மூளி

சாத்தன் குன்றன்

ரதேசி காத்தானின் வருகைக்காகக் கூட்டம் ஒன்று எப்போதும் செம்பச்சேரியில் காத்திருக்கும். பல வருடம் கழித்து ஜெயவருடம் கார்த்திகை மாதத்தில் காத்தான் செம்பச்சேரிக்கு வந்தபோது, கால்கள் வைத்து நடக்க முடியாமல் நிலமெங்கும் நீராகப் பரவிக் கிடக்கின்றன. வடக்குக் கரட்டுக் காடுகளில் நிற்கின்ற மாமரங்களிலும் புளியமரங்களிலும் பூவும் பிஞ்சும் பொதிபிடித்து நிற்கின்றன. கிழக்குச் செவக்காட்டில் கண்களுக்கு எட்டிய தூரம் சாமையும், குதிரைவாலியும், கம்பும், இரும்புச் சோளமும் சாட்டைச் சாட்டையாய் விளைந்து கிடக்கின்றன. தெற்குப் பக்க வயக்காடுகளில் விளைந்து முற்றிய நெற்கதிர்கள் தலைசாய்ந்து தண்ணீரில் மிதந்து கிடக்கின்றன. இந்த வருடம்போல முந்நூறு வருடத்திற்கு முன்னால் பேய் மழைபெய்து நிலமெங்கும் ‘நீராகக் கிடந்ததுன்னு’ சித்தன் அரிட்டன் சொன்னதாக பரதேசி காத்தான் செம்பச்சேரியில் பாட்டாகப் பாடினார்.

ஓரிடத்தில் நிலைகொள்ளாத துறவியைப் போலத் தான் பரதேசி காத்தானின் வாழ்க்கை. குருமுனி போல குள்ளமான உருவம் கொண்டு, பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்களும் கருத்த மேனியாக இருந்தாலும், ஒருவிதமான மினுமினுப்பும் முதுமையைக் காட்டாத உடற்கட்டும் கொண்டவர். பெண்டு, புள்ளைகள் இல்லேன்னாலும் தொப்புள்கொடி உறவு அந்து போகாதது மாதிரி செம்பச்சேரியில் மூதாதையர் வாழ்ந்துவிட்டுப் போன வீடு மேடாகி நிற்கிறது. யாருடைய வீட்டிலும் அன்னந்தண்ணி புழங்கமாட்டார். எங்கு சாப்பிடுகிறார், தூங்குகிறார், தும்பைப்பூ நிறத்தைப் போல வேஷ்டி, சட்டை எங்கிருந்துதான் இவருக்குக் கிடைக்கிறது என்பதெல்லாம் ‘தாமரை இலைமேல் தண்ணீர் மாதிரியாவே’ இருக்கும்.

தேசமெங்கும் பாட்டுப் பாடும் பரதேசி காத்தான் புராணம், இதிகாசம், அரிச்சந்திர மயானக்கதை, நளன்கதை, நான்மறைப்பாட்டு, மறைமொழி, இலக்கணம் என சகலத்தையும் பாட்டாகப் பாடுவார். ஊரில் யாராவது ‘ஏம்பா காத்தா, நீ ஒரு முனிவர் மாதிரியாவே இருக்குறியே, இந்த வித்தையெல்லாம் எங்கிருந்து கத்துக்கிட்டப்பா’ என்று கேட்டால், அதற்கு பரதேசி காத்தான் சொல்கின்ற பதில், ‘அட என்ன இப்புடிக் கேட்டுட்ட, சித்தனுக்கெல்லாம் மூத்த சித்தேன் நானு. அந்தா மலை தெரியுதா? அங்கேதான் நான் பொறந்து வளந்தேன். சித்தனுக எல்லாம் கூடி ஒலக ரகசியத்தைக் கண்டுபுடிச்சு வாடா காத்தான்னு எங்கிட்ட கேட்டுக் கிட்டதால நான் ஊர்ஊரா சுத்தி ஒலக ரகசியத்த அறிஞ்சு பாட்டா பாடிவாரேன். எனக்கு மனுஷப் பொறப்பு இனிமே கெடையாது. இந்த வருஷம் சேர்த்து இன்னும் நூறாவது வருஷம் வரும் சனிக்கெழமை அன்னைக்கு அந்த மலையோட பொடவில் மாயமாக மறஞ்சிபோயிருவேன். அந்த நாளு வரைக்கும் ஊர் ஊரா பாடுவேன்.’ என்று சொல்லி முடிப்பார். கேட்டவர், ‘கடுகு சிறுத்தாலும் காரம் கொறயாதுன்னு ஊருல சும்மாவ சொன்னாக’ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்.

செம்பச்சேரியில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் பனையோலைகள் கொண்டு வேயப்பட்டிருக்கும். எல்லா வீடுகளின் வாசற்படிகளும் தெற்குத் திசை பார்த்தபடி ஆறடி உயரத்திற்கு மேலாகத் திண்ணைகளைக் கொண்டிருக்கும். எந்தக் காலம் வந்தாலும் பரதேசி காத்தான் சாத்தமங்கலத்தான் வீட்டுத் திண்ணையில்தான் தூக்கம் கொள்வார். சிலநேரங்களில் ஊரின் தென்புறத்தில் ஓடும் ஆற்றோர மரநிழலில் தூங்குவார். ஊருக்குள் நடந்து போனால் போதும் சாப்பிட்டுப் போகச் சொல்பவர்கள் ஏராளம். ஆனால், அதை விரும்ப மாட்டார். திண்ணையில் படுத்துறங்கும்போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கிவிடுவார்.

பரதேசி காத்தான் முன்னோர்களின் ஆதி சொந்தமாகவும், அருள் வாக்குச் சொல்கிற சாமியாகவும் தங்களுக்கு இருந்துவருகிறார் என்பதால் என்னவோ? அவர்மேல் மரியாதையும் பயமும் செம்பச்சேரி மக்களுக்கு இருக்கும். எந்த மாதத்தில், எத்துணை வருடங்கள் கழித்து வருவார் என்பதை யாராலும் சொல்ல முடியாது. திருமணம் முடித்து வந்த புதுப் பெண்களுக்கோ, வேற்று ஊர்களில் வந்து செம்பச்சேரியில் குடியேறினவர்களுக்கோ திடீரென்று தோன்றும் பரதேசி காத்தானை தெரியாது. ஏதோ வெளியூர்க்காரன் போல என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், காத்தான் ஊரில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். ஊருக்குள் வருகின்ற பரதேசி காத்தானை ஓரிரு நாட்களோ, வாரமோ மட்டுமே பார்க்க முடியும்.

செம்பச்சேரி இளைஞர்களுக்கு காத்தானை மிகவும் பிடிக்கும். அவர் சொல்லும் கதை ஏதோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்து முடிந்த உண்மைச் சம்பவம் போலவும் அதேநேரத்தில் மர்மமாகவும் இருக்கும். அவர் கதை சொல்லும்விதம் வழியில் போகின்றவர்களையும் உட்கார வைத்துக் கேட்க வைக்கும். சாமிகளை வருணிக்கும்போது அவருடைய உடல் புல்லரித்து சாமி இறங்கி ஆடுவார். கதையைக் கேட்டுக்கிட்டிருந்த அனைவருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும். அங்கு பேரமைதி நிலவும். பரதேசி காத்தான் நிதானம் அடைந்த பிறகு மீண்டும் கதையைத் தொடங்கிவிடுவார்.

நீண்ட வருடம் கழித்து ஊருக்கு வந்திருக்கும் பரதேசி காத்தான் தாத்தாவிடம் கதை கேட்க வேண்டும் என்ற ஆவலில் கல்லூரி விடுமுறைக்கு வந்த நண்பர்கள் முடிவுசெய்தோம். பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. எப்படியும் காத்தான் தாத்தா ஆற்று மணலில்தான் தனியாக இருப்பார். அங்கு எல்லோரும் சென்றுவிட்டால் கதையைக் கேட்கலாம். இரவு நேரச் சாப்பாடு எடுத்துக்கொண்டு ஊருக்குத் தெற்கில் ஓடும் ஆற்றங்கரைக்குக் கிளம்பினோம். நாங்க எதிர்பார்த்த மாதிரியே தாத்தா கிழக்கு முகமாக எதையோ யோசித்துக்கொண்டு மணலில் உட்கார்ந்திருந்தார். ஆற்றின் மேற்குக்கரையை ஒட்டிய பள்ளத்தில் சிற்றோடை போல தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. கரைகளில் உயர்ந்து நிற்கும் தேக்குமரக் கிளைகளில் காற்று அதிகமாக வீசிக்கொண்டிருந்தது. எங்களைப் பார்த்த காத்தான் தாத்தா மகிழ்ச்சி அடைந்ததை அவருடைய பார்வையில் தெரிந்து கொண்டோம். ‘வாங்கடா, வாங்கடா’ என்று அழைத்தார்.

பரதேசி காத்தான் தாத்தா அமர்ந்திருந்த இடத்திற்கு முன்பாக அமர்ந்தோம். மேற்கே சூரியன் செங்கதிர்களைப் பரப்பி மறைவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. அமைதியாக இருந்த எங்களைப் பார்த்த பரதேசி காத்தான் தாத்தா ‘அப்புச்சிகளா கூட்டமா கௌம்பி வந்த சேதி என்ன?’ என்று கேட்டார். ‘ஒங்களப் பார்த்துட்டுப் போகலாமுனு வந்தோம் தாத்தா’ எல்லோரும் சேர்ந்து சொன்னோம். ‘ஓகோ அப்பிடியா, ரொம்ப மனோபலம்யா’ என்று சொல்லிக்கொண்டே சிரித்தார். மாதவன் பேச்சை ஆரம்பித்தான், ‘தாத்தா சாமி கதை எங்களுக்குச் சொல்லுங்க’ என்றான். தாடியைச் சொரிந்து கொண்டு ‘ஆயிரமாயிரம் கதைக இருக்கு உங்களுக்கு எந்தச் சாமிக்கதை சொல்லணும்’ ‘எந்தச் சாமி கதையாவது சொல்லுங்க.’ ‘ஓ அப்பிடியா சொல்லிட்டாப் போச்சு’ என்று தொண்டையைச் செருமிக்கொண்டு வாயிலிருந்து எச்சிலைத் துப்பினார். ‘தாத்தா கதய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்தச் சாப்பாட சாப்பிடுங்க’ தூக்கில் இருந்த சாப்பாட்டை அவர் முன் நீட்டினான் மதகடி. ‘சாப்டலாம்யா, இப்ப என்ன அவசரம். கொஞ்ச இருட்டாகட்டும். நெலா வெளிச்சத்துல சாப்பிடலாம்யா, அந்தக் குச்சிய எடுத்து என்னய சுத்தி ஒரு பெரிய வட்டம் போடுய்யா’ என்றார். மாதரசன் வட்டத்தைப் போட்டு முடித்தான். பிறகு எங்களைப் பார்த்து ‘எல்லாரும் வந்து உட்காருங்கப்பா’ என்றார்.

