எருமை மறம்

மௌனன் யாத்ரிகா

காடெரியும் சத்தம்
ஊர் வரைக்கும் கேட்டது;
ஈட்டியின் கூர்மையில் படிந்திருந்த
காய்ந்த குருதியைச்
சுரண்டிக்கொண்டிருந்த கரியன்
ஆகாயம் நோக்கினான்;
மேகக் கூட்டத்தைப்
புகை மண்டலம் மூடிக்கொண்டிருந்தது;
மூப்பன் ஒருவன்
நெஞ்சோடு பேசிக்கொண்டான்:
“கைப்பற்றிய நிலப்பகுதியைச்
சிதைத்துப் பார்க்கும் குரூர புத்தி
மனித நடத்தையில் கீழானது;
அதன் வரலாற்றைத்
திரும்பிப் பார்க்கையில்
இந்தப் பிரபஞ்சத்தின் முதல் ஓநாய்
ஊளையிட்ட காட்சியைக்
கற்பனை செய்கிறேன்;
கடைவாயில் வழியும் குருதியில்
நாக்கைப் புரட்டும் விலங்கு
பூமியின் பள்ளம் ஒன்றிலிருந்து
மேடான மலைப்பகுதிக்கு ஓடி
கீழே இறைந்து கிடக்கும்
மனித உடம்புகளை வெறித்து ஓலமிடுகிறது;
குரலின் அழுத்தம் தாளாமல்
மலைச்சரிவில் பாறைகள் உருள்கின்றன;
சமவெளி நடுங்குகிறது;
இப்போதும்
போர் நடந்த தடத்தை
அழியாது பேணும் மனித இனம்
உயிரினங்களில் கொடூரமானது”

m

“அழித்தொழிப்பைத் தொடங்கிவிட்டார்கள்;
இதுவரை
நான்கு மலைக் கிராமங்கள்
தொலைந்து போயிருக்கின்றன;
நிர்க்கதியில் விடப்பட்ட
ஊருயிர்களின் கண்கள்
வெறுமையைக் கண்டு அஞ்சுகின்றன;
நடு இரவுகளில் கேட்கும்
பூனையின் அழுகையொலி
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது;
காவலன் இல்லாத
வேட்டை நாய்கள்
இரை தேட மனமின்றித்
தளர்ந்து படுத்திருக்கும் காட்சி
உயிரைத் துன்புறுத்துகிறது;
எருமைகளின் கலங்கிய முகம்
மனதை வதைக்கிறது;
துப்பாக்கிச் சத்தத்துக்கு
கருக் கலைந்த முட்டைகளை
றெக்கைகளுக்குள் பதுக்கும்
கோழிகளைக் காண்பதற்குக்
கல் நெஞ்சம் வேண்டும்;
மறிகளின் குரல்கள்
மேய்ப்பனை அழைத்துக்கொண்டே இருக்கின்றன,
மேய்ச்சல் காட்டுக்குச் செல்லும் வழியை
அவை மறந்துபோயின;
போர்,
உயிர் வாழ்வின் இயல்புக்கு எதிராக
மாபெரும் வேலியை நிறுத்திவிடுகிறது;
சிறுபான்மையின் தோல்வியும் அழிவும்
பெரும்பான்மையின்
வெற்றுப் பெருமித வரலாற்றை எழுதத்
தேவைப்படும் அவலம்
எப்போது முடிவுக்கு வருமோ?!”
இவ்வாறு…
ஒரு நாடோடியின் குரல்
கரியனின் காதில் விழுந்தது.

m

“எல்லையிலேயே
எதிரிகளை மடக்கித் துரத்த வேண்டும்;
குலக்குறியின் முன்பிருக்கும்
படையல் குருதியைக் கண்டு
நம் நிலத்தில்
குளம்படிகளைப் பதிக்க
குதிரைகள் அஞ்ச வேண்டும்;
துப்பாக்கிகளின் கருந்துளைகளுக்குள்
பதுங்கியிருக்கும் ரவைகள்
நடுக்கத்தில் உறைந்துவிடுவதுபோல்
உறுமக்கூடிய வேட்டை நாய்களைக்
காட்டின் முதல் வரிசையில் நிற்கும்
பெரும்படைகளான மரங்களுக்கருகில்
நிறுத்தி வைப்போம்;
எதிரியின் கைகள்
துப்பாக்கியை இயக்குவதற்கு முன்பு
அவனது குரல்வளையை
ஊடுருவ வேண்டும்
நமது ஈட்டி…”
பங்காளிகளில் ஒருவன்
சினமேறி உறுமினான்.

m

 

