“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்; ஆனால், கசாப்புக் கடைக்காரன் போல நடந்துகொள்வார்கள்.”
– டாக்டர் அம்பேத்கர்
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் கலவரத்தின் ஒரு பகுதியாக, பழங்குடியினப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி வீதியில் நடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த காணொளி வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்த பலர், மேலுள்ள அண்ணலின் கருத்தைப் பரவலாகப் பகிர்ந்திருந்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்து இன்னமும் இது பொருந்துகிறது என்றால், இந்நாடு மாறாத சாதியச் சமூகமாக இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
ஊடகவியலாளர் சமஸ், எழுத்தாளர் அருந்ததி ராயுடனான நேர்காணல் ஒன்றில், ‘இன்னமும் நீங்கள் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறீர்களா?’ எனும் கேள்விக்கு, “நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க, அங்குள்ள பூர்வ குடிகளின் நிலங்களைப் பறிப்பதால், அடக்குமுறையால் அவர்களை ஒடுக்குவதால் ஆதரிக்கிறேன்” என்றார். மேலும், “அரசு என்று நாம் குறிப்பிடும் அமைப்பு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களிடம் தேசத்தின் சொத்துகளைக் கூறுபோட்டு விற்கத் துடிக்கிறது. அதைக் காக்கப் போராடிக்கொண்டிருப்பவர்களைப் பயங்கரவாதிகள் என்கிறோம்“ என்றார்.
இன்றைய மணிப்பூரின் கலவரத்துக்குப் பின்னாலுள்ள காரணங்களாக அண்ணல் சொன்ன சாதி இந்துக்களின் சாதிய மேலாதிக்கத்தையும் அருந்ததி ராய் குறிப்பிடுகிற பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வளங்களைத் தாரை வார்க்கத் துடிக்கும் எதேச்சதிகாரத்தையும் கூறலாம்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் உத்தரபிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து அவரைக் கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து விசாரிக்க, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைப்பதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதையடுத்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பித்து ஓய்ந்த மேரி கோம், அடுத்த சில மாதங்களிலேயே, ‘என் மாநிலம் பற்றியெரிகிறது; தயவுசெய்து உதவுங்கள்’ எனப் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களையும் சில ஊடகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சுதந்திர சாதிய இந்தியாவில் பட்டியல்படுத்தப்பட்ட சாதியினர் அனுபவித்த, அனுபவிக்கின்ற கொடுமைகள் என்பது உலகின் வேறு எவருக்கும் நிகழாதது. மதம், சாதி, வர்க்கமென எல்லாவற்றுக்கும் பலியாவதும் பலியாக்கப்படுவதும் பட்டியல் சாதியினர்தாம். போலவே, மணிப்பூரில் பேரவலத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் பட்டியல், பழங்குடியினரான குக்கியின மக்கள்தான். மணிப்பூரின் வரலாறு குறித்துத் தனித் தனியாகவே எழுதலாம் என்றாலும் அங்கு நடக்கும் கலவரத்தை ஒட்டிச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
மணிப்பூர் மன்னனைப் போரில் வென்று, 1891இல் தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு. இந்தியாவிற்குச் சுதந்திரம் தரப்பட்ட 1947 வரை மணிப்பூர் இந்தியாவோடு இணைக்கப்படவில்லை. மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, 1949இல் மணிப்பூர் ராஜா புத்த சந்திராவை மிரட்டி, அவரை வீட்டுக் காவலில் அடைத்து மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது இந்திய அரசு. அப்போது தொடங்கிய ஆக்கிரமிப்பு இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் அம்மக்கள் மீதான வன்முறையாக நீடிக்கிறது. முன்னதாக, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், அதையொட்டிய இரோம் சர்மிளாவின் பல ஆண்டுகள் நீடித்த உண்ணாநிலைப் போராட்டம் எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்தது மணிப்பூர். இந்நிலையில் பாஜக அங்கு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கி, நாங்கள் நாட்டைக் காக்க வந்த புனிதர்கள் என அம்மக்களை நம்ப வைத்தனர். பெரும்பான்மையான இந்து மெய்தி இன மக்களைச் சிறுபான்மை குக்கி இன மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகிற வேலையை ஆர்எஸ்எஸ் செய்யத் தொடங்கியது. சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசாவை விவசாயம் செய்யும் குக்கி இன மக்களைப் போதைப் பொருள் தயாரிக்கிறார்கள் என்றும், தீவிரவாதிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். அரசின் நோக்கம் அவர்களை மலைகளிலிருந்து அப்புறப்படுத்துவது. அதற்கான பகடைக் காய்களாக மெய்திக்களும் பயன்படுத்தப்பட்டனர் என்பதே பொருத்தமாக இருக்கும்.
