ஷோபாவின் கதைகள் உண்மைக்கு நெருக்கத்திலிருந்து புனைவுகளைக் கட்டமைக்கக்கூடியவை. கதைக்குள் கதைசொல்லியாகவோ, வந்துபோகும் கதாபாத்திரமாகவோ ஷோபா இருப்பார். அதனாலேயே அவரெழுதும் கதைக்கு அவரே சாட்சியாகிறார். ‘ஆறாங்குழி’ கதையில் வரும் கதைசொல்லி சிங்கள இராணுவ வீரன். யக்கடயா என்கிற புனைபெயரில் வருகிறான் (யக்கடயா – இரும்பு மனிதன்). இக்கதையின் காலகட்டமானது இலங்கையில் ஜே.வி.பியினரின் புரட்சிகள் வெடிக்கும் சமயத்தை ஒத்து நகர்கிறது. ஜே.வி.பியின் தலைவர் ரோஹண வீஜேவீரவின் மரணம் குறித்தான புனைவுச் சித்திரமே கதையின் மையச்சரடு. இன்றுவரை ரோஹண வீஜேவீரவின் மரணம் சர்ச்சையாகவே உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது மனைவி ஸ்ரீமதி சித்ராங்கனி தனது கணவரைத் தேடித்தருமாறு நீதிமன்றத்தில் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அவர் உயிருடன் இருக்கிறாரா? மறைந்து வாழ்கிறாரா? போன்ற பலதரப்பட்ட கேள்விக்கணைகளை அவரது ஆதரவு தரப்பினர் தொடுத்தவாறே உள்ளனர். அவர் இறந்துவிட்டார், இலங்கை இராணுவம் அவரைக் கொன்றுவிட்டது அல்லது காணாமலாக்கிவிட்டது மாதிரியான செய்திகள் அன்றைய ஊடகங்களின் வாயிலாக இலங்கை மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
ரோஹண வீஜேவீர புலிகளையும் எதிர்க்கிறார், அரசையும் எதிர்க்கிறார். இராணுவத்தில் இருப்பவர்களும் வீஜேவீரவின் பேச்சினைக் கேட்டு அவரைப் பின்பற்றக்கூடியவர்களாகவும் அனுதாபியாகவும் இருக்கிறார்கள். அப்படி அனுதாபியாக மாறிப்போனவன்தான் யக்கடயா. இலங்கை அரசுக்கும் வீஜேவீரவுக்கும் இடையேயான உச்சக்கட்ட மோதலின்போது நடந்த கதையை யக்கடயா நமக்குச் சொல்கிறான். தன்னை மிகவும் கவர்ந்த தலைவனை இராணுவத்தின் பெயரால் சாகடித்ததே தான்தான் என்கிற வாக்குமூலத்தை யக்கடயா சொல்லி முடிக்கையில் நமக்கொன்று புரியும், ‘கொள்கைவாதியொருவன் தான்கொண்ட கொள்கையால் தன் ஆதரவாளானாலே கொல்லப்படுவது (அ) காட்டிக்கொடுக்கப்படுவது’. இங்ஙனம் அது எந்தக் கொள்கையாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கொள்க. யக்கடயா ஜேவிபியின் அனுதாபிதான். ஆனால், தனிப்பட்டவனாக இரும்பு மனிதன். எதிரிகளின் எலும்பை உடைக்க இராணுவம் அவனையே அணுகும். தமிழர்களின் எலும்பைத்தான் உடைக்கப்போகிறோம் என்று எண்ணியிருந்த யக்கடயாவுக்கு, தன் இனத்தவனைக் கொல்லப்போகிறோம் என்று ஒரு கட்டத்தில் தெரியவந்தாலும் பணிக்கப்பட்ட கருமமாகவே அதனைச் செய்கிறான். ஒருவேளை அது, தான் நேசித்த தலைவன் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் தாக்குவதற்கு முனைந்திருப்பானா என்றால் செய்திருக்கமாட்டான்தான். ஏனென்றால், ஜே.வி.பியினர் மீது அவனுக்குப் பயம் இருக்கிறது. அதனாலேயே ‘எல்லா வித்தைகளிலும் பெரிய வித்தை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதுதான்’ என்று யக்கடயாவினை பேச வைத்திருக்கிறார் ஷோபா.
அதேபோல, பெரிய அரசியல் தலைவரின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் / உடனிருந்தவர்கள் ஆகியோரின் பிற்கால வாழ்வானது அவர்களுக்கு அதிகாரத்தையும் அதற்கு நேர்மாறாக ஒளிந்து வாழக்கூடிய சூழலையும் வழங்கக் கூடியதாகயிருக்கிறது. முன்னதற்கு ஜெனரல் சரத் முனசிங்கே, இந்திரானந்தா டி சில்வா போன்றோரையும், பின்னதற்குக் கதைசொல்லியான யக்கடயாவினையும் உதாரணமாகக் கொள்ளலாம். முன்னவர்கள் சொகுசான இடத்தில் அமர்ந்துகொண்டு, நடந்தேறிய வரலாற்றின் குற்றத்திலிருந்து தங்களை வெளியேற்றுவதற்காகவும், நடந்தவற்றை மாற்றியமைப்பதற்காகவுமான எத்தனத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்பவர்கள் யக்கடயா போன்ற கருவிகள்தான்.
இதேயிடத்தில் தங்களுக்கெதிராய் பேசுபவர்களை ஓர் அரசு என்ன செய்யுமென்பது ரோஹண வீஜேவீரவின் மரணத்தின் வழியாய் ஆவணம் செய்கிறார் ஷோபா. வீஜேவீர சிறந்த பேச்சாளராகவும், பேச்சின் வழியே ஆட்களைத் திரட்டும் தலைமைப் பண்பும் வாய்க்கப் பெற்றவர். அதிகாரத்தினை எதிர்த்துப் பேசுபவனின் வாயில் அவனது ஆண்குறியையே திணிக்கிறார்கள். ஆண்குறி வாயிலிருந்து விழும் தருணத்தில் வீஜேவீர பாத்திரமானது சத்தமான முணுமுணுப்பை வெளிப்படுத்தும். அப்போது அருகில் வரும் தலைமையதிகாரி, ‘இவன் பேசுவதை நிறுத்தப்போவதேயில்லை’ என்று புலம்புவார். என்றைக்கும் அதிகாரத்தின் பிள்ளைகளால் எதிர்க்குரலைச் சகித்துக்கொள்ள முடியாதென்பதே கள யதார்த்தம்.
கதையில் ஷோபாவிற்கே உண்டான பகடியும் கையாளப்பட்டிருக்கிறது. தகவல் அதிகாரிக்கும் யக்கடயாவிற்குமான உரையாடலில்,
“சேர்… எனக்குக் கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாளா என்று கேட்டீர்களே…?”
“இருக்கிறாளா என்ன?”
“உண்மையாகவே இல்லை சேர்..”
“கேர்ள் ஃபிரண்ட் வைத்திருக்கும் இந்தக் கால இளைஞர்களால் இரகசியத்தைக் காப்பாற்ற முடிவதில்லை யக்கடயா”
முப்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த இரகசியத்தை யக்கடயா இப்போது சொல்வதற்கான காரணம், அவனுக்கு இப்போது முக்கியம் அவன் மட்டும்தான். மேலும், தப்பித்தல் கலையை முறைப்படி கற்றறிந்தும் வைத்திருக்கிறான். சீக்கிரம் கடலிலிருந்து பூமிக்குத் திரும்புவாயாக யக்கடயா.