டிசம்பர் மாதம் சென்னை சபாக்களில் இசை விழாக்கள் நடப்பதை சுவரொட்டிகளிலோ செய்தித்தாள்களிலோ நாம் பார்த்திருப்போம். சமூகத்தின் பெருவாரியான மக்களோடு தொடர்புடைய பாடல்களுக்கும் இசைக் கருவிகளுக்கும் அங்கு எந்த இடமும் அளிக்கப்பட்டதில்லை, யாரும் அவற்றிற்காக ஏங்கியதாகவும் தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடல்களும் கருவிகளும்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் கலை அடையாளங்களாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இதுதான் பண்பாட்டு மேலாதிக்கம்.
இந்த நாட்டின் பெருவாரியான பூர்வகுடி பண்பாட்டு விழைவுகளுக்கு, ஒட்டுமொத்தமாகக் காட்டப்படும் பண்பாட்டுச் சொல்லாடல்களில் எந்த இடமும் இல்லை. இம்மக்களை ஒன்றுமற்ற ஏதிலியாக ஆக்குவது அரசியல் தளத்தில் மட்டுமில்லாமல், இத்தகைய பண்பாட்டு தளத்திலும் நடக்கிறது. இது கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான தளம் என்பதால் நம்மால் இதனை உணர முடிவதில்லை. எனவே இச்சூழலை எதிர்கொள்ள வேண்டிய தேவை பண்பாட்டுத் தளத்தில் செயல்பட விரும்புகிறவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது.
சபாக்களின் இசை விழாக்கள் குறிப்பிட்ட குழுவினரின் தனிநிகழ்வு போல் தெரிந்தாலும். அதற்குப் பின்னால் தீர்க்கமான பண்பாட்டு அரசியல் உள்ளது. மத ரீதியான புனித பிம்பமும், கலையென்பது உயர்ந்தோர் வழக்கு என்னும் மேட்டிமை பண்பும் அவற்றின் மீது கட்டப்பட்டுள்ளன. மார்கழி உற்சவம் என்ற பெயர்கூட அத்தகைய புனிதத்தைச் சேர்க்கவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே பெருவாரியான கலை – பண்பாட்டு அடையாளங்களுக்கு அங்கு இடமளிக்கப்படுவதில்லை.
கலை இலக்கிய அடையாளங்கள், ரசிப்பதற்கானது என்று கருதுவது நுகர்வு மனநிலையிலிருந்து பிறக்கும் பார்வையாகும். மாறாக மனிதனுடைய வாழ்வை கலை, இலக்கியம் உள்ளிட்ட பண்பாட்டுப் போக்குகளே கட்டமைக்கின்றன. அவனுடைய கூட்டுணர்வை நகர்த்தி செல்வதாகவும் வாழ்வை அர்த்தப்படுத்துவதாகவும் அவை அமைகின்றன.
பண்பாடு, உடலை மட்டுமல்லாமல் உளவியலையும் கட்டுப்படுத்துகிறது. இங்கு நாடுகளுக்கிடையிலான மோதல்களைவிட பண்பாடுகளுக்கு இடையிலான மோதல்களே அதிகம். அவை கண்ணுக்குத் தெரியாமல் நம் மீது படையெடுத்தவை. பண்பாட்டின் இந்த அதிகாரத்தை புரிந்திருப்பதாலேயே இன்றைய மார்கழி உற்சவ சபாக்கள் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் அதன் பேரிலான புனிதம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பிட்ட ரசனை உடையவர்கள் ஒரிடத்தில் கூட முடிகிறது. அதனால்தான் மேட்டிமைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் பண்பாட்டுத் தளத்திலும் இயங்கியதைப் பார்க்கிறோம். இந்து மதத்தைத் தேர்ந்த ஆய்வின் வழியாக எதிர்கொண்ட பாபாசாகேப் அம்பேத்கர், பௌத்தம் என்னும் பண்பாட்டு நிலைபாட்டை எடுத்தமையை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.
இதன்படி, சமூக உளவியலில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மேட்டிமை பண்பாட்டிற்கு மாற்றாக பெருவாரியான பூர்வக்குடி மக்களின் பண்பாட்டை முன்வைக்கும் நிகழ்ச்சிகளை ‘நீலம் பண்பாட்டு மையம்’ கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முன்னெடுத்து வருவதைப் பலரும் அறிவோம். குறிப்பாக அதன் ‘Casteless Collective’ இசைக்குழுவின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டின் இறுதியில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சென்னையில் மூன்று நாட்கள் நடத்திய ‘வானம் கலைத்திருவிழா’ தமிழ்நாட்டின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றானது.
