மகள்:
கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது
நான் என்ன செய்வேன் அம்மா..
ஒரு ஆணைப்போலக்
கொட்டும் இப் பெரு மழையில்,
பாதைகளோரமோ, ராத்திரியிலோ,
மந்தப் பகலிலோ,
கண்கள் ஆயிரம் பரப்பும் வெளிச்சத்தில்
கூச்சத்தை விலக்கியேனும்
யாரை நம்பி, எதன் துணையில்,
நான் கழிப்பேன்; என் கால்களை விலக்கி..
தாய்:
துயரின் மகளே
பழகுவது எளிதுதான் என் பாசப் பெண்டே!
ராத்திரிகள் உனக்கு அருளப்படும் மட்டும்
கொஞ்சம் போல் அடக்கி வைத்திருப்பது கடினம்தான்.
என்றாலும், அதுவரை நீ
தனித்திரு! விழித்திரு!!
பிறகு இதுவேணும் வாய்த்திருக்கிறதே என
அக்குளியலறைக்குள் செல்…
அங்கேயே கழி!
கழிக்கப்பட்ட அந்த வரிய தேவதையின் தங்க எச்சத்தைத்
தரையில் மஞ்சள் கிழங்கெனத் தேய்த்து வெளியேற்று
இப்பெத்தாம் பெரிய சமத்துவச் சாக்கடையில்.
ஆனால், சில நாட்கள் மட்டும்
என் மகளே…
தங்க மகளே…
கொஞ்சமே கொஞ்சம் போல
உன் உடம்பில் மிளிரும் அந்த நிஜ மஞ்சளில் மட்டும்
துர் மலத்தின் நாற்றம் மாறாது மணக்கும்
அதையும் நீ பழகுவாயாக…
என் துயரின் மகளே!
வருங்காலப் பறவையே!!
(உதயேந்திரம் பேரூராட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும்…)
(கடந்த முப்பது ஆண்டுகளாக ஏரிப் புறம்போக்கு இடத்தில் வசித்துவருபவர்களுக்கு முறையான கழிப்பறை வசதி இல்லை. இந்நிலையில், பெண்களுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு பொதுக் கழிவறையும் பயன்படுத்த இயலாதபடி பாதைகள் அடைக்கப்பட்டபோது சில நாட்கள் என் அம்மா கொண்ட துயரைக் கேள மாட்டாது, பொதுமைப்படுத்தி எழுதியது.)
*பெரும் பொழுது: இருப்பத்தியோராம் நூற்றாண்டு.
*சிறு பொழுது: மழைக்காலம்
*நித்ய பொழுது: கழிவறையறு காலம்.