சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த சாதிய வன்முறை குறித்து 14.05.2024 அன்று நீதிக்கான மக்கள் இயக்கம் மற்றும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்ட கள ஆய்வின் விரிவான அறிக்கை.
தீவட்டிப்பட்டி கிராமம் ஒரு பேரூராட்சியாகும். இக்கிராமத்தில் பறையர் சமூக மக்கள் 200 குடும்பங்களும் வன்னியர், சோழிய வேளாளர், நாயக்கர், போயர், உடையார் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் 1000 குடும்பங்களும் வசிக்கின்றனர். இதில் பெரும்பான்மையானோர் (சுமார் 80 சதவீதம்) வன்னியர்கள்தாம். இரண்டு குடியிருப்புகளுக்கும் இடையே சுமார் 300 மீட்டர் இடைவெளி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆதிதிராவிடர் குடியிருப்பை நாச்சான்பட்டி சேரி என அழைக்கின்றனர்.
ஆதிதிராவிட சமூகத்தவர்களுக்கு நிலம் இல்லை. 1972இல் தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில்தான் வசித்துவருகின்றனர். 1980இல் சிலருக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு இருந்தும் மூன்று தலைமுறைகளாக ஒரே வீட்டில் 3 அல்லது 4 குடும்பங்களாக வசித்துவருகின்றனர். பேரூராட்சியாக இருப்பதால் 100 நாள் வேலை திட்டம் இங்கு செயல்படவில்லை. மிகச் சிலர் ஊராட்சி எல்லையில் 100 நாள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் கூலி விவசாயிகள்தாம். சிலர் தினக் கூலிகளாகப் பணி செய்துவருகின்றனர்.
வன்னியர்கள் பெரும்பான்மையானோருக்குக் குறுகிய நிலங்களும், சிலருக்கு 5 ஏக்கருக்கு மேல் நிலங்களும் உள்ளன. இன்னும் சிலர் வணிகம், காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட் போன்ற தொழில் நிறுவனங்களை நடத்திவருகின்றனர். பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்களாகவே உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் பகைமை இருப்பதாகத் தெரியவில்லை.
கல்வியில் இப்பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. இருதரப்பிலும் உயர்கல்வி கற்றவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று கிராமத்தின் மத்தியில் செயல்படுகிறது. இங்கு தீண்டாமை இருப்பதாகத் தெரியவில்லை. தலித் குடியிருப்பில் அரசு ஊழியராகக் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும், ஒரு காவலரும்தான் இருக்கின்றனர். வன்னியர் குடியிருப்பில் அரசுப் பணிபுரிவர்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். முழு விவரங்களைத் திரட்ட முடியவில்லை. பெரும்பான்மை வன்னியர்கள் ஆய்வுக் குழுவோடு பேசுவதைத் தவிர்த்தனர். ஒருசிலர் மட்டுமே பேசினர். இப்பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழங்குவதாகச் சொல்கின்றனர். தலித் குடியிருப்பில் பத்தாவது வரை படித்தவர்கள்தாம் உள்ளனர். அதிலும் அதிகமானோர் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இரண்டு குடியிருப்பு மக்களும் கிராமமாகக் கூடியதே இல்லை. நீண்டகாலமாக ஊரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவிற்குக் கூட ஒன்றாய் கூடி முடிவெடுப்பதில்லை. திருவிழாவிற்கான நிதியையும் வன்னியர் குடியிருப்பில் வசூல் செய்கின்றனரே தவிர தலித் மக்களிடம் செய்வதில்லை. இதுபற்றி தலித் மக்களும் இதுவரை கேள்வி எழுப்பவே இல்லை. தலித், தலித் அல்லாதோர் ஆகியோருக்குத் தனித் தனியே சுடுகாடுகள் உள்ளன. இவ்விரண்டு சுடுகாடுகளிலும் பிணம் எரிக்க, புதைக்க, குழி தோண்ட, இழவு செய்தி சொல்ல நாச்சான்பட்டி ஆதிதிராவிடர் மக்களே பயன்படுத்தப்படுகின்றனர். கோயிலிலும் கூட இவர்களைச் சேவை சாதிகளாக வைத்துக்கொள்ளவே உயர்த்தப்பட்ட சாதி மக்கள் விரும்புகின்றனர்.
தலித் மக்களுக்கென ஒரு கோயிலும், வன்னியர்களுக்கெனத் தனிக் கோயிலும் உள்ளன. இவ்விரு சமூகங்களும் சேர்ந்து வழிபடும் கோயில்தான் பெரிய மாரியம்மன் கோயில். இக்கோயிலின் மூல தெய்வம் தலித் குடியிருப்பில்தான் உள்ளது; கருவறை உள்ளடக்கிய தெய்வம் நிலைகொண்டிருப்பது வன்னியர் குடியிருப்பில். தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுதல் நீண்டகால மரபாக இருக்கிறது எனத் தலித் மக்களும் வன்னியர்களில் சில பெரியவர்களும் தெரிவித்துள்ளனர். கோயில் நிர்வாகத்தைத் தனியார் அறங்காவலர்கள்தான் நீண்டகாலமாக நடத்திவருகின்றனர்.
இப்பகுதியில் 1970 வாக்கில் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அமைப்புக் கட்டுவதில் தீவிரமாக இருந்தனர். அந்தச் சமயத்தில் வர்க்கப் பின்னணியில் உழைக்கும் மக்களாகச் சாதி கடந்து அமைப்பில் அணிதிரட்டப்பட்டனர். பெரும்பான்மையாக தலித் மக்கள் இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தலித் அல்லாத மக்கள் சாதி கடந்து வர்க்கப் பார்வையில் ஒன்றுதிரண்டனர். இதனால் சாதி மறுப்புத் திருமணங்களும் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதும் தலித் பெண்கள் வன்னிய இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களை உழைக்கும் மக்களாக ஒன்றிணைப்பதில் இன்னும் நாம் நீண்டதூரம் பயணப்பட வேண்டியுள்ளது. இக்காலகட்டத்தில்தான் இடதுசாரிக் கருத்தியலோடு ஒத்துப்போகுமளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சியை அடியோடு ஒழிக்கத் தமிழக அரசு முடிவெடுத்து முக்கியத் தலைவர்களை என்கவுண்டர் செய்தது. அதனால் இயக்கம் பலவீனமானது. பின் பாட்டாளி மக்கள் கட்சி தன்னைச் சாதிய ரீதியான அமைப்பாகத் தகவமைத்துக்கொண்டது. அதனால் தலித் மக்களின் சமூகப் பாதுகாப்புக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உருவானது. இப்பகுதி உழைக்கும் மக்களிடையே சாதிப் பகைமை குடிகொள்ளாமல் இருக்க அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மக்களை ஒன்றிணைக்கும் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
கோயில் திருவிழா
தீவட்டிபட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 27 தொடங்கி மே 5 வரை நடப்பதாகத் திட்டமிடப்பட்டது. முதலில் கொடிக்கம்பம் ஏற்றுதல், கங்கணம் கட்டுவது, தீர்த்த குடம், கூழ் ஊற்றுதல், பின்னர் அலகு குத்துதல், தேர்த்திருவிழா, வாணவேடிக்கை, மஞ்சள் நீராட்டம், பாட்டுக் கச்சேரி என நடப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்டது. கோயிலின் மரபுப்படி தலித் மக்கள்தான் முதலில் கங்கணம் கட்ட வேண்டும். அது இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நடந்த திருவிழாவில் தலித் மக்கள் கோயிலைச் சுற்றி வலம்வரும்போது வன்னிய இளைஞர்கள் சிலர் தம் சாதியப் பெருமை பேசும் பாடல்களைப் போட்டு ஆடிப் பாடினர். இதனைத் தலித் மக்கள் தட்டிக் கேட்டு “இப்பாடலை ஒலிபரப்பாதீர்கள். அப்படிச் செய்வதானால் நாங்கள் சொல்லும் பாடல்களையும் ஒலிபரப்புங்கள்” எனக் கேட்டுக்கொண்டனர். அச்சமயம் வன்னியர்களில் சிறிய குழுவினர் “இக்கோயில் வன்னியர்களுடையது. தலித் மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்” எனச் சொல்லியிருக்கின்றனர். அதனால் சிறிய கலவரம் நடந்து, பின்னர் காவல்துறை தலையீட்டால் அமைதியானது. அப்போதே அரசு அதிகாரிகள் எச்சரிக்கையோடு நடந்துகொண்டிருந்தால் இந்த ஆண்டு சாதிக் கலவரம் ஏற்பட்டிருக்காது.
திருவிழாவில் சக்தி அழைப்பது என்ற நிகழ்வாக, தலித் மக்கள் குடியிருப்பில் உள்ள கோயிலிலிருந்து பூவை எடுத்துச் சென்று தீவட்டிபட்டி மாரியம்மன் கோயிலில் வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதன்படி மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது. மே முதல் நாள் ஐந்து தலித் பெண்கள் அலகு குத்திக்கொள்ள பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சென்றனர். அலகு குத்தும் நிகழ்வு மாலை ஆறு மணி முதல் இரவு ஏழரை மணி வரை நடக்கும். கோயில் நிர்வாகத்தால் தலித் மக்களுக்கு அலகு குத்த ஒருவர் நியமிக்கப்படுவார். அதற்கு முன் பூசாரி வந்து பூசை செய்வார். இந்த ஆண்டு தலித் பெண்களுக்கு அலகு குத்த பழைய ஆள் வரவில்லை. பின்னர் தாங்களாகவே ஒருவரை நியமித்து அலகு குத்திக்கொண்டனர். பின் கோயிலை வலம்வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அப்போது பூசாரி ஆரத்தி காண்பித்து விபூதி தருவார். இந்த ஆண்டு இது எதுவும் நடக்கவில்லை. தலித் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததோடு கருவறைக்கு முன்பிருந்த திரைச் சீலையை இழுத்துவிட்டுச் சாமியை மறைத்துவிட்டனர். வன்னியப் பெண்கள் சுமார் ஐம்பது பேர் கோயில் வாயிலை அடைத்துக்கொண்டு தலித் பெண்கள் கோயிலுக்குள் செல்லத் தடை செய்தனர். இந்த ஏற்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி வெங்கடேசன் செய்திருந்தார் எனத் தலித் மக்கள் குற்றம்சாட்டினர். தலித் இளைஞர் சூர்யா என்பவர் கோயிலுக்குள் நுழையும்போது பூசாரி அவரையும் வெளியே தள்ளிவிட்டார். இதனைக் கேள்விப்பட்டு அவ்விளைஞரின் உறவினர்கள், சுமார் 200 பேர் கோயில் வளாகத்தின் முன்பு கூடினர். அதனால் வட்டாட்சியரும் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரவு 12.00 மணி வரை கூட்டம் கலையவில்லை. கோயில் பொதுவானது. தலித் மக்களை வெளியேற்றிய பூசாரி, வன்னிய இளைஞர்கள், பெண்கள், அறங்காவலர்கள் ஆகியோர் மீது உடனடியாக எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதற்கு மாறாகக் குற்றவாளிகளிடம் சமாதானம் பேசுவதிலேயே கவனம் செலுத்தினர். குற்றவாளிகளைத் தண்டிக்காமல் காலந்தாழ்த்துவது அநீதிக்குத் துணை போவதாக அமையும். இதற்கிடையே காவல் ஆய்வாளர், அதிமுகவைச் சார்ந்த விஜயனை (தலித்) அழைத்து தலித் மக்களைச் சமாதானப்படுத்தினார். கடைசியில் ஒருவழியாக ‘அடுத்தநாள் (02.05.2024) இது சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை பத்து மணிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் இரு பிரிவினரின் பிரதிநிதிகள் பத்துப் பேர் கலந்துகொள்ளலாம்’ என வட்டாட்சியர் தெரிவித்தார்.
அதன்படி அமைதிப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் தலைமையில் நடந்தது. பத்துப் பிரதிநிதிகள் வீதம் இருதரப்பினரும் பங்கேற்றனர். தீவட்டிபட்டி காவல் ஆய்வாளர், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் “பெரிய மாரியம்மன் கோயில் அனைவருக்கும் பொதுவானது. அது 1972 முதல் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது” எனச் சொன்னதற்கு வன்னியர் பிரதிநிதிகள் “இது எங்களுக்குத் தெரியாது. இதுகாறும் எங்கள் அறங்காவலர்கள்தான் கோயிலை நிர்வாகம் செய்துவருகின்றனர். நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது”என்றனர். இந்து அறநிலையத்துறை ஆய்வாளரும் “கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆகவே, எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது” என எடுத்துரைத்தார். தலித் பிரதிநிதிகள் “காலங்காலமாக எங்கள் முன்னோர்கள் அந்தக் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டுதான் எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். நாங்கள் கோயிலில் சமமாக வழிபடுவதை அரசு உத்தரவாதம் செய்ய வெண்டும்” எனவும் கேட்டுக் கொண்டனர். உடனே வன்னியர் பிரதிநிதிகள் “ஒருநாள் அவகாசம் தாருங்கள். இங்கு வராத பெரியவர்களோடு கலந்தாலோசித்து நாளை எங்கள் கருத்தைச் சொல்கிறோம்” என்றனர். அதற்கு வட்டாட்சியர் அனுமதி தந்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
03.05.2024 அன்று மதியம் சுமார் 2.00 மணிக்கு பெருமாயி என்பவர் தன் மகன் அருண்குமாரை மதியச் சாப்பாட்டிற்கு கடையில் சாப்பாடு வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். அவர் கடைக்குச் சென்றபோது வன்னிய இளைஞர்கள் அவரை மறித்து, கல்வீசித் தாக்கினர். அதில் அருண்குமாருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்து ஊர்க்காரர்கள் அனைவரும் திரண்டு சேலம் – தருமபுரி நெடுஞ்சாலையில் மறியல் செய்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டு வன்னியர்கள் தலித் மக்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். அச்சமயத்தில் காவலர்கள் 15 பேர் மட்டுமே இருந்தனர். இருதரப்பாரும் கல் வீச்சு நடத்தினர். விளைவாக, விஜயா என்பவரின் பழக்கடை எரிந்து சாம்பலானது. விஜயா, ஆட்டையாம்பட்டி பா.ம.க மேற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடேசனின் தங்கை ஆவார். அக்கடையின் மேல் இருந்த முடி திருத்தும் கடையும் தீக்கிரையானது. இக்கடையை நாச்சனாம்பட்டி தலித் இளைஞர் ஒருவர் கடனை வாங்கி நடத்திவந்துள்ளார். இச்சமயம் மாவட்டத்தின் பிற பகுதியிலிருந்து வந்த சுமார் 200 காவலர்கள் நீதி கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது தடியடி நடத்தினர். இரு பிரிவினர் மீதும் போலீஸ் தடியடி நடத்தினாலும், தலித் மக்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். காயம்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தலித் குடியிருப்பில் பலரையும் ஆய்வுக் குழு விசாரணை செய்தது. அவர்கள் கூற்றுப்படி, பெரிய மாரியம்மன் கோயிலில் தலித்துகள் தொடர்ந்து வழிபட்டுவந்திருப்பது உறுதியாகத் தெரிகிறது. கடந்த ஆண்டில் லேசாகத் தொடங்கிய சண்டை, இந்த ஆண்டு பெரிய கலவரமாக வெடித்துள்ளது. “பொதுக் கோயிலை இந்து அறநிலையத்துறை முறையாகக் கையாளவில்லை. கோயிலுக்குள் எங்களை அனுமதிக்க மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது. உடனுக்குடன் வழக்குகள் போடாமல் காலந்தாழ்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குகளைப் போடுகின்றனர். தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவலர்கள் எங்கள் குடியிருப்பிற்குள் நுழைந்து பெரியவர், சிறுவர், பெண்கள் என்றுகூடப் பார்க்காமல் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இன்னும் கொடூரமாக தலித் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள்ளே நுழைந்து பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து அடித்துள்ளனர்.”
2ஆம் தேதியிலிருந்து பெரும்பாலானவர்களுக்கு வேலையில்லை. அனைவரும் வன்னியர், நாயக்கர், சோழிய வேளாளர் ஆகியோர் நடத்தும் மில்களிலும் வயல்களிலும்தான் வேலை செய்கிறார்கள். இக்கலவரத்திற்குப் பின் யாரும் வேலை கொடுக்கவில்லை. தலித் மக்களை வேலைக்குச் சேர்க்க வேண்டாம் என அவர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்ததாகச் செய்தி சொன்னார்கள். “15 நாட்களாகச் சாப்பிடுவதற்கே வழி இல்லாமல் இருக்கிறோம். அரசும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை” எனச் சொன்னார்கள். “கடையை நெருப்பு வைத்தவர்கள் அவர்களேதான். அதிலும் விஜயா தன்னோடு சில பெண்களைச் சேர்த்துக்கொண்டுதான் நெருப்பு வைத்திருக்கிறார். அதில் எங்கள் குடியிருப்பில் உள்ளவரின் சலூன் கடையும் எரிந்து போனது. அவர் சுமார் இரண்டு லட்சம் கடன் வாங்கித்தான் அந்தக் கடையை நடத்திவந்தார். அதனைச் சேதப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு நெருப்பு வைத்துள்ளனர்.”
வன்னியர் குடியிருப்பில் முக்கியஸ்தர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. சிலரிடம் விசாரிக்கும்போது எந்தப் பதிலையும் சொல்ல மறுத்துவிட்டனர். தனியார் வங்கியில் பணிபுரியும் இளைஞர் சில விவரங்கள் சொன்னார். அவரது மாமவும் பேசினார். அவர்கள் சொன்னதாவது, “பெரிய மாரியம்மன் கோயில் பொதுக்கோயில் இல்லை. காலங்காலமாக எங்கள் அறங்காவலர்கள்தான் நிர்வாகம் செய்கின்றனர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே இப்போதுதான் எங்களுக்குத் தெரியவருகிறது. கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுவதில்லை. அலகு குத்துபவர்களுக்கு மட்டும் சாமி தரிசனமாக பூசாரி பூசை செய்து விபூதி தருவாரே தவிர கோயிலுக்குள் அனுமதியே கிடையாது.” கலவரம் பற்றிக் கேட்டபோது “நான் பணிக்குச் சென்றதால் எனக்கு எதுவும் தெரியாது” எனப் பேச்சை முடித்துக்கொண்டார்.
வட்டாட்சியர்: “பெரிய முத்துமாரியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதுதான். அதுபற்றி சொன்ன பின்னும் வன்னியர் மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 02.05.2024 கலவரம், ஹோட்டலில் இளைஞர்களுக்கிடையே நடந்த விவகாரம். கோயில் திருவிழாவிற்கும் அக்கலவரத்திற்கும் சம்பந்தமில்லை.” தலித்துகளைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்கள் மீது 01.05.2024 அன்றே நடவடிக்கை எடுக்காமல் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டதற்கு “இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விவரங்களைக் கேட்டு முடிவு செய்யத்தான் பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்றார். சரி, 02.05.2024 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என அறிவித்த பின்னர் ஒருநாள் அவகாசம் கொடுத்தது எதற்காக? என்ற வினாவிற்கு “அவர்கள் ஊரில் கூடிப் பேசி முடிவை அறிவிப்பதாகச் சொன்னதால் அவகாசம் கொடுத்தோம்” என்றார். சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்காமலிருந்ததால்தான் இந்தக் கலவரம் எனச் சுட்டிக் காண்பித்தோம். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்து நாச்சான்பட்டி மக்கள் சுமார் 15 நாட்கள் வேலையின்றி இருப்பதால் ரேசன் மூலம் தேவையான உணவுப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் உடனடியாகக் கிடைக்க வழி வகை செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டோம்.
தீவட்டிபட்டி காவல் ஆய்வாளரை நேரில் சந்திக்க முடியவில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டதற்கு “போனில் விவரங்களைத் தெரிவிக்க வாய்ப்பில்லை” என்றார். நேரில் சந்திக்க நேரம் தாருங்கள் என்றதற்கு அவர் நேரம் தரவில்லை. இதுபோலவே இந்து அறநிலையத்துறை ஆய்வாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
வழக்கு விவரங்கள்
- கிராம நிர்வாக அலுவலர் அம்பேத்கர்மாது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 254 / 2024 பிரிவுகள் 147,148, 331, 294(b), 324, 332, 506(2) IPC and TNPPDL Act 4 வழக்கில் தலித் மக்கள்தான் முதலில் கல்லெறிந்தார்கள் எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 15 தலித்துகள், ஏனைய 14 பேர் தலித் அல்லாதவர்கள்.
- விஜயா கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் 255 / 2024 பிரிவுகள் 147,148, 294(b), 436, 506 (2) IPC and TNPPDL Act 4 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் 258 / 2024 கீழ் 153 B மிறிசி மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 3(1) (2 a) (C) வழக்கில் 10 பேர் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்கு தலித்துகளைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்ததற்கான எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைச் சட்ட வழக்காகும்.
அரசிற்கான பரிந்துரைகள்
- தீவட்டிபட்டி பெரிய மாரியம்மன் கோயில் உடனடியாக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்காக உடனடியாகச் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு, பெயர்ப் பலகை கோயில் வளாகத்தில் நிறுவப்பட வேண்டும். தற்போது கோயில் வளாகத்தில் உள்ள தனியார் அறங்காவலர்களின் பெயர்ப் பலகை அகற்றப்பட வேண்டும். அறநிலையத்துறை விதிப்படி கோயில் நிர்வாகக் குழுவில் தலித் பிரதிநிதித்துவம் பெற ஆவன செய்ய வேண்டும்.
- தலித் மக்களின் தேவைகளுக்கேற்ப வீட்டு மனைகள் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் நடைபெற்றுள்ள கலவரத்திற்கு அரசு அவர்களைப் பொறுப்பாக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சட்ட ஆட்சி நடைபெறுவதை உத்தரவாதப்படுத்தும் போக்கில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி அமைதிப் பேச்சுவார்த்தை எனப் பிரச்சினையை வளர்த்துக் கலவரத்திற்குக் காரணமான வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 05.2024 அன்று தீண்டாமையைக் கடைப்பிடித்த நபர்கள் மீது அன்றே எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தைப் பதிவு செய்யாமல் 06.05.2024 அன்று காலந்தாழ்த்தி பதிவு செய்தது காவல் ஆய்வாளரின் பாரபட்சமான அணுகுமுறையாகும்.
- சட்ட மீறலாய் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தலித் மக்களை வீடு புகுந்து தாக்கியவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து, பின் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.
- ஆவுடையாம்பட்டி பா.ம.க ஒன்றியச் செயலாளருக்கு இக்கலவரத்தில் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிகிறது. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
- காயமுற்றோருக்கு மருத்துவ உதவியும் நிவாரணமும் வழங்க வேண்டும்.
- அருண்குமாரைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாதது தலித் மக்களுக்குச் செய்யும் துரோகம். மாவட்டக் காவல் அதிகாரிகள் அருண்குமாரை விசாரித்து, அவரிடம் புகார் மனு பெற்று, தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிப்பதற்குக் காவல்துறை துணைபுரியக் கூடாது.
- கடைகளை எரித்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எரிந்துபோன கடைகளுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
- அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைய வேண்டுமே தவிர, சாதிய மோதல் உருவாவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளையும் அதன் உறுப்பினர்களையும் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- இரு சமூகத்தாருக்கும் மதிப்பளிக்கக்கூடிய பூசாரியை இந்து அறநிலையத்துறை நியமிக்க வேண்டும்.
- அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வியை இடை நிறுத்தம் செய்பவர்களை ஆய்வு செய்து தொடர்ந்து அவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளியில் கஞ்சாபோன்ற போதைப் பொருட்கள் புழங்குவதாகச் செய்தி உள்ளது. அப்படியிருப்பின் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
- தலித் பெண்கள் பலருக்கு 100 நாள் வேலைத்திட்டம்தான் வாழ்வாதாரமாக உள்ளது. அவர்கள் அவ்வேலையைப் பயமின்றிச் செய்ய உரிய சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.
- தலித் மக்களின் வழிபாட்டு உரிமைகளைத் தடுப்பவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டப்படி நடிவடிக்கை எடுப்பதோடு சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பின் படி தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட வேண்டும்.
இக்கள ஆய்வில் கலந்துகொண்டவர்கள்
- அ.சிம்சன், நீதிக்கான மக்கள் இயக்கம்.
- வழக்குரைஞர் ஞானதேசிகள், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்
- முனைவர் அரச.முருகு பாண்டியன், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
- பிலோமினாள், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்
- அய்யந்துரை, அகில இந்திய விவசாயிகள் மகா சபை
- வேல்முருகன், மாவட்டச் செயலாளர், சி.பி.ஐ.(எம்.எல்) கட்சி
இவர்களோடு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.