உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார். உஞ்சையார் ஓர் எழுத்தாளர், இயக்கவாதி. 1990களை மையமிட்டுப் பேசப்படும் தலித் இலக்கியம், தலித் அரசியல் ஆகிய இரண்டிலும் பங்காற்றியவர்.
பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள காட்டாத்தி உஞ்சைய விடுதி என்ற கிராமத்தில் எளிய தலித் குடும்பத்தில் பிறந்தார். துரைராஜ் என்பது அவரின் இயற்பெயர். இடைநிலைப்பள்ளி ஆசிரியராகி, மதுக்கூர் சந்தைப்பேட்டை பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றி, தீவிர அரசியல் ஈடுபாட்டையொட்டி 2004ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.
விவசாயக் கூலியாதிக்கம், சாதியாதிக்கம் நிலவிய தஞ்சை வட்டாரச் சூழலின் காரணமாகச் சமூக அரசியல் ஈடுபாடு கொண்டவராக மாறியவர் உஞ்சையார். அதன்படி அப்பகுதியிலிருந்த இடதுசாரி அரசியலை ஏற்று, இந்த அரசியலை மையப்படுத்திக் கவிதை, கதைகள் எழுதுபவராகவும் மாறியிருந்தார். எழுத்தைத் தனியாகப் பார்க்காமல் அரசியல் செயற்பாட்டின் பகுதியாகப் புரிந்திருந்தார். அவர் பங்கு வகித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கக் கூட்டங்களிலேயே இக்கண்ணோட்டத்தில் கவிதை, கதை எழுதி மேடையேற்றியிருக்கிறார். மதுக்கூரில் சில காலம் மானுடம் இலக்கியப் பேரவை என்ற அமைப்பில் பங்குபெற்றிருந்தார். இவ்வாறு 1980களின் மத்தியிலிருந்தே அவரின் எழுத்துப் பணி தொடங்கிவிட்டிருந்தது. எனினும் சிபிஐ-எம்எல் (Liberation)-இல் இணைந்த பிறகே, அவரது அரசியல் பார்வையும் தொடர்புகளும் கூர்மை பெற்றன.
உஞ்சையார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளராகவும், முனைவர் தொல்.திருமாவளவனின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்து காலமாகியிருக்கிறார். எனவே, அவரை இயக்கவாதியாகவே பெரும்பாலானோர் அறிந்திருக்கின்றனர்; எழுத்தாளர், பண்பாட்டுச் செயலாளர் என்பது அதிகம் அறியப்படவில்லை. அவர் பற்றிச் சமூக வலைதளங்களில் எழுதியவர்களில் ஓரிருவர் மட்டுமே அவருடைய எழுத்து முகத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
1980களின் இறுதியில் தலித் அரசியலை நோக்கி நகர்ந்தார் உஞ்சை. அன்றைய டெல்டா பகுதியில் இது மிகவும் சவாலானதாக இருந்தது. பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதே புதுமை. இப்பின்புலத்தில்தான் 1990ஆம் ஆண்டு மனுசங்க என்ற இதழை கல்பனா என்ற காளிமுத்து, இளந்துறவி, கருமுகில், அரங்க.குணசேகரன் ஆகியோரோடு சேர்ந்து தொடங்கினார்.
உளவுப் பிரிவு நெருக்கியதால் நான்காவது இதழில் அரங்க.குணசேகரன் விலகிவிட மற்றவர்கள் தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 10 இதழ்கள் வரை வந்திருக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி (1991) உருவான புதிய வகை தலித் அரசியல் சொல்லாடல் குறித்த விவாதங்கள் இதழில் இடம்பெற்றன. தலித் இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றன.
உள்ளடக்கத்தில், தலித் அரசியல் பேசுவதாக அமைந்தாலும் கூட வடிவம் என்ற முறையில் இடதுசாரி பண்பையே இக்குழுவினர் உள்வாங்கியிருந்தனர். இன்குலாப் எழுதி அப்போதைய தலித் மேடைகளில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியிருந்த ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்று தொடங்கும் கவிதையின் (இக்கவிதை கே.ஏ.குணசேகரனின் குரலில் பாடலாகவும் தலித் மேடைகளில் பரவலாகியது) முதல் சொல்லையே இதழின் பெயராக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதழின் வெளியீட்டு விழா பட்டுக்கோட்டையில் இன்குலாப், அ.மார்க்ஸ் கலந்துகொள்ள நடந்தது.
