புதுச்சேரி விடுதலைப் போராளித் தலைவர் – முருகசாமி கிளமான்சோ

சே.அஜித்ர

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டு வசித்துவந்த ரத்தினம் – மீனாட்சி தம்பதியினருக்கு, 1912ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி முருகசாமி பிறந்தார். பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பிரெஞ்சுக் குடியுரிமைப் பெற்றவர்களைக் குடும்பப் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். அதன்படி ‘கிளமான்சோ’ என்பது முருகசாமியின் குடும்பப் பெயராகும். சாதாரண குடும்பப் பின்னணியில் வளந்தவர் புதுச்சேரியின் புகழ்மிக்க பள்ளியான பெத்திசெமினார் பள்ளியில் பிரெஞ்சுப் பிரிவில் ‘செர்த்திபிகா’ பயின்றார். தனது 18ஆவது வயதில் உறவினர் மூலமாக இந்தோசீனம் சென்று அங்கு பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் வெடிகுண்டு புகையால் சுவாசப் பை பாதிக்கப்பட்டு, உடல்நலிவுற்றுக் கட்டாய ஓய்வில் புதுச்சேரிக்கே பிரெஞ்சு அரசால் திருப்பி அனுப்பப்பட்டார்.

புதுச்சேரி திரும்பிய முருகசாமி கிளாமன்சோ முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதி மற்றும் புதுச்சேரி ஆதிதிராவிடக் குடியிருப்புப் பகுதி மக்களைக் கல்வியில் மேம்படுத்த வேண்டுமென்று பாடசாலை நிறுவி கல்வியைப் போதித்தார். புதுச்சேரி நகரப் பகுதியில் ஆதிதிராவிட மக்களை ஒன்றுதிரட்டி அவர்களின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இடைவிடாது போராடினார்.

காந்தியின் அரிசன சேவா சங்கம் மீதும் காந்தி மீதும் பற்றுக்கொண்ட முருகசாமி கிளமான்சோ, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சோலைதாண்டவன் குப்பம் பகுதியில் அரிசன சேவா சங்கக் கிளையை நிறுவி, அப்பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்தினார். இதன் மூலம் அன்றே திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்குத் தங்கத்தாலி, புத்தாடைகள், ரொக்கம் 100 ரூபாய் என வழங்கி தம்பதியினரை ஊக்குவித்தார். அதோடு நின்றுவிடாமல் அப்பகுதியிலே கதர் நூற்பு கழகத்தையும் நடத்தி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தினார்.

அப்போது தோழர் லத்தூர் மூலம் மக்கள் தலைவர் வ.சுப்பையா, அறிமுகத்தினைப் பெற்றிருந்த முருகசாமி கிளமான்சோ, தான் நடத்திவந்த கதர் நூற்பு கழகத்திற்கு அவரை அழைத்து அரிசன சேவா சங்க இளைஞருடன் உரையாடச் செய்தார். 1936களில் புதுச்சேரியில் எட்டுமணி நேர வேலையை முன்வைத்துப் போராடியதால் பிரெஞ்சு இராணுவம் தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வந்த தொழிலாளர்களை நேரில் கண்டு உள்ளம் கொதித்துப் பிரெஞ்சு அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராட வ.சுப்பையாவுடன் இணைந்து விடுதலை உணர்வோடு தன் பணியைத் தொடங்கினார். அன்று கம்யூனிஸ்ட் கட்சியைப் ‘பறையர் கட்சி’ என்றழைப்பது வழக்கம். அந்த அளவிற்குக் கம்யூனிஸ்ட் கட்சியில் தலித்துகள் பெரும்பான்மையாகப் பங்காற்றினார்கள். அப்படியான வரலாறு புதுச்சேரியிலும் நிகழ்ந்தது. பிரெஞ்சு கால கம்யூனிஸ்ட் கட்சியின் வாயிலாகப் புதுச்சேரியின் விடுதலைக்கான போராட்டத்தில் பறையர்களே அதிக அளவில் பங்காற்றினார்கள் என்பது வரலாறு. அந்த மக்கள் எழுச்சிக்கு மிகப்பெரிய அரசியல் உந்து சக்தியாக விளங்கியவர் முருகசாமி கிளமான்சோ.