வட்டத்திற்குள் அமர்ந்துகொண்டு கதையைக் கேட்கத் தயாரானோம். இடையில் மகேந்திரன் ‘எதுக்குத் தாத்தா நம்மள சுத்தி வட்டக் கோடு போட்டு உட்காரச் சொல்றீங்க’ என்று கேட்டான். ‘மசங்குற நேரம் காத்துக் கருப்பு வந்து போகும், அதுவும் ஆத்துக்குள்ள கவனமா இருக்கணும், சின்ன புள்ளைகளுக்குப் பயந்தட்டிடக் கூடாதுல்ல அதான் வட்டக்கோடு போடச் சொன்னேன்’ என்றார். இதைக்கேட்டுச் சிலர் சிரித்தனர். தாத்தா எப்பொழுது கதையைச் சொல்வார் என்று அவர் வாயைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மெதுவாக வாயைத் திறந்து கதை சொல்லத் தொடங்கினார்.

‘நாம இருக்குற இந்தச் செம்பச்சேரி இருக்கே, நம்ம சொந்த ஊருகெடையாது. வடக்கிலருந்து புறஞ்சாஞ்சு வந்து குடியேறின ஊருதான். அதுனாலதான் நம்மள வடக்கத்தியன்னும், வந்தேறிகனு ஊருக்குள்ள அரசபுரசல பேசுவாங்க. அவுங்க பேசுறதும் உண்மதான். நம்ம ஊரு காஞ்சிபொறம் பக்கம் வள்ளிமலை. அங்கேருந்து முப்பாட்டான் காலத்துல கழுமரத்த வெட்டி, சண்டகட்டி வெளியேறி வந்து குடியேறின ஊருதான் இந்தச் செம்பச்சேரி. வள்ளிமலையச் சுத்தி நெறைய மலைக்குன்றுகள் இருக்குமாம். அப்பிடி ஒரு பெரிய மல ஒன்னு இருந்துச்சாம் அந்த மலையில ஒரு முனிவரு மட்டும் தங்கியிருந்தாராம், ஊருல வாழுற சனங்கள் அத்தனபேரும் அவரப்போய் பார்த்துட்டு வணங்கிட்டு வருவாங்களாம். ஆனா, அந்த ஊருல மனவேகமுன்னு பேரு வச்சவன் மட்டும் அவரப்போய் பாக்க மாட்டானாம். இப்பிடித்தான் ஒருநாளு அந்த முனிவரு மலையில இருந்து கீழே எறங்கி வர்ரப்ப, மனவேகமும் அந்தப் பக்கமா போயிருக்கான், ரெண்டுபேரும் நேருக்கு நேரா சந்திச்சுருக்காங்க., ஒத்தயடிப்பாதை மனவேகம் வழிவிடாம நின்னுகிட்டு ‘ஏயா முனிவரு, நீ இந்த மலயவிட்டுப் போகமாட்டீயா, ஒன்னால எந்தொழிலு கெடுதுன்னு சொன்னானாம். அதுக்கு அந்த முனிவரு பேசாமலே நின்னுக்கிட்டு இருந்தாராம்,’ ‘ஒனக்கு காதுகீது கேக்காதா நாலு ஆடு கோழிகள களவாண்டு வந்து மலமேல போட்டுச் சுட்டுத் திங்கமுடியல, ஒன்னப் பாக்க ஊருப்பயலுக அத்தனபேரும் வந்து களவ கண்டுபுடிச்சிடுறான், இனிமே இந்த மலக்கி வராதப்பா, நீ வந்த நாள் முதல்லருந்து என்னொடம்பே எளச்சுப்போச்சு, நாக்கும் செத்துப்போச்சு, நாலு நல்லது கெட்டதுகளைத் திங்கமுடியல.’ மனவேகம் பேசுறதைக் கேட்டுட்டே இருந்த முனிவரு, அப்பத்தான் வாயத்தொறந்து பேசுனாரு ‘மகனே, உயிர்கள நேசிக்கணும், அதுகளப் புசிக்கக்கூடாது,’ முனிவர் இப்பிடிச் சொல்லி முடிக்கிறதுக்குள்ளாற, கீழே கெடந்த கல்ல எடுத்து முனிவரோட மண்டையிலயே அடிச்சிட்டான். ரெத்தம் கொட்டுது. கொட்டுன ரெத்தம் அந்தச் சரளப் பாதையிலே வெள்ளமாப் போக ஆரம்பிச்சுடுச்சாம், மனவேகம் துண்டக் காணோம் துணியக்காணமுன்னு ஓடிப்போய்ட்டான்.

மலக்கரட்டுல ஆடு மேச்சுட்டு இருந்த நம்ம முப்பாட்டன் செவப்ப ஆறு ஓடுறதப் பாத்து இது என்னடா வில்லங்கம்மா இருக்குன்னு நெனச்சிட்டு ஆடுகள் எல்லாத்தையும் விட்டுப்புட்டு, முனிவருகிட்ட வந்துருக்கான், முனிவரு சம்மணங்காலு போட்டுக்கிட்டு, கண்ணமூடிக்கிட்டு ஒக்காந்திருக்காரு, மண்டயில இருந்து ரெத்த ஆறு ஓடிக்கிட்டே இருக்கு. நம்ம முப்பாட்டான் பயந்து நிக்கிறான். கொஞ்சநேரத்துல அந்த எடமெல்லாம் செவப்பா மாறிக்கிட்டே இருக்குது. ஒக்காந்திருந்த முனிவரு பூமிக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா மறஞ்சு போயிட்டாராம். ஆனாலும் அவரு மறஞ்ச எடத்துல இருந்து ரெத்தம் பொக்குளிச்சு வந்துக்கிட்டே இருக்குது. நம்ம முப்பாட்டான் கரட்டுலயே ஆடுகள விட்டுப்புட்டு ஓட்டமும் நடையுமா ஊருக்குள்ள வந்து சொல்லியிருக்கான். இது ஓடிப்போன மனவேகத்தோட காதுக்கும் வந்துருச்சு. அன்னைக்கு ராப்பொழுதே முப்பாட்டான் வீட்டுல போய் மனவேகம் சத்தம்பபோட்டு வம்பு செஞ்சு, இனிமே முனிவரப்பத்துன வெவகாரத்த ஊருல சொன்னா, ஒங்க குடும்பத்தையே அழிச்சுப்புடுவேனு போய் சொல்லி மெரட்டியிருக்கான். அந்த ராத்திரி முப்பாட்டான் வீட்டுல இல்ல. முப்பாட்டிதான் மனவேகம் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போன வெசயத்த சொல்லியிருக்கா. நம்ம முப்பாட்டான் அதுக்கெல்லாம் பயப்படாமல் அடுத்த காலையிலயே எப்போதும் போல ஆடுகள பத்திக்கிட்டு அந்த மலைக்குப் போய்ட்டாராம்.