‘உழைப்போர் உதிரத்தில் உதயமாகும் எழுத்துகள்’ என்ற வாசகத்தின் மத்தியில் மண்வெட்டியும் பேனாவும் பொறிக்கப்பட்டிருக்கும். அதுதான் இதழின் இலச்சினை. மண்வெட்டி என்பது உழைக்கும் மக்களுக்கான குறியீடு. டெல்டா பகுதியிலிருந்து பலரும் தலித் அரசியல் உள்ளடக்கம் கொண்ட படைப்புகளை இதழில் எழுதினர். அரச. முருகுபாண்டியன், தய்.கந்தசாமி, இளந்துறவி, கருப்பையா பாரதி ஆகியோரைக் குறிப்பிடலாம். அ.மார்க்ஸின் கட்டுரைகளும் இடம்பெற்றன.
வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன் உள்ளிட்ட தஞ்சை – நாகை பகுதி நண்பர்களோடு இணைந்து 1992ஆம் ஆண்டின் இறுதியில் ‘தலித் பண்பாட்டுப் பேரவை’ தொடங்கினார் உஞ்சை. பண்பாட்டு அமைப்பாகத் தொடங்கப்பட்டாலும் டெல்டாவின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பு கூட்டங்கள் நடத்தியது. அவ்வகையில் திருத்துறைப்பூண்டியில் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மாநாடு முக்கியமானது. முன்பு இடதுசாரி அமைப்புகளில் இருந்த இவர்கள், இப்போது தலித் சொல்லாடல் கொண்டு மேற்கொண்ட பணிகள் இப்பகுதி இடதுசாரிகளோடு உரசலை ஏற்படுத்தின. வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன் சிபிஐ (எம்) கட்சியினரால் தாக்கப்பட்டபோது தலித் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (1998) நடத்தப்பட்டது. கீழ்வெண்மணி நிகழ்வின் மீது தலித் கண்ணோட்டம் பாய்ச்சி தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ‘வெண்மணி நினைவு நாள்’ (திருத்துறைப்பூண்டி) தலித் இலக்கியத்திற்கும் தலித் அரசியலுக்குமுள்ள இணைப்பை வலியுறுத்தியது.
தலித் சொல்லாடல் 1990களில் விவாதங்களின் வழியே உருப்பெற்றபோது அதற்கான களமாக மனுசங்க இதழும், தலித் பண்பாட்டுப் பேரவையும் இருந்தன. இக்காலகட்டத்தின் பல பணிகளுக்கு இந்த அமைப்பின் பெயரே பேனராக இருந்தது. புதுச்சேரியில் 1993ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தலித் கலைவிழா, தலித் பண்பாட்டுப் பேரவை சார்பாகவே நடத்தப்பட்டது. ரவிக்குமார் இம்முயற்சியில் முன்னின்றார். தலித் அடையாளம் பற்றிய ராஜ் கௌதமனின் ‘தலித் பண்பாடு’ என்னும் புகழ்பெற்ற கட்டுரை இங்கு வாசிக்கப்பட்டு, பின்னர் அதே தலைப்பில் நூலானது. தலித் பண்பாட்டுப் பேரவை மூலம் தொடர்ச்சியாக அரங்குகளும் விவாதங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதன் தொடர்பில் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் உஞ்சையார் கலந்துகொண்டார்.
