மனக்கணக்கு

சேக்கிழார் கார்மேகம்

ம்முறை தப்பாது ஒரே அடியில் வீழ்த்தினான். பெருங்கோபம் கொண்டு அவன் அடித்த அடியில் அம்பேத்கர் குப்புற விழுந்தார், விழுவதற்கு முன்பான தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் அவரை முழுமையாக்கியது.

நெடுநேரம் அவர் மீதான வன்முறையைத் தொடர்ந்து ஏவியபடி இருந்த சண்முகநாதன் கடப்பாரையை எடுத்து அவர் தலையை அடிக்க முற்பட்டபோது இன்ஸ்பெக்டர் கேசவன் மறித்து, “தம்பி, தம்பி… நில்லுடா…” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார். மறுகணம் தனது பூர்வ ஜென்ம பலனை அடையப்போகும் பூரிப்பு தலைக்கேறியது. அம்பேத்கரின் கை நிழல் இன்ஸ்பெக்டரின் கால்களில் முடிந்து நின்றது. பூட்ஸ் கால்களின் அடுத்த அடி நிழலை மிதித்து நசுக்கியது. சுவரில் பூசிய சுண்ணாம்புக் காரையும் மணலுமாகச் சரிந்து கிடந்த குவியலை நாட்டு நாய் கிளறிவிட்டு உட்கார்ந்தது. சுற்றும் பார்த்துவிட்டு “நான் ஒரு அடி அடிச்சுக்கவா?” என்று சின்னக் குழந்தையைப் போல சண்முகநாதனிடம் கெஞ்சினார். இன்ஸ்பெக்டர் நாளை நமக்கு ஆகிக் கொள்வார் என்று சண்முகநாதன் கடப்பாரையை அவர் கையில் கொடுக்க, பலம் கொண்ட மட்டும் அடித்துத் துவைத்தெடுத்தார்.

தன்மீது விழும் அடிகளைத் தாங்கிக்கொண்டு பெருநகர வாகனங்களின் இடைவிடாத இரைச்சலில் அம்பேத்கர் முனங்கிக்கொண்டே இருந்தார். ஆஜானுபாகுவான தனது கனத்த உடல் உலோகக் கம்பியின் தாக்குதலால் சேதாரமாவதைத் தாண்டி எதையும் அவரால் யோசிக்க முடியவில்லை.

வலி தாங்கும் பக்குவத்தினை பிறப்பு தனக்கு வழங்கியிருக்கும் மாபெரும் கொடையாகக் கருதினார். தனக்கிருந்த நல்வாய்ப்புகள் அனைத்தையும் காலம் அரித்துச் சென்றதையும், பழுதடைந்த தனது சிறுநீரகங்களிலிருந்து ஒழுகும் நீர்த்துளிகளை எண்ணிக்கொண்டும், எழுதி முடிக்காத பக்கங்களில் தேசத்தின் அவமானங்களைக் கோத்து முனங்கிக்கொண்டிருந்தார்.

தனது உதவியாளரும் மனைவியும் மாறி மாறி வற்புறுத்தி தூங்கச் சொல்லியும் எரியும் விளக்கை அணைக்காமல் அவமானங்களுக்கு மருந்து தயாரிக்கும் சூத்திரங்களை எழுதினார். இடையிடையே சென்று வெளிவராண்டாவைப் பார்த்துவந்தார், நள்ளிரவில் தன்னைத் தேடி யாராவது வரலாம் என்றும் அவர் பஞ்சடைந்த கண்களும், வற்றிய வயிறுமாக வந்து நின்று இறைஞ்சலாம் என்றும், இந்த அடியேனின் திருவாய் மலரும் ஒற்றை வார்த்தையில் அவனது குதுகுதுப்பு வெளிப்பட்டு உயிர் திரும்ப வரலாம் என்றும் எண்ணி வராண்டாவிற்கு வந்து திரும்புவதை வாடிக்கையாக்கிக்கொண்டார்.

அப்படித்தான் தற்போதும் தன்மீது வாள் கொண்டு கீறும் பிறவியின் ஆத்திரமூட்டிய இறைஞ்சல்களைத் தாங்கியபடியும், எங்காவது நின்று கதறும் குடியானவனின் இறைஞ்சல்கள் பக்கம் காதினை வைத்துக்கொண்டும் அடி பொறுத்துக்கொண்டிருக்கிறார்.

