ரூபிக் கியூப் வீடு
கிழக்கைப் பார்த்தபடியான வீடு
கால்கள் வாசலைப் பார்த்தபடியாகப் படுத்திருந்தோம்.
பின்னிரவில் மணியைத் தோராயமாக சொல்லிவிடும் நேரங்களில்
ஆள் மாற்றி ஆள் முழித்துக்கொண்டோம்.
முழித்தபோதெல்லாம் வீட்டின் முகத்தை
தென்கிழக்கு வடக்கு தென்மேற்கு அல்லது வடகிழக்காக
ரூபிக் கியூப் போல் மாற்றி மாற்றி மாற்றி வைத்து
விளையாடிக்கொண்டிருந்தது வாசல்
காலையில் எங்கள் குழப்பத்தில்
இருந்த வீட்டின் திசைப் புதிரை அறிவதற்குள்
வாசல் அடுத்த நகர்த்தலுக்குப் புரள
நல்லவேளை படுக்க வைத்த கோணத்திற்கே வந்து
முழித்து விட்டாள் குழந்தை
பயணிகளை உதிர்க்கும் இரயில்
அடுக்கிவைக்கப்பட்ட இரயிலின் சன்னலோர இருக்கையிலமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தேன்
ஒவ்வொரு ஸ்டேஷனிலும்
இரயிலிருந்து சில கழன்று உருண்டோடிக்கொண்டிருந்தன.
(ஒவ்வொரு ஸ்டேஷனிலும் )
நனவிலி சற்று பிறழ்வது போலிருந்தது.
அறுதியான ஸ்டேஷனடைந்ததும் கவனித்தேன்
மேடையிலிருந்து இரயிலே ஒட்டுமொத்தமாக
உதிர்ந்து உதிர்ந்து உதிர்ந்து
எங்கெங்கோ கலைந்து சென்றுகொண்டிருந்தது.
ஒரு வாகனம் புறப்பட்டதறியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் குட்டி நாயைப்போல விழித்துக்கொண்டிருந்தேன்
என்னை நானே எப்படிச் சுதாரிப்பதென்று.
குரல் தந்து உதவுதல்
நல்ல சலதோசம்
பேசவே முடியாதளவு தொண்டை வலி.
இவ்வளவு மழையில் நனைந்தும்
வழக்கமாக வீட்டு வாசலில் வாசம் செய்யும்
நாய்க்கு, ஒன்றுமில்லை.
பொட்டாட்டும் படுத்திருந்தது.
வேலைக்குப் புறப்படுகிறேன் எனத் தடவிக்கொடுத்தேன்.
அது போய்வா என்பதுபோல் நா குழைத்தது.
குரைப்பேதுமில்லை.
அதன் குரலையே சிந்தித்துக்கொண்டிருந்தேன்
என் தொண்டையில் அதன் குரலே வீடு வரும்வரை உருத்திக்கொண்டிருந்தது
யாரிடமும் அன்று அவ்வளவு பேச்சில்லை
சமிக்ஞையேதான்.
வீடு திரும்பியதும் “சாப்பிட்டாயா?” என
வாய்திறந்து உதடசைத்தேன்
அது எதையோ என்னிடம் வாங்கி விழுங்கிக்கொண்டதுபோல் “லொள் லொள்” என்றது
அம்மா ஆசுவாசப்பட்டுச் சொன்னாள்
“ப்பா… இப்பாவாவது குரைத்தாயே!”