அடுத்து என்ன சொல்லப் போகிறார் காத்தான் தாத்தா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் கொண்டுவந்திருந்த தண்ணியை எடுத்துக் குடித்தார். ஆற்றுக்குள் இருள் சூழத்தொடங்கியது. மேற்கில் நிலவு வெளிச்சம் ஆற்றுமணலெங்கும் பரவியது. தொண்டையைச் செருமிக்கொண்டு கதையைத் தொடங்கினார். ‘ஆடுகள மலைக்குப் பத்திட்டுப் போய் சாயங்காலம் ஊருக்குள்ள முப்பாட்டன் வந்திருக்காரு. ஊரே களவரப்பட்டுக் கெடந்திருக்கு. ஏன்டா இப்புடிக் கூட்டம் கூட்டமா பேசிட்டே இருக்குறீங்கன்னு கேட்ருக்காரு. அப்ப ஒருத்தன் சொன்னானாம், ‘வடக்குல இருந்து குதிரைகள்ள ஏறி வாட்டசாட்டமான கொள்ளக் கூட்டம் ஒன்னு வந்துகிட்டு இருக்காம். அந்தக் கூட்டம் ஊருக்குள்ள புகுந்து பொன்னு பொருளுகள கொள்ளையடிச்சிக்கிட்டு, கண்ணுல கண்டதுகள வாளால வெட்டி சாச்சுக்கிட்டே போய்ருவாங்களாமுன்னு சொல்லியிருக்கான்.

Illustration : Carla Petelski

மனவேகம் அந்த முனிவர கல்லால அடிச்சுக் கொன்டதுக்குத்தான் பழி தீர்க்க அந்தக் கொள்ளக் கூட்டம் வருதுன்னு ஊருக்குள்ள ஒரே பேச்சும் பரவியிருக்குது. அதுல சிலபேரு ‘முனிவர நாம எங்க கல்லால அடிச்சோம், அடிச்ச மனவேகம் மலையடிவாரத்துல கெடக்குறான், அவனப் போய் கொல்ல வேண்டியதானே. நம்மள ஏன் இந்தக் குதிரக் கூட்டம் கொள்ளையடிச்சுக் கொல செய்ய வரணுமுன்னும் பேசியிருக்காங்க.’ நம்ம ஊருக்குள்ளயும் இப்பவோ அப்பவோ வந்துருவாங்கன்னு பயந்து கெடக்கோமுன்னும் சொல்லியிருக்காங்க. முப்பாட்டான் அவுகளப் பாத்து, ‘வர்ரானம் வடக்கேருந்து கொள்ளக்காரனுக, ‘கேக்குறதுக கேனையா இருந்துச்சுன்னா கேப்பையில நெய்யு வடியும்பாய்ங்களாம். போய் வேலயப் பாருங்கடான்னு சொல்லிச் சத்தம்போட்டுட்டு, கொள்ளக்காரேன் வரும்போது வரட்டுமுன்னு சொல்லி வீட்டுக்குப் போயிட்டாராம்.

அன்னைக்கு ராத்திரி முழுக்க ஊருல யாரும் தூக்கம் கொள்ளாம அலஞ்சி திரிஞ்சிருக்குக. வீட்டுக்குள்ள படுத்துக்கிடந்த முப்பாட்டானுக்கு இப்புடி ஒரு சந்தேகம் வந்திருக்கு, மனவேகந்தான் இப்புடி ஊருக்குள்ள பீதிய கௌப்பிவிட்டு ஆடுமாடுகள கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியிருக்கானோன்னு. படுத்திருந்த மனுசன் ஆட்டுப்பட்டிய வந்து பாத்துருக்கார். ஆடுக அசைபோட்டுப் படுத்துக்கெடக்குதுகலாம். இனி ஒரு நிமுசம் தாமதிக்காம மனவேகம்; வீட்டுக்குப் போய் பாத்துப்புடணும் நெனச்சுக் கௌம்பிட்டாரம்.

மலையடிவாரத்த ஒட்டித்தான் மனவேகத்தோட குடிசை இருந்துருக்கு. பாதையெல்லாம் ஒரே இருட்டாக் கெடக்குதுக. குள்ள நரிகளெல்லாம் ஊளச்சத்தம் போட்டுட்டு அலையுதுகளாம். கொட்டானுகளோட சத்தம் மலப்பாறையில பட்டுப் பயம்காட்டுது. இந்த அத்துவானக்காட்டுல மனவேகம் மட்டும் எப்படிக் குடியிருக்கானு நெனச்சுக்கிட்டே மனவேகத்தோட குடிசை முன்னாடிப் போய் ‘டேய் மனவேகா’ வெளியே வாடானு கூப்பிட்டுருக்காரு. ஒரு பதிலும் வரல. மறுபடியும் ‘டேய் மனவேகா’ன்னு சத்தம் போட்டுக் கூப்பிட்டுருக்காரு. தூக்கக் கலக்கத்துலயே மனவேகம் ‘யாரு இந்த நேரத்துல வந்துருக்கறதுன்னு’ கேட்டிருக்கான். ‘நாந்தான் தாதன் வந்திருக்கேன்டா’னு சொல்லியிருக்காரு. ‘ஓ தாதனா, என்னது இந்தச் சாமத்துல வந்துருக்கப்பா, என்ன வெசயமுன்னு சொல்லு எனக்குத் தூக்கம் தூக்கமா வருது’ன்னு சொல்லிக்கிட்டே குடுச மொகட்டுல சொருகி வச்சிருந்த சூரிக்கத்திய எடுத்து முதுகுக்குப் பின்புறமா மறச்சு வச்சிருக்கான். சண்டியரு இந்த மாதிரிய ஏடா பூடமா களவாணித்தனம் பண்ணுவானு தெரிஞ்சுக்குட்டுத்தான் முப்பாட்டே தாதன் வீட்டுலருந்து கௌம்பும்போதே ஒடைவாள வேட்டிக்குள் சொருகிக்கொண்டு வந்திருக்காரு.