கடந்த மே மாதம் தொடங்கிய கலவரத்தின் பின்னணி என்ன? இத்தனை உயிர்கள் பலியாகியும் பிரதமரின் கள்ள மௌனத்திற்குக் காரணம் என்ன? நீதி கேட்டு வலுக்கும் குரல்களைப் பாஜக அரசு நசுக்குவதற்கு மதம் மட்டும்தான் காரணமா?
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் விரிவான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சியாக ‘கீழ்த்திசை கவனக் குவிப்புக் கொள்கை’ (Look East Policy) 1991இல் இந்தியாவின் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசால் இயற்றப்பட்டது. இந்தக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம், வடகிழக்கு மாநிலங்களின் வளங்கள் மீதான தென்கிழக்கு ஆசியாவின் மூலதனத்தை ஈர்ப்பதே. பின்னாளில், Look East Policyஇன் வாரிசாக Act East கொள்கையை உருவாக்கியது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. அவ்வழியே, 2017இல் போடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதும் ஒன்று. பெரும்பாலான கனிமங்கள் மலைப் பகுதிகளிலேயே இருப்பதால், கனிமத்தைவிட மதிப்புக் குறைந்த பழங்குடிகள் இரையாக்கப்படுகிறார்கள். அதிலும், சங்பரிவார்களின் ஆட்சியில் சிறுபான்மை கிறித்துவ மணிப்பூர் பழங்குடிகளின் நிலை பெருந்துயரம். மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சுற்றியுள்ள சமவெளிப் பகுதிகளில் வசித்துவரும் இந்து மெய்தி இன மக்கள் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53% உள்ளனர். அரசியல், பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் மேம்பட்டுச் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். மாநிலத்தின் மொத்த 60 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மெய்திக்கள்.
மாநிலத்தின் பெரும்பான்மையான அதிகாரங்களைத் தன்னகத்தே வைத்துள்ள மெய்திக்கள் தங்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்த்து, குக்கி உள்ளிட்ட பழங்குடியினருக்கு வழங்கும் சலுகைகளைத் தங்களுக்கும் வழங்கிட 2013ஆம் ஆண்டிலிருந்தே போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்குப் பின்னால், ஆர்எஸ்எஸும் மெய்திக்களில் உயர்சாதியினரும் மிக முக்கியப் பின்புலமாக இருந்துவருகின்றனர். அவர்கள் துடிப்பது சலுகைகளுக்காகவா என்றால் அதுதான் இல்லை. மலைகளில் வசிக்கும் குக்கி உள்ளிட்ட பழங்குடிகள் மணிப்பூரின் சமவெளிகளில் அதாவது, மெய்திக்கள் வாழும் பகுதிகளிலும் நிலங்கள் வாங்கலாம். ஆனால், குக்கிகள் வசிக்கிற மலைகளில் மெய்திக்களால் நிலங்கள் வாங்க முடியாது என்பதே அவர்களின் பழங்குடி அங்கீகாரத்திற்கான தந்திரமான போராட்டம். மெய்திக்களின் இந்தக் கோரிக்கை நிறைவேறினால் மலைகளில் அவர்களால் நிலங்களை வாங்க முடியும். பெரும்பான்மை இந்துக்கள் சூழ சிறுபான்மை கிறித்துவ குக்கிகளை எளிதில் விரட்டிவிட்டு, மெய்திக்களைக் குடியமர்த்தி பின்பு அவர்களிடமிருந்தும் நிலங்களைக் கைப்பற்றிப் பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கலாம். மெய்திக்களின் இந்தப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக தலையீடு இருக்கிறது என்று நாம் சந்தேகிக்கிற இடமும் இதுதான்.
