காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது குடும்பத்தினர் கொஞ்சம் பிரெட் வாங்கினார்கள். நாங்கள் வெளியேறிய பிறகு அதை எடுத்துவர மிதிவண்டியில் சென்றேன்.
அன்று அக்டோபர் 12ஆம் தேதி. வியாழன். வடக்கு காஸா நகரில் உள்ள பெயிட் லஹியா பகுதியில் வானிலிருந்து அரைப்பக்கக் காகிதங்கள் விழுந்தன. இஸ்ரேலின் இலச்சினை பதிக்கப்பட்ட அக்காகிதங்கள் இந்த எச்சரிக்கையை ஏந்தி வந்தன: ஹமாஸ் தீவிரவாதிகளிடமும், அவர்களது இடங்களிலிருந்தும் தள்ளி இருங்கள். உங்கள் வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.
கீழே சென்றபோது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் பைகளில் முடிந்தவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். கிழக்குப் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண சேவை மையத்தினர் நடத்தும் பள்ளிகள் ஏற்கெனவே இடம்பெயர்ந்த குடும்பங்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், காஸாவின் அகதிகள் குடியிருப்புகளில் மிகப்பெரியதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இடமுமான ஜபாலியா முகாமில் தம் மனைவியின் குடும்பத்தோடு நாங்கள் தங்கிக்கொள்ளலாம் என்று என் மாமா அம்மாவை அழைத்திருந்தார்.
முகாமிற்கு எனது மனைவியும், மைத்துனியும், சகோதரிகளும், குழந்தைகளும் காரில் சென்றனர். என் அண்ணாவும் மைத்துனனும் நானும் மிதிவண்டியில் சென்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இஸ்ரேல் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களைக் காஸாவை விட்டு வெளியேறச் சொன்னது. இந்த உத்தரவை ஐ.நா ‘சாத்தியமற்றது’ என்றது.
அன்றிரவு 8:30 மணியளவில் நாங்கள் தஞ்சம் புகுந்திருந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் குண்டு வெடித்தது. எல்லா மூலைகளிலும் தூசு நிரம்பியது. மக்கள் அலறுவது வெடிச் சத்தத்தின் அளவுக்குக் கேட்டது. வெளியே சென்றால் எங்கும் நடக்க முடியவில்லை. சந்துகள் கற்களாலும் கட்டுக்கம்பிகளாலும் நிரம்பியிருந்தன. சுமார் 50 மீட்டர் தொலைவில் என் மைத்துனரின் கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது, அருகில் ஒரு வீடும். அவ்வீட்டின் சுவர்கள் ஏதுமற்ற இரண்டாவது தளத்திலிருந்து ஒரு பெண் காயங்களுடன் தன் கைகளில் அசைவற்ற குழந்தையை ஏந்தியபடி தொங்கிக்கொண்டிருந்தாள்.
ஜபாலியாவில் வீடுகள் மிகச் சிறியவை. தெருக்களே வீட்டின் கூடங்கள் ஆகிவிடும். அண்டை வீட்டார் பேசுவது கேட்கும். அவர்கள் சமையலின் வாசம் வீசும். பெரும்பாலான சந்துகள் ஒரு மீட்டர் அகலமே இருக்கும். முகாமில் இரண்டு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை காலை எங்களுக்குச் சாப்பிட ஏதுமில்லை. காஸாவில் மின்சாரம், உணவு, மருந்து, தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் தடுத்திருந்தது. பேக்கரிக்குப் போகலாம் என்றால் ஏற்கெனவே நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கிய பிரெட் பொட்டலங்கள் வீட்டில் இருப்பது பிறகுதான் ஞாபகம் வந்தது. அது பெயிட் லஹியாவில் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கிறது.
வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தேன். அம்மாவோ மனைவியோ போக விடமாட்டார்கள் என்பதால் அவர்களுக்குச் சொல்லாமல் மிதிவண்டியை எடுத்தேன். பத்து நிமிடங்கள் பிடித்தன. தெருவில் மக்கள் உடுப்பு, படுக்கை மற்றும் உணவுப் பைகளோடு எதிர்த்திசையில் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். இப்பகுதியிலுள்ள குழந்தைகள் கால்பந்தோ கற்களை வைத்தோ விளையாடாமல் வெறிச்சோடியிருக்கும் காட்சி மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது. இது எங்களுடைய இடமல்ல என்று தோன்றியது.
வீட்டிற்குச் செல்லும் பிரதான வீதியில் பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கண்டேன். பிஸ்கெட்டும் பழச்சாறையும் வாங்க என் குழந்தைகளைக் கூட்டிச் செல்லும் கடை நொறுங்கியிருந்தது; ஐஸ் கிரீம் வைக்கும் குளிர்சாதனப் பெட்டி தூள் தூளாகக் கிடந்தது; வெடிமருந்துகளின் வாசம் வீசியது, மனித உடலின் வாடையும். வீட்டை நோக்கி மிதிவண்டியை வேகமாக ஓட்டினேன்.
காஸாவின் எட்டு முகாம்களில் ஒன்றான அல்-ஷதியில் நான் பிறந்தேன். இரண்டாவது பாலஸ்தீன எழுச்சியான 2000இல் பெயிட் லஹியாவிற்கு நாங்கள் குடிபெயர்ந்தோம். எங்கள் புதிய வீடு ஜன்னல்களோ, தரையில் டைல்களோ அற்றுக் கிடந்தது. சமையலறையிலும் கழிவறையிலும் தண்ணீர்க் குழாய்கள் உடைந்து திறந்தவாறு இருந்தன.
2010இல் அப்பா கடன் வாங்கிப் பக்கத்தில் இருந்த இடத்தை வாங்கினார். அவரும் அம்மாவும் கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, பீச், மா மரங்களையும் காய்கறிச் செடிகளையும் நட்டார்கள். பொழுதுபோக்காகக் கோழி, வாத்து, முயல், புறா ஆகியவற்றையும் வளர்த்தார்கள்.
2015இல் எனக்குத் திருமணமானபோது வீட்டின் மேல்தளத்தில் என் வீட்டைக் கட்டினேன். எங்களது படுக்கையறை ஜன்னலிலிருந்து இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியைப் பார்க்கலாம். குழந்தைகள் அறையிலிருந்து பார்த்தால் பக்கத்து வீட்டு எலுமிச்சை மரங்களும் ஆலிவ் மரங்களும் தெரியும்.
உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் நான் படித்துவிட்டுத் திரும்பியபோது என் வீட்டைப் பெற்றோர் வாஞ்சையோடு புதுப்பித்திருந்தனர். புதிய தட்டுகள், கோப்பைகள், தரை விரிப்புகளோடு மேசையையும் வாங்கி வைத்திருந்தனர். எனக்கு மிகவும் பிடித்த வடிவில் உட்கூரை வடிவமைக்கப்பட்டிருந்தது. நடுவில் பழுப்பும் மஞ்சளுமான நட்சத்திரம். அதைச் சுற்றிச் சிறிய முக்கோணங்கள், வட்டங்கள், ஒரு வானவில். அந்நியர்கள் ஒரு தளத்தைப் பகிர்ந்துகொள்வதைப்போல இவ்வடிவங்களும் வண்ணங்களும் ஒன்றையொன்று தழுவி வாழ்வதாகப் பட்டது. அதைப் பார்த்த கணம் என் பெற்றோர் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
எங்கள் வீட்டுத் தெருவில் நான் மட்டும்தான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், வீட்டுக்கருகில் சென்றபோதுதான் பக்கத்து வீட்டுக்காரர் ஜலீல் ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் தண்ணீர் கேனையும் வைத்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது. உள்ளே மனைவியும், மைத்துனியும் துணிகளைத் துவைத்து, பாட்டில்களில் தண்ணீர் பிடித்து, பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பண்டங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அவர்கள் குடும்பம் பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளது. அங்கே சுத்தமான தண்ணீர் இல்லை, கழிவறைகளும் அசுத்தமாக இருக்கிறதாம். ஆனால், அவர்களுக்கு வேறு வழியில்லை.