1993இல் அ.மார்க்ஸ் எழுதி தஞ்சையில் விவாதத்திற்கு வைக்கப்பட்ட ‘தலித் அரசியல்’ ஆவணம் பற்றிய கூட்டத்தில் உஞ்சையார் முக்கியப் பங்காற்றினார். பூ.சந்திரபோஸ், அரங்க.குணசேகரன், பா.கல்யாணி உள்ளிட்டோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் (DPI) சார்பில் சிந்தனைச் செல்வனும், (தடா) து.பெரியசாமியும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவாதக் கூட்டத்தில் தலித் பண்பாட்டுப் பேரவையினரே கூடுதலாகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து நிறப்பிரிகை இதழ் ஒருங்கிணைத்த விவாதக் கூட்டங்களிலும் உஞ்சையார் பங்குபெற்றுவந்தார். நிறப்பிரிகையின் பெரியாரியம் விவாத அரங்கில் அவர் முன்வைத்த கருத்துகளை இப்போதும் படிக்கலாம்.
Illustration: Negizhan
உஞ்சை அரசனின் சிறுகதைகள் ‘எகிரு’ என்ற தலைப்பில் நூலானது. வெளியீட்டு விழாவில் கோ.கேசவன் கலந்துகொண்டார். பெருமளவு தஞ்சை வட்டார வழக்கைக் கையாண்டு எழுதப்பட்ட கதைகளில் பேச்சு வழக்கு, ஒப்பாரி, சொலவடைகள் ஆகியவை விரவியிருந்தன. தொடக்கக் கால தலித் கதைகள் உள்ளடக்கத்தில் சாதியச் சுரண்டலைப் பேசினாலும் வடிவத்தைப் பொறுத்தவரை சோசலிச எதார்த்தவாத எழுத்தின் தொடர்ச்சியாகவே இருந்தன. உஞ்சையின் கதைகளை அவ்வகையில் சேர்க்கலாம். ப.சிவகாமி, விழி.பா.இதயவேந்தன், அபிமானி ஆகியோரின் தொடக்கக் கால படைப்புகளுக்கும் இப்பண்புண்டு.
1990களின் இறுதியில் மதுரையில் நடந்த தலித் அரங்குகளில் பார்வையாளர்களாக உஞ்சையையும் அரச.முருகுபாண்டியனையும் பார்த்திருக்கிறேன். பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்த உஞ்சை, 2004இல் அரசுப் பணியிலிருந்து விலகி முழுநேர கட்சி அரசியலுக்குச் சென்றார். எழுத்தில் கவனம் குறைந்தது என்றாலும் அவ்வப்போது கவிதைகள், கட்டுரைகள் எழுதிவந்தார். அவை முழுக்கக் கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் அமைந்தன. அதிகமாக தொல்.திருமாவளவன் பற்றி கவிதைகள் எழுதிய அவர், அவ்வப்போது பிரச்சினைகள் அடிப்படையில் பேச்சு வழக்கைக் கையாண்டு கவிதைகளையும் எழுதிவந்தார். எழுத்துப் பாணியில் எந்த மாற்றமும் அவரிடம் இருந்திருக்கவில்லை. எழுத்தை விட்டுவிட்டோம் என்ற கவலை அவருக்கு இருந்ததில்லை. அரசியல் பணியில் முழுமனதோடு கரைந்தார். கட்சிக்குள் செல்ல அவரின் எழுத்துகளும் பண்பாட்டுப் பேரவை பணிகளும் அடையாளம் தந்திருக்கலாம். ஆனால், எழுத்தை வேறு எந்த நோக்கத்திற்கும் அவர் பயன்படுத்தியதில்லை. மனுசங்க இதழ் முதல் கட்சி வரையிலும் பலரையும் எழுத – பேச ஊக்குவித்தார் உஞ்சை.
‘எகிரு’ தவிர வேறு நூல்கள் வரவில்லை. மனுசங்க இதழ் தொடங்கி அவர் எழுதிவந்த கட்டுரைகளும் பின்னாட்களின் கவிதைகளும் தொகுக்கப்பட்டதில்லை. படைப்புகள் மட்டுமல்லாது தலித் அரசியல் விவாதக் கட்டுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார்: ‘தலித் இயக்கங்களுக்கிடையேயான அய்க்கியமும், பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் கோடாங்கி இதழில் (சனவரி – ஜூன் 1996) வெளிவந்த கட்டுரையும், ‘தலித் (தாழ்த்தப்பட்டோர்) – தமிழ் – பண்பாடு’ என்ற தலைப்பில் (தலித் : கலை – இலக்கியம் – அரசியல், தொகுப்பு ரவிக்குமார், 1996) வந்த கட்டுரையும் முக்கியமானவை. தலித் பண்பாட்டுப் பேரவை என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கியிருந்தாலும் தலித் பண்பாடு என்று குறிப்பாக எதையும் விவாதித்து அதன்படி செயற்பட்டதில்லை. தேர்தலில் ஈடுபடாத வட்டார அளவிலான அரசியல் அமைப்பாகவே பேரவை செயற்பட்டது. ஆனால், பண்பாட்டுப் பேரவை பேனரில் தலித் கலை விழா, தலித் பண்பாடு பற்றி அறிவாளிகளாக விளங்கிய பிறர் (ரவிக்குமார், ராஜ் கௌதமன்) பேசினர். தலித் அரசியல் என்பதற்கான கருத்துகளை உருவாக்குவதிலேயே ஆரம்பத்திலிருந்து உஞ்சை விருப்பம் காட்டிவந்திருக்கிறார். இதுவே வி.சி.கவில் இருந்தபோதும் தொடர்ந்தது. இடதுசாரி பாதையிலிருந்து தலித் அரசியலுக்கு வந்தது இதற்கான காரணமாக இருக்கலாம். அம்பேத்கர் பௌத்தத்தை யோசித்ததுபோல, தலித் பண்பாட்டுப் பேரவை தீர்மானகரமான, மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைக்கவில்லை. உழைக்கும் மக்கள் பண்பாடு என்று பொதுவாக யோசித்திருந்தார் என்பதை மட்டும் அவர் படைப்புகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடிகிறது.
இருபது வருடங்களுக்கு மேலாக அவர் தொடர்பில் இருந்திருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போதெல்லாம் “இலக்கிய உலகில் என்ன நடக்கிறது? யாரெல்லாம் எழுதுகிறார்கள்? தலித் இலக்கியத்தின் நிலை என்ன?” என்பவற்றைத் தவறாது கேட்பார். அவர் எழுதுவதை விட்டிருந்தாலும் மனம்விட்டுப் பேசுவதற்கான விசயங்களில் ஒன்றாக எழுத்து இருந்தது உண்மை.
உஞ்சையாரின் அனுபவத்தை 1990களில் தொடங்கிய புதிய வகை தலித் அரசியல் பயணத்திற்கான சான்றாகவும் பார்க்கலாம். இடதுசாரி அரசியலிலிருந்து சாதி குறித்த விவாதத்தின் தொடர்ச்சியில் தலித் அரசியலுக்கு வந்தவர் அவர். 1990க்கு முந்தைய காலகட்ட தலித் அரசியல் அம்பேத்கரிய இயக்கங்களிடம் இருந்தது. உஞ்சை போன்றவர்கள் இடதுசாரி இயக்கத்திலிருந்து வந்தவர்கள். எனவே, இவர்கள் தலித் அரசியலை இப்பின்புலத்திலேயே விளங்கிக்கொண்டனர். நிறைய ஆளுமைகள், பணிகள், அமைப்புகள், விவாதங்கள் 1990களில் எழுந்திருந்தன. இவ்வாறு உருவானவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் இயல்பான நீட்சியாக நிலைபெற்ற தலித் அமைப்புகளில் இணைந்தனர். இப்படிதான் 1980களின் இறுதியில் வந்த உஞ்சை 1990களின் இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.
தலித் பண்பாட்டுப் பேரவை காலப் பணிகளைப் புதிய கட்சிக்குள் தொடர முடிந்ததில்லை. அதுபற்றி அவர் சிந்தித்ததாகவோ, முரணாகப் பார்த்ததாகவோ தெரியவில்லை. இப்போக்கை இயல்பாகக் கருதியதாகத் தெரிகிறது. கட்சி நிலைப்பாட்டிற்காகவும், அதனை அமைப்பொழுங்குக்கு உட்படுத்தி வலுப்படுத்துவதற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். அமைப்பு என்பதன் வடிவத்தை இடதுசாரி அரசியலின் தொடர்ச்சியிலேயே அவர் புரிந்திருந்தார். இதனால்தான் விசிகவை ஓர் அமைப்பாக ஒழுங்கமைக்கும் முயற்சியில் ஈகோ இல்லாமல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மாநில – மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களில் கையில் நோட்டோடு தவறாது இடம்பெற்றார்.
தலைமையின் கருத்தை ஏற்று நடப்பதே கட்சிக்கு அழகு என்று கருதியிருந்தார். திருமாவின் ஆளுமையைப் பெரிதும் மதித்தார். அதேவேளையில் கட்சியை இடதுசாரி இயக்க ஒழுங்கு போல அமைப்பதற்கும், தலைமையை முழுமையாக ஏற்பதிலும் இருந்த முரண்பாட்டை அவர் யோசித்தாரா என்று தெரியவில்லை. வயது குறைந்தவர்களிடம் முரண்பாடுகள் வந்தபோதும் கூட அவற்றை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் இயங்கிவந்தார். ஆனால், கட்சியில் பல்வேறு அணுகுமுறையினர் இருந்தனர். உஞ்சையின் எளிமை என்கிற பலமே அவரை ‘எளிமைப்படுத்தி’ புரிந்துகொள்ளவும் வாய்ப்பளித்துவிட்டது. 2006ஆம் ஆண்டு சீர்காழி தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2011ஆம் ஆண்டு சீர்காழியிலேயே மீண்டும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இம்முறை கட்சியினரே ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பிறகு வந்த தேர்தல்களின்போது தலைமையைப் புரிந்துகொண்டு போட்டியிடாமல் இருந்துகொண்டார். இதுவும் கட்சி ஒழுங்குக்கு அவரளித்த மதிப்பு என்றே சொல்ல வேண்டும். கடைசியில் கட்சியின் பலம், பலவீனத்திற்குள்ளிருந்து இயங்கும் கட்சிக்காரராக இருந்துகொண்டார். உஞ்சையின் இடத்தை திருமாவும் புரிந்து மதிப்பளித்து வந்தார் என்பதையே உஞ்சைக்காக அவர் எழுதிய இரங்கல் அறிக்கை உணர்த்தியிருக்கிறது.
கட்சி முடிவெடுக்காமல், கட்சியிலிருப்போர் தத்தம் பார்வைகளை முன்வைப்பது கட்சிப் பார்வை போல் அறியப்படுவதை அவர் விரும்பியதில்லை. ரவிக்குமார் கட்சிக்கு வெளியிலிருந்தும், உள்ளேயிருந்தும் பெரியார் விமர்சனம் உள்ளிட்ட விசயங்களைப் பேசியபோது கட்சிக்கு நிர்பந்தம் உண்டானது. ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து 2003க்குப் பிறகு ரவிக்குமார் நண்பர்களோடு (பாரி.செழியன், அழகரசன், அபிமானி, கு.மு.ஜவஹர், முருகுபாண்டியன் மற்றும் நான்) சேர்ந்து தலித் வரலாறு பற்றி நடத்திய அரங்குகளில் உஞ்சை பரவலாகக் கலந்துகொண்டார். தலித் அரசியலை – கட்சியை வலுப்படுத்தும் என்றால் அவற்றோடு இணைவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.
1990களில் புத்துணர்ச்சியோடு எழுந்த பல ஆளுமைகளும் பணிகளும் மைய நீரோட்ட அரசியலுக்குள் போக வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னால் என்னவானார்கள், போகாதபோது என்னவானார்கள் என்பதைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இவ்வாறு சென்றவர்களில் எத்தகைய அணுகுமுறையைக் கையாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் அல்லது தோல்வியடைந்தார்கள் என்பதை அறிவதிலும் அரசியல் பாடம் இருக்கிறது. இத்தகு பின்புலத்தில் உஞ்சையாரின் அனுபவமும் நமக்குப் பாடமாக இருக்கும். உஞ்சையார் அரசியலில் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் ஏற்றிருந்த அரசியல் அமைப்பின் இன்றுவரையிலான வெற்றியில் அவருடைய உழைப்புக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடமிருக்கிறது என்பது உண்மை.