அவர்களின் வன்செயலை எதிரே உணவகத்திலிருந்த அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஏடிஎம் காவலாளி இங்கும் அங்குமாக நடந்து நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தார். ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண் அடிக்கிற திசையின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் வேகமாகச் சென்றார்.

புகை ததும்ப மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த உடல் பெருத்த கருப்பு நிற முதியவர் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை “என்ன ஜென்மங்களோ!” என்று காறி உமிழ்ந்துவிட்டு எதிர்ப்பக்கம் திரும்பி, “ஏப்பா ஏய்… பிரச்சன ஆகப்போது. இது நல்லதுக்கில்ல. அவனுங்க பெரிய பிரச்சனையா ஆக்கப் போறானுங்க… கோர்ட் கேசுனு காலத்துக்கும் அலையப் போறீங்க…. பெரிய மனுஷன், தப்பு செய்யாதீங்க… இவ்வளவு சொல்லியும் உங்க ஆக்ரோஷம் நிக்கலைனா சீரழிய போறது நீங்கதான்…” என்று சொல்லிக்கொண்டிருந்தவர் மீது டீக்கடைகாரர் தேநீர் குவளை கழுவிய நீரை ஊற்றி, ‘வேறெங்குனாச்சும் போய் கத்து, இடத்த காலி பண்ணு’ என்பதை உணர்த்தினார்.

m

இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததிலிருந்து எல்லோரிடமும் கோபமாகப் பேசினார். டேபிள் வெயிட் அடிக்கடி கீழே விழுந்து சத்தம் எழுப்பியது. ரெக்கார்டு ரூமிலிருந்து டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தத் திசை நோக்கி இன்ஸ்பெக்டர் ஆங்காரமாகக் கத்தினார். சுவரில் முட்டுவதைப் போல வந்து சல்யூட் அடித்து நிமிர்ந்து நின்றார் ஏட்டையா முருகானந்தம். வெளியில் ரோந்து போவதற்காகத் தயார் நிலையில் இருந்த ஜீப்பில் டிரைவர் உட்கார்ந்து கண்ணாடி வழியாக ஸ்டேஷனுக்குள் நடக்கும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் இறங்கும்போது கோபமாகச் சென்றதும், ஸ்டேஷன் பெரும் அமைதியில் இருப்பதும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு பெண் தலையில் சொட்டும் இரத்தத்தைக் கையால் தடுத்தபடி உள்ளே நுழைந்தார். ஸ்டேஷன் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இன்ஸ்பெக்டர் அப்பெண்ணை உற்றுப் பார்த்தபடி இருந்தார். வழியும் இரத்தத்தைத் துடைத்தபடியே கூக்குரலிட்ட அவளது ஆற்றாமைத் துயர் அதுவரை ஸ்டேஷனில் இருந்த அமைதியைக் குலைத்துப் போட்டது. இன்ஸ்பெக்டரின் கோபம் ஏறிக்கொண்டே போனது. அவள் தன்னிடம் வந்து சொன்னபோதே ‘இன்ஸ்பெக்டரிடம் போய் சொல்லு’ என்று சொல்லியும் கேட்காமல் தன்னிடமே சொல்லிக்கொண்டிருப்பதையும் அதை இன்ஸ்பெக்டர் பார்த்துக்கொண்டிருப்பதையும் விரும்பாதவளாக கான்ஸ்டபிள் மாலதி அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வெளியே செல்வதற்கான ஏற்பாடு நடந்தது.

காரை எடுக்கும் சத்தம் கேட்டதும் மாலதி நிம்மதி பெருமூச்சு விட்டாள். இரத்தம் வழிந்த அப்பெண் மாலதியிடம் கழிவறையைக் காண்பிக்கச் சொன்னாள். ஸ்டேஷனில் உள்ள அனைவரும் அவளை மருத்துவமனைக்குப் போகச் சொன்னார்கள். இன்ஸ்பெக்டர் போனதிலிருந்து அவளுக்குக் கருணை பார்வை வந்த வண்ணம் இருந்தது. ஒருவர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார், இன்னொருவர் மருத்துவமனைக்கு போன் செய்து சிகிச்சையைத் தாமதிக்காமல் செய்ய வேண்டினார். நிகழ்வுகள் அடுத்தடுத்து யாரிடமும் ஒப்புதல் வேண்டாமல் நகர்ந்தபடி இருந்தன.

