பாபாசாகேப் அம்பேத்கர் தோற்றுவித்த இயக்கங்கள்

ஜெ.பாலசுப்பிரமணியம்

7

பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இம்மக்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் பல இயக்கங்களைத் தொடங்கினார். அவை குறித்த அறிமுகம் இருந்தால்தான் அம்பேத்கரிய அரசியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புரிதலிலிருந்துதான் நாம் தமிழகத்தில் அம்பேத்கரிய இயக்கங்களையும் இதழ்களையும் புரிந்துகொள்ள முடியும்.

பாபாசாகேப் அம்பேத்கர் தோற்றுவித்த இயக்கங்கள்

  1. பகிஸ்கிரித் ஹித்தகாரனி சபை (1924)
  2. சமாஜ் சமத சங்கம் (1927)
  3. சமதா சைனிக் தள் (1928)
  4. சுதந்திர தொழிலாளர் கட்சி (1936)
  5. அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் (1942)
  6. இந்தியக் குடியரசுக் கட்சி (1956இல் அம்பேத்கர் இதற்கான திட்டமிடலைச் செய்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்பு 1957இல் அவரைப் பின்பற்றியவர்களால் கட்சி தொடங்கப்பட்டது)

இந்த ஆறு அமைப்புகளில் முதல் இரண்டும் சமூக அமைப்புகளாக வடிவமைக்கப்பட்டன. மூன்றாவது அமைப்பு தொண்டர் படையாக வடிவமைக்கப்பட்டது. அடுத்த மூன்றும் அரசியல் கட்சிகளாகத் தோற்றுவிக்கப்பட்டன. பம்பாய் நூற்பாலைகளில் தொழிற்சங்கங்களையும் உருவாக்கினார். இதற்கெனப் பெரும் தொண்டர் படையையும் கட்டமைத்து, இவ்வமைப்புகள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்தினார். இவற்றுக்கான கொள்கைகள், செயல்திட்டங்களை பாபாசாகேப் தெளிவாக வரையறுத்திருந்தார்.

  1. இந்த அமைப்புகளின் நோக்கங்கள் என்ன?
  2. அமைப்பு யாரையெல்லாம் உள்ளடக்கியது?
  3. இவற்றின் செயல்பாடுகள் என்ன?
  4. யாரெல்லாம் இந்த அமைப்பை ஆதரிக்க வேண்டும்?
  5. தொண்டர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
  6. என்ன விதமான செயல்பாடுகளில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும்?

பகிஸ்கிரித் ஹித்தகாரனி சபை (1924)

இந்தச் சபை, ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் கல்வியைப் பரவச் செய்வதற்கு விடுதிகளை உருவாக்குவது, நல்ல பண்பாட்டை உருவாக்குவதற்காக நூலகங்கள், சமுதாய மையங்கள், வாசிப்பு வட்டங்கள் போன்றவற்றை உருவாக்குவது, ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொழிற்பயிற்சி, விவசாய பயிற்சி மையங்களை உருவாக்குவது, ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிப்பது போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்தச் சபையில் சாதி இந்துக்கள், தலித்துகள் என அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ளும் வகையில் இருந்தது. இச்சபை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் யாருக்காக இது தொடங்கப்பட்டதோ அந்தச் சமூகங்களிலிருந்தும், அதைப் போன்ற கோரிக்கைகளைக் கொண்ட சமூகங்களிலிருந்தும் தொண்டர்கள் வர வேண்டும் என்று பாபசாகேப் அம்பேத்கர் விரும்பினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட பணக்காரர்களும், உயர் சாதியினரும் இதில் இணைந்து பாடுபட வேண்டும் என்று அறிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உயர் சாதியினர் தொடங்கிய அமைப்புகளால் ஒடுக்கப்பட்டோருக்கு எந்தப் பயனும் இல்லை. ஆகவேதான் பகிஸ்கிரித் ஹித்தகாரனி சபை தொடங்கப்பட்டது என்று அறிவித்தார். தனது தொண்டர்களுக்கு ‘கற்பியுங்கள், சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவத்திற்காகப் போராடுங்கள், ஒன்று சேருங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார். 1926இல் அவர் பேசியபோது “ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைப்படுத்திய உயர் சாதியினரின் அரசியல், சமூக ஆதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணியாதீர்கள்” என்றார். மார்ச் 1927இல் சௌதார் குளம் போராட்டத்தை முன்னெடுத்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மஹத் மாநாட்டில் மனுஸ்மிருதியை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பெருந்திரளாகக் கோயில் நுழைவுப் போராட்டங்களை அம்ரோட்டி (1927), பூனா (1929), நாசிக் (1930) ஆகிய இடங்களில் நடத்தினார். நாசிக் காலராம் கோயில் நுழைவுப் போராட்டத்தின்போது பாபாசாகேப் “இந்தக் கோயில் நுழைவுப் போராட்டத்தினால் உங்கள் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடாது. நமக்கு முன்னே இருப்பது அரசியல், பொருளாதாரம், கல்வி, மதம் போன்றவற்றின் ஒரு பகுதியே இது. இந்தச் சத்தியாகிரகப் போராட்டம் என்பது இந்து மனநிலைக்குச் சவால்விடுக்கும் போராட்டமாகும். இந்துக்கள் நம்மை மனிதர்களாக மதிக்கிறார்களா இல்லையா என்பதை நாம் இன்று தெரிந்துகொள்வோம். கோயிலில் இருக்கும் கடவுள் வெறும் கல்தான். தரிசனமும் பூஜைகளும் நமது பிரச்சினைகளைத் தீர்க்காது” என்றார்.

சமாஜ் சமத சங்கம் (1927)

பகிஸ்கிரித் ஹித்தகாரனி சபையின் செயல்பாட்டை விரிவுபடுத்தும் பொருட்டு பாபாசாகேப் அம்பேத்கர் சமாஜ் சமத சங்கத்தைத் தொடங்கினார். சமூகச் சமத்துவத்திற்கான பரந்துபட்ட கொள்கைகளை இந்த அமைப்புக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஒடுக்கப்பட்ட மக்களையும் தாண்டி இந்து சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காக இந்த அமைப்புச் செயல்பட வேண்டும் என விரும்பினார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் கலந்து சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்படி செயல்பாடுகளை வடிவமைத்தார். இச்சங்கத்தில் அனைத்துச் சாதியினரும் உறுப்பினர்களாக்கப்பட்டனர். அதில் தியோராவ் நாயக், பாஸ்கர ராவ் கத்ரேகர், ஸ்ரீதர் பல்வந் திலக், சாஸ்திரா பூதே ஆகியோர் முக்கியத் தலைவர்களாக விளங்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய இயக்கங்களில் சமாஜ் சமத சங்கத்தின் செயல்பாடுகள்தான் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் உருவாக்கிய தொழிற்சங்கங்களிலும் சாதி இந்துக்கள் இணைந்து செயல்பட்டனர். இது பெரும்பாலும் பம்பாயை மையமாகக் கொண்டு செயல்பட்டது. இக்காலகட்டத்தில்தான் மிகப் பிரபலமான பாம்பே மில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. இதை நடத்திய பொதுச் சங்கங்களில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்பதால் தனி சங்கத்தை அவர் உருவாக்கினார். இந்தச் சங்கம் 1930கள் வரை செயல்பட்டது. இச்செயல்பாட்டில் பிரபலமான தொழிற்சங்கத் தலைவர்களான என்.எம்.ஜோசி, ஆர்.ஆர்.பகாலே, ஜி.என்.சாஸ்திராபூதே ஆகியோர் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டனர்.

சமதா சைனிக் தள் உருவாக்கப்பட்ட மார்ச் 13, 1928இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

சமதா சைனிக் தள் (1928)

சமூகத்தில் நிலவக்கூடிய சமத்துவமின்மையை நீக்குவதற்காக இந்தத் தன்னார்வத் தொண்டர் படையை பாபாசாகேப் அம்பேத்கர் தோற்றுவித்தார். “ஒரு உறுதியான சமூகத்திற்குச் சமூகச் சமத்துவமே அடிப்படைப் பண்பாகும். அதை உருவாக்குவதற்குச் சமூகச் சமத்துவப் படை என்கிற அமைப்பு மனித சமூகத்திற்கு எப்பொழுதுமே தேவையாக இருக்கிறது” என்றார். இப்படையினர் கூட்டங்களின்போதும் மாநாடுகளின்போதும் தொண்டர்களை ஒழுங்குபடுத்தவும் தலைவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் செயல்பட்டனர். “இந்து சமூகத்தில் நமக்கு மரியாதையான இடம் ஒன்றை நாம் ஒருகாலத்தில் கோரினோம். ஆனால், இப்போது பொதுச் சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம். இந்தப் படை அரசியல், சமூகம், பொருளாதார சமத்துவத்திற்காகப் பாடுபடும்” என்று அறிவித்தார்.

சமதா சைனிக் தளத்தின் மாநாடு ஜூலை 1942இல் நடைபெற்றது. இதில் பேசிய பாபாசாகேப் அம்பேத்கர், “எனக்கு அகிம்சையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. ஆனால், அகிம்சை என்பது அடிபணிவதில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்ள கடமைப்படுகிறேன்” என்றார். “உலகின் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பது அகிம்சையின் அடிப்படை நோக்கமாகும். தீமை செய்பவர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும். வன்முறை என்பது ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் சேர்த்து தீங்கு விளைவிக்கக் கூடியது. ஆகவே, பகைமை உணர்ச்சிகளை நாம் வளர்த்துக்கொள்ளக் கூடாது” என்று அறிவுறுத்தினார். ஆனால், இந்த அமைப்பு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு 1948ஆம் ஆண்டு அரசால் தடை செய்யப்பட்டது. இதை பாபாசாகேப் அம்பேத்கர் அரசின் கோழைத்தனமான செயல் என்று கண்டித்தார்.

அகிம்சையே அமைப்பின் அடிப்படைக் கொள்கை என்று பாபாசாகேப் அம்பேத்கர் அறிவித்தாலும், சாதி இந்துக்களும் அரசும் இந்த அமைப்பை அப்படிப் பார்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அங்கே இந்த அமைப்பினர் எதிர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர்.

சுதந்திர தொழிலாளர் கட்சி (1936)

பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய முதல் அரசியல் கட்சி. மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தொழிற் சாலைகளை அரசு நிர்வகிக்கவும் அல்லது அரசே ஏற்று நடத்தவும் இந்தக் கட்சி பரிந்துரைத்தது. எந்தச் சமூக அல்லது வர்க்க மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார திட்டங்களைச் சீர்திருத்தவும் அல்லது மாற்றியமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. சமூகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டுச் சட்டங்கள் இயற்றப்படும் என உறுதி கொண்டது. சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கத் தனிநபர்களையோ அல்லது குழுவையோ தடுக்கும்விதத்தில் செயல்படுபவர்களைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

“காங்கிரஸ் பணக்காரர்களின் மடியில் அமர்ந்திருக்கிறது. அக்கட்சி எப்படி ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உதவி செய்யும். முதலாளிகளைக் காப்பாற்றும் காங்கிரஸ் காரர்கள் எவ்வாறு உழைக்கும் மக்களின் நன்மைகளைப் பாதுகாப்பார்கள்” என்று விமர்சித்தார். சுதந்திர தொழிலாளர் கட்சி சமூகத்தின் எளிய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டது. காங்கிரஸைவிட விவசாயிகளையும் தொழிலாளர்களையும் காப்பாற்றக்கூடிய வலிமை சுதந்திர தொழிலாளர் கட்சிக்கே உள்ளது” என்றார். “இந்தக் கட்சியின் அடிப்படை நோக்கம் தீண்டப்படாதவர்கள், உழைக்கும் மக்கள், ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்வதே ஆகும். நமது நோக்கையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர்கள் அனைவரும் இந்தக் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தனது தொண்டர்களிடம் வீணான வாக்குவாதம், சிறு சண்டைகள், தேவையற்றச் செயல்பாடுகளில் தங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நமது கொள்கைகளை முறையாகப் பின்பற்றி தீரத்துடன் உழைத்தால் வெற்றி நமக்குக் கிட்டும் என்றார். மகர்களுக்கும் மாங்குகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளேயே இதுபோன்ற வேறுபாடுகள் இருந்தால் நாம் முன்னேற முடியாது என்றார். “ஒரு விஷயத்தை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக உழைப்பதற்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை. இந்தச் சூழலில் சுயநலம், பேராசை, குறுகிய மனப்பான்மை, பிரிவினைவாதம் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டு முழு முயற்சியுடன் செயல்படுங்கள்” என்றார்.

அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் (1942)

1942 ஜூலை மாதத்தில் செட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் எனும் புதிய அமைப்பை பாபாசாகேப் அம்பேத்கர் நாக்பூர் கூட்டத்தில் அறிவித்தார். இந்த அமைப்பின் அகில இந்தியத் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை என்.சிவராஜ் நியமிக்கப்பட்டார். 1946இல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட செட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் தோல்வியைத் தழுவியது. இதற்குக் கூட்டுத் தொகுதி முறையே காரணம் என்று அம்பேத்கர் புரிந்துகொண்டார். ஆகவே, தனித்தொகுதி முறையை அறிவிக்க வேண்டும் என்று பெடரேஷன் கோரிக்கை விடுத்தது. தனித்தொகுதி கோரிக்கையை வலியுறுத்தி பூனா, நாக்பூர், லக்னோ, கான்பூர் ஆகிய இடங்களில் சத்தியாகிரகப் போராட்டத்தை பெடரேஷன் நடத்தியது. அரசியல் அதிகாரமே சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை. ஆகவே, பட்டியல் இனங்கள் அனைவரும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஒன்றிணைய வேண்டும் என்றார் பாபாசாகேப். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனிக்கட்சி ஏன் தேவைப்படுகிறது என்பதை அவர் பின்வருமாறு விளக்குகிறார், “இந்திய நாட்டில் அரசியல் அதிகாரம் இந்துக்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் அரசாங்கத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட்டது போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதைச் சட்டத்தின் மூலம் உறுதிபடுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான் எதிர்காலத்தில் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அமைய வேண்டும். இதை நாம் அடைய வேண்டும் என்றால் அனைவரும் ஒரு கொடியின் கீழ், ஓர் அமைப்பின் கீழ் ஒன்றுதிரள வேண்டும்.”

 “என்னிடம் ஒரு சிலர் காங்கிரஸ் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. ஆனால், பெடரேஷன் போன்ற அமைப்புகள் ஏன் இந்தியா முழுவதும் பரவவில்லை என்று கேட்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளும் காங்கிரஸ் சார்பு கொண்டவையாக இருக்கின்றன. இதன் மூலம் பொது மக்களிடம் அவர்களால் சென்றடைய முடிகிறது. தேசிய பத்திரிகைகள் நமது செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அடுத்து, காங்கிரஸிடம் பெரும் அளவிலான நிதி உள்ளது. இதுவரை அவர்கள் ஒரு கோடி அளவிற்கு நிதி திரட்டியுள்ளனர். இதுவே அவர்களின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும். ஆனால், நான் நமது சமுதாயப் பணிக்காக யாரிடமும் நிதி கேட்டதில்லை. எந்தவிதமான நிதி ஆதாரமும் இல்லாமல்தான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறோம். ஆனால், நமது அமைப்பை வலுப்படுத்துவதற்கு நிதி ஆதாரம் அடிப்படையானது. அதைத் திரட்டுவதின் மூலமாக நமது அமைப்பு பிற அமைப்புகளுடன் போட்டிப் போட்டு முன்னேற முடியும். பொது வாழ்வில் தவறுகள் நடப்பது இயல்பு, அதற்காக நாம் துவண்டு விடக்கூடாது. தவறுகளின் மூலமே நமது பலவீனங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாகாணங்களிலும் நமது பெடரேஷன் அமைப்பை வளர்த்தெடுப்பதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்” என்று பாபாசாகேப் கேட்டுக்கொண்டார். செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் தொடங்கப்பட்டதன் மூலம் அகில இந்திய அளவில் பட்டியல் சாதிகள் ஒரு தனித்த வகைமையாக உருவெடுத்துள்ளன. பட்டியல் சாதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்திய அரசியலில் தனித்த அடையாளத்துடன் நம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பொருளாதார, சமூக உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும் என்றார்.

1952இல் பாபாசாகேப் அம்பேத்கர் “தேசிய அரசியலில் நாம் அதிகாரத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் நமது மக்களின் கோரிக்கைகளை நாம் வென்றெடுக்க முடியும். நாம் தனித்து தேர்தலில் நின்றால் நமது எண்ணிக்கைச் சிறுபான்மையால் நம்மால் வெற்றி பெற முடியாது. ஆகவே, தேர்தல் கூட்டணிகள் அவசியமாகப் படுகிறது. மேலும், நமக்குத் தனித்தொகுதி முறை இல்லாத காரணத்தால் கூட்டுத் தொகுதி முறைகளில் நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. தனித்தொகுதி முறையில் பட்டியல் சாதியினருக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நமக்கு இரண்டு வாக்குகள் இருக்கின்றன. அந்த இரண்டு வாக்குகளில் ஒரு வாக்கை நமது கூட்டணிக் கட்சிக்கு அளிக்கலாம். மற்றொரு வாக்கை நமது பெடரேஷன் கட்சியின் வேட்பாளருக்கு அளிக்கலாம். இதற்காக அனைத்துப் பிற்படுத்தப் பட்டோரையும் ஒன்றிணைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கான உண்மையான பிரதிநிதிகளை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும். நாம் நமது கட்சியைப் பலப்படுத்தினால் பல கட்சிகள் நம்மோடு கூட்டணி வைப்பதற்கு முன்வருவார்கள். ஆனால், பிற கட்சிகளால் நாம் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்த இயக்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நமக்கான தனித்த இயக்கத்தை நாம் கட்டியெழுப்பும் இந்தச் சூழலில் காங்கிரஸின் சதி வலையில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. நமக்கான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே நமக்கான உரிமைகளை நாம் வென்றடைய முடியும். நம்மை ஒடுக்குபவர்களுடன் இணைந்துவிட்டால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் உள்ள நிலைமைக்கு நம்மை அது இட்டுச் செல்லும். இந்த நாடு சுதந்திரம் பெற்றதை சாதி இந்துக்கள் தங்களின் சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர். இந்தத் தேசத்தின் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் நமது அமைப்பாகிய செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனை நாம் வலிமைப்படுத்த வேண்டும்” என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய இயக்கங்களில் செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் அமைப்புதான் தமிழ்நாட்டில் பரவலாகப் பரவியிருந்த அமைப்பாகும். இதற்கு முக்கியக் காரணம் தந்தை என்.சிவராஜ். இதுபோக, பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமி, தொண்டு வீராசாமி, ஆம்பூர் எம்.ஆதிமூலம், ஜே.ஜே.தாஸ், சி.எம்.மணவாளன், உரிமை ரத்தினம், எல்.சுப்பிரமணியம், கே.எம்.சாமி, வி.வீரம்மாள் போன்றவர்கள் பெடரேஷனில் செயல்பட்டுவந்தனர். இந்த அமைப்பின் இதழ்களாகத்தான் உரிமை, தொண்டு, சமத்துவம், சமத்துவச் சங்கு, வீரமுழக்கம், உதயசூரியன், ஜெய்பீம், கற்பி ஆகியவை வெளிவந்தன.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!