‘ஏம்பா மனவேகா, ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு கடேசியா அந்த முனிவரையும் கடிச்சு முழிங்கிட்ட. ரெண்டு கண்ணால பாத்த என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய துணிஞ்சுட்ட. இப்ப ஊருக்குள்ள கொள்ளக்காரன் வடக்கிலருந்து வாரானு பீதியக் கௌப்பி விட்டுட்டு வந்து நிம்மதியா தூங்குற, இதுக்குப் பின்னாடி இருக்குற களவாணித்தனத்த என்னான்னு சொல்லிப்புடுடா’ இப்புடி மூச்சுவிடாம பாட்டன் பேசியிருக்கான். பதிலுக்கு மனவேகம் ‘தாத்தா நீ என்ன சொல்ல வாரேனே எனக்கு மட்டுப்படலப்பா, ஊருக்குள்ள வந்து நான் என்ன பீதியக் கௌப்பிவிட்டேன். கோவத்துல முனிவர கல்லால அடிச்சேன். அத நீ மட்டுந்தான் பாத்த, வடக்கேருந்து கொள்ளக்கார வாரது எனக்கு எதுவுமே தெரியாது. நானே அந்த முனிவரக் கொன்டதுக்கு மனசொடஞ்சு பித்துப் பிடிச்சு அலையிற மாதிரியா திரியுறேன். மின்னமாதிரியா எந்தக் களவுக்கும் இப்ப போக முடியல. என்ன காரியம் பண்ணாலும் அந்த முனிவரு என்னயத் தொரத்திக்கிட்டே வாராரு. வள்ளுவனுக்கிட்ட குறி பாக்கப் போனப்ப களவுத் தொழில நிறுத்திப்புட்டு மலைகள்ள இருக்குற முனிவருக்கெல்லாம் அடிமைத்தொழில் செஞ்சா நிம்மதியாவும், இன்னும் கொஞ்ச காலத்துக்கு வாழுவேன்னு சொல்லுறான். இல்லேனா முனிவர அடிச்ச கல்லாலேய நானே அடிச்சுகிட்டுப் பைத்தியமாவே ஊருஊரா அலஞ்சு சாவேனு சொல்றான். நீ என்ன தாத்தா இப்புடி வந்து சொல்ற. அதுல என்னான்ன, இந்தக் குடிசையைக் கொழுத்திவிட்டு நானே தெற்காலப் போகப்போறேனும் சொல்லியிருக்கான். முப்பாட்டனுக்கு ஒன்னுமே புரியல. இது கனவா இல்ல நினைவானு குழப்பமா இருந்திருக்கு. இப்படி மனவேகமா பேசுறானு ஆச்சரியமாவும் நம்பமுடியாமலும் நின்னுருக்காரு. பெறகு இனி சொல்றதுக்கு ஒன்னுமில்லேன்னு, ‘சரிடா மனவேகா இனிமே நல்ல புத்தி கொண்டு பொழ’ன்னு சொல்லிபுட்டு அர்த்தராத்திரியிலே வீடு திரும்பிட்டாரம்.

மறுநாள் காலையிலேயும் ஊருக்குள்ள அதே பேச்சும் கலவரப் பீதியும் அடைஞ்ச மக்கள் எல்லோரும் காடுகரைக்கு வேலைக்குப் போகமால் புலம்பிக்கொண்டிருந்தாங்களாம். பக்கத்து ஊருல இருந்து ஒருத்தேன் வந்து ‘இன்னைக்கு ராத்திரி கூட உங்க ஊரக் கொள்ளயடிக்க அந்தக் குதிரப்படை வந்தாலும் வரலாமுன்னு புளியகரைச்சுவிட்டுப் போய்ட்டான். சும்மாவே பயந்து கெடந்த சனங்களுக்கு மெய்யாலுமே வயித்தால போகத் தொடங்கியிருச்சாம்.

அடுத்த என்ன சொல்லப்போறாரு பரதேசி காத்தான் தாத்தானு இருட்டுல அவருடைய வாயைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அதுக்கிடையில், நிலா வெளிச்சத்தில் ஆற்று மணல் வெள்ளையாகத் தெரிகிறது. சில்வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கின. தவளைகள் சத்தமிடத் தொடங்கின. சாரைப்பாம்பு ஒன்று மணலில் தடம் பதித்து அக்கரைக்குச் சென்றுகொண்டிருந்தது. மின்மினிப் பூச்சிகள் ஆற்றுவெளியெங்கும் மோகினிப் பிசாசுகள் மாதிரி அலைகின்றன. அடைபட்டுக் கிடந்து விடுதலைப் பெற்றது போல அந்த இருட்டிலும் சலசலனு தேசிய கீதம் பாடி ஆற்று நீர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருசிலரைத் தவிர பலருக்கும் ஆற்றின் இரவுச் சூழல் ஏதோ ஒரு பயத்தைத் தொற்றியபடிதான் இருந்துகொண்டிருந்தது. ஆற்று மணலில் பேசிக்கொண்டே சிலர் தூங்கிவிடுவதும் உண்டு. தூங்கிமுடித்துக் காலையில் எழுந்து ஊருக்குள் வருவார்கள். காத்தான் தாத்தாவிற்கு இந்தச் சூழல் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், சுற்றி வட்டமாகப் போடப்பட்ட கோடு மட்டும் எங்க எல்லோருக்கும் மன தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டை தாத்தா சாப்பிட்டு முடித்தார். கதையைக் கேட்க நாங்கள் ஆர்வம் ஆனோம்.