இன்ஸ்பெக்டர் நகரின் நெரிசல் பகுதியில் நின்று தான் நினைப்பதைச் செய்ய முடியாமல் தடுக்கும் நிலையை வெய்யிலின் உக்கிரத்தோடு அனுபவித்துக்கொண்டிருந்தார். உறுத்தல் பழுத்து நின்றது, தடுக்கும் யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் தியான நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு யோசனையில் இருந்தார்.

Illustration: Negizhan

சண்முகநாதன் ஸ்டேஷனுக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை. முருகானந்தத்திடம் கேட்டபோது, “காலையில் உன்னக் கேட்டுட்டிருந்தாரு. அப்புறம் உக்கிரமான கோவம், யாரும் நெருங்க முடியல. நீ அவர்கிட்ட பேசுனியா?” என்று கேட்டார். கண்டிஷன் பெயில் கோப்பினை எடுத்துக் கையொப்பமும் கைரேகையும் இட்ட பிறகு விரல் ரேகை மையினைத் தலையில் தடவிக்கொண்டே “ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எனக்கு போன் பண்ணிருக்காரு. இருபது முப்பது முறை இருக்கும், எனக்கும் கொஞ்சம் பயம்தான, நான் போன எடுக்கல. ஸ்டேஷனில் அவர் இல்லன்னு தெரிஞ்சுதான் இப்போ வந்தேன்” என்றான்.

“உன்ன அவர் கேட்ட தொனி, உன் தயவு அவருக்குத் தேவைங்கற மாரி இருந்துச்சு. எதுக்கும் போன் அட்டென்ட் பண்ணிப் பேசு” என்று முருகானந்தம் சொன்னதும், சண்முகநாதனுக்குப் படபடப்பு நீங்கி உள்ளூர மிதப்பு தட்டியது.

இன்ஸ்பெக்டர் போனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய மீசை சண்முகம் என்று ட்ரூ காலர் காட்டியது. உக்கிரமான வெய்யிலைக் கொஞ்ச நேரம் விழுங்கும் பெருநிழலில் குளிர்ந்த வாசனை திரவியங்கள் நிரம்பிய மழை தூவியது போல நின்றிருந்த இன்ஸ்பெக்டர், பரிவான குரலில் “சண்முகம் எங்கப்பா இருக்க? நீ ஏன்டா போன எடுக்கல? ராத்திரி எத்தன முற கூப்டேன், எங்கடா இருக்க?” என்று உரிமையோடு பேச ஆரம்பித்தார்.

“சார் நான் ஸ்டேஷன்லதான் இருக்கேன். உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். கண்டிஷன் பெயில் கையெழுத்துப் போட்டுட்டு நிக்கிறன் சார். ஸ்டேஷன் வருவீங்களா… இல்ல எங்கேன்னு சொல்லுங்க, நான் வந்துடறேன்…” என்றான்.

“நீ ஒன்னு செய்யி… ஸ்டேஷனுக்கு வெளியில வந்து எனக்கு போன் பண்ணு”

“சரிங்க சார்…”

வேகமாக பைக்கை எடுத்துத் தெருப் பக்கம் வந்தான். இன்ஸ்பெக்டர் டிரைவரிடம் காரை எடுக்கச் சொன்னார். அவரைப் பின்தொடர்ந்து பைக்கை மெதுவாக ஓட்டினான் சண்முகநாதன். ‘என்னவாக இருக்கும், ஏன் எதுவும் சொல்லாமல் இப்படிப் போகிறார்’ என்ற குழப்பத்திலேயே சென்றான். பைக்கின் வேகம் காரைப் பின்னுக்கு இழுத்தது. இருவரும் நான்கு ரோடு சாலை விரிவாக்கம் பக்கம் வந்து சேர்ந்தனர்.

m

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. லட்சுமணப் பெருமாள் என்கிற முதியவரிடம் புகார் எழுதி வாங்கினார்கள்.