ஆரம்பக் காலத்திலிருந்தே புதுச்சேரி கம்யூனிச இயக்கத்திற்கு ஏராளமான நிதியுதவி அளித்துவந்தவர். பிறகு கம்யூனிச இயக்கத்தில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டபோது, தன் குடும்பத் தேவை போக மீதமுள்ள பணம் முழுவதையும் பொதுவுடைமைத் தோழர்களுக்கும், இயக்கத்திற்கும் பெருமளவில் செலவிட்டார். அன்றைய காலத்தில் புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர இவரின் பொருளாதார உதவி மிகப்பெரிய பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறப்பை மக்கள் தலைவர் வ.சுப்பையா பதிவு செய்திருக்கிறார்.

1943இல் ஹிட்லரின் நாஜிப் படை பிரான்ஸை ஆக்கிரமித்தது. அதை எதிர்க்கும் நோக்கத்துடன் ‘கொம்பா’ என்னும் பெயரில் பாசிச எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் கிளை அல்ஜீரியாவில் பணியாற்றிய பேராசிரியர் அதிசயம் என்பவரால் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. அமைப்பை ஒருங்கிணைக்கும் பொறுப்பு முருகசாமி கிளமான்சோவிடம் வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு 1944ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் பாசிச எதிர்ப்பு மாநாட்டினைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் துணையோடு சிறப்பாக நடத்தி வெற்றி கண்டார்.

இவர் இராணுவ வீரர் என்பதால், பாதுகாப்புக்கு எப்போதும் இடுப்பில் கைத் துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பார். இவரது சகோதரிகளும் (புஷ்பம், ராஜம்மாள்) புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார்கள். வ.சுப்பையா, முருகசாமி கிளமான்சோ போன்ற தலைவர்கள் மரக்காணம், சிதம்பரம், கடலூர் பகுதிகளில் தலைமறைவாக வாழும்போது, வீட்டிலிருந்து அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கடற்கரை வழியாக அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்தவர்கள் கிளமான்சோவின் சகோதரிகள்தாம்.

1945 ஏப்ரல் மாதம் பிரெஞ்சு இந்தியத் தொழிலாளர் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இதில் தோழர் ப.ஜீவானந்தம், காளிச்சரன் கோஷ் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாடும் முருகசாமி கிளமான்சோவின் பெரும் முயற்சியால் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், புதுச்சேரி தொழிலாளர்களிடையே எழுச்சியையும் ஏற்படுத்தியது. 1947 ஆகஸ்ட் 8ஆம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கையில் சிறிதும் தயங்காமல் புதுச்சேரி விடுதலை இலட்சியத்துடன் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினையும், ‘பிரெஞ்சு இந்தியாவின் பரிபூரண விடுதலை’ என்ற அரசியல் முழக்கத்தினையும் முன்வைத்து மக்களைத் திரட்டிப் போராடியது. இப்பணியில் ‘பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இம்மண்ணை விட்டு அவர்களை அகற்றுவதே எம் இலட்சியம்‘ என்ற குறிக்கோளுடன் போராடிய முருகசாமி கிளமான்சோ பிரெஞ்சு அரசால் 1948 – 1949இல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்கள் தலைவர் வ.சுப்பையா பிரிட்டிஷ் பகுதியில் தலைமறைவாக இருக்கும்போது புதுச்சேரியில் விடுதலைப் போராட்டங்கள் யாவும் முருகசாமி கிளமான்சோவின் தலைமையிலேயே நடைபெற்றன. 1950களில் குபேர் போன்ற பிரெஞ்சு ஆதரவாளர்களின் தூண்டுதலால் முருகசாமி கிளமான்சோ குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அக் குண்டர்களை முருகசாமி கிளமான்சோவின் சகோதரரான தங்கவேல் கிளமான்சோ பெரும்படை கொண்டு திருப்பித் தாக்கினார்.

அதோடு நில்லாமல் பிரெஞ்சு அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதால் வ.சுப்பையாவின் வீடும் கம்னியூஸ்ட் அலுவலகமும் பிரெஞ்சு ஆதரவு குண்டர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதேபோன்று முருகசாமி கிளமான்சோவின் வீடும் உடைமைகளும் கொளுத்தப்பட்டதோடு நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. வீடிழந்து, தாய், மனைவி என ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பத்தைப் பிரெஞ்சு ஆதரவு குண்டர்களின் மிரட்டல், தாக்குதல் இவற்றுக்கு மத்தியில் காப்பாற்றுவது கடினம் என்றெண்ணி சென்னையிலுள்ள உறவினர் வீட்டில் சிறிது காலம் தஞ்சமடைந்தார். இதற்கிடையில் பிரெஞ்சு அரசாங்கம் அவருக்கு இராணுவத்தில் பணியாற்றியதற்கான ஓய்வூதியத்தையும் ரத்து செய்தது. பின்னர் வறுமை சூழலால் தான் தங்கியிருந்த பகுதியிலேயே விறகு வெட்டி வியாபாரம் செய்தார். அவரது மனைவி சில நாட்கள் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி செய்து குடும்பத்தைப் பராமரித்தார்.

 

 

1950களில் பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர்கள் மீது தொடுத்த தாக்குதலில் பலர் தலைமறைவானார்கள். இந்நிலையில் நேருவின் தூதராகப் புதுவைக்கு வந்த வி.வி.கிரி, வ.சுப்பையா தலைமறைவான நிலையில் அவரைச் சந்திக்க முடியாமல் சென்னையில் தலைமறைவான முருகசாமி கிளமான்சோவைச் சந்தித்ததின் விளைவால்தான், புதுச்சேரி தலைவர்கள் மீது போடப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ததும், இந்திய விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வது குறித்த உரையாடலும் நிகழ்ந்தன என்பது புதுச்சேரிப் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக அகதிகள் முகாம் அமைத்து முன் நின்று செயல்பட்டவர் முருகசாமி கிளமான்சோ. விழுப்புரம், கடலூரில் உள்ள முகாம்களுக்கும் முழுப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். 1952 ஆகஸ்ட் 4ஆம் தேதி கடலூரில் பிரெஞ்சு இந்திய அகதிகள் மாநாடு நடைபெற்றது. அதில் எஸ்.எஸ்.இராமசாமி போன்றோர் பங்கேற்றனர். இம்மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தும் பணியில் கவி. வெநாரா.சாம்பசிவம் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து 1953 – 1954 ஆண்டுகளில் பிரெஞ்சு அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிரெஞ்சு இந்தியப் பகுதிகளில் வேகமாக நடந்தது. பல முனைகளிலும் எழுந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசாங்கம் கீழூரில் வாக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவின்படி 1954 நவம்பர் முதல் நாள் புதுச்சேரி மீதான தனது ஆதிக்கத்தைப் பிரெஞ்சு அரசு விலக்கிக் கொண்டதால் பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு, இந்தியத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்தச் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வ.சுப்பையாவைக் கோட்டக்குப்பம் எல்லையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அழைத்துவந்தனர். அந்தத் தேரில் முருகசாமி கிளமான்சோவும் பேராசிரியர் அன்னுசாமியும் வந்தனர். புதுச்சேரி சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பாடுபட்டுத் தம் வாழ்வை தியாகம் செய்தவர்கள் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் தியாகிகள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். அந்தவகையில் முருகசாமி கிளமான்சோவும் அவரது சகோதரிகள், சகோதரர்கள் எனக் குடும்பமே தியாகிகளாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். புதுச்சேரி விடுதலைப் பெற ஒரு குடும்பமே பாடுபட்டது என்றால் அது முருகசாமி கிளமான்சோ குடும்பம்தான்.

விடுதலைக்குப் பின் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் சபைக்கு 1955இல் நடைபெற்ற முதல் தேர்தலிலும், 1959இல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் சோலைதாண்டவன் குப்பம் பகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சபை உறுப்பினராகவும் புதுவை நகர மன்ற உறுப்பினராகவும் (1965 – 1973) பணியாற்றினார். புதுச்சேரி ரோடியர் மில் எதிரில் ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகம் அமைந்துள்ள இடம் அன்றைக்கு விலைக்கு வந்தபோது அதனைத் தன் சொந்தப் பொறுப்பில் வாங்கி, பின்னர் தொழிற்சங்கத்திற்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயற்குழு உறுப்பினர், மாவட்டப் பொருளாளர், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவர், விவசாய சங்கத் தலைவர், கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்து, புதுச்சேரி விடுதலைக்கும் பொதுவுடைமை இயக்கத்திற்கும் பணியாற்றியுள்ளார். தமிழகத்தின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜீவானந்தம், கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்கள் புதுச்சேரிக்கு வரும்போது பெரும்பாலும் முருகசாமி கிளமான்சோவைச் சந்தித்து, உரையாடி அவரது வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம்.

இப்படியாகப் புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக, வ.சுப்பையாவின் தளபதியாகப் புதுச்சேரி விடுதலைக்காகவும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நலனுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உழைத்த தலைவர் முருகசாமி கிளமான்சோவின் 50ஆவது நினைவு நாளில் அவரது தியாகத்தை, உழைப்பை, நேர்மையை நினைவில் ஏந்துவோம்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!