4
நஸ்ரின் முகமதி, இந்திய விடுதலைக்குப் பின்னான நவீன கலையுலகின் முக்கியப் பெண் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரின் தனித்துவமான கோட்டோவியங்கள் தீர்க்கமாக அருவ ஓவிய (abstract) வகைமைகளாக வெளிப்பட்டன. இன்று, நவீன இந்திய ஓவிய வடிவங்களில் ஒன்றாக அடையாளம் காணப்படும் கோட்டோவியங்களின் தொடக்கமாக நஸ்ரின் முகமதியின் ஓவியங்களே இருக்கின்றன. நஸ்ரினின் கலையில் வெளிப்படும் நுட்பமும் ஒழுங்கமைவும் அவரை மற்ற கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. மேலும், மினிமலிச அருவ ஓவியங்களின் அடையாளமாக நஸ்ரின் படைப்புகள் திகழ்கின்றன.
நஸ்ரின் 1937இல் கராச்சியில் பிறந்தார். உயர்கல்வியை மும்பை ஜே.ஜே கல்லூரியில் கற்றார். பின்னர், இலண்டன் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைனில் படித்து, பாரிஸிலிருந்து தனது கலை பயணத்தைத் தொடங்கினார். அனேக பின்காலனிய இந்திய ஓவியர்களைப் போலவே அவரது ஆரம்ப கலைப் பணிகள் மேற்கின் தாக்கத்தை வெளிப்படுத்தின. குறிப்பாக, சர்ரியலிச – எக்ஸ்பிரஷனிஸ்ட் வகைகளின் தாக்கம் பெற்றிருந்தன.
எளிமையான, துல்லியமான கைவினைக் கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகள் அதிகம் பொருள் புதைந்தவையாக இருந்தன. மேலும், அவற்றைக் கொண்டு ஒரு கண் கொள்ளும் அனுபவத்தை உருவாக்கினார். கோடுகள், மடிப்புக் கோடுகள், ஒளி வெளிப்பாடுகள் ஆகியவை பார்வையாளரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்றன. அவரது கோடுகள் தர்க்கரீதியான அமைப்புகளைக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆன்மீக உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன.
தனது தொழில்நுட்பத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார் நஸ்ரின். அவரது ஆரம்பகால படைப்புகள் வண்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டவை என்றாலும், அதற்குப் பின் கருப்பு – வெள்ளை வரிகளைக் கொண்டு அதிகமான படைப்புகளை உருவாக்கினார். இது அவரது படைப்புகளில் அற்புதமான வடிவங்களை உருவாக்கியது. ஒழுங்குடன் கூடிய எளிமையான வரிகள், அவற்றின் இடைவெளி, தொடர்பு ஆகியவற்றின் மூலம் பல அர்த்தங்களைப் பெற்றன. கோடுகளைக் கொண்டு காட்சிகளையும் உணர்வுகளையும் உருவாக்கினார்.
கோடுகளைக் கொண்டு உருவாக்கப்படும் ‘லினியர் அப்ஸ்ட்ராக்ஷன்’ அவரது பிரதான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். இதில் நேர்கோடுகளின் மூலம் ஆழம் – பரிமாணங்களை உருவாக்கினார். அவர் பயன்படுத்திய கிராபைட், மை, நீர் வர்ணங்கள் ஆகியவை அவரது படைப்புகளில் தனித்துவம் சேர்க்க உதவியது. தனது மனப்பதிவுகளை, கருத்துகளை ஓவியங்களாகப் பல நேரங்களில் வெளிப்படுத்தினார்.
நஸ்ரினின் கோடுகள் தீர்க்கமான அமைதியையும் சீரான ஆழத்தையும் கொண்டிருந்தன. தனது படைப்புகளில் வெளிப்படையான பரப்புகளை, இடைவெளிகளைத் திறம்பட பயன்படுத்தினார். இவற்றில் காணப்படும் இடைவெளியும் வடிவமைப்பும் நவீன கலைக்குள் புதிய உயரங்களைத் தொட்டன. மேலும் அவை ஆழமான மெய்யியல் / உளவியல் விசாரணைகளையும் கொண்டிருந்தன.
தனது படைப்புகளில் நவீன கலை, பாரம்பரியக் கலையின் ஒருங்கிணைப்பைப் பிரதிபலித்தார். அவர் பயன்படுத்திய கைவினை – மடிப்புக் கோடுகள் சுருக்கமான, துல்லியமான அமைப்புகளை உருவாக்கின. இது அவரின் படைப்புகளை ஒரே நேரத்தில் நவீனமும் பாரம்பரியமுமாக மாற்றியது. மேலும், அவரது படைப்புகளில் வெளிப்படும் ஒளியும் நிழலும் உருவாக்கிய வடிவங்கள், மனித இருப்பின் ஆன்மிகத் தேடல்களை வெளிப்படுத்துவதாக மாறின. குறிப்பாக இயற்கை, அண்டம், தனிமை, அமைதி, முடிவற்ற வெளி என்று மனிதர்களில் ஆதி கேள்விகளைப் பிரதிபலித்தன.
Night
நஸ்ரினின் பெரும்பான்மையான ஓவியங்கள் பெயரற்றவையே. Untitled 1,2,3.. என்று நிழலும் பெயரற்ற அவ்வரிசைகளே அவரின் கலையின் சிறப்புமிக்கப் படைப்புகளாக மிளிர்கின்றன. அவற்றில் குறிப்பிட்டதக்க சில:
- பெயரிடப்படாத (untitled)
- பெயரிடப்படாத 1
- பெயரிடப்படாத 203
- பெயரிடப்படாத 568
- பாங்கு (pattern)
- கோடுகளின் ஒழுக்கம் (discipline of line) 1
- வடிவியல் பாங்கு (Geometric Pattern)
- அருவம் (abstract)
- இரவு
இவரது ஓவியங்களில் இஸ்லாமியக் கலையின் தாக்கமும், மேலே குறிப்பிட்டதைப் போல் மெய்யியலின் குறிப்பாக, ஜென் பௌத்தம் – சூஃபியின் தாக்கமும் பெரிதும் வெளிப்பட்டன. அதுவே மினிமலிஸ்ட் அருவக் கோடுகளாக வெளிப்பட்டன.
நஸ்ரினின் ஓவியங்களில் காணப்படும் சிக்கல்களும் நிர்ப்பந்தங்களும் அவரது தர்க்கரீதியான அணுகு முறையின் பிரதிபலிப்பாகும். தனது படைப்புகளில் நேர்கோடுகளின் தன்மையை மிகவும் ஆழ்ந்த முறையில் ஆராய்ந்தார். அவரது கலைப்பணிகளில் காணப்படும் நுணுக்கமான கோடுகள் – ஒளியின் விளையாட்டுகள் அவரது சிந்தனையின் ஆழத்தையும் பிரதிபலிக்கின்றன.
நஸ்ரின் குறித்து எழுதியவர்கள் அனைவரும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விடயம், அவரது குறிப்புப் புத்தகங்கள். தனது சிந்தனைகளை, வடிவங்களை, முன்மாதிரிகளைக் குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்தார். இக்குறிப்புப் புத்தகங்கள் அவரது கலைப் பயணத்தின் முக்கியமான பகுதியாக இருந்தன. இவை அவரது சிந்தனையின் – படைப்பின் அடிப்படைகளை வெளிப்படுத்துகின்றன.
இவரின் கலைப் பணி சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இப்போது நவீன கலை வரலாற்றில், குறிப்பாக தெற்காசிய கலையின் சூழலில் நஸ்ரின் முக்கியமான கலைஞராக முன்வைக்கப்படுகிறார். அவரது பங்களிப்புகள் அவற்றின் அசல் தன்மைக்காகவும் சுருக்கத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்றன.
மேலும், உலகளாவிய கலைக் கூடங்களும், கலை அமைப்புகளும் இவரின் ஓவியங்களை உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன. அவை இந்திய அருவக் கலையின் முன்னோடியாக அவரது முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.
தற்கால கலைஞர்களில், தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள், கலை வெளிப்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறந்த ஓர் உந்துசக்தியாக இவரைக் கருதுகின்றனர். அருவம், மினிமலிசம் மற்றும் கலையின் ஆன்மீகப் பரிமாணங்களை ஆராயும் கலைஞர்களை அவரது பணி தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
நஸ்ரினின் கலை, தனித்துவமான பார்வை ஆகியவை அவரது கலாச்சார, கலை எல்லைகளை மீறும் திறனுக்கு ஒரு சான்றாகும். நுணுக்கமான கோடுகளைக் கொண்டு உருவான அவரது கலை, ஆழ்ந்த மெய்யியல் கருப்பொருள்களுடன் வெளிப்பட்டது. அதுவே நவீன கலையில் குறிப்பிடத்தக்க நபராக அவரது இடத்தைப் பாதுகாத்துள்ளது. அவரது பணியின் மூலம் அவர் பார்வையாளர்களை எல்லையற்ற, அமைதியான மற்றும் காணப்படாதவற்றைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறார். சமகால பார்வையாளர்களுடன் தொடர்ந்து எதிரொலிக்கும் தியான அனுபவத்தை வழங்குகிறார்.
நூல் பட்டியல்
- தி கிரிட்: அன்பிளக்ட், கீதா கபூர், நஸ்ரின் முகமைதி.
- டிராயிங் ஸ்பேஸ், என். எஸ். ஹர்ஷா, ஷீலா கௌடா, நஸ்ரின் முகமைதி.
- நஸ்ரின் முகமைதி வாயிலாக அருவத்தின் உலகம், இந்தியன் ஆர்ட் பேர்.