இன்னும் எங்கள் கட்டடம் விழாமல் இருப்பது நிம்மதியைத் தந்தது. மூன்றாவது மாடியில் இருக்கும் என் குடியிருப்புக்குப் படிகளில் ஏறும் முன் முதலில் சமையலறைக்குச் சென்றேன். குளிர்சாதனப் பெட்டி நாங்கள் விட்டுப் போனபடி திறந்தவாறு இருந்தது. மின்சாரம் கிட்டத்தட்டச் சுத்தமாக இல்லாததால் உணவுப்பொருட்கள் கெட்டுப்போக ஆரம்பித்திருந்தன. பிரெட் மட்டும் இன்னும் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தது.
வழக்கமாகக் கட்டுரைகளையும் கவிதைகளையும் கதைகளையும் எழுதும் என் நூலக அறைக்குச் சென்றேன். கலீல் ஜிப்ரான், நயோமி ஷிபாப் நயீ, மேரி கார், மஹமூத் தர்விஷ் போன்றோரை மணிக்கணக்காக இங்குதான் வாசித்திருக்கிறேன். அலமாரியிலிருந்து சில நூல்கள் கீழே விழுந்திருந்தன. ஜன்னல் ஒன்று உடைந்திருந்தது. குழந்தைகளுக்கு மேசை இழுப்பறையிலிருந்து சில மிட்டாய்களை எடுத்துக்கொண்டேன்.
கடைசியாகக் கூடத்திற்குச் சென்றேன். எப்போதும் போல ஜன்னல்கள் திறந்திருந்தன. அவற்றை, குறிப்பாக உறையும் குளிர்கால நாட்களில், மூடிவைக்க விரும்புவேன். ஆனால், குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்துவரும் அதிர்வலைகளால் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்துவிடும். ஜன்னல்களைச் சரிசெய்ய காஸாவில் இப்போது யாரிடம்தான் பணம் இருக்கிறது? குண்டுவெடிப்பின்போது என் மீது வெறித்தனமாக வீசிய திரைச்சீலைகள் இப்போது காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. நான் சோஃபாவில் அமர்ந்து கூரையின் வண்ண வடிவங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவை புதிய வண்ணத்தோடு பளிச்சிட்டன. மூன்று விளக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மின்சாரத்தில் இயங்குவன. மற்றொன்று மின்சாரம் துண்டிக்கப்படும்போது பயன்படும் பேட்டரியில் எரிவது. இப்போது ஒன்றுகூட வேலை செய்யவில்லை.
அன்றைய மதியம் இயல்புக்கு மாறான கடும் வெப்பத்தோடு இருந்தது. வெளியே வழக்கமாகக் கேட்கும் இருசக்கர வாகனங்கள், ஐஸ்க்ரீம் வண்டிகளின் சத்தத்திற்குப் பதிலாக இஸ்ரேலிய ட்ரோன்களின் ஒலி கேட்டபடி இருந்தது. பள்ளிகளிலிருந்து பிள்ளைகள் திரும்பவில்லை, கடற்கரைக்குக் குடும்பங்களைக் கொண்டுசெல்லும் கார்கள் இல்லை. எங்கள் தோட்டத்து மரங்களிலிருந்து கேட்கும் பறவைகளின் சத்தமும் இல்லை.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் ஒலி, வானொலிச் செய்திகளின் சத்தம், விட்டு விட்டும் சில சமயங்களில் தொடர்ந்தும் கேட்கும் குண்டுவெடிப்புகளின் சத்தம் என எல்லாம் சேர்ந்து விசித்திர இசைக்கோவையொன்று ஓடிக்கொண்டிருந்தது.