‘லட்சுமணப் பெருமாள் த/பெ வேலாயுதம் செட்டியார், காசுக் கடை பஜார் தெரு, கதவு எண் 10/243 முகவரியில் வசித்துவரும் நான் நள்ளிரவு சுமார் ஒருமணி அளவில் எனது நகைக்கடையைப் பூட்டிவிட்டு பேருந்து நிலையம் வழியாக ராம் தியேட்டர் பின்பக்கம் சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுது பெரிய மீசை சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் கேசவன் இருவரும் அம்பேத்கர் சிலையை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தனர். தடுத்த என்னை இன்ஸ்பெக்டர் கேசவன் கையால் குத்தித் தள்ளினார். பெரிய மீசை சண்முகநாதன் கையில் வைத்திருந்த வாளால் அம்பேத்கரின் நீல நிற கோட்டைக் கிழித்து அவரின் பூட்ஸ் காலை வெட்டி எடுத்தான். காது, கண், மூக்கு, வாய் என ஒவ்வோர் உறுப்பாகச் சிதைத்தபடி இருவரும் கொடூரமாக அடித்தனர்.

நான் வம்பு வழக்கு வந்துவிடும் என்று எச்சரித்தேன். அதற்கு இன்ஸ்பெக்டர் கேசவன் என்னை ‘தாயோளி, இவன அடிச்சா உனக்கு ஏன் கோவம் வருது’ என்று கேட்டார். நான் அங்கிருந்து தப்பித்து வந்து இப்புகாரினை அளிக்கிறேன். இன்ஸ்பெக்டர் கேசவனும் பெரிய மீசை சண்முகநாதனும் ‘இனி எங்காவது அம்பேத்கர் நிற்பதைப் பார்த்தாலே அடிப்போம்’ என்று கெக்கலித்துச் சிரித்தார்கள். மேற்படி நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை’ என எழுதிக் கையொப்பமிட்டு, வழிந்தொழுகும் வியர்வை சட்டையை நனைக்க வாழ்வு இத்துடன் முடியப்போவதாக நினைத்து ஸ்டேஷனைவிட்டு வெளியேறினார் லட்சுமணப் பெருமாள்.

கடை, வீடு, கடை, வீடு என்றிருந்த லட்சுமணப் பெருமாளா இது என்று காசுக்கடை பஜார் முழுவதும் பேசிக்கொண்டார்கள். வீட்டில் இரண்டு நாட்களாகச் சண்டை. “எவன் எவனை அடிச்சா என்ன? உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? கோர்ட் கேசுனு அலைஞ்சு சாகப் போறியா?” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது மூத்த மகன் அவரைக் கன்னத்தில் அறைந்துவிட்டான். “நாம போலீஸ் ஸ்டேஷனுக்குப் போற சாதியா? நீ செஞ்ச காரியத்த நினைச்சா அருவருப்பா இருக்கு…” என்று மனைவி பேசிக்கொண்டிருக்கும்போது ஸ்டேஷனிலிருந்து நிறைய போலீஸ்காரர்கள் வந்து வீட்டின் முன்புறம் குவிந்தார்கள். அவர்கள் தன்னைப் பாதுகாக்க வந்திருப்பதாக உணர்ந்த லட்சுமணப் பெருமாள், “எனக்கு இது ஏன்? அப்படி உசுரு மேல பயமிருந்தா நான் ஏன் புகார் கொடுக்கணும்…” “இல்ல உங்களப் பாக்க மினிஸ்டர் வர்றாரு. அதான் வந்தோம். வீட்டில் சேர் இருந்தால் நாலு எடுத்து வாசல்ல போடுங்க” என்று சொல்லிவிட்டு இருட்டுப் பக்கம் போய் சிகரெட்டைப் பற்ற வைத்தார் ஒரு போலீஸ்.

சிகரெட் சன்னம் சன்னமாகக் கனன்றுகொண்டிருந்தது. தூரத்தில் சைரன் சத்தம், போலீஸ்காரர்கள் விரைப்பாக நின்றார்கள். வெளிச்சம் தெரு முழுவதும் பிரகாசமாக எரிந்தது.