பரதேசி காத்தான் தாத்தா வாயைத் துண்டால் துடைத்துக்கொண்டு மறுபடியும் முடித்த இடத்திலிருந்து கதையைத் தொடங்கினார். இவருக்கு எப்படி இவ்வளவு ஞாபகமிருக்கு. கதையை விட்ட இடத்திலிருந்து அச்சுப் பிசகாமல் தொடங்குகின்றார் என்ற ஆச்சரியம் அங்கிருந்த எல்லோருக்கும் தோன்றியிருக்கத்தான் வேண்டும். கதையைத் தொடங்குறதுக்கு முன்பாகத் தொண்டைச் செருமிக்கொண்டு எச்சிலைத் துப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

‘இப்புடி மக்கள் எல்லாம் திக்குத் தெசைதெரியாம கொழம்பி நின்னபோது, முப்பாட்டான் தாதன் ‘அட ஏன்டா இப்புடி பதறிக்கெடக்குறீக, மெய்யாலுமே வடக்குலருந்து அந்தக் கொள்ளக்காரனுக வந்தாலும், நாமெல்லாம் உசுருகளக் காப்பாத்தி என்னத்தக் கட்டி ஆளப்போறோம். நம்மகிட்ட இருக்குற ஆயுதங்களைத் தீட்டி வையுங்கடா, வர்றவன் எவனா இருந்தாலும் வெட்டிச் சாச்சுட்டுப் போய்ட்டே இருப்போமுன்னு சொல்லியிருக்காரு.’ இதக்கேட்ட எளவட்டங்க ‘ஆமாம், தாதன் ஐயா சொல்றதுதான் செரின்னு’ சொல்லிக் கூச்சலிட்டு இருக்குதுக. அதுல பயந்தவங்க ‘அதெல்லாம் வெட்டி சாய்க்கலாம், கெழடு கட்டைக, நிறைமாத சூலிக, பெண்டு புள்ளைக எங்கபோய் பாதுகாக்கிறது. அதுகதான் வாளெடுத்துச் சண்டபோடுங்களா? இப்புடி ஒருத்தன் சொன்னபோது, அடங்கிப்போச்சாம் ஆராவாரமெல்லாம். செரி இதுக்கு என்னதான் பண்றதுன்னு ஒவ்வொருத்தரும் யோசிச்சு நிக்குறப்பத்தான், முப்பாட்டான் தாதன், ‘வடக்குலருந்து வர்ரவேன் இருட்டுலயோ வெளிச்சத்திலயோ வந்தாலும், நாமெல்லாம் ஊருக்குள்ள இருக்குறது அவ்வளவு நல்லதா இருக்காதுப்பா, கெழடு கட்டைக, பெண்டு புள்ளைக மலையடிவார பொடவுகள்ளல தங்கவச்சிடலாம். ஆடு, மாடுகளையும் மலையடிவாரத்துக்கு ஓட்டிட்டுப் போய் பறம்புக்கண்மாய்க்குள்ள எறக்கிவிட்டுட்டா அதுகபாட்டுக மேஞ்சு வருங்க. எளவட்டங்க பெரும்பாறைகள்ள ஏறி நின்னு வடக்கு நோக்கிப் பாத்துட்டே இருக்கணும், நம்மள இதுவரைக்கும் காத்து நிக்குற அந்த மலையான் கோயில் பாறைக்குப் பின்னால நின்னுகிட்டா அவனுக ஊருக்குள்ள நுழையும்போது எளவட்டங்கள் எல்லாரும் ஒண்ணு சேந்து தாக்கலாம். வீட்டுல இருக்குற பொன்னு பொருள மூட்ட முடிச்சாக்கட்டிக்கிட்டு, பசியாத்த அன்னத்துகள எடுத்துக் கட்டிக்கிட்டுக் கௌம்புங்கன்னு’ சொல்லிருக்காரு.