மேலும் கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் சலுகைகளை அனுபவித்துவரும் மெய்திக்கள் கேட்கும் பழங்குடி அங்கீகாரம் என்பது உண்மையில், அங்குள்ள சிறுபான்மையின பழங்குடிகளின் கல்வி, வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்ச்சிகளை உணர்ந்த, மணிப்பூரின் பல்வேறு பழங்குடியினங்களைச் சேர்ந்த, ‘அனைத்துப் பழங்குடி மாணவர் சங்கம்’ கடந்த மே 3 அன்று பேரணி ஒன்றை நடத்தியது. உரிமைக்கான குரலை ஒடுக்கப்பட்டவர்கள் எழுப்பும்போதெல்லாம், அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து
விடப்படும் என்பதைக் கடந்த கால மக்கள் உரிமைக்கான போராட்டங்களின் வழி அறிந்திருப்போம். நாடு முழுக்கவே அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுவது ஒடுக்கப்பட்டவர்கள் மீதுதான். போலவே, மணிப்பூரின் மாணவர் போராட்டத்தில் வீசப்பட்ட அரசதிகாரக் கற்களால் மூண்ட வன்முறையில், குக்கி பழங்குடியினர் 114 பேர் இறந்துள்ளதாகவும் 2 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் மணிப்பூர் பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்.
தொலைக்காட்சி விவாதங்களில் ‘வலதுசாரி’ எனும் பெயரில் பேசுகிறவர்கள், இருதரப்பிலும் இழப்புகள் உள்ளன என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர். இம்பாலில், மெய்திக்களின் இந்து அடையாள கொடிகள் ஏற்றப்பட்ட வீடுகள் தவிர்த்து, குக்கிகளின் வீடுகளும் உடைமைகளும் சூறையாடப்பட்டிருக்கின்றன. பாலியல் கொடுமைக்கு உள்ளானதும் குக்கியின பெண்கள்தான். உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 114 பேர் குக்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் வெளிவராத சம்பவங்களும் இருக்கின்றன எனவும் இணையச் சேவை முடக்கத்தால் தெரியாமல் இருப்பதாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது திட்டமிட்ட மறைமுகமான அரச பயங்கரவாதம் என்பதோடு, பாஜகவின் மத அரசியலும் அவர்கள் கொண்டுவந்த Act Eastஇன் கார்ப்பரேட் வணிகமும்தான் முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய மணிப்பூர் பத்திரிகையாளர் கிரீஷ்மா, ‘மே மாதம் தொடங்கிய கலவரம் குறித்து இந்தியாவின் எந்த ஊடகமும் விவாதிக்கவில்லை என்பதோடு, பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானால்தான் பேசுவீர்களா? அதாவது, இந்தக் கலவரம் குறித்துப் பொதுச் சமூகம் பேசவே, இரண்டு பழங்குடிப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது’ என்றார். மேலும் அவர் கூறுவது, பழங்குடிகள் மீதான தாக்குதல் என்பதோடு சுருக்கிவிடாமல், Right to Life எவ்வளவு முக்கியமானதோ, Right to Religion என்பதும் முக்கியமானது என்கிறார். இதுதான் இந்தியாவின் குரல்; பன்மைத்துவத்தின் குரல்.
நாடு முழுவதிலும் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் போராடிக்கொண்டேயிருக்கிறார்கள். மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்.பி மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டு, ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அதானி குழும மோசடி, பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரப் பின்னணியின் காணொளி தொகுப்பு என இந்த ஆண்டு மட்டுமே ஆளும் பாஜக அரசு சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. எல்லாவற்றுக்கும் மௌனித்திருக்கும் பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரத்திலும் ‘East Act’ படிதான் எல்லாமும் நடக்கிறது என்பதாலேயே இந்த மௌனம். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம், பல்வேறு நாடுகளுக்குப் பயணம் எனப் பரபரப்பாகவே இருந்தார். நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மே 28 அன்று திறக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மனுதர்மத்தின்படி பழங்குடியினத்தைச் சேர்ந்த தீண்டத்தகாதார் என்பதாலும், பெண் என்பதாலும் புறக்கணிக்கப்பட்டார் எனப் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வந்தது. மே 4, மணிப்பூரில் கலவரம் தொடங்கியது. மே 4க்கும் மே 28க்கும் இடையிலான நாட்களில் மணிப்பூர் கலவரத்தில் பல்வேறு தேவாலயங்கள் சூறையாடப்பட்டன; பழங்குடி குக்கிகள் கொல்லப்பட்டனர். நாட்டின் ஒரு மாநிலத்தில் பழங்குடிகள் இப்படிப் பாதிக்கப்படும்போது, அதே பழங்குடியினத்திலிருந்து வந்த ஒருவரை அழைத்து எப்படி நாடாளுமன்றத்தைத் திறப்பது என்கிற ‘மானுட அறத்தைத்’ தவிர வேறெந்த நோக்கமும் பாஜக அரசுக்கு இருந்திருக்காது என்று நம்புவோம். ஆனாலும் நாம் குடியரசுத் தலைவருக்கான பிரதிநிதித்துவம் குறித்துப் பேசுகிறோம். அவரோ மணிப்பூர் குறித்துப் பேசுவேனா என்கிறார். பட்டியலினப் பிரதிநிதிகள் மனுதர்மத்தின் படிநிலையை ஏற்றதால்தான் இந்த நிலை என்பதைக் குறிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது.
நாடு இக்கட்டான சூழலில் இருக்கிறது. தேச பக்தி எனும் பேரில் பாசிஸ்டுகள் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. ஊடகங்களும், அன்னா ஹசாரேவை, குஜராத் மாடலைப் பரப்பிய அளவு பாசிஸ்டுகளின் கொடுங்கோன்மையைப் பேசுவேனா என்கிறார்கள். சமூக வலைதளமான டிவிட்டர், பேஸ்புக் போன்றவையும் வார்த்தைப் பிரயோகத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறது. மொத்தமாக இந்தியாவைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிற அடிப்படைவாதிகளின் கொட்டத்தை எதிர்க்கட்சிகள் வீரியமாக எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ளன. மணிப்பூரின் பூர்வ பழங்குடியினர் மீதான தாக்குதல்; பழங்குடிப் பெண்ணின் நிர்வாணம் இந்தியாவிற்கே அவமானம் என்பதை உணர்ந்து சமரசமின்றிக் களமாடத் தயாராவோம். தேசபக்தி என்பது, தனியார் நிறுவனமான கிரிக்கெட்டில் இந்தியா வெல்லும்போது கொண்டாடுவதும், சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் சட்டைப் பையில் கொடி குத்திக்கொள்வதுமல்ல. நாட்டின் வளம், இறையாண்மை, பன்மைத்துவம், மதச்சார்பின்மைக்குக் குந்தகம் வரும்போது கிளர்ந்தெழுவது. இதையெல்லாம் செய்கிற அடிப்படைவாத பாஜகவினர் நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களாகவும் தேச பக்தர்களென்றும் சொல்லித் திரிகிறார்கள். கூச்சமே இல்லாமல் ஊடகங்களில் ‘வலதுசாரி சிந்தனையாளர்’ எனப் பேசுகிறார்கள். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி என்பதாகவே எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பார்க்க முடிகிறது. ஊழலைப் பெரிதாகக் கருதி பரப்புரை செய்யும் நடுநிலைவாதிகள், அதைவிடவும் கொடுமையான பாசிசத்தைக் கண்டுகொள்வதாக இல்லை. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் எனினும், இரண்டில் பெரிதாக இருக்கிற பாசிச கொடுங்கோன்மையை எதிர்த்து அவர்களை விரட்டியடிக்க வேண்டிய கடும் சூழல் இப்போது இருக்கிறது.