தூரிகைக் கலைஞனே
அம்மாவின் புகைப்படம்
அனுப்புகிறேன்.
மங்கிவிட்டது
தெளிவாக்க வேண்டும்.
பூஞ்சையேறிய
காலத்தின் களிம்பைக்
களைய வேண்டும்
அம்மாவின் கலைந்த கூந்தலைச்
சீவி முடிக்க வேண்டும்.
சிவப்புக் கல் பதித்த கம்மல்
தங்கத்தாலானது
ஒன்றிரண்டு கற்களைக் காணவில்லை
அதை அதனிடத்தில் பொருத்த வேண்டும்
கழுத்திலிருப்பது பித்தளை மாலை.
பொன்னாக்க வேண்டும்
முடிந்தால் கருகமணி
மாலையாக்கு.
அன்றைக்கெல்லாம் ஒரு
குங்குமப் பொட்டிற்கென
அலைந்து திரிந்தாள். கிடைக்கவில்லை.
நெற்றியிலொரு திலகம் தீற்றிவிடு.
மேலுதட்டிற்கும் மூக்கிற்குமிடையில்
நிறம் மருவிய மருவுண்டு
இன்னுங் கொஞ்சம் அதைக்
கருமையேற்ற வேண்டும்.
கண்களிலிருக்கிறதே பெருங்கனிவு,
துளிகூட அது குறையலாகாது.
இடது செவியினருகில் நெளிந்து விழுந்திருக்கும்
அந்தச் சிறுயிழைச் சுருள்முடி!
அதை மட்டும் அப்படியே விட்டுவிடு.
வலது கண் புருவத்திற்குச் சற்று மேலே
தழும்பொன்று இருக்கிறது
சிறுவனாயிருக்கையில்
குரும்பலைக் கொண்டு நான்
குறி பார்த்தது
அது
மறைந்துவிடக் கூடாது.
என்றென்றும் எனக்கது வலிக்க வேண்டும்.
l [email protected] | illustration : Suzanne Dias