அவன் கண் முன்னால்தான்
அவர்களைத் துன்புறுத்தி
தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய்
திசைகள்தோறும் கிளைகள்
முளைத்துக்கொண்டேயிருக்கிறது
நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில்
பலசாதிப் பறவைகளின் கூரலகால்
கொத்துப்பட்ட ஆந்தையொன்று
பதற்றத்தோடு மறைந்திருக்கிறது மரயிடுக்கில் தினமும்
ஒவ்வொரு முறையும் ஒரு சுருக்கு இறுகும்போது
தொங்கிக்கொண்டிருக்கும் தொண்டைக்குள்
நசுங்கியிருக்கும் கடைசி சொற்கள் என்னென்ன
மனதில் வந்து மறைந்த மனித முகங்கள் யார்யாருடையவை
கையறுநிலையில் வெடித்த
கடைசிக் கண்ணீர்ச் சொட்டின் துயரம் எவ்வளவு
உடைந்து ஒப்பாரி வைக்கிறான்
ஆந்தையும் சோக கீதமொன்றை முணுமுணுக்கிறது
நீலம் பூத்த முகத்தில்
பிதுங்கிய கண்கள் ஊரையும்
ஆந்தையின் கண்கள் பகலையும்
வெறித்தபடியே நிற்கிறது
துயர்மிகு ஒப்பாரியை விழுங்கிக்கொண்டு
பின்னத் தொடங்கிவிட்டான்
தூக்குக் கயிறுகளைத் திரட்டி ஒரு சாட்டையை
இருளத் தொடங்கியதும்
ஆந்தை பறக்கத்தொடங்கியது
விடியாமலே இருக்கட்டும் பொழுது