இந்த அறையில் ஈ ஒன்று மாட்டிக்கொண்டிருந்தது. அதை ஓட்டிவிடுவதில் அர்த்தமில்லை. எனினும் திரைச்சீலைகளைத் தள்ளி, ஜன்னலை முழுதாகத் திறந்து வைத்தேன் அப்போது திடீரென ஒரு குண்டுவெடிப்பு என்னை உள்ளே தள்ளியது. அது நிலத்தையும் வீட்டையும் என் இதயத்தையும் உலுக்கியது. அலமாரிகளிலிருந்து சில புத்தகங்கள் கீழே விழுந்தன.
கைபேசியில் சில படங்களை எடுத்தேன். அப்போது நான் நிற்கும் இடத்திலிருந்து ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தள்ளி 50 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் எறியப்பட்டன. அவை விழுந்தது தோட்டத்தின் மீதா? மரத்தின் மீதா? வீட்டின் மீதா? குடும்பத்தினர் மீதா? குண்டுகள் மட்டும் எங்களைக் கொல்வதில்லை, காக்கும் வீடுகளே எங்கள் மீது நொறுங்கி விழுந்தும் நாங்கள் சாகிறோம்.
பறவைகள் படபடத்து உயரப் பறந்தன. அவற்றில் ஒன்று எழும்முன் கீழே விழுந்தது. கல்லொன்று அதன் மீது பட்டிருக்கலாம். அதன் காயங்களுக்கு மருந்திடுவது யார்? மனிதர்களுக்கே இங்கு போதிய மருத்துவர்கள் இல்லை.
சோஃபாவில் வந்து மீண்டும் அமர்ந்தேன். கைபேசியில் முக்கியச் செய்திகள் வந்தன: “பெயிட் லஹியாவில் இரண்டு பெரிய குண்டுவெடிப்புகள், விரைவில் கூடுதல் விவரங்கள்.” அந்த ஈ எங்கே? ஒருவேளை நகர வேண்டாம் என்று எங்கள் இருவருக்குமான எச்சரிக்கையாக அது இருந்திருக்கலாம்.
நீங்காத எண்ணம் ஒன்று என்னைப் பயமுறுத்தியது. நானும் செய்திகளில் வெறும் புள்ளிவிவரக் குறிப்பாக ஆகிவிடுவேனா? வானொலியில் என் மரணச் செய்தியைக் கேட்டுக்கொண்டே இறப்பதாகக் கற்பனை செய்தேன்.
2020இல் ஒருநாள் நியூயார்க் நகரின் சீரக்யூசில் பனிப்புயலை நானும் என் மனைவியும் கண்டோம். மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதா என்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மனைவியும் நானும் சிரித்துக்கொண்டோம். “காஸாவில் இவர்கள் வாழ்ந்தால், பல மணிநேரங்களை வீதிகளில் இப்படி வியந்துகொண்டுதான் கழிப்பார்கள்,” என்றேன் அவளிடம்.
வீட்டின் கூரையை இன்னும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஈக்கள் இப்போது இல்லை. தேனீர் தயாரித்தேன், ஆனால், குடிக்க மறந்துவிட்டேன். இப்போது குண்டுவெடிப்பினால் கிளம்பிய தூசி சோஃபாவிலும் தரை விரிப்பிலும் கோப்பையின் மீதும் படிந்தது. ஜன்னலைக் காற்றுக்காகச் சற்றே திறந்துவைத்தேன்.
நாய்கள் குரைப்பதைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். வழக்கமாக அவை கேட்பதில்லை. ஆனால், இஸ்ரேலிய தாக்குதல் அதிகரித்த பின்பு நாய்கள் கத்திக்கொண்டே இருக்கின்றன. இரவில் அழுவது போல ஊளையிடுகின்றன.
வீட்டின் கூரை என்னை வெறித்துப் பார்த்தது. கண்களை மூடினேன். திறந்தால் ஒரு பெரிய நட்சத்திரம், சில வட்டங்கள், முக்கோணங்கள், வானவில் யாவும் நகராமல் அப்படியே இருந்தன. அவை கூரையை விட்டு உதிராமல் இருப்பது ஒரு குழந்தை தன் தாயின் முலையைப் பற்றியிருப்பதைப் போல இருந்தது. ஒரு கணம் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
மேலும், ஒரு குண்டுவெடிப்பு கேட்டது. ஆனால், புகை இல்லை. உள்ளூர பயம் பரவியது. குண்டுவெடிப்புகள் கண்முன் தெரியாதபோது பார்வையற்றுப் போனதுபோல ஓர் உணர்வு. என் குடும்பத்தை விட்டுவந்த முகாமை நினைத்துப் பார்த்தேன், என் ஏழு வயது மகள் எஃபாவையும். அவள் ஒருபோதும், “அப்பா நம்மீது யார் குண்டுகளை வீசுவது?” என்று கேட்பதில்லை. மாறாக அழுதுகொண்டே, “அப்பா குண்டு வெடிக்கிறது. பயமாக இருக்கிறது. எனக்கு ஒளிந்துகொள்ள வேண்டும்” என்பாள். மனைவி மாரத்தை அழைத்தேன். “எல்லோரும் நலம், குழந்தைகள் யூடியூபில் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். குண்டு வெடிப்புகளிலிருந்து அது ஒன்றுதான் அவர்களைத் திசைதிருப்புகிறது.
சமையலறையிலிருந்து 12 முட்டைகளையும், கொஞ்சம் மாட்டுகறியையும், கோழிக்கறியையும், பிரெட்டையும் எடுத்துக்கொண்டேன். பாத்திரங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. இஸ்ரேலிய ட்ரோன்கள் அவற்றைத் துப்பாக்கி என்றோ, ஏவுகணை என்றோ நினைத்துவிடக்கூடும். கிளம்பும்முன் மேசையில் அடுக்காக இருந்த புத்தகங்களைக் கவனித்தேன். மதியங்களில் பழ மரங்களின் அடியில் அமர்ந்து வாசிக்க அவை எனக்காகக் காத்திருக்கின்றன. எலுமிச்சைச் சாறையோ, கொய்யாப்பழச் சாறையோ குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அலைபேசி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அவற்றைப் பார்க்க வேண்டாம் என்று வைத்துவிட்டேன். நாங்களே இப்போது செய்திகள் ஆகிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.
சோஃபாவில் மீண்டும் ஒருமுறை அமர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டேன். கூரையிலிருந்து என் கண்களை அகற்றவே முடியவில்லை. கடந்த ஏழு நாட்களில் பல குடும்பங்களின் மீது அவர்களின் வீடுகள் விழுந்ததைப் போல என் மீதும் இக்கூரை விழுவதாக எண்ணிப் பார்த்தேன். இதில் எது என்னைக் கொல்லும்? சிறிய முக்கோணங்களா, வானவில்லின் துண்டா, அல்லது பழுப்பு மஞ்சள் நிற நட்சத்திரமா?
ஜபாலியா முகாமிற்குத் திரும்புகையில் வழியில் எதிர்ப்பட்டவர்களின் கண்கள் உணவுப் பையின் மீது படுவதை உணர்ந்தேன். என்னை அவர்கள் பார்க்கும்போது அவர்களும் தத்தம் வீடுகளுக்குச் சென்று தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துவர விரும்புவார்கள் என்று பட்டது. கற்களும் தெறிப்புகளும் நிறைந்த தெருக்களின் ஊடாக எங்களது ‘வீட்டை’ அடைந்தேன். சுமக்கும் எடையினால் மிதிவண்டியின் டயர் வெடித்துவிடப் போகிறது என மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டினேன். பெரியவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். டயர் வெடிக்கும் சத்தம் அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் கலக்கத்தை என்னால் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்.
மொஸாப் அபு தோஹா, காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனக் கவிஞர். அவரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘திங்ஸ் யு மே பைண்ட் ஹிட்டன் இன் மை இயர்’ (என் காதுக்குள் நீங்கள் கண்டுபிடிக்கக்கூடிய பொருட்கள்) என்ற நூலுக்காக அமெரிக்கன் புக் விருதைப் பெற்றவர். இந்தப் பதிவு ‘தி நியூ யார்க்க’ரில் அக்டோபர் 20ஆம் தேதி வெளிவந்தது.