இப்போதெல்லாம் உனை
ஆரப்பற்றிக்கொள்ள
வேண்டுமாய் இருக்கிறது
நீ தொற்றிக்கொண்ட உறவினின்று சிறுபோதும் மீளப் பிடிக்கவில்லை
அதிகாலை தொடங்கி அந்திவரை
காற்றுப்புகா நெக்குருகி
கதைகளைக் குவிக்கிறாய்
கவிதைகளைப் பகிர்கிறாய்
சொல்லச்சொல்ல இனிக்கிறாய்
இனிக்கஇனிக்க உயிர்க்கிறாய்
உயிர்ப்பின் முடிவில் நோக்குகிறேன்
அளவிடற்கறியா காதலுடன்
கண்கள் மயக்குற
இடையிடையே மிளிரும் வெட்கத்தை எனக்கே எனக்காய்க்
காட்டி நிற்கிறாய்
பொங்கிப் பிரவகிக்கும்
என் பொல்லாக் காதலனே…
சித்தார்த்தா
எனைப் போர்த்திக்கொள்வாயா?
ஒளி துவலும் கண்களோடு
கால்கள் அயரும் நெடும்பயணக் காட்டில் என்றேனும் ஒருநாள் ஏதேனும் ஓரிடத்தில் நிச்சயம்
உன்னைச் சந்திப்பேன்
நம் முதல்நாள் சந்திப்பைப்போலவே அன்றும் இந்தப் பூமியின் ஏதோ ஓரிடத்தில்
காதலின் புதிய ஊற்று
பொங்கிப் பிரவகிக்கும்
காதலின் புதிய காற்று
இடைவெளிகளைப் புறந்தள்ளி
நமது மௌனத்தின் மையத்தை
ஆரத்தழுவி முத்தமிடும்
அப்போது இந்நிலமெங்கும்
வேங்கைப் பூக்கள் உதிர்ந்து
இக்காடே அதியற்புத நட்சத்திரமாய் ஜொலிக்கும்
பெயரிடப்படாத பூச்சிகளும் வண்டுகளும்
தம் இனிய காதல் பாடல்களை
இசைகொண்டு பாடத்தொடங்கும்
பறக்கத் தடுமாறிய பறவைகள் எல்லாம் காதலின் கர்ப்பம் தரித்து உவகை பெறும்
என் செந்தலைக்குருவியே
உன் முற்றிய வருகை
இந்த வனாந்தர உடலெங்கும்
செழித்த பிடவம் பூக்களின்
வாசத்தைக் கிளர்த்துகிறது
மென்புகை மூடிய கண்களில்
மின்னலின் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது
அருகில் வந்து உன் பரவச விரல்கொண்டு முதுகில் சம்மணமிட்டிருக்கும்
என் தாளமாட்டா தனிமைச் சுமையைப்
பிறந்த உன் புதுக்குழந்தைபோல்
அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து
ஆயிரம் நியாயத்தின் ஆறுதல்களைப் பாடு
பழுமர நிழலில் இளைப்பாறும்
சிறு பசுங்கிளிபோல்
நிபந்தனைகளின் பயங்கள் ஏதுமற்று
உன் கைகளின் கதகதப்பில்
புதைந்துபோக வேண்டும் நான்.