவென்றால், தீவிரவாதிகளின் பெயர்கள் இருப்பதாகச் சுவரில் ஒட்டியிருந்த பேப்பரைத்தான். இச்செய்தி இஸ்ரேல் அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும், பல ஊடகங்களிலும் வெளியானது. பிறகுதான் தெரிந்தது அதுவொரு காலண்டர், அதில் அரபு மொழியில் எழுதப்பட்டிருப்பது எல்லாம் தேதியும் கிழமையும் என்பது.

இதுபோலவே, இருப்பிடங்களை இழந்த மக்களுக்கு இடமளித்த ஷிஃபா மருத்துவமனையைக் குறிவைத்தும் இஸ்ரேலிய இராணுவம் பல செய்திகளைப் பரப்பியது. ஹமாஸ் அங்கிருந்துதான் செயல்படுவதாகவும், ஹமாஸின் பதுங்குக்குழி அங்கே இருப்பதாகவும் கூறியது. இதுபோக, அங்கிருந்த மக்களை ஹமாஸ் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு செவிலியர் பதற்றத்துடன் கூறுவது போன்ற வீடியோவை இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டனர். கடைசியில், அந்த வீடியோவில் பேசியது செவிலியரும் அல்ல, அவர் ஷிஃபா மருத்துவமனையிலிருந்தும் பேசவில்லை என்பது அம்பலமானது. அதில் செவிலியராக நடித்தவர் ஒரு மெக்சிக்கன் நடிகை என்பதைச் சமூக ஊடகத்திலேயே அம்பலப்படுத்தினர்.

நவம்பர் 10 அன்று ஷிஃபா மருத்துவமனையின் ஒரு பகுதியைத் தாக்கிய இஸ்ரேல், அதைத் தான் செய்யவில்லை என்று கூற முற்பட்டது. ஆனால், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளே அச்செய்தியின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்தன. இது மாதிரியான ஒரு நிகழ்வு அக்டோபரில் நிகழ்ந்தது. அல்அஹ்லி மருத்துவமனையில் குண்டு வீசி அங்கிருந்த 500க்கும் மேற்பட்டோரைக் கொன்றுவிட்டு, அதை இஸ்லாமிக் ஜிஹாது இயக்கம் செய்ததாகச் சொல்லி நழுவ முனைந்தது இஸ்ரேல். அப்பொய்யும் நிலைக்கவில்லை.

பெரிய பட்டியலாகவே வெளியிடும் அளவுக்கு மலிந்து கிடக்கின்றன இஸ்ரேல் பரப்பிய போலிச் செய்திகள். அவை யாவும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைகளையும் இன அழிப்பையும் நியாயப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுப் பரப்பப் பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேலின் இத்தகைய போலியான பரப்புரைகளைப் பாலஸ்தீனர்கள் வெளியிடும் உண்மைக் காணொளிகளும் புகைப்படங்களும் தவிடுபொடியாக்கிக்கொண்டிருக்கின்றன. இவ்விஷயத்தில் சமூக வலைதளங்கள் மாபெரும் பங்காற்றிவருவதை நாம் கவனிக்க வேண்டும். Vlog, Story Telling போன்றவற்றுக்காகச் சமூக ஊடகத்தைப் பயன்படுத்திவந்த பாலஸ்தீனர்கள் கூட இப்போது பத்திரிகையாளராக மாறி, அங்கு நடந்தேறும் மானுடப் பேரவலத்தை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிவருகிறார்கள்.

Courtesy: Igor Morski

இதையெல்லாம் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இஸ்ரேல் காஸாவில் மின்சாரத்தை முற்றாகத் துண்டிக்கிறது. ஆனால், அம்மக்கள் கார் பேட்டரியில் இருந்தும், சூரிய ஆற்றலிலிருந்தும் மின்சாரத்தைப் பெறுவது போன்ற ஆக்கப்பூர்வ முயற்சியின் வழியாகத் தம் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்; உண்மைகளை வெளியுலகுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

இஸ்ரேலிய ஆதரவு ஊடகங்கள் முன்வைக்கும் கதையாடல் சமூக ஊடகத்தின் மூலம் உடைத்தெறியப் படுவது போன்றே மாற்று ஊடகங்களின் வழியாகவும் முறியடிக்கப்படுகிறது. பாலஸ்தீனர்களும், அவர்கள் தரப்புச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஆங்கிலத்தில் செய்திகளை வெளிக்கொணர்வது உலகமெங்கும் அவற்றைக் கொண்டு சேர்க்க உதவுகிறது. முன்பெல்லாம் பிபிசி, சிஎன்என் சொல்வது மட்டுமே செய்தி. ஆனால், இன்றைக்குப் பாலஸ்தீன மக்களே ஆங்கிலத்தில் பேசி காணொளி வெளியிடுகிறார்கள். கத்தார், துருக்கி, சீனா, ஈரான் போன்ற நாடுகள் வலுவான ஆங்கிலச் செய்தி ஊடகங்களை நடத்துகின்றன. இந்தப் புதிய போக்கு மேற்குலகம் கட்டமைக்கும் ஒருபடித்தான கதையாடலைச் செல்லாததாக்குகிறது.

முன்னர் இஸ்ரேலை ஓர் இன வேற்றுமை அரசு என்று அடையாளப்படுத்தும் போக்கு பரவலாக இல்லை. ஆனால், இன்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), அம்னஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் அதைப் பிரயோகிக்கின்றன. அரசியல் தளத்திலும் இந்தச் சொல்லாடல் பரவலாகி உள்ளது. இதுவெல்லாம் ஒருவகையில் பாலஸ்தீனப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.

உலகமெங்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான போராட்டம் திரளான மக்கள் பங்கேற்புடன் அரங்கேறிவருகிறது. அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கானிஸ்தான் படையெடுப்புகளின்போது மக்களிடமிருந்து இந்த அளவுக்கு எதிர்வினை வரவில்லை. ஆனால், தற்போது இலண்டனில் மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றுகூடி வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்கள். பாரிஸில் போராடுவதற்குத் தடை உத்தரவு இருந்தும் மக்கள் வீதிகளில் திரண்டு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் போராடியிருக்கிறார்கள்.

எகிப்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஹம்மது முர்ஸியின் ஆட்சி 2013இல் கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகு போராட்டமே நடத்த முடியாத சூழல்தான் அங்கே நிலவியது. ஆனால், அங்கும் இப்போது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம் நடந்திருப்பது வியப்புக்குரியதே. அதேபோல், ஜோர்டானிலும் மக்கள் பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் கதையாடலுக்கான யுத்தத்தில் பாலஸ்தீனர்கள் வெல்வதையே நமக்கு உணர்த்துகின்றன.

ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் பின்னடைவு

இஸ்ரேல் தனக்கான அங்கீகாரத்தையும் பலத்தையும் உறுதி செய்துவிட்டதாகவும், பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் மமதையில் இருந்தது. கடந்த செப்டம்பர் இறுதியில் ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பேசிய பேச்சு இதற்கொரு சான்று. அவர் தன் தொலைநோக்கை அறிவிக்கும் பொருட்டு ஒரு புதிய மத்தியக் கிழக்கு வரைபடத்தை அங்கே காட்டினார். அதில் பாலஸ்தீன் என்ற நாடே இல்லை! ஆப்ரஹாம் ஒப்பந்தம் வழியாக முஸ்லிம் நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், சூடான், மொரோக்கோ போன்ற நாடுகளுடன் இஸ்ரேல் எப்படித் தன் தொடர்புகளை வலுப்படுத்தியிருக்கிறது என்று பெருமிதத்துடன் சொன்னார்.

ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாது போன்ற இயக்கங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது, பொதுக் கருத்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மேலெழுவது ஆகியன இஸ்ரேலின் வெற்றிப் பயணத்தைத் தற்காலிகமாகவேனும் முறியடித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகள், முஸ்லிம் நாடுகள் உள்ளிட்டவை தங்களுக்கும் இஸ்ரேலுக்குமான தூதரக உறவையும் வணிக உறவையும் முறிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கொலம்பியா, சிலி, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஜோர்டான் போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டின் தூதரைத் திரும்பப் பெற்றிருக்கின்றன. இதுவும் ஒருவிதத்தில் இஸ்ரேலுக்கு அவமானகரமான விஷயம்.

இஸ்ரேலுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பஹ்ரைன் மறுபரிசீலனை செய்கிறது. வணிக உறவை முறித்துக்கொண்டிருப்பதோடு, இரு நாடுகளுக்கு மத்தியிலான விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி இருக்கிறது பஹ்ரைன். மட்டுமின்றி, தனது தூதரையும் திரும்பப் பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவை எடுத்துக்கொள்ளுங்கள். நெதன்யாஹு ஐ.நாவில் பேசுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸுக்குப் பேட்டி அளித்தார். அதில் இஸ்ரேலுடன் தங்கள் நாடு நாளுக்கு நாள் நெருக்கமாகிக்கொண்டே இருப்பதாகக் கூறினார். சென்ற நவம்பரில்கூட ஆப்ரஹாம் ஒப்பந்தம் செய்துகொண்டு இஸ்ரேலுடன் தூதரக உறவை, வணிக உறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அவரது மிகப் பெரும் ஆவலாக இருந்தது. ஆனால், தற்போதைய பாலஸ்தீனப் போராட்டம், அதற்கு அரபு மக்களிடமுள்ள ஆதரவு, இஸ்ரேல் மீதான எதிர்ப்புணர்வு ஆகியன அவருக்கு முட்டுக்கட்டையாக ஆகியுள்ளன.

தம் மக்கள் அரசுக்கு எதிராகத் திரும்பிவிடக் கூடாது என்பதில் சவூதி எச்சரிக்கையாக இருக்கிறது. மக்கா, மதினா ஆகிய நகரங்களிலுள்ள புனிதத் தலங்களில் பாலஸ்தீனுக்காகப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. ஆனால், அரசை மக்கள் எதிர்க்காமல் இருப்பதற்குத் தோதுவாக அங்கு பிரசங்கங்கள் செய்யப்படுகின்றன.

ஜோர்டான், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்ட நாடு; சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பொருளாதார உதவியைப் பெருமளவில் சார்ந்திருக்கிறது; அமெரிக்காவுக்கும் மிக நெருக்கமான நாடு. ஆனால், அது இஸ்ரேலைப் பலமாக எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவரும் தீர்மானத்தை முன்மொழிந்த நாடாகவும் ஆகியிருக்கிறது. அங்கு மக்கள் தரும் அழுத்தம்தான் இதற்குக் காரணம். குறிப்பாக, பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் ஜோர்டானில் அதிகமாக இருப்பதால் அந்த அரசுக்கு நெருக்கடி மிகுதியாக உள்ளது.

துருக்கியைப் பொறுத்தவரை, இஸ்ரேல் உருவான அடுத்த வருடமே (1949) அதை அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடு எனும் அவப்பெயரைக் கொண்ட நாடு. அப்போதிலிருந்தே இஸ்ரேலுடன் வலுவான வணிகத் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. எனினும் இஸ்ரேலுக்குத் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டிருக்கிறது. தலைநகர் அங்காரா முதலான பகுதிகளில் மக்கள் மில்லியன் கணக்கில் ஒன்றுகூடி பாலஸ்தீனர்களுக்குத் தம் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். பிரதமர் எர்டோகான் கூட போராட்டத்தில் பங்குகொண்டார். “நெதன்யாஹுவோடு இனி ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது” எனும் அளவுக்கு முழங்கினார்.

சற்றுக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். அவர் இஸ்ரேலுடன் இனி எந்த உறவும் கிடையாது என்று சொல்லவில்லை. மாறாக, நெதன்யாஹுவுடன் எந்த உறவும் வைக்கப் போவதில்லை என்கிறார். அவர் இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது. செப்டம்பரில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியாவிலிருந்து மத்தியக் கிழக்கு வழியாக ஐரோப்பாவுக்கு வணிகப் பாதை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. அது இந்தியாவிலிருந்து இஸ்ரேலைத் தாண்டித் துருக்கி வழியாக அமைக்கப்பட வேண்டும் என்று துருக்கி கருதுகிறது. வரலாற்றில் வணிக முக்கியத்துவமிக்க ஒரு பகுதியாக அந்நாடு இருந்திருக்கிறது. ஐரோப்பாவையும் கிழக்குலக நாடுகளையும் இணைக்கும் மையப் புள்ளியாக அது இருந்தது. ஆனால், இன்றைக்குத் தனது முக்கியத்துவத்தை இழப்பதாக உணர்கிறது.

இந்த வணிகப் பாதை இஸ்ரேல், ஜோர்டான் தொட்டு சவூதியின் வழியாக அமைக்கப்பட வேண்டும் என்று சவூதி கருதுவதால் இவ்விஷயத்தில் துருக்கிக்கும் சவூதிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அதனால்தான் இஸ்ரேலை முற்றாக எதிர்க்காமல் நெதன்யாஹுவைக் காட்டமாக எதிர்க்கிறார் எர்டோகான்.

ஈரான், கத்தார், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராஜாங்க உறவு என்பது கிடையாது. ஈரானில் 1979இல் புரட்சி நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அது இஸ்ரேலுடன் உறவை முற்றாக முறித்துக்கொண்டது. கத்தார் 2008இல் இஸ்ரேலுடனான உறவை முறித்தது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்தான் அதற்குக் காரணமாக இருந்தது.

இதுவரை முக்கியமான சில முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமான உறவில் விரிசல் ஏற்படுவது குறித்துப் பார்த்தோம். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் நெருக்கடியும் அழுத்தமும் கொடுக்கப் படுகிறது. நீங்கள் ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளரும் விடுத்த அறிக்கைகளைத் தொகுத்துப் பாருங்கள். அவை, தொடக்கத்தில் இஸ்ரேலை முற்றிலும் ஆதரிக்கும் தொனியில் இருக்கும். பிறகு வெளியான அறிக்கைகளில் இஸ்ரேல் ஆதரவு தொனி வெகுவாகக் குறைந்திருக்கும். பிரான்ஸ், கனடா என அனைத்து நாடுகளின் நிலையும் இப்படி மாறியிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இந்தியாவின் நிலைப்பாடும் விதிவிலக்கல்ல.

இப்படியான நிகழ்வுப்போக்கு ஏற்பட்டதற்குக் காரணம், உலக அளவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான அலை வீசுவதுதான்; பொதுக் கருத்து அவர்களுக்குச் சாதகமாகத் திரும்பியிருப்பதுதான். பாலஸ்தீனப் போராட்டத்தை மறந்து இஸ்ரேலுடன் அளவளாவிக்கொண்டிருந்த முஸ்லிம் நாடுகளுக்கும் இன்று பெருத்த ஏமாற்றமே எஞ்சியுள்ளது. இவை எல்லாம் பாலஸ்தீனப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியே அன்றி வேறில்லை.

இப்படியான சில விஷயங்களை எப்படி வெற்றியாகக் கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கலாம். மிகப் பெரும் அளவில் உயிரிழப்பு, சேதம் என்பன காஸாவில் ஏற்பட்டிருப்பது இதயத்தைக் கனக்கச் செய்யும் ஒன்றுதான். அதேசமயம் அரசியல் ரீதியாக இஸ்ரேல் தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்து வருகிறது என்பதில் ஐயமில்லை. அல்ஜீரியாவில் குடியேற்றக் காலனியத்தை நிறுவிய பிரான்ஸ், இலட்சக் கணக்கில் அல்ஜீரியர்களைக் கொன்று குவித்தது. ஆனால், கடைசியில் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது என்பதே வரலாறு. அதுபோன்ற ஒருநிலை இஸ்ரேலுக்கும் ஏற்படும்.

அம்பலமான இஸ்ரேலின் பலவீனம்

காஸா மீதான போர் நெதன்யாஹுவின் தன்முனைப்பால்தான் தொடர்கிறது. அதனால் இஸ்ரேலுக்கு எந்தப் பெரிய இலாபமும் இல்லை. பொருளாதார ரீதியான பாதிப்பு, இஸ்ரேலின் நற்பெயர் குலைவது உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் அவரின் அரசைக் கடுமையாக எதிர்க்கின்றன. 1973இல் அரபு – இஸ்ரேல் போர் நடந்தபோது, எகிப்து சினாய் தீபகற்பத்தையும், சிரியா கோலான் குன்றையும் இஸ்ரேலிடமிருந்து மீட்டன. இது அப்போதைய பிரதமர் கோல்டா மேயருக்கு மிகப் பெரும் அழுத்தத்தைத் தந்தது. அவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார்.

தொடக்கத்திலேயே காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் நெதன்யாஹு பதவி விலகியிருப்பார் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இஸ்ரேலியர்கள் அவர் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்திருக்கின்றனர். இதன் விளைவாகவே நெதன்யாஹு போரை நிறுத்த மறுக்கிறார். அவரின் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே அவரின் நோக்கமாக உள்ளது. இஸ்ரேலியப் பத்திரிகையான Haaretz-இல் அவரின் அரசைக் காட்டமாக விமர்சித்துப் பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலியர்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகத் தொடர்ப் போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பிணைக் கைதிகளை மீட்பதில் அவர் ஆர்வம் காட்டுவதில்லை என்பது அவர் மீதான எதிர்ப்பலைக்கு முக்கியக் காரணம்.

போருக்கு முன்பு இஸ்ரேல் குறித்து ஒரு பிரம்மிப்பான பார்வை உலகளவில் இருந்தது. ‘உலகின் நான்காவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட சக்தி வாய்ந்த நாடு. அதை யாராலும் அசைக்க முடியாது’ என்பது மாதிரியான கண்ணோட்டம் அது. இந்த நிலை அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு மாறியிருக்கிறது. ஆயுத பலத்தில் மிகவும் பின்தங்கிய ஓர் இயக்கம் இஸ்ரேலைத் திணறடித்ததை அந்த அரசால் நம்பவோ, ஏற்கவோ கூட முடியவில்லை. அதனால்தான் அத்தாக்குதலைப் பெருத்த அவமானமாகக் கருதுகிறது.

4 பில்லியன் டாலர் செலவிட்டு Iron dome-ஐ நிறுவியிருக்கிறது இஸ்ரேல். அதைத் தாண்டி எந்த ஏவுகணையும் இஸ்ரேலுக்குள் நுழைய முடியாது என்ற மமதை அந்நாட்டுக்கு இருந்தது. ஹமாஸ் பயன்படுத்தும் ராக்கெட்டின் விலை வெறும் 600 டாலர்தான் என்கிறார்கள். லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் ஒப்பிடும்போது ஹமாஸ் பலம் குறைந்த அமைப்பு. இந்நிலையில்தான், சற்றும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் தாக்குதல் தொடுத்து இஸ்ரேலை மிரள வைத்தன.

இஸ்ரேல் தொழிற்நுட்பத்தையும் உளவு பார்ப்பதையும் பெருமளவில் சார்ந்திருக்கும் ஒரு நாடு. அவை இல்லை என்றால் தங்கள் நாட்டின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் பல மில்லியன் டாலர்களை அதற்காகச் செலவிடுகிறார்கள். என்றாலும், மாதக்கணக்கில் காஸா மீதான போர் நீடிப்பது ஒருவகையில் இஸ்ரேலின் தோல்வியையே காட்டுகிறது. இதுவரை பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளையும் பெண்களையும், கொலை செய்ததைத் தாண்டி எதையும் இஸ்ரேல் சாதிக்கவில்லை.

பொருளாதார இழப்புகள்

காஸா போருக்காக ஒருநாளைக்கு 270 மில்லியன் டாலர்களை இஸ்ரேல் செலவழித்துவருகிறது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 1.4% ஜி.டி.பி-யில் அடி விழும் என்கிறார்கள். காஸா போரின் விளைவாக இஸ்ரேலில் மட்டுமின்றி ஐரோப்பாவிலும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இதில் பெரும் இழப்புதான். ஏனென்றால், இஸ்ரேல் அமெரிக்காவை முற்றிலும் சார்ந்திருக்கிறது. அது செய்யும் செலவில் மூன்றில் ஒருபங்கு அமெரிக்காவுடையது.

இராணுவ வீரர்களுக்காக, ஆயுதங்களுக்காக, ஊடகப் பரப்புரைகளுக்காக இஸ்ரேல் செலவிடும் தொகை உள்நாட்டு மக்களின் வாழ்வையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் அந்த அதிருப்தியும் நெதன்யாஹு அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்துள்ளது. அடுத்த தேர்தலில் அவரால் வெற்றி பெறவே முடியாது என்பது உறுதி. அதேவேளை, காஸாவை அழிப்பது, பாலஸ்தீனர்களைக் கொன்றொழிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது என எதையாவது செய்து வெற்றி… வெற்றி… என முழங்கலாம் என்றும், இஸ்ரேலியர்களை இதன் வழியாகத் திருப்திப் படுத்தலாம் என்றும் நெதன்யாஹு கருதுகிறார். அது அவரது இருப்பைத் தக்கவைக்க உதவும் என்றும் நம்புகிறார்.

நிரந்தர ஐயநிலை

அக்டோபரிலிருந்து இப்போதுவரை இஸ்ரேலில் இருந்து வெளியானோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக உள்ளது. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேலியர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு விரண்டோடும் காட்சிகளை நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கலாம். அங்கு வாழும் பலருக்கு இரட்டை குடியுரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் இன்னொரு நாட்டுக்குத் தப்பி ஓட முற்படுகின்றனர்.

இஸ்ரேலின் தாக்குதல் வழியாக ஹமாஸை ஒழிக்க முடியாது என்பதைச் சுட்டும் வகையில் எலான் மஸ்க் கூட ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். உண்மையில், பாலஸ்தீனர்கள் இன்னும் அதிகமான அளவில் ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்பந்தத்தைத்தான் இஸ்ரேல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே இஸ்ரேலியர்களை நிரந்தர ஐயநிலைக்குத்தான் அந்த அரசு தள்ளியுள்ளது.

காஸா, வெறும் 365 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சின்னஞ்சிறு பகுதி. அங்கே 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இன்று அவர்களுள் பெரும்பாலானோர் உள்நாட்டிலேயே அகதிகளாகித் திரியும் நிலையை இஸ்ரேல் ஏற்படுத்தியிருக்கிறது.

இறுதியாக, இஸ்ரேல் காஸாவைத் தாக்குவதைத் தற்காப்பு உரிமை என்று சொல்லிப் பல வல்லாதிக்க நாடுகள் நியாயப்படுத்தின. உண்மையைச் சொன்னால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அநீதியாளர்களுக்கு, அடக்குமுறையில் ஈடுபடுவோருக்குத் தற்காப்பு உரிமை என்பதே கிடையாது. அநீதிக்கு உள்ளாவோருக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. தற்போதைய விவகாரத்தில் அது பாலஸ்தீனர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

(25.11.2023 அன்று ‘இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சினை: உலக நாடுகளின் தற்காலப் போக்கு’ எனும் தலைப்பில் பகிர் உரையாடல்கள் நடத்திய இணைய கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.)

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!