கரியனை எதிர்கொண்டால்
எதிரிகளின் தொடைகள்
காய்ச்சல் கண்ட கோழியைப்போல் ஆடும்;
நூறு பரங்கியர்கள்,
அவர்தம் இருநூறு கால் தடங்கள்,
அவர்களது குதிரைகளின்
நானூறு குளம்படிகள்,
எல்லாமே…
கரியன் எதிரில் ஓடி வந்தால்
ஈக்களைப்போல் சிதறிப்போகக்கூடும்;
கரியனை வழிமறிக்கும்
சிறுத்தையோ புலியோ செந்நாயோ
பிறந்திராத இக்காட்டில்
எதிரிகள் நுழைவார்கள் எனில்
தமது கூடாரங்களுக்கு
அவர்கள் திரும்பிப் போக மாட்டார்கள்;
ஒருமுறை அவர்கள்
கரியனின் தோற்றம் காண்பார்கள் எனில்,
குதிரைகளின் காய்ந்த விட்டைகளைப்
பொறுக்கியெடுத்துக்கொண்டு
தமது நாட்டுக்கு
மூட்டையைக் கட்டுவார்கள்;
தமது கால்சராய்களை அவிழ்த்து
அம்மணக் குண்டியாக ஓடவிடும் ஒருவனை
இன்னும் அவர்கள் பார்க்கவில்லை;
தாயாரில் ஒருத்தி
கரியனின் தகைமை சொன்னாள்.

m

கரியனுக்கு
வேட்டையைக் கற்பித்த
இந்தக் காடுதான்
சண்டையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது;
பாறையைப் புரட்டிவிட்டு
அங்கே ஊறியிருக்கும் நீரைப்
பருகத் தெரிந்தவனுக்கு…
பூமிக்குள் நுழைந்து
வேர்களுக்குள் பதுங்கினாலும்
அங்கே புகுந்து
வேட்டையாடத் தெரிந்தவனுக்கு…
வெள்ளம் புரண்டோடும் காட்டாற்றை
ஆறடி வளர்ந்த ஆராலைப்போல்
நீந்திக் கரையேறத் தெரிந்தவனுக்கு…
சிங்கத்தின் ஈரலை
எந்தப் பதத்தில் சுட வேண்டும் என்று
தெரிந்தவனுக்கு…
அம்புக்கும் ஈட்டிக்கும்
பாய்ந்து செல்ல
கற்றுக்கொடுப்பவனுக்கு…
வேட்டை நாய் ஓடும்போது
எகிறித் தெறிக்கும்
குறுங்கற்களைத் தாவிப் பிடிக்கத் தெரிந்தவனுக்கு…
தென்னையிலிருந்து நாரெடுத்துப்
பனையில் கூடுகட்டும்
சிட்டுக்குருவிகளைப்போல்
வாழ்ந்துகொண்டிருக்கும்
தற்சார்புக் குடிகளின் தலைவனுக்கு…
வெள்ளைக் கூட்டம்
வெறும் வெருகுப் பூனைக் கூட்டம்;
மறவோரில் ஒருவர்
கரியனின் தனித்திறன் புகழ்ந்தார்.

m

எல்லாவற்றுக்கும்
காது கொடுத்துக்கொண்டிருந்த
கரியன் கூறினான்:
இங்கு…
ஒரு கரியன் இல்லை,
கரியன் கூட்டமே இருக்கிறது;
இவன் கரியன், அவன் கரியன்,
மறவோன் கரியன், மடந்தை கரியன்
இதோ!
இந்த விடலையும் கரியன்
அதோ!
அந்த மீளியும் கரியன்
பேதையும் கரியன்
பேரிளம்பெண்ணும் கரியன்
கோட்டுப்பறையும் கரியன்
வேட்டை நாயும் கரியன்…
இது கரியன்களின் நிலம்.
பன்றிகள்,
கோரைக் கிழங்கைத் தோண்டலாம்,
ஈச்சங்கிழங்கைத் தோண்ட முடியாது;

m

கரியன் பேசி முடிக்கவில்லை;
அவனருகில் படுத்திருந்த
வேட்டை நாய்
தனது காதுகளைக் கூர் தீட்டியது;
தரையில் ஏதோ அதிர்வு;
அதன் காது நரம்புகள் புடைத்தன;
வயிற்றைச் சுருக்கியது,
பின்னங்கால்களை அழுத்தியது;
அடுத்த கணம்…
ஊரே நடுங்கும்படியான
குரலை எழுப்பிக்கொண்டு
விசையுடன் ஓடியது.

m

கரியன்கள்
ஈட்டிகளைக் கையில் எடுத்தார்கள்;
கூர் பகுதி புறந்தலைக்கும்
அடிப்பகுதி தொடை வரைக்குமாய்
கரேலென்று விடைத்திருக்க,
ஒவ்வொரு கரியனும்
ஒவ்வொரு மரத்தோடு
ஒன்றிக்கொண்டார்கள்;
ஈட்டிகள்
குருதியில் நனைய
காத்திருந்தன.

(தொடரும்…)

 

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger