தமிழில் புதிய நாடக முயற்சிகள்

வெளி ரங்கராஜன்

ரலாற்றுரீதியாக நாட்டுப்புறக் கலைகள், கூத்து என நாடகம் எளிய மக்களின் கலையாக விளங்கிவருகிறது. எல்லாக் கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கென ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வடிவங்களும் செயல்பாடுகளும் மாற்றமடைந்துவருகின்றன. சினிமா, தொலைக்காட்சி, வீடியோ போன்ற காட்சி ஊடகங்கள் இன்று அதிக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், நாடகம் என்கிற கலை வடிவத்தின் நேரடி அனுபவத்தைப் பெற விரும்பும் ஒரு சிறுபான்மையினரே இன்று நாடகத்தை நாடிவரும் நிலை உள்ளது. இன்றைய சமூக ஊடகங்களின் பாதிப்பில் கல்லூரி வளாகங்களிலும், இளைஞர்கள் கூடுமிடங்களிலும் தங்களுடைய சமூக, அரசியல் எதிர்வினைகளை வெளிப்படுத்த குறுநாடக வடிவங்களை மாணவர்களும் இளைஞர்களும் கையாளும் நிலை உள்ளது. சமூக இயக்கங்களும், பெண்ணிய அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்த நாடக வடிவங்களைக் கையிலெடுக்கின்றனர். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கலாச்சார வேர்களை இழந்து தனிமையில் உழலும் தனிமனிதனுடன் ஓர் அந்தரங்க உரையாடலை மேற்கொண்டு அவனைச் சமூகவயப்படுத்தும் வேலையை அரங்கமே செய்ய இயலும். அதனால்தான் எவ்வளவு கலாச்சாரத் தாக்கங்களுக்கு இடையிலும் உலகம் முழுவதும் நாடகம் தன்னுடைய மதிப்பையும் பயன்பாட்டையும் இழக்காமல் உள்ளது.

தமிழிலும் கூத்து தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் மேடை நாடகம், வீதி நாடகம், நவீன நாடகம் எனப் பல்வேறு வடிவங்களில் நாடகம் செயல்பட்டுவந்திருக்கிறது. இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்களில் ஏற்பட்ட புத்தாக்க எழுச்சியைப் போலவே நாடகத்திலும் வழக்கமான கதைசொல்லும் பாணியைத் தவிர்த்த புதிய வெளிப்பாட்டு முறை கொண்ட ஒரு நவீன நாடக இயக்கம் 1970களில் வேர்விட ஆரம்பித்தது. இலக்கிய மறுமலர்ச்சி இயக்கங்களைப் போலவே புதிய நாடக இயக்கமும் ஒடுக்கப்பட்ட வாழ்வியல் உணர்வுகளைப் பேசுதல் என்ற நிலையில் புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கோரியது. பேராசிரியர் ராமானுஜம், ந.முத்துசாமி போன்றவர்கள் இதன் அடித்தளமாகச் செயல்பட்டனர். பிரதிதான் நாடகம் என்றிருந்த நிலையில், உடலும் மனமும் இணைந்த லயம்தான் நாடகம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். முத்துசாமி ‘கூத்துப்பட்டறை’ என்ற அமைப்பை நிறுவி, நடிகரின் வளமை குறித்த பயிற்சிகளை முன்னிறுத்திக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழில் புதிய நாடகங்களின் வரவுக்கு ஆதாரமாகச் செயல்பட்டார்.

இதே காலகட்டத்தில் மதுரையில் மு.ராமசாமி, தஞ்சையில் பேராசிரியர் ராஜூ, புதுச்சேரி நாடகப் பள்ளியிலிருந்து வ.ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலு சரவணன், முருகபூபதி, ரமேஷ் பிரேம் போன்றவர்களும், சென்னையில் ஞாநி, பிரளயன், மங்கை, பிரசன்னா ராமசாமி போன்றவர்களும் தங்களுடைய புதிய படைப்புகள் மூலம் வர்த்தக நாடகங்களுக்கு மாற்றான சிந்தனையும் செறிவும் கொண்ட மாற்று அரங்க முயற்சிகளுக்கு வலுவான அடித்தளமிட்டனர். இதன் தொடர்ச்சியாக அரங்கப் பார்வையிலும், உடல்மொழி வெளிப்பாட்டிலும் ஒடுக்கப்பட்ட வாழ்வியல் மற்றும் சமூகப் பார்வைகளைப் படைப்புத் தளத்துக்குக் கொண்டுவருவதில் பல்வேறு படைப்பு முயற்சிகள் பின்வரும் காலங்களில் கவனம் பெற்றன. முக்கியமாக ஆண்மையவாதத்தை எதிர்த்துப் பெண் குரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தன.

அண்மைக்காலங்களில் டில்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற ரெஜின்ரோஸ், அறிவழகன், திருநாவுக்கரசு, மெலடி, தமிழரசி, புதுச்சேரியில் யாழ் நிகழ்கலை மையத்தை உருவாக்கிச் செயல்பட்டுவரும் கோபி, தேசிய நாடகப் பள்ளியில் பயின்று சிறுவர் நாடகத்தில் வேலை செய்துவரும் சந்திரமோகன், சிவபஞ்சவன் போன்றவர்களும், ஈரோடு நாடகக் கொட்டகை நண்பர்களும், நாடகப் பயிற்சி பெற்று வெளிப்படை அரங்க இயக்கத்தின் மூலம் விளிம்புநிலை வாழ்வியல் சார்ந்த நாடகங்களை முன்னெடுத்துவரும் சி.ராமசாமி போன்ற இளம் நாடகப் படைப்பாளிகளால் நவீன நாடகச்சூழல் புதிய கட்டமைவுகளை எதிர்கொண்டுவருகிறது.

 

சாவுச் சடங்குகள் செய்யும் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் சி.ராமசாமியின் ‘நட பாவாடை’, ஒரு நிலவெளி அரங்க சூழலில் அதிகாரத்தால் சுரண்டப்படும் பல்வேறு உயிரிகளின் குரல்களை எதிரொலிக்கும் முருகபூபதியின் ‘இடாகினி கதாய அரத்தம்’, பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இமையம் ஆகியோரது கதைகளின் நாடகமாக்கம், கணவனின் புறக்கணிப்புக்கும் பாம்பின் நேசத்துக்கும் இடையே ஊசலாடும் பெண் குறித்த நாட்டுப்புறக் கதையை மையமாகக் கொண்ட கிரிஷ் கர்னாடின் ‘நாக மண்டலம்’ (இயக்கம்: அறிவழகன்), அந்நிய ஆதிக்கங்களின் பின்புலத்தில் தன்னுடைய கலாச்சார நம்பிக்கைகளுக்காகப் போராடும் எளிய யூத பால்காரத் தொழிலாளி எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களை மையமாகக் கொண்ட Joseph Stein-இன் ‘Fiddler in the Roof’ நாடகம் (இயக்கம்: ரெஜின் ரோஸ்), நவீன வாழ்வின் சிக்கல்களைப் பேசும் கோபியின் ‘அதி நவீனக் கழிப்பறை’, ‘கொடி மரம்’ ஆகிய நாடகங்கள், தஞ்சை விஜயகுமாரின் நாடோடி வாழ்வியலை உரையாடும் நாடி மற்றும் சிறுவர் நாடகங்கள், பிரளயனின் இயக்கத்தில் மகேந்திரவர்ம பல்லவனின் அங்கத நாடகம் ‘மத்தவிலாசப் பிரகசனம்’, கருணா பிரசாத் இயக்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நான் புதுமைப்பித்தன்’ நாடகம், மங்கையின் இயக்கத்தில் தங்கள் மீதான பாலியல் மீறல்களை உரையாடும் இளம் பெண்களின் குரலில் ‘உள்ளுரம்’, பாரம்பரிய கூத்துக்கலையைப் பராமரித்துவரும் சேலம் ஹரிகிருஷ்ணனின் ஒருங்கிணைப்பில் கிராமிய கூத்துகள், என்னுடைய இயக்கத்தில் சுதந்திரத்துக்காகப் போராடும் பெண்களைப் பற்றிய லோர்க்காவின் ஸ்பானிய நாடகம் ‘பெர்னாதா இல்லம்’, திணைநிலவாசிகள் அமைப்பின் மூலம் சமூக விழிப்புணர்வு வீதி நாடகங்களை நிகழ்த்திவரும் பகுர்தீன் செயல்பாடுகளும் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய படைப்பு முயற்சிகள்.

ஒற்றைக் குரல்களின் ஆதிக்கங்களும் அபாயங்களும் பெருகிவரும் இன்றைய சூழலில் பன்மைக்குரல்களும் சிறுகதையாடல்களும் செயல்படும் தளமாக அரங்கம் இயங்குவதற்கான சாத்தியங்கள் பெருகியுள்ளன. நம்முடைய தொன்மங்கள், காப்பியங்கள், நாட்டுப்புறக் கதையாடல்கள், இசைப்பாடல்கள், கூத்து ஆகியவையே நம்முடைய நாடகங்களின் பின்புலங்களாக நம் கலாச்சாரத்தில் தொடர்ந்து இருந்துவருகின்றன. ஒவ்வொருமுறை நிகழ்த்தப்படும்போதும் காலம், சூழல் மாறுபாடுகளுக்கு ஏற்றபடி மாறுபட்ட தொனிகளும் அர்த்தங்களும் கொண்டவையாக இவை வடிவம் கொள்கின்றன. நம்முடைய சமகால அழகியல் அணுகுமுறைகளுக்கான ஊக்கமும் உத்வேகமும் பெறக்கூடிய வாய்ப்புகளை இவை வழங்குகின்றன.

இன்று இளைஞர்கள் சமூகத்துடனான தங்கள் எதிர்பார்ப்புகளையும் கோபங்களையும் வெளிப்படுத்துவதற்கான கலை வடிவங்கள் குறித்த தேடலில் உள்ளனர். தங்கள் படைப்புச் சக்திகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான உடல் வளத்தையும் மன வளத்தையும் பெறுவதற்கான பயிற்சிகளை அவர்கள் நாடியபடி உள்ளனர். நாடகம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெறுவது அவர்கள் கலைப்படைப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு அவர்களுடைய அழகியல் – சமூகப் பார்வைகளை மேம்படுத்தும் சாத்தியங்கள் கொண்டது. இத்தகைய நம்பிக்கையே எதிர்கால நாடகச் செயல்பாடுகளுக்கான ஆதாரமாக உள்ளது. அதற்கான காத்திருப்பில் இன்று எண்ணற்ற இளம் நாடகச் செயற்பாட்டாளர்கள் களத்தில் உள்ளனர். நேரில் நிகழ்த்தப்படும் அரிய கலையாக, இலக்கியம், கலை மற்றும் சமூக ஊடாட்டங்களுக்கான ஊடகமாக இன்று நாடகம் நம் கண்முன்னே உள்ளது.

மேலும், நாடகத்தளம் என்பது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட ஓர் இடமாக இருக்கிறது. நுட்பமான அளவில் அதிகாரத் தகர்ப்புக்கான இடமாகவும் இருக்கிறது. இந்தச் சிந்தனையோட்டத்தின் தொடர்ச்சியாக இன்று நாடகத்தளம் விரிந்துகிடப்பதை நாம் பார்க்க முடியும்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!