அதன் தொடர்ச்சியாக ‘நீலம் பண்பாட்டு மையம்’, இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 24 முதல் 31 வரை ‘மார்கழி மக்களிசை’ என்ற பெயரில் மாபெரும் இசை விழாவை ஒருங்கிணைத்தது. ஏற்கனவே இசை விழாவுக்கென கட்டமைக்கப்பட்ட மாதத்தையே தன் பெயரில் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவின் பண்பாட்டு அரசியலும் இலக்கும் யாருக்கானது என்பதைச் சொல்லும் விதமாக ‘மக்களிசை’ என்ற பெயரைப் பார்க்கலாம். உற்சவம் ஒ மக்களிசை என்ற பெயர்கள் முன்வைக்கும் எதிர்மறை அரசியல் நுட்பமானது.
3 அரங்குகள், 8 நாட்கள், 250 கலைஞர்கள், 500 இசைக்கருவிகள் என்றமைந்தது ‘மார்கழியில் மக்களிசை.’ உச்சஸ்தாயில் கீர்த்தனைப் பாடிய அரங்குகளில் அதே உச்சஸ்தாயில் முதன்முறையாக ஒப்பாரி ஒலித்தது. அதுவரை கேட்டிராத புதிய குரல்கள் பார்த்திராத மனிதர்கள் இசைக்கப்படாத ஓசைகள் யாவும் அங்கே வலம் வந்தன. பறையிசை பஜனையைப் பகடி செய்துகொண்டிருந்தது. உழைப்போரின் அத்தனை அழுக்குகளோடும் வந்து சபாக்களைச் சுத்தப்படுத்தின கானா பாடல்கள். ஏழு ஸ்வரங்கள் எழுந்த மண்டபங்களில் எட்டு ஊர் மோளம் அடிக்கப்பட்டது.
நுழைய முடியாத இடத்தில் நுழைந்துவிட்டதையே ஒரு சலுகையாகக் காட்டிவிட்டுச் செல்லாமல், கலைத்தன்மையிலிருந்து எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் இயங்கினார்கள் கலைஞர்கள்.
பூர்வக்குடி கலை வடிவங்களின் முக்கியத்துவத்தை அதன் கனம் பிறழாமல் எடுத்து வைத்தது இவ்விழா. தங்களுக்குக் கிடைத்த இடத்தை தங்கள் கலைகளுக்கான – கருவிகளுக்கான அங்கீகாரமாக மாற்றினார்கள் கலைஞர்கள்.
‘மார்கழியில் மக்களிசை’ என்பதை மாற்று விழா என்னும் கோணத்தில் யோசிக்கும்போது, தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள நான்கு கலைவிழாக்களை இங்கு குறிப்பிட வேண்டும். ஒன்று மகஇக ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் நடத்தி வந்த ‘தமிழ் மக்கள் இசை விழா’ என்னும் பெயரிலான விழாக்கள். இரண்டு தமிழகமெங்கும் நடந்த தலித் கலை விழாக்கள். மூன்று தமுஎகச நடத்தும் கலை இரவுகள். நான்கு அரசு ஆதரவோடு திமுக ஆட்சியின்போது (2006 – 2011) சென்னையில் நடத்தப்பட்ட ‘சென்னை சங்கமம்’. இதில், சங்கமம் தவிர மற்ற மூன்றும் நேரடி அரசியல் உள்ளடக்கத்தையும் இயக்கத் தொடர்பையும் பெற்றவை. தலித் கலை விழாக்களில் பறைக் கருவி தனி அடையாளம் பெற்றன.
நான்கு விழாக்களின் தொடர்ச்சியை எடுத்துக்கொண்டாலும், ‘நீலம் பண்பாட்டு மையம்’ தனித்துவமான கூறுகள் சிலவற்றை உருவாக்கித் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறது. குறிப்பாக இதன் அரசியல் உள்ளடக்கம் இதனை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது.
பெருமளவு புறக்கணிக்கப்பட்ட கிராமப்புற கலைகளும் கருவிகளும் மேற்கண்ட விழாக்களில் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றிலும் அதிகம் கவனிக்கப்படாத நகர்ப்புற விளிம்புநிலை குரல்கள் இங்கு விரிவாக பொருட்படுத்தப்பட்டு சபாக்களிலும் ஏறியிருக்கின்றன.
மகஇகவின் ‘தமிழ் மக்கள் இசை’ பாடல்கள் வெகுமக்கள் இசை வடிவத்தில் பிரச்சாரப் பாடல்களாக அமைந்தன. அவை இயக்க பாடகர்களால் இயற்றப்பட்டிருக்கும். இங்கு அந்தந்த பாடல்களும் கருவிகளுமே கொணரப்பட்டன.
கருப்பின மற்றும் மேற்கத்திய ஜாஸ் உள்ளிட்ட இசை வடிவங்கள் இவற்றின் மீது தாக்கம் செலுத்தியுள்ளன. கருப்பின இசையும் பாடல்களும் கருத்துகளைப் பரப்புவதற்கான பிரச்சாரத்திற்காக மட்டும் உருவானவை அல்ல. கலையைப் பிரச்சாரத்திற்காக என்று மட்டும் புரிந்துகொள்வது அதை வெறும் அரசியலாக மட்டும் சுருக்குகிறது. அது பண்பாட்டை உள்ளீடாகக் கொண்டவை. கலைகள் வழியாக அடுத்த தலைமுறைக்குப் பண்பாடு கையளிக்கப்படுகிறது. அதை அரசியல் எதிர்வினையாக மட்டும் ஆக்குவது பூர்வக்குடி மக்களுக்கென்று பண்பாட்டு அடையாளங்கள் இல்லாதது போல் ஆக்கிவிடுகிறது. திராவிட இயக்கத்திடம் நடந்தது இதுதான். கலைகளைப் பிரச்சாரத்திற்காக அல்லாமல் பண்பாட்டு வடிவமாக அது புரிந்திருக்கவில்லை. அதனால்தான் இந்து மதத்திற்கு மாற்றான பண்பாட்டை அதனால் உருவாக்க முடியவில்லை.
ஒவ்வொரு கலை வடிவத்திற்கும் பின்னாலும் அதை உருவாக்கி, கையாண்டு வரும் சமூகக் குழுவினரின் விழுமியங்கள் இருக்கும். அதைப் பார்க்க மறுத்து அரசியலுக்காக மட்டுமே கையாள்வது பண்பாட்டைத் தட்டையாக்குகிறது. அதனால் ஓரிரு நாட்களின் தனியிசை நிகழ்வைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலைஞர்களும் கருவிகளும் எத்தகைய ஓசையில் வெளிப்படுகிறார்களோ, அதே எதார்த்தத்தோடு இந்த விழாவில் வெளிப்பட்டார்கள். ஓப்பாரி அதன் ரத்தமும் சதையுமான வடிவத்தில் இப்படித்தான் வெளிப்பட்டது.
அதைப்போல, இம்முயற்சிகளை எதிர்ப் பண்பாடு என்று மட்டுமே சுருக்க வேண்டியதில்லை. அடிப்படையில் இது மாற்றுப் பண்பாடு. யாரையேனும் எதிர் தரப்பாக வரித்துக்கொண்டு, அவர்கள் செலுத்தும் ஆதிக்கத்திற்கு எதிராக இருக்க வேண்டுமென்பதற்காகவே பிறந்தவை போன்று இச்சொல் அமைகிறது. பூர்வகுடி மக்களுக்கு இயல்பாக இருந்து வந்த பண்பாட்டை அந்த வார்த்தை மறுக்கிறது. எனவே பூர்வகுடிகளுக்கென இயல்பாகவே பண்பாட்டு மரபு இருந்து வந்ததைக் குறிக்க வேண்டுமென்பதற்காக மாற்று பண்பாடு என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது. பூர்வகுடிகளின் பண்பாட்டை வைதீகம்தான் போலச் செய்துகொண்டு இந்து மதமாக நிற்கிறது. எனவே இங்கு நடப்பது பூர்வ அடையாளத்தை நவீனகால அர்த்தத்தோடு மீட்டெடுப்பதாகிறது. இவ்விழா அத்தகையது. இது ஒடுக்கப்பட்ட முன்னோடிகளிடமிருந்து செழுமைப்படுத்திக்கொண்ட கருத்தியலாகும்.
மார்கழி மாதம் என்றாலே வைதீகர்களுக்குரியது என்றாக்கப்பட்டு சாஸ்திரிய சங்கீதத்தின் பேரிலான கலை அவர்களுக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. அதைப் பிறரும் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மார்கழி மாத இசை மரபுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் ஆக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற இந்த விழாவும் வலிந்த எதிர் பண்பாடு போல் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. மார்கழி மாத இசை மரபுக்கும் பூர்வக்குடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதே உண்மை.
கிராமப்புறங்களில் மார்கழி மாதத்தில் இரவு முழுதும் தப்பும் சேகண்டியும் அடித்துப் பாடி வரும் போக்கு மெல்ல மெல்ல மறைந்து வரும் வழக்கமாகும். மேலும் அது இழிவாக்கப்பட்ட காரணத்தாலும் வழக்கத்திலிருந்து மறைந்தது. இவ்வாறு இசைத்து, பாடி வருபவர்களுக்குத் தாதன் அல்லது தாசன் அல்லது தாசங்கான் என்று பெயர். இதை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினராக இருப்பர். இந்து மரபாக பிற்காலத்தில் மாறிவிட்ட இப்பண்பு வைணவம், பௌத்தம் போன்றவற்றிலிருந்து எடுத்து தனதாக்கிக் கொண்ட மரபாகும். புத்தரும், புத்த அறவாணர்களும் அறக்கருத்துகளை வழங்க நாடெங்கும் பயணம் செய்தார்கள் என்பது நாமறிந்த செய்தியேயாகும். இவ்வாறுதான் ஔவையாரின் அறக்கருத்துகள் பாடல்களாக அமைந்திருக்கும் காரணத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஔவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டே இருந்தாள் என்ற கதைகளையும் இதனோடு இணைத்துப் பார்க்கும்போது இதை மேலும் புரிந்துகொள்ள முடியும். சங்க கால பாணர் குலத்தைச் சேர்ந்த பாடினியான ஔவை, அறக்கருத்துகள் பாடியிருப்பதைப் புறநானூற்றுப் பாடல்களிலும் பார்க்கலாம். ஔவையார் ஒரு பௌத்த பிக்குணியே என்று அயோத்திதாசர் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மார்கழியில் இவ்வாறு பாடி வரும் தாதர்களுக்கு மக்கள் உணவுப் பொருட்களை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இது முற்காலத்தில் பிக்குகளுக்கு மக்கள் வழங்கி வந்த பிச்சையின் தொடர்ச்சியாகும்.
பௌத்தத்தின் இப்போக்கே வைணவ மரபில் பஜனையாகவும் பாவை பாடல்களாகவும் உருப்பெற்றன. அதன்படி சில கதைகளை உண்டாக்கிக்கொண்டு மார்கழி மாதத்தில் இசைப்பது, பாடுவது என்ற போக்கு அங்கு உருவானது. அதுதான் இன்றைய மார்கழி மாத இசை நிகழ்ச்சிகளானது.
எனவே மார்கழியில் பாடுவது எளிய மக்களுக்கு முற்றிலும் புதிதான ஒன்றல்ல. பூர்வக்குடி மக்களிடம் இருந்து வந்த இயல்பான இசை மரபேயாகும். அவற்றையே நாம் இப்போது நினைவுகொள்கிறோம். எனவேதான் இம்முயற்சிகள் எதிர்ப்பதற்காக உருவாகிய வடிவம் அல்ல, மாறாக பூர்வக்குடிகளிடமிருந்து போலச் செய்து கொண்டவர்களிடமிருந்து மீட்பது என்றாகிறது.
இயக்குநர் பா.ரஞ்சித் முன்னெடுப்பில் அறிவு ஒருங்கிணைப்பில் நடந்த இந்த விழா பெருவாரியான பார்வையாளர்களின் பங்கெடுப்பால் அரங்குகள் நிரம்பி பங்கெடுத்த கலைஞர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதன் அடுத்தக் கட்டம் கலையையும் அரசியலையும் சரிவிகிதத்தில் இணைத்துப் புதிய இசை வடிவங்களை அறிமுகப்படுத்துவதாய் விரியும்.