முப்பாட்டன் தாதன் சொல்றத எல்லாரும் நின்னு கேட்டுக்கிட்டே இருக்குறப்ப நிறைமாத சூலி எதி மட்டும் மறுப்புத் தெரிவிச்சிருக்கா. எதின்னு சொன்னாலும் போதும் அவ்வளவு அழகு, நல்ல உயரம் கருப்பா இருந்தாலும் கலைய இருப்பாளாம். சின்னவயசுலருந்தே அப்பனில்லாம பயமறியாது வளர்ந்த புள்ளயாம். ஆம்பளைகளே அவளக் கண்டு பயப்படனுமாக்கும் அப்பிடிப்பட்ட எதி கொழந்தய பெத்து எடுத்துட்டுப்போகப் பொறந்த வீட்டுக்கு வந்திருக்கா. முப்பாட்டான் தாதன் ‘ஏம்மா எதி சொல்றத கேளும்மா, பைய பைய நடந்து வந்தாலும், நம்ம மலைக்கோயிலுக்க வந்துடலமுன்னு’ சொன்னாராம். அதுக்கு எதி ‘என்னப்பெத்த அப்பன்மார்களே, ஒடம்பெறந்த பொறப்புகளே வடக்கனுக்குப் பயந்து மலயேறி இந்த உசுரக் காப்பாத்திக் கொண்டுக்கிட்டுப் போய் வாழனுமா? நீங்க போய் ஒங்க உசுருகள காப்பாத்திக்கிற மலயேறுங்க. நான் பொறந்த வீட்டுலயே இருந்துக்குறேனு’ பிடிவாதம் பிடிச்சுருக்கா. அங்கிருந்தவங்க ஒன்னும் புரியாம நின்னுருக்காங்க ‘என்ன இது இந்த எதிப் புள்ள இப்புடிப் பேசிட்டு இருக்குதுனு’ ஒருத்தரு பேசிட்டு இருக்குறப்ப. எதியைப் பெத்த தாய் ஆதம்மா கோபம் கொண்டு ‘என்ன எதி ஒனக்கென்ன பெத்தவகூட வர்ரதுக்கு என்னவாண்டின்னு’ திட்டியிருக்கா. யாரு சொல்றதையும் கேட்காம வீட்டுல போய் படுத்துக்கிட்டாளாம் எதி. காக்கணத்தோட தாய் ஆதம்ம கோவிச்சுகிட்டு மலைக்கிக் கௌம்பிட்டாலும். ஊருல எதி மட்டும் இருக்குறாள். பொழுது சாயும்போது மக்கள் கூட்டம் மலையான் கோயிலுக்குப் படையெடுத்துப் போய்ட்டு இருக்குதுக, ஆடு மாடு அத்தனையும் அவகபின்னாடி போகுதுக.

அன்னைக்கு ராப்பொழுது கழிஞ்சு கிழக்கால வெயிலு வந்தப்ப மக்களுக்கு உள்ளுர தகிரியம் வந்துருச்சு. என்னா இந்தப் பாறைகள்ளேயும், செடிகொடிகளுக்குள்ளேயும் படுத்து எந்திரிச்சதுதான் அலுப்பா வந்துபோயிருக்குது. பெரும்பாறையில காவக்காத்த எளவட்டங்கள் குண்டியில வெயிலடிச்சும் எந்திரிக்காம பாறச்சூட்டுல படுத்தொறங்கியிருக்குதுக. மனுச மக்க காடுகர பக்கம் ஒதுங்குர நேரமா, ஊருக்குள்ளேருந்து குருதைக கனைக்கிறதும், புரியாத மொழியில் சத்தம் போடுறதுமா பெருஞ்சத்தம் கேக்குதாம். பாறையில படுத்துக்கெடந்தவங்களும், காடுகரப் பக்கமா போனவங்களும் பேச்சு மூச்சு நின்னு செலையா சமஞ்சது மாதிரி நிக்குதுகலாம். ஆனா, எல்லா மனசுக்குள்ளேயும் தனியா விட்டுட்டு வந்த நிறைமாத சூலி எதிய பத்திய கவலதான் அப்பிக்கிட்டது. ஆயுதங்கள எடுத்துக்கிட்டு எளவட்டங்க பாறையிலருந்து குதிச்சு ஊர நோக்கி ஓடியிருக்காங்க. மலையான் கோயில் பாறையில மக்க எல்லாரும் கதறி அழுகுறாங்களாம். வெவரம் தெரியாத புள்ளைகளும் என்னானு தெரியாமலே வீறிட்டுச் சேர்ந்து அழுகுதுக. பரம்புக் கண்மாயில அசை போட்டுப் படுத்துக் கெடந்த மாடுகளும், காதுகள வெடச்சுப் பாறையைப் பாத்து நிக்குதுக. கொஞ்ச நாழிகப்பொழுதுக்குள்ள குருதகை சத்தம், படைக சத்தம் கொறஞ்சு, குருதபடைக வடக்கு நோக்கிப் போறத பாறையில நின்னுகிட்டு முப்பாட்டான் தாதன் பாத்திருக்கிறாரு.

ஊருக்குள்ள போய் பாத்த எளவட்டங்களுக்கு ஈரக்குலையே நடுங்கிப் போச்சாம்பா. ரெத்த சகதியில எதி எறந்து கெடக்குறா, அவளோட காது அறுபட்டு ரத்தம் வடிஞ்சு வடுவா ஓடிக்கெடக்குது. மார்ல வெட்டுன வாளு சொருகி நிக்குது. ஆண்கொழந்த ஒன்னு பேச்சுமூச்சில்லாம கெடக்குது. ரத்தவெள்ளம் தெருவுல ஓடிக்கிடக்கு. அவளச் சுத்தி மொளகாப் பொடி செதறிக் கெடக்குது. ஊருல ஒரு வீடு சேதப்படல, சேதப்பட்டுச் செத்துக்கெடக்குறவ எதியும் அவபுள்ளையும்தான்.

ஆனாப்பா, போட்ட பொருளுக கெடந்த எடத்துலயே கெடக்குதுக. குருதைக போட்ட சாணிகளோட ஈரம் கூடகாயலப்பா. எளவட்டங்க பாறையைப் பாத்து மக்களக் கூப்பிடுறாங்க. ஈரமனப்பட்ட பயலுக அழுது புலம்புறாய்ங்க. பாறயிலருந்து ஓடிவந்த மக்கள் கூட்டம், எதியின் நெலகண்டு கதறி அழுகுறாங்க. எதியோட தாய் ஆதம்மா தெருவுல கெடக்கும் ரெத்தச் சகதியில புரளுகிறளாம்மா.

ஊருக்குக் கெழக்கா எதியையும், அவ பெத்துப் போட்ட ஆம்பளப்புள்ளையும் ஒன்னா சேத்து வச்சு புதச்சுட்டாங்க. ஊருக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா அவங்கவுங்க பொழப்புகளப் பாத்துட்டு இருக்குறப்ப, அறுவட செஞ்சு சாமி கும்பிடுறப்ப ஒரு பொம்பளப் புள்ள மேல சாமி வந்துருக்கு. அங்க நின்ன பெரியவங்க ‘ஏம்மா யாரு சாமி நீ, இந்தப் புச்சபுள்ள மேல எறங்கி வந்திருக்கே நீ யாரு சாமின்னு கேட்டுருக்காங்க.’ அதுக்கு அந்தப் பொம்பளப் புள்ள கண்களை மூடி பெருஅழுகை அழுதுருக்கு. ‘அழுகாம சொல்லுத்தாயீ நீ யாருன்னு சொல்லு, எங்க மேல கொற இருந்தாலும், செய்யுறபடி மொறசெய்யுறோம்.’ வீறிட்டு, ‘என்னப்பெத்த மக்களே நான் எதியம்மா வந்திருக்கேன்’ அங்கே நிக்குற அத்தன சனங்களும் கொஞ்ச நேரத்துல புல்லரிச்சுப் போய் நின்னாங்களாம்யா. கூடவே கண்ணக்கசக்கி அழுதுருக்காங்க. ‘ஆத்தா, எதி ஒன்ன நெனைக்காத நாளில்ல தாயீ, எங்க கொலம் காத்த சாமீ’. நீ வந்தது எங்களுக்கு மனநிம்மதி. ஒனக்கு என்ன வேணும் அத்தனையும் ஒன் காலடியில கொண்டுவந்து கட்டுறோமுனு. ஒருத்தி சொல்லும்போதே, ‘ஆத்தா எதி உசுரு பயங்கொண்டு ஒன்ன விட்டுப் பாறயில நாங்க கெடந்தப்ப, நீ தனியா உசுரு பிரிஞ்சு கெடந்தே, என்ன காரியம் நடந்ததுன்னு இதுவரைக்கும் எங்களுக்குத் தெரியல, மகராசி நீதான் சொல்லணும்.’ தலையை ஆட்டிக் கொண்டே அந்தப் பொம்பளப் புள்ள, ‘நானும் எம் புள்ளயும், ஒங்களக் காத்து நிக்கத்தான் உசுரக் கொடுத்தோம், தொப்பி போட்டவன் குதிரையில ஊருக்குள்ள வரும்போது, மொளகாத் தூளைத் தூவி வெரட்டினோம். பின்னாடி வந்தவன் ஒருத்தன் ஒசரமா இருந்தான். பெரிய உடைவாளை உறுவி என் கழுத்துல பதிச்சு, புரியாத பாஷை பேசி, என்மாரப்பு சீலையை எடுத்து, முக்காடு போட வச்சான். கையிரண்டையும் ஒன்னு சேத்து மேக்கால மண்டியிட்டுச் சாமிகும்பிடுற மாதிரியா செஞ்சு காமிக்கும்போது, மடியில வச்சிருந்த மொளகாய்த்தூள அவனோட கண்ணுல அடிச்சேன், கோபங்கொண்டு என்னோட வலது காதை அறுத்து எறிஞ்சு வீசிட்டாம்மா, இதப்பாத்திட்டு இருந்த இன்னொருத்தான் என் மார்ல வாளப்பாச்சினான். வந்தது மாதிரியா அவிங்க போயிட்டாங்கே. என் வயித்துல தண்ணிக் கொடம் ஒடஞ்சு என் வாரிசு வெளியே வந்து அழுது அழுது செத்தம்மா’ என்று சொல்லிப் பேரழுகை அழுதது. இதக் கேட்ட சனங்க அத்தனை பேரும் ஒப்பாரி வைத்து அழுதாங்களாம். சாமி வந்த பொம்பளப்புள்ள மயங்கிப் போய், தள்ளாடிக் கொண்டே, ‘ஒங்க கொலத்த காத்து நிக்குறேன், என்னய தலமொற தலமொறைக்கும் நெனச்சுப்பாருங்க. ஒங்க கொலத்துல பொறக்குற பொம்பள புள்ளைகளுக்கு எம்பேர சூட்டுங்க, பொறக்குற அத்தன பெண்புள்ளைக வலக்காது மூளியாத்தான் இருக்கும்.’ இப்புடி அருள்வந்து சொல்லியபடி அந்தப் பொம்பளப்புள்ள மயங்கி விழுந்துட்டா. அந்த வருஷமே கொழந்தையை இடுப்புல வச்சமாதிரியா செலை வடிச்சு எதியை சாமியா கும்பிட்டிருக்கிறாங்க. எதி சாமியா வந்து சொன்னமாதிரியே, நம்ம கொலத்துல பொறக்குற பெண்புள்ளைக வலக்காது ஒச்சமவே இருந்துச்சாம்.

காத்தான் தாத்தா எங்களைப் பார்த்துக் கேட்டார். செம்பச்சேரியில இப்ப பொறக்குற பொம்பளப் புள்ளகளோட வலக்காதப் பாத்திருக்கீகளா பேராண்டிகளா? மூளியாவே இருக்கும் என்று கதையைச் சொல்லி முடித்த தாத்தா ஆற்றுக்குள்ளே தூங்கிவிட்டார். நாங்களும் அவருடன் சேர்ந்து தூங்கிவிட்டோம். அதிகாலைப் பொழுதில் எழுந்து பார்க்கும்போது தாத்தா அங்கு இல்லை. எங்களுக்கு வருத்தமாக இருந்தது. இனி பரதேசி காத்தான் தாத்தா எத்தன வருசம் கழிச்சு வருவாருன்னு தெரியலயே. ஊருக்குள் நுழைந்து எங்கள் வம்ச பெண் குழந்தைகளோட காதைப் பாத்தால் எல்லா புள்ளைகளோட வலது காதும் மூளிக்காதாக ஒச்சத்தோடு இருக்குது. அந்தப் புள்ளைக அத்தனையும் எங்க முப்பாட்டி எதியாகவே எங்க கண்களுக்குத் தெரிஞ்சாங்க.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!