மினிஸ்டர் காரைவிட்டு இறங்கியதும், லட்சுமணப் பெருமாள் தோளில் கைபோட்டு “நான் பாத்துக்கிறேன்” என்றபடி வீட்டிற்குள் சென்றார். “உங்க கூட நான் இருக்கேன் போதுமா?” என்று சொல்லும்போது அவர் மனைவி கையெடுத்துக் கும்பிட்டார். வீட்டின் உட்புற வடக்குச் சுவரில் அவர்கள் கல்யாண போட்டோ கருப்பு வெள்ளையிலிருந்து கலர் கொடுத்து மாற்றி மாட்டியிருந்தனர். மூத்த மகன் போட்டோவும், விபத்தில் அகால மரணமடைந்த மகளின் போட்டோவும், பக்கத்தில் அம்பேத்கர் ஞானப் புன்னகை ஒளிர கம்பீரமாக நிற்கும் புகைப்படமும் மாட்டப்பட்டிருந்தன. நிலைக்குத்தி நின்ற மினிஸ்டர், “பரவாயில்லையே, என் வீட்டில் கூட இல்லை. மாட்டனும்னு தோணலை. எலெக்சன் நேரத்தில் தேடிப் போவேன். ஆனா, உங்க வீட்டுல அம்பேத்கர் படம் இருப்பது ஆச்சர்யமா இருக்கே. சொந்தபந்தம் ஏதும் சொல்லலையா? தெருக்காரங்கக் கத்திருப்பாங்களே, புள்ளைகள் கேட்கலையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகள் மினிஸ்டர் கேட்கும்போது,

“எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு. வீட்டில போட்டோ இருக்கணும்னு கறாரா நின்னார்” என்ற அவரின் மனைவி, “எங்க அப்பா கூட ஒருமுறை இவருகிட்ட, ‘மாப்பிள்ள யாருக்காக உழைச்சு காலு கை தேய்ச்சாரோ அவனுங்க வீட்லயே மாட்ட மாட்டானுங்க. அந்த ஆளு அவனுங்க வாழ்க்கையையே மாத்திருக்காரு. ஆனா, ஒருத்தன் வீட்லயும் அவரு போட்டோ இருக்காது. ஏன்னு தெரியுமா, அதுதான் அரசியல்.

இந்த அரசியல் நமக்குத் தேவையில்லாதது. இவ்வளவு ஏன், உங்களால நகைக் கடையில் மாட்டிக்கிட்டு வியாபாரம் பார்க்க முடியுமா? கேள்விப்பட்டிருப்பீங்க, மேலத்தெரு வாத்தியாரு தன்னோட மூத்த மகனுக்கு அம்பேத்காருனு பேரு வச்சதுக்கு அந்தப் பையன் பட்ட பாடு. கதை கதையா சொன்னாரு. அவரு பேட்டி பிரபல பத்திரிகையில கூட வந்துருக்கு தெரியுமா? எதுக்கும் ஒரு அளவு இருக்கு மாப்பிள்ளை. பொறப்பு நல்ல பொறப்புதானேனு கேட்கிறானுக. இதுக்கு மேலே என்ன சொல்ல’ என்று அழாத குறையா கேட்டுப் பார்த்துட்டு அவரும் மண்ணுக்குள்ள போய்ட்டார்” என்றார்.

மினிஸ்டர் கையெடுத்துக் கும்பிட்டார். “லட்சுமணப் பெருமாள், நடந்தத பெரிசு பண்ணாதீங்க. பத்திரமா இருங்க. வீட்டில நாலு போலீசு எப்பவும் இருக்கட்டும். கடைக்குப் போகும்போது வரும்போது எச்சரிக்கையா இருக்கணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். காரில் ஏறப்போகும்வரை தோளில் கைபோட்டபடி வந்தார். தோளோடு அணைத்துக் காதில் சொன்னார், “சரிதானே நான் சொல்றது” என்று எக்காளச் சிரிப்புச் சிரித்துத் தோளோடு தோளாக இறுக்கினார். சிரிப்பின் ஒலி கொடூரமாக இருந்தது. மினிஸ்டர் கை, தன் தோளிலிருந்து நழுவி விழும்படி லட்சுமணப் பெருமாள் தனது தோளை மேலும் கீழும் அசைத்து இறக்கினார்.

கார் தயாராக இருந்தது. மினிஸ்டர் ஏறினார், கும்பிட்டார், சிரித்தார், ரோட்டுப் பாதை பக்கம் பார்வையைத் திருப்பினார், வழியனுப்ப முன்னாடி வந்த லட்சுமணப் பெருமாள் காரின் உள்ளே பார்த்தார். பெரியமீசை சண்முகநாதனும், இன்ஸ்பெக்டர் கேசவனும் பின்னிருக்கையிலிருந்து வெறிகொண்டு பார்த்தபடியே இருந்தார்கள். கார் போன திசையில் வெளிச்சமும் இருளும் நிரம்பியிருந்தன.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger