இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள் போர் காரணமாக மட்டுமில்லாமல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் கடல் வழியாகவும், விமானம் வழியாகவும் அகதிகளும், அகதியல்லாதவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
இப்படி வந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு எதற்காக வந்தார்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இலங்கையிலிருந்து சினிமா பார்ப்பதற்காகப் படகு மூலமாக வந்து போன கதைகள் வாய்மொழியாகச் சொல்லப்படுகிறது. அதுபோல் பொருட்கடத்தல்காரர்களின் வருகை காலங்காலமாக இருக்கிறது. எரிபொருளில் இருந்து வெடிமருந்துகள் வரை கடத்தல் இருக்கிறது. அவை காலத்துக்குக் காலம் தேவையான பொருட்களாக மாறியிருக்கிறது. சமீபகாலங்களில் அவை போதைப் பொருட்களாகவும் மாறியிருப்பதை அவதானிக்கலாம்.
1970களுக்குப் பின் இலங்கையில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆரம்பமாக இருந்தாலும் 1980களுக்குப் பிறகே போராளிகள் தமிழகம் வர ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து பல இயக்கப் போராளிகளுக்கு இந்திய அரசு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகாம் அமைத்து ஆயுதப் பயிற்சி அளித்தது. இதற்காகக் கடல் மார்க்கமாக ஆயிரக்கணக்கான போராளிகள் தமிழகத்தில் தங்கியிருந்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இவை இந்திய நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு வெளியே நடந்தவை. 1987ஆம் ஆண்டு ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்காக, 1986ஆம் ஆண்டு தமிழகத்தில் பயிற்சி பெற்ற போராளிக் குழுக்களை இந்தியா வெளியேற உத்தரவிட்டது.
1964 சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா – இந்திரா ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரத்துக்குக் கப்பல் மூலமாக மலையக மக்கள் அனுப்பப்பட்டார்கள். 1982 வரை இது நடந்தது, அதன் பின்னும் தொடர்ந்து அவர்கள் படகுகளிலும் வந்தார்கள். அவர்களுக்கான கப்பல் போக்குவரத்து 1984இல் நிறுத்தப்பட்டது.
1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இங்குதான் ஒப்பந்தப்படி வந்தவர்கள் அகதிகளாக வந்தவர்களோடு கலந்து போனார்கள். 82க்குப் பின் வந்தவர்களை அகதிகள் என்ற போர்வையில் சட்டவிரோதக் குடியேறிகளாக இந்திய அரசு கருதியது. மறுவாழ்வுத் துறையின் பதிவின்படி 1,34,053 பேர் இப்படி வந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் இலங்கை சென்றபோது பெரும்பகுதி அகதிகள் இலங்கை சென்றார்கள். ஒப்பந்தப்படி வந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியுரிமை வேண்டி மண்டபம், திருச்சி கொட்டப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கிவிட்டார்கள்.
மேற்கத்திய நாடுகளுக்கான இலங்கைத் தமிழர்களின் புலப்பெயர்வில் இந்தியா முக்கிய இடத்தைப் பெறுகிறது. அவர்களில் கணிசமான இலங்கையர்கள் தமிழகம், இந்தியாவின் வழியாகத்தான் சென்றார்கள். இவர்களில் கடவுச்சீட்டு வழியாகவும், கடல் மார்க்கமாகவும் வந்தவர்களும் அடங்கும். இப்படி வந்து சென்றவர்கள் மற்றும் மாற்று இயக்கத்திலிருந்து வந்து தமிழகத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குறித்த எந்தக் கணக்கெடுப்புகளும் இல்லை.
1989இல் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபோது அவர்களுடன் வந்த போராளிக் குழுக்கள் பெங்களூருவிலும் ஒரிசாவிலும் குடியேறினர். 1990இல் மீண்டும் போர் ஆரம்பித்தபோது அகதிகள் தமிழகம் வர ஆரம்பித்தார்கள். 1989 தொடக்கம் 1991 வரை 1,22,241 பேர் அகதிகளாக வந்தார்கள். தொடர்ந்து 2012 வரை வந்தார்கள். 2012க்குப் பின் அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அதுவரை 3,03,076 அகதிகள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படி 1980க்குப் பின் இலங்கைத் தமிழர் தமிழகத்துக்கு வருவதும் வெளியேறுவதுமாக இருந்த நிலையில் இன்று 106 அகதிகள் முகாம்களில் 57,391 பேரும், முகாமிற்கு வெளியே 33,783 பேரும் வாழ்கிறார்கள்.
அகதிகளாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
- 05.1982 அன்று சென்னை பாண்டிபஜாரில் கீதா கபே முன்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புளட் இயக்கத் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரனும் இரவு 9.30 மணியளவில் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள். எவருக்கும் காயமோ மரணமோ நிகழவில்லை. பாண்டிபஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. துப்பாக்கியைப் பறிமுதல் செய்த காவல்துறை, அவர்களைச் சிறையில் அடைத்தது.
- 1984ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரண்டாம் திகதி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கைத் தமிழரான தம்பாபிள்ளை மகேஸ்வரன் என்பவர் உட்பட ஐவர் சென்னையிலிருந்து கொழும்பு செல்லவிருந்த ஏர் லங்கா விமானத்தில் டைம்பாம் வைத்து, கொழும்பு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின் வெடிக்கும்படி திட்டமிடப்பட்டது. அது தவறுதலாகச் சென்னை விமான நிலையத்தில் வெடித்தது. இதில் 33 நபர்கள் சம்பவ இடத்தில் இறந்தார்கள், 27 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 10 பேர் விமான நிலைய ஊழியர்கள். ஏனையவர்கள் சிங்களவர்கள். இதைச் செய்தது தமிழ் ஈழ இராணுவம். இந்த நிகழ்வு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
- ஈபிஆர்எல்எஃப் இயக்கப் போராளிகள் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்தனர். 1986 நவம்பர் 1 திகதி தீபாவளி அன்று இயக்கப் போராளிகள் குடித்துவிட்டு வந்து பெட்டிக்கடையில் வாங்கிய பொருளுக்குக் காசு கொடுக்க மறுத்தார்கள். அது வாய்த் தகராறாக மாறவும் கடைக்காரருக்கு ஆதரவாகப் பலர் கூடினர். பொடியள் வீட்டிற்குச் சென்று இயந்திரத் துப்பாக்கியை எடுத்துவந்து பொதுமக்களைச் சுட்டார்கள். இதில் திருநாவுக்கரசு என்பவர் இறந்து போனார்.
- 1990 ஜுன் 19 திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) இயக்கத்தின் பொதுச் செயலாளர் கே.பத்மநாப, இலங்கை வடகிழக்கு மாகாண சபை நிதி அமைச்சர் கிருபாகரன் உட்பட 15 பேர் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜனநடமாட்டமுள்ள கோடம்பாக்கம் வீதியில் இந்தக் கோரச் சம்பவம் நடந்தது. இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) இயக்கத்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் போலீஸார் கூறினர். இதை 20.06.1990 அன்று தினமணி பத்திரிகைச் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
- 1991மே 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூருக்குப் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து 19 பேர் கொல்லப்பட்டார்கள். இதன் பின்னான வழக்குகள், யார் இதனைச் செய்தார்கள் என்பதெல்லாம் பொது வெளியில் நன்கு பேசப்பட்டவை.
மேற்குறிப்பிட்டவை இலங்கைத் தமிழ்ப் போராளிகளால், நவீன ஆயுதங்களைக் கொண்டு தமிழகத்தில் நடத்தப்பட்ட பிரதான கொலைச் சம்பவங்களாகக் குறிப்பிடலாம். இதனைப் போராளிகள் தங்களுக்குள்ளாகச் சுட்டுக்கொண்டது, இந்தியர்களைக் கொலை செய்தது என்று பிரித்துப் புரிந்துகொள்ளலாம். இக்கொலைகளுக்கான காரணங்கள், பின்னணி, நோக்கம் என்ன, யாருக்காக நடந்தன என்பவற்றை ஆய்வுக்குட்படுத்துவதல்ல இக்கட்டுரை.
இவை தவிர சிவில் சமூகக் குற்றங்கள் இலங்கைத் தமிழர்களால் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. அதில் ஆட்கடத்தல், தூள் கடத்தல் என்பனவும் அடங்கும். இதற்காக அரசு நிர்வாகத்தையும், காவல்துறையையும் எல்லா வழிகளிலும் முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
1982ஆம் ஆண்டு பாண்டி பஜாரில் பிரபாகரன் – உமாமகேஸ்வரன் சுட்டுக்கொண்ட நிகழ்வு தவிர்த்து, மற்ற அனைத்துக் கொலை நிகழ்வுகளின்போதும் அகதிகள் தமிழகத்தில் இருந்தார்கள். தமிழகம் தவிர்த்து இந்தியாவின் வேறு மாநிலத்திலோ பிற நாடுகளிலோ இவ்வாறு நடந்திருந்தால் அகதிகளின் நிலை என்னவாகியிருக்கும்? இப்படி நடந்தும்கூட தமிழ்ச் சமூகத்தால் அகதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதில்லை.
ராஜீவ் காந்தி மரணத்துக்கு முன்புவரை அகதி பதிவு அட்டையை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் இரயிலில் இலவசப் பயணம் செய்திருக்கிறார்கள். ராஜீவ் மரணத்துக்குப் பின் தனிப் பதிவிலிருந்த ஆயிரக்கணக்கான அகதிகளைப் பிடித்துச் சிறப்பு முகாமில் அடைத்தார்கள். சிறப்பு முகாம்கள் அதிகரித்தன. முகாமிற்கு வெளியே உள்ளவர்கள் அனைவரும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. கடலோரப் பகுதிகளில் இருந்த முகாம்களை உட்பகுதிக்கு மாற்றினார்கள். வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பினார்கள். உயர்நீதிமன்றத்தை நாடி கட்டாயமாக அனுப்புவதற்குத் தடை உத்தரவு வாங்க நேரிட்டது. அப்போது முதல் முறையாக ஜெயலலிதா தமிழகத்தில் முதல்வராக இருந்தார்.
முக்கியமாக இந்தக் கொலைகளைச் செய்தவர்களோ, அல்லது அவர்களுக்கு உதவியவர்களோ குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு முகாம் வாழ் அகதிகள் எவரும் இல்லை. திட்டமிட்டுக் கொலை செய்பவர்கள், இவ்வளவு பெரிய பாரதூரமான கொலைகளைச் செய்பவர்களுக்கு எந்த அளவு பணபலமும் அரசியல் செல்வாக்கும் இருக்கும்? அவர்கள் ஏன் அகதிகள் முகாமில் அகதியாக இருக்க வேண்டும்? இந்தக் கொலைகளைச் செய்தவர்கள் எல்லாம் இன்று எங்கிருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? (இறந்தவர்கள் தவிர மற்றவர்கள்) அகதிகளும் இலங்கைத் தமிழர் என்பதால் அத்தனை பழிகளும் குற்றச்சாட்டுகளும் இன்னும் அகதிகள் மேல் அழியாத கறையாகப் படிந்திருக்கிறது.
முகாம்வாழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை கேட்டு நீதிமன்றத்தை நாடினால் மத்திய அரசு நீதிமன்றத்தில் இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்கிறது. தமிழகத்தில் பயிற்சியெடுத்த போராளிகள் எந்த அடிப்படையில் வந்தார்கள்? இவர்கள் ஆயுதக் கலாச்சாரத்துடன் நேரடித் தொடர்புடையவர்கள், அதனால் இவர்களுக்குக் குடியுரிமை கொடுத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று மத்திய உள்துறை கருதுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், முகாம்வாழ் அகதிகளால் இந்திய இறையாண்மைக்கோ, சிவில் சமூகத்தின் பொது அமைதிக்கோ இதுவரை எந்த அச்சுறுத்தல்களும் நடந்ததில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களால் இழைக்கப்பட்ட வன்முறைகளே நாற்பது ஆண்டுகளாகச் சாமானிய அகதிகளை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கிறது.
தமிழகமும் தமிழக மக்களும் இலங்கைத் தமிழர்களால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். திமுக மாநில ஆட்சியை இழந்திருக்கிறது. அரசியல் காரணங்களும், புறச்சூழல் நெருக்கடிகளும் இருந்தாலும் தமிழகம் அகதிகளுக்குக் குடியுரிமை கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறது. தமிழ்ச் சிவில் சமூகம் அதனை ஆதரிக்கிறது. ஆனால், தமிழகத்தில் நாற்பதாண்டுகளாக வாழும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற தார்மீக ஆதரவுக் குரல் தமிழகத்துக்கு வெளியே உள்ள புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்தும், இலங்கையிலிருந்தும் எழுந்துவரவேயில்லை.
அகதிகளும் மனிதர்கள்தான், அவர்களும் சக மனிதரைப் போல் வாழ வேண்டாமா?