சுவருடன் பேசும் அவள்…!

கன்னடத்தில் : பாரதி ஹெக்டே ; தமிழிற்கு : கே.நல்லதம்பி

‘அவன் இங்கே இருப்பானோ… இந்தத் தூணில் இருப்பானோ… இங்கே… அங்கே…’ என்று ஒவ்வொரு தூணையும் தன் கதையால் உடைக்கும் பக்த பிரகலாதன் சினிமாவில் வரும் இரண்ய கசபுவைப் போல, ‘அங்கேயும் இருப்பான் தந்தையே’ என்று ஒவ்வொரு தூணிலும் ஸ்ரீ ஹரியைக் காண்கிறேன் என்ற வலுவான நம்பிக்கை கொண்ட பிரகலாதனைப் போல, ஏதாவது ஒரு தூணைப் பிளந்து தோன்றும் நரசிம்மனைப் போல இந்த வீட்டுச் சுவர்களிலும் ஏதாவது என்றாவது தோன்றுமா? இந்த வீட்டுச் சுவருக்குள் யாராவது சிக்கிக்கொண்டிருக்கிறார்களா? அவர் என்றாவது சுவரை உடைத்துச் சட்டென்று எதிரே வந்து நின்றுவிடுவார்களா என்று ரத்னாவைப் போல சிறுமிகளுக்குப் பலமாகத் தோன்றக் காரணங்கள் இருந்தன.

அந்த வீட்டு அம்மம்மா சுவருடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் என்றும் தாத்தாவுடன் நேரடியாகப் பேசியதே கிடையாது. வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வந்தால் தாத்தா அங்கே இருக்கும் யாராவது சின்னப் பிள்ளைகளிடம் ‘உங்க அம்மம்மாகிட்ட போய் டீ போடச் சொல்லு’ என்றால், அம்மம்மா மட்டும் சுவர் பக்கமாகத் திரும்பி ‘டீ கேக்கறாரா என்ன…’ என்று கேட்பாள். இப்படி டீ வேணுமா, சாப்பிட வாங்க, பலகாரம் தயார், மோர் வேணுமா என்பதிலிருந்து ஆரம்பித்து, தலைவலி இருந்தால், காய்ச்சல் வந்தால் ‘கஷாயம் போட்டுக் கொடுக்கட்டா…’ என்று கேட்பதுவும் அந்தச் சுவரைத்தான். அப்படிக் கேட்கும்போதெல்லாம் அது தனக்குத்தான் என்று தெளிவாகத் தாத்தாவுக்கு மட்டுமல்ல, அவர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், அந்த வீட்டு வேலையாட்களுக்கு மட்டுமல்ல ஊர், சேரிக்காரர்களுக்கும் தெரிந்திருந்தது. அதொரு விதமாக அவர் வீட்டிற்கு அந்தப் பெயர் வந்துவிட்டது ‘பேசும் சுவர் வீடு’, ‘சுவர் அம்மம்மா’ என்று. யாராவது அறிமுகமில்லாதவர்கள் வந்தால் அவர் வீட்டைத் தேடுவது சிரமமாக இருக்காது. ஊரில் இருக்கும் யார் வீட்டிற்காவது போய் இந்த வீட்டிற்குப் போக வேண்டும் என்று சொன்னால், ‘அதா அந்தப் பேசும் சுவர் வீட்டுக்கா’ என்று கேட்கும் அளவிற்கு அவர் வீட்டுச் சுவரும் அந்த அம்மம்மாவும் புகழ் பெற்றிருந்தார்கள்.

அவர் வீட்டுச் சுவரை எதனால் செய்திருக்கிறார்கள். மனிதர்கள் பேச்சைக் கேட்கும் ஏதாவது சிறப்பான பொருளால் சேர்த்துக் கட்டியிருக்கிறார்களா என்றெல்லாம் சிறுமியான ரத்னாவுக்குத் தோன்றும். சுவருக்கும் அம்மம்மாவுக்கும் எத்தனை நெருக்கம் என்றால், அடுக்களையில் வேலை செய்துகொண்டிருந்தாலும் உடனே அந்த வேலையை நிறுத்திவிட்டு நடு முற்றத்திற்கு வந்து சுவர் அருகே நின்று எதையாவது சொல்லுமளவிற்கு அந்தச் சுவர் அவளை அழைக்கும். எத்தனை பேர் இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதை எல்லாம் விட்டுவிட்டு வேண்டுமானாலும் சுவர் பக்கம் போபவள்தான் அவள்… அவ்வளவு அணுக்கம் அவளுக்கும் அந்தச் சுவருக்கும்.

சித்தாபூரிலிருந்து குறைந்த தொலைவிலிருக்கும், கீஜகோடு-வின் அந்தத் தாத்தா வீட்டிற்கும் ரத்னா வீட்டிற்கும் என்ன உறவு என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உறவை விடவும் இருவர் வீட்டிற்கும் நட்பு அதிகமாக இருந்தது என்பதற்கு இரு வீட்டாரின் நெருக்கத்தைப் பார்த்தே தெரிந்திருந்தது. அந்த வீட்டுத் தாத்தா சித்தாபூரில் வாரம் ஒருமுறை நடக்கும் சந்தைக்கு வரும்போதெல்லாம் இவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போவது வாடிக்கை. அதுபோலவே ரத்னாவின் குடும்பமும் அவர் வீட்டிற்குப் போய் வாரக் கணக்கில் தங்குவதும் உண்டு. அந்த தாத்தா வீட்டிலும் நான்கைந்து பேரப்பிள்ளைகள் இருந்தார்கள். அப்படியாக,

சிறுமியாக இருந்த ரத்னாவுக்கு விளையாடத் துணை கிடைத்தார்கள். சித்தாபுரத்துப் பள்ளிக்குப் போய் வந்து விளையாடப் பிள்ளைகள் இல்லாமால் போனதால் அங்கே போய் வர அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முக்கியமாக தாத்தாவின் பேத்தி வாசந்தியும் ரத்னாவும் ஒரே வயதை ஒத்தவர்களாக இருந்ததால் இருவரும் தோழிகளாகிவிட்டார்கள். அதனால் பள்ளிக்கு விடுமுறை இருக்கும்போதெல்லாம் அம்மாவுடன் அவர் வீட்டிற்குப் போவாள். இப்படி இருவர் நட்பும் நெருக்கமாக இருந்ததால் இருவருக்கும் நடுவில் ஏதோ நெருங்கிய உறவு இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தாள் ரத்னா. ஆனால் அவர் வீட்டிற்குப் போகும்போதெல்லாம் ரத்னாவையும் சேர்த்து அந்த வீட்டிற்கு வரும் பல பிள்ளைகளுக்கு ஆர்வமாக இருந்தது அம்மம்மா பேசும் அந்தச் சுவர். பலமுறை அந்தச் சுவருக்காகவே அந்த வீட்டிற்குப் போவதும் உண்டு.

கூடவே அந்த அம்மம்மாவுக்கு அதிசயமான நோயும் இருந்தது. அவள் ஏதாவது வேலை செய்யும்போது நடுவில் ஏ…ஏ…என்று கத்தி அடிக்கடி தரையைத் தட்டுவாள். காலையில் வாசலை துடைக்கும்போது அந்தத் துடைக்கும் துணியால் நிலைப்படியைக் குட்டுவாள். பாத்திரம் அலம்பும்போது பாத்திரத்தைத் தேய்த்துக்கொண்டே ஏய்… ஏய்… என்று பாத்திரத்தை கல்லில் அடிப்பாள். இரண்டு பக்கமும் பல் இருக்கும் சீப்பால் தலை வாரும்போது தன் தலை மீது தானே ஏ… ஏய் என்று கூவி அடித்துக்கொள்வாள். அட, எதுக்கு இப்படி என்று ஆரம்பத்தில் ரத்னாவைப் போல சிறு பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, புதிதாக வந்த உறவினர்களுக்கும் வியப்பாகவும், அவள் கத்துவது ஒருவிதத்தில் பயமாகவும் இருந்தது.

ஏழோ… எட்டோ… எத்தனை அங்கண1 வீடென்று தெரியாத அளவிற்குப் பெரியதான அந்த வீட்டில் சின்னச் சின்ன அறைகள் அதிகமிருந்தன. சுற்றி இருந்த பெரிய நடைக்கு நடுவில் கூடம். பிறகு திண்ணை. திண்ணையைச் சுற்றி இருக்கும் கறுப்புத் தூண்கள், பூக்கள் செதுக்கிய கறுப்பு மரத்துப் பிரதான வாசல் கதவு. கதவுக்கு வளையல் வடிவத்தில் பித்தளையால் செய்த பெரிய பிடி. கதவைத் திறந்தால் இரண்டு பக்கத்திலும் என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு இருட்டு அறை என்றால் அதுதான் நடு முற்றம். அதைத் தாண்டினால் பூசை அறை. பிறகு பெரிய சமையலறை. எவ்வளவு பெரிய வீடாக இருக்கிறது. இதைச் சுத்தம் செய்யவே எத்தனை ஆட்கள் இருந்தாலும் போதாது என்பதைப் போல இருந்தது. ஆனால், அந்த வீட்டுப் பேரப் பிள்ளைகளுடன் சேர்ந்து ரத்னாவைப் போன்ற பல சிறுவர் சிறுமிகளுக்கு எப்போதும் இருப்பது நடு முற்றத்து அந்தச் சுவர். பூசை அறைக்கு ஒட்டி இருந்த நடு முற்றத்தில் நின்றுகொண்டு சுவர் பக்கம் திரும்பி அம்மம்மா சில சமயம் உரக்கமாகவும், சில சமயம் வாயிற்குள்ளேயே எதையோ முணுமுணுப்பது போலவும் பேசுவாள். யாரையாவது சபிக்கிறாளா என்று அவள் பின்னாலேயே போய் பார்த்தால், அம்மம்மா ஏ… ஏ… என்று இங்கே தரையைத் தட்டுவது போலவே சுவரை ஒருமுறை தட்டி, மெல்ல அதை வருடிக்கொடுத்துக்கொண்டே நிற்பாள். ‘டீ… வேணுமா நிங்கக்காவுக்கு. ரொம்ப சோர்வா இருக்கும் போல நிங்கக்காவுக்கு. வெயில் அதிகமா. பாவம், தோட்டத்துக்குப் போய் வேலை செஞ்சு வந்து அயர்வா இருக்குப் போல. பொறுங்க, ஏலக்கா போட்டு டீ ஆத்திக்கொண்டு வர்றேன், பொறுங்க…’ என்று சொல்வாள். அங்கே யாரோ இருக்கிறார்கள் என்று கொண்டு, ‘பொறுங்க… இப்பவே போட்டுட்டு வர்றேன். எங்கேயும் போயிடாதீங்க…’ என்று நேராகச் சமையலறைக்கு வருபவள் விறுவிறு என்று தேநீர் போட்டுக்கொண்டு வந்து, மனிதர்களுக்குக் குடிக்க வைப்பது போல தானே டீ டம்ளரை எடுத்து, ‘வாங்கிக்கங்க, குடிங்க…’ என்று சுவர் மீது தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தாள். சுவர் மீது தேநீர் படிந்து, தரை வரை ஒழுகிக்கொண்டிருந்தது. ‘அய்யோ… சிந்திட்டீங்களா… அச்சோ…’ என்று பாசத்துடன் தன் சேலை முந்தானையால் குழந்தைகள் வாயைத் துடைப்பது போல சுவரைத் துடைத்துக்கொண்டிருந்தாள். அந்தத் தருணத்தில் அம்மம்மாவுக்கு எப்படி அக்கறை இருக்கும் என்றால் ஒரு கணவனுக்கு மனைவி அன்புடன் தொண்டு செய்யுமளவிற்கு நாட்டம் இருக்கும். ஒரு குழந்தைக்குத் தாய் பாலூட்டும் அளவு பரிவு, பாசம் எல்லாம் அங்கே இருக்கும். யாருக்கு அவள் தேநீர் பருகக் கொடுக்கிறாள் என்று சுவர் அருகே சென்றால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அட… பிறகு அம்மம்மா யாரிடம் பேசிக்கொண்டிருந்தாள்… யாருக்குத் தேநீர் பருகக் கொடுத்தாள். சுவரில் ஏதாவது சன்னல் இருக்கிறதா. சன்னல் வழியாக யாராவது வந்து மாயமானார்களா என்று நினைத்தால் அங்கே சுவருக்கு சன்னலே இருக்கவில்லை. அப்படி என்றால் அம்மம்மா யாரிடம் பேசிக்கொண்டிருந்தாள்? எதற்காக அப்படிப் பேசிக் கொண்டிருந்தாள்?

அதிசயம் என்னவென்றால், அம்மம்மா அப்படியெல்லாம் செய்வது ரத்னாவைப் போன்ற பிள்ளைகளுக்கு வியப்பாக இருந்தால் அந்த வீட்டில் ஒருவருக்கும் எதுவும் தோன்றுவதே இல்லை. அவர்கள் எல்லாம் இதொரு இயல்பான செயல் என்பதைப் போல தங்கள்பாட்டிற்கு வேலையில் மூழ்கிக் கிடப்பார்கள்.

இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் அம்மம்மா ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா? ஒருமுறை அம்மாவிடம் கேட்டும் விட்டாள் ரத்னா. ‘எதுக்கு அம்மம்மா அப்படி விசித்திரமா கத்துது. அந்தச் சுவரோட பேசுது. எதுக்கு தாத்தா கூடப் பேசறதில்லை. இந்த வீட்டுப் பிள்ளைங்க கூடவும் பேசறதில்லை…’ என்று கேட்க, அம்மா, ‘அதெல்லாம் உனக்குப் புரியாது. நீ சும்மா இரு’ என்று வசை வாங்கிய பிறகு மீண்டும் அம்மாவிடம் கேட்கும் சாகசம் செய்யவில்லை.

அவ்வளவு அதிசயமாக இருக்கும், அலட்சியத்திற்குக் காரணமாக இருக்கும் இந்த அம்மம்மா நிறைந்த செல்வந்தர் வீட்டிலிருந்து வந்தவள். அவளுக்கு வயல், நகைகள் எல்லாம் இருக்கிறது. இங்கே இருக்கும் வயலும் கூட அம்மம்மாவுக்குச் சொந்தமானதுதான். தாத்தா இங்கே வீட்டு வேலைக்கு வந்தவர் என்று அம்மா ஒருமுறை யாரிடமோ சொல்வதைக் கேட்டிருந்தாள்.

உண்மை, அவள் பங்கிற்கு வந்த ஓரளவு தோட்டத்தைத் தாத்தாவே பார்த்துக்கொண்டிருந்தார். கண்ணைப் பறிக்கும் அழகியாக இருந்த அம்மம்மாவுக்கும் கன்னங்கரேலென்று கழுவி வைத்த யக்னேஷ்வரனைப்2 போல இருக்கும் தாத்தாவுடன் எப்படித் திருமணம் நடந்தது என்பதே வியப்பாக இருந்தது. ஆண் எப்படி இருந்தாலும் நடக்கும். அதுவும் அந்தக் காலத்தில் பெண்களைக் கேட்பவர்கள் யார் இருந்தார்கள்? இப்படி, அப்பா, தாய்மாமன் எல்லோரும் சேர்ந்து நடத்தி வைத்த திருமணம். அம்மம்மா மண்டபத்தில் மாலை போடும்போதுதான் தாத்தாவைப் பார்த்தது. செக்கச் செவேலென்று பேரழகியாக இருந்த அம்மம்மா, கறுப்புக் கரிக் கட்டையாக இருந்த தாத்தாவைப் பார்த்துப் பாவம், என்ன நினைத்தாளோ…?

அம்மம்மா, ‘உன் கல்யாணம் எப்ப நடந்துச்சு. கல்யாணத்துக்கு முந்தி தாத்தாவைப் பாத்தயா’ என்று கேட்டால், ‘இல்லப்பா… அப்படி எல்லாம் எப்படிப் பாக்க முடியும்’ என்று கொஞ்சம் வெட்கப்பட்டு வேலையில் மூழ்கி விடுவாள். இப்படி அது என்ன வயதென்றே அறியாத வயதில் அவள் திருமணம் நடந்து அவள் வீட்டை வந்தடைந்தவர் இந்தத் தாத்தா, வெங்கடரமண ஹெக்டே. திருமணமான பிறகு நாள் முழுதும் வீட்டு வேலை, தாத்தா, பிள்ளைகள் சேவை, மாட்டுத் தொழுவ வேலை, நாத்து நடுவது, அறுவடை போன்றவற்றில் கடந்துவிடும் அவள் தினசரி வாழ்க்கை.

வீட்டு வேலைகளை மிகச் சிறப்பாகச் செய்வாள் அம்மம்மா. அவள் வீடு எப்படிச் சுத்தமாக இருக்குமென்றால் அவர் வீட்டு அங்கணம் கூட எங்கள் வீட்டு அடுக்களையை விடவும் சுத்தமாக இருக்கும் என்று உறவுக்கார வீட்டுப் பெண்கள் பேசுமளவிற்கு அவர் வீடு தூய்மையாக இருக்கும். தடிமனாக இருந்த வீட்டுத் தூண்கள், சன்னல், கதவுகள் எல்லாம் அம்மம்மாவுடன் அன்பாக இருந்தனவோ என்னமோ… தாத்தா மட்டும் அன்பாக இருக்கவில்லை. அதனால் அவருடன் பேச்சே கிடையாது. அவர்கள் எதற்காகப் பேசிக்கொள்வதில்லை என்பது பலருக்குத் தெரிந்தும் இருக்கவில்லை. அப்படிப் பார்க்கப் போனால் அம்மம்மா ஆரம்பத்திலிருந்தே பேசுவது குறைவுதான். தாத்தா-அம்மம்மா பேசிக்கொள்ளாமல் இருந்தால் என்னவாம். பிள்ளைகள் மட்டும் வரிசையாகப் பிறந்தன. மூன்று பெண் பிள்ளைகள், ஐந்து ஆண் பிள்ளைகளுக்குத் தாயான அம்மம்மாவைப் போல அழகாகப் பிள்ளைகள் யாரும் இருக்கவில்லை.

இப்படிப் பணக்காரி, அழகி எந்த வேலையாட்களுக்கும் குறைவில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு, வீடு முழுவதையும் துப்புரவாக வைத்துக்கொள்ளும் அம்மம்மா சுவருடன் பேசிக்கொண்டிருந்தாள். எதற்காகத் தரையைத் தட்டுகிறாள், எதற்காகத் தன் தலையைச் சீப்பால் அடித்துக்கொள்கிறாள்; தாத்தா எதற்கு அம்மம்மாவுடன் பேசுவதில்லை… என்ற கேள்விகள் எழும். அதைக் கேட்பவர்கள் யாரும் இருக்கவில்லை. தன்னுடைய சொத்தைத் தாத்தாவுக்குக் கொடுத்திருந்தாலும் தாத்தாவைக் கண்டு பயப்படுவாள்.

தாத்தா எதிரே வந்தால் போதும், பயந்து சாவாள். ஆறடி உயரத்தில் கறுப்பாக இருந்த தாத்தாவின் ஆதிக்கத்திற்கு முன்னால் சிவப்பாக மூன்றடி இருக்கும் அம்மம்மா குருவிக் குஞ்சு போலாகிவிடுவாள். வேண்டிய அளவிற்குச் சொத்துப் பத்து இருந்தது. அந்த முழுச் சொத்துக்கும் அம்மம்மாதான் ஏக வாரிசு. அவள் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவள் அம்மா இறந்துபோய், அவள் அப்பா பந்த பாசத்தில் ஆர்வம் இழந்து முப்பொழுதும் கடவுள் வழிபாடு, கோயில், மடம் என்று ஆன்மீகத்தின் மீது அதிகப் பற்றுதல் காட்டி, வளரும் மகளைப் பற்றி அவ்வளவாகச் சிந்திக்கவே இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு, சொத்து, ஒரே மகள் என்று ஆண் திக்கில்லாத அந்தக் குடும்பத்தின் மீது கண் வைத்தவர்கள் ஏராளம். அப்படிக் கண் வைத்து, அதில் வெற்றியும் கண்டவர் கீஜகோடுக்குப் பக்கத்து ஊரான சாதொட்டி கிராமத்து வெங்கடரமண ஹெக்டே. எல்லோரும் நட்புடன் அவரை வெங்கண்ணா என்றும், அது கடைசியில் யங்கண்ணா என்றாகி, முடிவில் வயதாகிக்கொண்டிருக்கும்போது யங்கி தாத்தா என்றே அழைத்தார்கள். அப்படி அவர்கள் வீட்டில் புகுந்துகொண்டு புத்திசாலியாக ஆதிக்கம் செலுத்தி ஊருக்கு ஒரே செல்வாக்கான மனிதராகி, வீட்டு ஆட்சிப் பொறுப்பைத் தன் கைவசப்படுத்திக்கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அப்படியான யங்கண்ணா மிகக் கட்டுப்பாடான மனிதர். அதுமட்டுமல்ல துணிச்சலானவரும் கூட. யாருக்கும் பயப்படும் ஆளல்ல. நிலத் தகராறு தொடர்பாகப் பக்கத்து வீட்டு ராம் பட்டருடன் சண்டைப் போட்டு, கோர்ட்டுக்கும் போய் நிலத்தைத் தன் சார்பாகப் பெற்றுக்கொண்டு வந்திருந்தார். அதனால் கோபமுற்ற ராம் பட்டரும் அவரைச் சார்ந்தவர்களும் சேர்ந்து ஒருமுறை இந்த யங்கண்ணா பாக்குத் தோட்டத்தில் நடமாடிக்கொண்டிருந்தபோது இரண்டு வரப்புக்கு நடுவில் இருந்த கால்வாய்க் குழியில் தள்ளி மிதித்துவிட்டார்கள். இந்த யங்கண்ணா அங்கிருந்து பிழைத்து வந்ததே பெரிசு. பிறகு ராம் பட்டர் மீது போலீஸில் புகார் கொடுத்து அவரைச் சிறைக்கு அனுப்பியிருந்தார். அதற்குப் பிறகு இந்த யங்கண்ணாவின் சகவாசமே வேண்டாமென்று ஊர்க்காரர்கள் எல்லாம் விலக்கி வைத்தார்கள்.

அப்படிப்பட்ட தாத்தா அம்மம்மாவுடன் பேசுவதில்லையா, அவருடன் அம்மம்மா பேசுவதில்லையா என்பது தெரியாது. மொத்தத்தில் இருவரும் பேசிக்கொள்வதில்லை. ஆனால், சுவரிடம் மட்டும் மணிக் கணக்காகப் பேசுவாள்.

இப்படி அம்மம்மா சுவருடன் பேசிக்கொண்டே பல ஆண்டுகள் கடந்து போயின. பிள்ளைகள் எல்லாம் பெரியவரானார்கள். யங்கண்ணாவுக்கும் வயதாகி, கூன் விழுந்து, எல்லோருக்கும் தாத்தாவாக வீட்டிலேயே அதிகமாக இருப்பார். அப்படி இருந்தும் அவர் அம்மம்மாவுடன் பேசுவது மட்டுமில்லை. இப்போது பிள்ளைகளுடைய தர்பார். பெரிய மகன் ராமச்சந்திரன் புரோகிதம் அது இது என்று வீட்டிலேயே இருந்தான். மற்ற பிள்ளைகள் வெவ்வேறு இடங்களில் இருந்தார்கள். மூன்று பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்திருந்தார்கள். இத்தனை நடந்திருந்தாலும் அம்மம்மாவின் சுவருடனான உறவும், தரையைத் தட்டுவதும் கொஞ்சமும் குறைந்த பாடில்லை.

ஆனால், அந்த வீட்டு ஜனங்கள் எல்லாம் மிகவும் அதிசயமானவர்கள். பெண்கள் எல்லாம் அதிகமாக வேலை செய்வார்கள். ஆண்கள் ஓய்வாக இருப்பார்கள். வீட்டு வேலை செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல என்பதைப் போல பார்ப்பார்கள். யார் அதிகமாக வேலை செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் மிகவும் நல்லவர்களாகிவிடுவார்கள். பிள்ளைகள் எல்லாம் ஏறக்குறைய ஒரேமாதிரி இருப்பார்கள். தாத்தாவுடைய குண இலட்சணம். ஆனால் அந்த தாத்தாவும், பிள்ளைகளும் ஒரு மாதிரி சபலப் பேர்வழிகள். யங்கண்ணா ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் என்று ஊர்க்காரர்கள் எல்லாம் பேசிக்கொள்ளும் அளவிற்கு அவர் சபலத்தனம் கொண்டவராக இருந்தார். அதேபோல அவர் மூத்த மகன் ராமச்சந்திரனும் இருந்தான். அவர்களுடன் பெண் பிள்ளைகள் பேச சங்கடப்படுவார்கள். யாராவது பருவமடையாத பெண் பிள்ளைகள் வந்தால், மாதவிடாய் ஆன பிறகு எப்படி இருக்க வேண்டும், எதை அணிந்துகொள்ள வேண்டும் என்று பக்கத்து வீட்டு அத்தையிடம் கேட்டுக் கத்துக்கோ என்று சொல்லி, அதுதான் பெரிய நகைச்சுவை என்பதைப் போல பேசிக் குஷிப்படுவார்கள். அந்தப் பெண் பிள்ளைகள் எல்லாம் ச்சீ… என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு மறுபடி அவர்கள் முன்னால் வர மாட்டார்கள். தாத்தாவும் மூத்த மகன் ராமச்சந்திரனும் ஒருவரோடொருவர் போட்டி போடுபவர்கள் போல பிடிவாதமாக இருப்பார்கள். ஒருமுறை அவர்கள் வீட்டில் திவச நாளன்று, அதே ஊர் பிள்ளையான உயர்நிலைப் பள்ளிக்குப் போகும் ஜெயம்மாவைத் தனியாக உட்கார வைத்துக்கொண்டு அவன் ‘ஜெயா கத்துக்கிட்டாயா…’ நாக்கைக் கடித்து அதிசயமாக அவளைப் பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தான். அதற்கு அவள் ‘இஷ்யி… இஷ்யி…’ என்று வெட்கப்பட்டுக்கொண்டு குறுகிப் போயிருந்தாள். ‘கத்துக்காம இருந்தா சொல்லு, அந்த சாவித்திரி அம்மாவிடம் சொல்லி, கத்துக் கொடுக்கச் சொல்றேன்’ என்று உரக்கச்

சிரித்து அவள் முதுகைத் தடவிக்கொண்டே சொன்னான். பக்கத்து வீட்டு சாவித்திரியம்மா கணவன் இல்லாமல் விதவையாகி சிவப்புச் சேலை உடுத்திக்கொண்டு எப்போதும் மடி ஆசாரம் என்றிருப்பாள். அவளைக் காட்டி இவன்

எதைக் கற்றுக்கொள் என்கிறான் என்று அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் ஆர்வம் உண்டாகி, மதியம் சாப்பாட்டு நேரத்தில் மெல்ல ஜெயாவிடம் பக்கத்து வீட்டு அதே சாவித்திரி அத்தையின் பேத்தி சுமதி, ‘ராமச்சந்திர மாமா எதையோ கத்துக்கண்ணு சொன்னாரே என்னடி அது’ என்று கேட்டாள். அதற்கு அவள் குசுகுசு என்று சிரித்துக்கொண்டே ‘ச்சீ அவன் சபலப் பிண்டம். வெளியானபோது மூட்டுத் துணி3 போடப் பழகிக்கிட்டயான்னு ஜோக் அடிக்கிறான். பொறுக்கிப் பய. அவன் கட்டையில போக’ என்று திட்டியிருந்தாள். இதுபோன்ற ஜோக் ஊர் பெண் பிள்ளைகளுக்குப் புதிதல்ல. அப்பா – மகன் இருவரும் சேர்ந்தே செய்வார்கள்.

ஒருமுறை அவர் வீட்டிற்குத் தினமும் வேலைக்கு வரும் பெண் கெரேதேவியை எருது உதைத்துத் தொடையில் காயமானது. அதற்காக அவள் நான்கு நாட்கள் வேலைக்கு வரவில்லை. அவள் புருசன் தேவன் வந்து ‘ஹெக்டே அய்யா, கெரேதேவி இன்னைக்கு வேலைக்கு வரமாட்டாய்யா’ என்றான். அருகில் மாட்டுத் தொழுவத்திற்குப் புறப்பட்டிருந்த ராமச்சந்திரன் கொஞ்சம் தாமதித்து நின்று, ‘எதுக்கு தேவா’ என்று கேட்டான். ‘அது ஹெக்டே அய்யா, நேத்து வரும்போது எருது உதைச்சிருச்சுங்க. நொண்டி நடக்கிறா. அதுக்குத்தான் வர முடியலை அவ. அது வேலையை நானே செய்யறேன்’ என்று சொல்லி மாட்டுத் தொழுவத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவனைத் தடுத்து நிறுத்தினார் தாத்தா. ‘கெரேதேவிக்கு எங்கே அடிபட்டிருக்கு தேவா’ என்று கேலிச் சிரிப்புடன் கேட்டார். அதற்கு தேவன் ‘தொடையில் உதைச்சுப் போட்டதுங்க…’ என்று சொல்லி தொழுவத்தில் விழுந்திருந்த சாணியை அள்ளப் போனான். நான்கு நாட்களுக்குப் பிறகு வேலைக்கு வந்த கெரேதேவியிடம், தாத்தா எல்லோர் முன்னாலும் ‘கெரேதேவி எருது உதைச்சுப் போட்டதா… இங்கதான் உதைச்சுச்சா…’ என்று தொடையைக் காட்டிக் கேட்டபோது கெரேதேவி ‘சும்மா இருங்க சாமி…’ என்று வெற்றிலை அடக்கியிருந்த வாயை மேலும் அகலப்படுத்தி வெட்கி, தொழுவ வேலைக்குப் போனாள். அங்கே இருந்தவர்கள் எல்லாம் குசுகுசு என்று சிரித்தார்கள். இப்படி யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்று பார்க்காமல் எல்லோர் முன்னாலும் எதையாவது அருவருப்பாகப் பேசுவார் என்று தாத்தாவின் முன்னால் பெண்கள் வர பயப்படுவார்கள்.

இவ்வளவு சபலத்தனம் கொண்ட அவர் வீட்டில் மிகவும் மடி ஆசாரம் பார்ப்பார்கள். ஆண்களுக்கு பேண்ட் சட்டைகள் கூட இருக்கிறதோ இல்லையோ, ஏராளமான மடி வேட்டிகள் மட்டும் வீட்டு முற்றத்துக் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும். தினமும் காலையில் சீக்கிரமாகக் குளித்து விட்டு, மடி உடுத்திக்கொண்டு, சந்தியாவந்தனம் செய்து, பூசை செய்யும் மகானுபாவர்கள் வாயில் எப்போதும் இதுபோன்ற சொற்கள். பெண்கள் எதுவும் பேசாமல், வீட்டு வேலை செய்துகொண்டு, யாரொருவருக்கும் பதில் சொல்லாமல், எதையும் விரும்பாமல், அவர்கள் கொண்டு வந்து போடுவதை வாய் மூடிக்கொண்டு மெல்லும் பசுக்களைப் போல இருந்தால் அவர்கள் எல்லாம் மிகவும் நல்லவர்கள் என்று எண்ணுபவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அம்மம்மாவைக் குறித்த ஆட்சேபனை இருந்தது அவள் வேலை மீதல்ல. ‘ஏ… ஏய்…’ என்று தரையை அல்லது பாத்திரத்தைத் தட்டுவதற்காகவும் அல்ல. மாறாக அவள் சுவர் அருகே வந்து வெளிப்படையாகப் பேசுவதற்காக இருந்தது.

 

art: negizhan

 

ஆரம்பத்தில் அதைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப் படவில்லை. அவர் பிள்ளைகள் எல்லாம் பெரியவர்களாக, அதிலும் ஆண் பிள்ளைகள் பெரியவர்களாக அவர்களுக்கு அம்மாவின் இந்தச் செயல்கள் ஆட்சேபத்திற்குறியதாயின. ஒரு பெண் அப்படி வெளிப்படையாகப் பேசுவது என்றால் என்ன? ஆண் நான்கு பேர் முன்னால் கெட்ட ஜோக் சொல்லி சப்புக் கொட்டினாலும் நடந்துவிடும். ஆனால், ஒரு பெண் அதுவும் திருமண வயதை மீறிய பிள்ளைகள் முன்னால் இப்படியெல்லாம் பேசுவது சரியா… இப்படி மற்ற பிள்ளைகள் உள்ளுக்குள்ளேயே புழுங்கினாலும் மூத்த மகன் ராமசந்திரன் மட்டும் நேரடியாகக் கோபத்தில் திட்டுவான். சில சமயம் தாங்க முடியாமல் அடித்ததும் உண்டு. அவளுக்கு மகிழ்ச்சியானாலும், துயரமானாலும் ஏதாவது நிகழ்வு நடந்தாலும் உடனே அவள் சுவரிடம் சொல்லிக்கொள்வாள். நெருங்கிய நண்பனுடன் சொல்லிக் கொள்வது போல. பாசமான தாயிடம் குழந்தையொன்று தன் அழுகையை வெளிப்படுத்துவது போல.

யார் வைதாலும், அடித்தாலும் அம்மம்மா மட்டும் தன் சுவருடனான உரையாடலை விட்டவளல்ல. ஒருமுறை நடுப் பகலில் தாத்தா தோட்ட வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவர் உஸ்… அப்பா என்று அங்கே இருந்த கல் திண்ணை மீது உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தார். யாரும் காணாததைக் கண்டு, உரக்க அம்மம்மாவுக்குக் கேட்கும்படியாக ‘மோர் வேணும்…’ என்று கத்தினார். உடனே அம்மம்மா ஒரு பெரிய டம்ளரில் மோர் கொண்டுவந்து தாத்தாவின் முன் நீட்டினாள். எப்போதும் அப்படி நேரடியாகத் தாத்தாவிடம் கொடுத்தவள் அல்ல. யாராவது பையன்கள் கையில்தான் கொடுத்தனுப்புவாள். அன்று யாரும் இல்லாததால் அவளே எடுத்து வரும்படியானது. மோர் வாங்கியவர் டம்ளரில் ஈ ஒன்று விழுந்து மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்துச் சினத்தால் அம்மம்மாவின் முகத்தில் மோரை வீசி எறிந்தார். இதொன்றும் அம்மம்மாவுக்குப் புதிதல்ல. சில சமயம் சூடான தேநீரை அவள் உடம்பின் மீது இறைத்ததும் உண்டு. உடனே குளியலறைக்குப் போய் முகத்தை அலம்பிக்கொண்டு நேராகச் சுவர் அருகே சென்று சுவரில் தன் கன்னத்தை வெகு நேரம் உரசிக்கொண்டு நின்றாள். அங்கேயே இருந்த ரத்னா பாவம் என்பதைப் போல பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ராமசந்திரன் மட்டும், ‘போதும் வா… சாப்பிடற நேரமாச்சு. இன்னும் சமையல் ஆகலை. நைவேத்தியத்துக்குப் பிரசாதம் வேணும். குளிச்சு சோத்தை வடி’ என்று கட்டளையிடுவது போல சொன்னான். அம்மம்மா சுவரில் தேய்த்ததால் சிவந்த தன் கன்னத்தைத் தானே வருடிக்கொண்டு மெல்லப் போனாள். சோற்றை நைவேத்தியத்திற்கு வைத்துவிட்டு, எல்லோருக்கும் பரிமாறிய பிறகு தானும் பரிமாறிக்கொண்டு எப்போதும் போல அறைக்குச் சென்று படுப்பவள் அன்று படுக்கவே இல்லை. மாறாக, சுவர் அருகே சென்று வெகு நேரம் சுவர் மீது கன்னத்தை உரசிக்கொண்டே நின்றிருந்தாள்.

ஒருமுறை நன்றாக நினைவிருக்கிறது அவளுக்கு அது சதுர்த்தி பண்டிகை தருணம். பண்டிகைக்குப் பதினைந்து நாட்கள் முன்னதாகவே பெரும்பான்மையான வீடுகளில் கணபதியைச் சாட்டும் விழா ஏற்பாடுகள் நடக்கும். அதற்கு மண்டபம் தயார் செய்ய வேண்டும். கணபதியைத் தருவிக்க வேண்டும். முறுக்கு, எள்ளுருண்டை, அவலுருண்டை, பொரியுருண்டை எல்லாம் தயாராக வேண்டும். அதற்கு முன்பு வீடு முழுவதையும் சுத்தம் செய்து, கணபதியை உட்கார வைக்க ஒரு மண்டபம் தயார் செய்ய வேண்டும். மலை நாட்டுச் சதுர்த்தி பண்டிகை என்றால் அப்படித்தான்,  ஊரே பண்டிகையில் மூழ்கிவிடும். ஒவ்வொரு வீட்டிலும் கணபதியை வாங்கி வருவார்கள். பண்டிகை வரும் ஒரு மாதத்திற்கு முன்பே ‘முறுக்குக் கம்பளம்’ (கம்பளம் கன்னட சொல்-வேளாண்மையின் தொடக்க விழா என்று பொருள்) என்று செய்வார்கள். ஒரு வீட்டில் முறுக்குக் கம்பளம் செய்கிறார்கள் என்றால் ஊர்ப் பெண்கள் எல்லாம் அவர் வீட்டிற்குப் போய் முறுக்கு செய்து கொடுப்பார்கள். மறுநாள் மற்றொரு வீட்டில். ‘நாளைக்கு எங்க வீட்டில முறுக்குக் கம்பளம் வாங்கடி…’ என்று இந்தப் பெண்களை ஊர் பெண்கள் அழைத்துப் போவார்கள். அப்போதெல்லாம் டப்பாக் கணக்கில் முறுக்கு செய்து மாதக்கணக்கில் வைத்திருப்பார்கள். அதனால்தான் முறுக்குக் கம்பளம் என்றால் ஊர்க்காரர்கள் உதவி இருக்கும். அன்று யங்கி தாத்தா வீட்டில் முறுக்குக் கம்பளம் நடந்துகொண்டிருந்தது. அப்போது யங்கி தாத்தா வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் புது ஆடை வாங்கி வந்திருந்தார். அம்மம்மாவுக்கும் ஒரு சேலை வாங்கிவந்து, ‘ஏ… உங்க அம்மம்மா கிட்டக் கொடு’ என்று அங்கே விளையாடிக்கொண்டிருந்த பேத்தியிடம் கொடுத்தார். அடுக்களையில் ஏதோ வேலையாக இருந்த அம்மம்மா சேலையைக் கொடுத்த உடனே கபக் என்று பறித்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். நவாப் பழ நிறத்து, ஜரிகைக் கரையின் அந்தச் சேலையை அந்தக் கணமே அம்மம்மா மகிழ்ச்சியாக உடுத்திக்கொண்டாள். அத்தனை மகிழ்ச்சியாகச் சேலையை உடுத்திக்கொண்டு அம்மம்மா தாத்தா முன்னால் வந்து நிற்பாள் என்று பார்த்தால் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க அப்படியே அவள் போனது நேராகக் கூடத்திற்கு. எப்போதும் செல்லச் சிகப்புச் சிங்கார அழகியாக இருக்கும் அவள், அந்த நீலச் சேலையில் தேவதையைப் போலக் கண்டாள். ஊதா நிறச் சேலையுடுத்தி, தலை முடியைக் கொண்டை போட்டுக்கொண்டு, சிகப்புப் பவளக்குறிஞ்சி பூத் தண்டை கொண்டையைச் சுற்றிக் கட்டி, காதுக்கு இரண்டு வெள்ளை-சிகப்புப் படிகங்களின் வளையத் தோடு, அதன் மீது தங்கத்தால் கோத்த முத்து புகிடி4, மூக்குக்கு இரண்டு அக்கா தங்கைகள் போல மிளிரும் படிக மூக்குத்திகள், கழுத்தில் இருக்கும் இரண்டிழை சரம், கைக்கு இரண்டு தங்கக் காப்பு, கண்ணாடி வளையல்களுடன் காப்பும், பூசணி விதை அளவு கல் பதித்த இன்னும் இரண்டு வளையல்கள், எல்லாம் ஊதா சேலையுடன் பளிச் என்று மின்னி அம்மம்மா நவராத்திரி பூ, தங்க அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு வழிபாட்டிற்கு ஆயத்தமான அசல் அம்மனைப் போலவே கண்டாள். இப்படி ஒப்பனை செய்துகொண்ட அம்மம்மா சுவர் அருகே நின்று சேலையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே ‘எப்படித் தெரிகிறேன்… நான்…’ என்று கேட்டாள். அங்கிருந்து பதில் வருமோ இல்லையோ அதைப் பொருட்படுத்தாமல் தானாகப் பதில் சொல்லிக்கொண்டாள். ‘அதான் கல்யாணம் ஆனப்ப ஒரு சேலை வாங்கிக் கொடுத்தீங்களே, அதை விட இது நல்லாயிருக்கு’ என்று முன்னும் பின்னும் சேலை கொசுவத்தைச் சரி செய்துகொண்டே பேசிக்கொண்டு வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள். முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கூச்சத்துடன் எதெதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். அங்கே ஏதாவது கண்ணாடி இருக்கிறதா என்று தோன்றும் அளவிற்கு மெய் மறந்திருந்தாள் அவள். அவளைப் பின்தொடர்ந்து போய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவைப் போல நான்கைந்து சிறுமிகள் இது மிகவும் அதிசயம் என்று பொறுக்க முடியாமல் முடிவில் அம்மம்மாவின் கடைசி மகளிடம் நேரடியாக ரத்னா, யங்கி தாத்தாவின் பேத்தி வாசந்தி இருவரும் சேர்ந்து கேட்டு விட்டார்கள். அம்மம்மா எதற்கு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என்று. உடனே அவர்கள் வாயை அடைத்து, ‘கண்ணுங்களா உங்களுக்கு இதெல்லாம் புரியாது, நீங்க இன்னும் சின்னப் பிள்ளைங்க. இங்க இருந்து போங்க’ என்று செல்லமாக அதட்டி அனுப்பி வைத்தாள்.

இப்படித் தினம் தினம் ஆர்வத்திற்குக் காரணமான அம்மம்மாவின் செயல் ஒருமுறை விபரீதமாகும் தருணம் வந்துவிட்டது. அது யங்கி தாத்தாவின் இளைய மகன் சாதானந்தன் திருமணமான புதிது. அவன் வேலை என்று சிரசியில் இருப்பான். பெரிய பண்டிகைகளில் இது முதல் பண்டிகை என்று ஊருக்கு வந்திருந்தான். அவன் உறவினர்களும் கூடியிருந்தார்கள். அப்போது மூத்த மகன் ராமசந்திரனும் வீட்டில் இருந்தான். ஆனால், அவன் திருமணத்திற்கு முன்பு வீட்டில் அதிசயமாக இருப்பான். அவன் மட்டுமல்ல, யங்கி தாத்தாவும் இளம் பிராயத்தில் இப்படி வீட்டில் இருப்பதே கிடையாது. வீட்டில் மனைவியைத் தனியாக விட்டுவிட்டு ஊர்ச் சுற்றப் போய்விடுவார். இங்கே மனைவி குழந்தைகள் கணவனுக்காகக் காத்துக்கொண்டே இருப்பார்கள் பாவம். ‘அப்போது அப்பாவின் வாய்ப்பு இப்போது மகனின் வாய்ப்பு அவ்வளவுதான்…‘ என்று பக்கத்து வீட்டு சாவித்திரி அத்தை அடிக்கடி சொல்வது காதில் விழுந்திருந்தது. அதற்குச் சரியாகத் திருமணம் முடிந்த பிறகு சில நாட்களாவது ராமசந்திரன் வீட்டில் இருந்தான். புது மனைவி, புது உறவு. எல்லாம் புதிது… அந்த மனைவிக்கும் அம்மம்மாவின் இந்தப் பழக்கங்கள் எல்லாம் புதிது. ஆரம்பத்தில் அம்மம்மா தரையைத் தட்டுவதும், தலையைச் சீப்பால் அடித்துக்கொள்வதும் அவளுக்கு அதிசயமாகத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் முக்கியமாக அவள் சுவர் அருகே போய் நின்று சுவரைத் தடவிக் கொடுத்துக்கொண்டே அன்புடன் பேசுவதை எல்லாம் பார்த்துப் பயந்து கணவனிடம் கேட்டுவிட்டாள். அத்தை எதற்கு அப்படி நடந்துகொள்கிறார் என்று. ‘அவளுக்குப் பைத்தியம் அதனால்தான்…’ என்று கோபத்தில் சொல்லி இருந்தான். அதைக் கேட்டுவிட்டு முகம் வாட உள்ளே போய்விட்டாள்.

அன்று அவர் வீட்டில் வருடாந்திர வழிபாடு. இளைய மகனின் மனைவியின் உறவினர்களுடன் சேர்ந்து புதிய, பழைய உறவினர்கள் என்று அதிக ஜனங்கள் சேர்ந்திருந்தார்கள். தொழுவ வேலைகளை முடித்துவிட்டு வந்த ராமசந்திரன் சிற்றுண்டி முடித்துக்கொண்டு பிறகு குளிக்கப் போனவன் உள்ளே வந்து பார்க்கிறான். அன்று அழகாக அலங்கரித்துக்கொண்ட அம்மம்மா சுவரை வருடிக்கொண்டு மிக ரம்மியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். சுற்றி இருந்தவர்களின் உணர்வே இல்லாதவள் போல. உறவினர்கள் எல்லாம் அதிர்ந்து போய் அம்மம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ அற்புதம் அங்கே நடப்பது போல. அதைப் பார்த்து எங்கே இருந்ததோ கோபம் ராமச்சந்திரனுக்கு, ‘வா இங்கே… நீ இருக்க வேண்டியது இங்கயல்ல… வேறு இடம் இருக்கு அதுக்கு…’ என்று அவள் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான். நேராக அவளை வீட்டுப் பின்கட்டுத் தொழுவத்தைத் தாண்டி இருந்த ஒரு குடிசையில் அடைத்து வைத்து, ‘ஒரு ரெண்டு நாள் இங்கேயே விழுந்து கிட, அப்ப புத்தி வரும் உனக்கு…’ என்று கதவை சாத்திவிட்டு வந்தான். அப்படி அவளை இழுத்துக்கொண்டு போகும்போது மௌனமாகத் திரும்பித் திரும்பி தாத்தாவைப் பார்த்தாள் அம்மம்மா. ஆனால் தாத்தா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லோரும் அந்தக் காட்சியை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மனித உலகிலிருந்தே அவளை விலக்கி வைப்பது போலத் தோன்றியது.

எதிரே தொழுவம், கிணறுக்கட்டு, பின்னால் பெரிய குன்று, அதன் மீது அடர்ந்த காடு. குன்றின் கோடிக்கு ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல இருந்த அந்தத் தென்னங்கீற்றுக் கூரைக் குடிசையில் மின்சாரம் இருக்கவில்லை. மூங்கில் தட்டியால் கட்டியது போல ஒரு குடிசை. அதற்குச் சுவர்களே இருக்கவில்லை. அதனால் அம்மம்மா அங்கே என்ன செய்ய முடியும். மூங்கில் சுவர் என்று எண்ணி அதையே காதலிப்பாளா என்று நினைத்தால் அது தவறாக இருந்தது. அம்மம்மா அன்று பகல் முழுதும் அமைதியாக இருந்தாலும் இரவு உரக்கச் சத்தம் போட்டுத் தரையைத் தட்டுவது அதிகமானது. முக்கியமாக என்றும் அவள் வாயில் வராத வார்த்தைகள் எல்லாம் வந்தன. ‘ரண்டி5, முண்டை, தேவடியா, சிறுக்கி…’ இப்படி மனிதர்களிடமிருந்து என்னென்ன சொற்கள் வர முடியுமோ அவை எல்லாம் பாய்ந்து வந்தன. ‘டீ.., சிறுக்கி… என் புருசனை மயக்கிறையாடி… என் குடும்பத்தைச் சிதைக்கிறையாடி தேவடியாச் சிறுக்கி.., என் நகை வேணுமாடி உனக்கு…’ என்று கத்தினாள். சிறிது நேரம் கழித்து, ‘என் ஒத்தவடச் சங்கிலி எங்கடி போச்சு… நீதானே போட்டிருந்தே, இல்லையாடி…’ என்று மீண்டும் கத்தினாள். ஆனால், இப்படி வசை பாடினாலும்… இடையில் ‘ஏ…சாவித்திரி… குளியலறையை அந்தக் கடைசியில் இருந்து நல்லாத் தேய்ச்சுக் கழுவுடி, இல்லைன்னா பாசி கட்டிக்கும்… அடுக்களை அடுப்பை நல்லா துடை, உங்க தாத்தாவுக்கு ஏலக்கா போட்ட டீதான் வேணும். அதையே போட்டுக் கொடுங்க…’ இப்படி உட்கார்ந்த இடத்திலிருந்தே மருமகளுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தாள். ‘சும்மா இருக்கியா இல்லையா’ என்று மகன் அதட்டினாலும் அம்மம்மா கத்துவதை நிறுத்தவில்லை.

அதிசயம் என்னவென்றால் அப்படி அவளைக் குடிசையில் தள்ளிய பிறகு தாத்தாவும் கொஞ்சம் அயர்ந்து போனதுபோல இருந்தார். தேநீர் வேண்டுமென்று யாரிடமும் கேட்பதில்லை. வேண்டுமென்றால் தானே போய் போட்டுக் கொண்டு குடிப்பார். மருமகள் போட்டுக் கொடுக்கிறேன் என்றாலும் அவளைக் கண்டுகொள்ளாமல் தானே செய்து கொள்வார். ஏனோ தாத்தா மிகவும் தளர்ச்சியாக இருப்பதாகத் தோன்றியது. அதே சமயம் இங்கே அம்மம்மா இல்லாமல் சுவரும் மௌனமாக அழுவது போலத் தோன்றியது. இப்போது சுவர் எப்படி இருக்கலாம் என்று ரத்னா போய் நின்று பார்த்தாள். இப்படிச் சில நாட்கள் தொடர்ந்தன. அம்மம்மா கத்துவதையும் கட்டளையிடுவதையும் நிறுத்தி இருக்கவில்லை. ‘அத்தையை உள்ளே அழைச்சிட்டு வாங்க…’ என்று ராமசந்திரனின் மனைவி சொன்னாலும் கேட்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.

இவ்வளவு எல்லாம் நடந்தாலும் யங்கி தாத்தா ஒன்றும் பேசவில்லை. ஆனால், நாளுக்கு நாள் நொடிந்து போனார். ஆனால்… அது என்ன நடந்ததோ… ஒருநாள் சித்தாபுர சந்தைக்குப் போன தாத்தா நேராக வீட்டுக்கு வந்தவர், பின்கட்டுக்குப் போய் குடிசைக் கதவைத் திறந்து எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க அம்மம்மாவின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்துவிட்டார். ராமசந்திரனும் அப்பாவின் அந்த நேரத்துத் துணிச்சலுக்கு ஒன்றும் சொல்ல முடியாதவன் போல வாயடைந்து நின்றிருந்தான். தாத்தா அம்மம்மாவைக் குளியலறைக்கு அழைத்துச் சென்று ‘குளி’ என்று சொல்லி அவள் சேலை, துண்டு எல்லாம் அவரே எடுத்துவந்து கொடுத்தார். எல்லோரும் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள், ஏதோ அற்புதம் நடப்பது போல.

உண்மையில் பின் நாட்களில் அங்கே ஓர் அற்புதமே நடந்துவிட்டது. அதுவரை ஒரே ஒரு வார்த்தைக் கூட பேசாத தாத்தா – அம்மம்மா இருவரும் பேசத் தொடங்கினார்கள். முக்கியமாக அம்மம்மா இப்போது சுவர் அருகே போவதில்லை. தாத்தாவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார். அன்புடன் தேநீர் போட்டுத் தன் கையால் அவருக்குக் கொண்டு வந்து கொடுப்பாள். முன்வாசல் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு தாத்தாவுக்கு அலம்பி மிருதுவாகியிருக்கும் புகையிலையை எடுத்துவந்து கையால் தேய்த்துத் தேய்த்து மேலும் மிருதுவாக்கி, வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவி, பாக்கைப் பொடி செய்து அதன் மீது புகையிலையை வைத்து, வெற்றிலையால் சுற்றி தாத்தாவின் வாயில் வைப்பாள். தாத்தா கொழுந்து வெற்றிலைக்குக் கொஞ்சமாகச் சுண்ணாம்பு தடவிச் சுருட்டி அம்மம்மாவின் வாயில் வைப்பார். இந்த அதிசயத்தை ஊர் மக்கள் எல்லோரும் பார்த்து, என்ன நடக்கிறது என்று வியந்தார்கள். இப்போது தாத்தாவுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா… என்றெல்லாம் பேசிக்கொள்ளும் அளவிற்குத் தாத்தாவிடம் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இப்படி வாழ்க்கையின் மாலையில் பேசிக்கொண்ட தாத்தா-அம்மம்மா ஒரே நாளில் இறந்து போனது மட்டும் அதிசயமாக இருந்தது. ஒருவருக்கு வயது 90 மற்றொருவருக்கு 70ஆக இருக்கலாம். மேலும் சிறப்பு என்னவென்றால், தான் இறந்த பிறகு பிணத்தை எரிக்கத் தனக்கும், தன் மனைவிக்கும் சேர்த்து விறகு வெட்டிக் குவித்து வைத்தார் தாத்தா. அதே விறகால்தான் தங்களை எறிக்க வேண்டுமென்று முன்பே பிள்ளைகளிடம் சொல்லிவிட்டார். முக்கியமாக மூத்த மகன் ராமசந்திரனுக்குக் கட்டளையிட்டிருந்தார். ‘நீங்க யாரும் திவசம் செய்யணும்னு எந்தச் சிரமமும் எடுக்கத் தேவையில்லை. எல்லாம் நானே செய்து வைத்துவிட்டுப் போகிறேன். எங்கள் சிராத்தத்தை6 நீங்க செய்யணும்னு சொல்லலை’ என்று தங்கள் ஈமச் சடங்கிற்குத் தேவையான பணத்தையும் விறகையும் சேர்த்து வைத்திருந்தார். ஏனோ தெரியாது. அவர் இப்போது குழந்தைகளுடன் பேசுவதில்லை. அப்படி விறகு வெட்டிக் குவித்து வைத்துச் சில மாதங்கள் கடந்திருக்கும். தாத்தா காலை பூசையை முடித்துக்கொண்டு சிற்றுண்டிக்கு என்று சமையலறைக்குள் வந்தால் அம்மம்மாவைக் காணவில்லை. அவள் இன்னும் எழுந்தே இருக்கவில்லை. எப்போதும் அம்மம்மாதான் முதலில் எழுந்து சாமிக்கு பூ, அருகம்புல் பறித்து, பால் கறந்து, தேநீர் போட்டு, தாத்தாவை எழுப்பி அவருக்கு டீ கொடுப்பது வழக்கம். ஆனால், அன்று எவ்வளவு நேரமானாலும் விழிக்காமல் இருப்பதைப் பார்த்து தாத்தா அறைக்குப் போய் பார்த்தால் இன்னும் படுத்தே இருந்தாள். ‘என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டுருக்கே’ என்று எழுப்பப் போனால் தேகம் குளிர்ந்த மரத் திண்டு போலக் கிடந்தது.

பிள்ளைகளும், தூரத்திலிருந்து உறவினர்களும் வந்தார்கள். கூடத்தில் படுக்க வைத்திருந்த அம்மம்மாவின் உடலுக்குத் தண்ணீர் ஊற்றி யங்கி தாத்தா பற்றற்று நின்றிருந்தார். தான் அவளை நடத்திய முறை, அவள் அன்புடன் கொடுத்த ருசியான கவளம், அவள் வேலை, அவளுடைய அந்தச் சுவர் எல்லாம் நினைவுக்கு வந்து, அன்று முதல்முறையாக யங்கி தாத்தாவுக்கு இவள் எதற்காக அப்படிச் சுவரிடம் பேசிக்கொண்டிருந்தாள் என்ற கேள்வி வதைக்கத் தொடங்கி, பலதை நினைத்துக் கண்ணீரானார். ஏனோ… அவளிடமிருந்து வந்த இந்த வீடு, இந்தச் சொத்து, இந்த நகை, அந்த வைபவம் எல்லாம் அவளுடனேயே போவது போலத் தோன்றியது. பிணத்தை எரிக்கச் சுடுகாட்டிற்கு வரவில்லை. பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அம்மம்மாவின் உடலைத் தகனம் செய்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த யங்கி தாத்தா அங்கேயே படுத்திருந்தார். ‘குளிச்சாச்சா’ என்று மகள் ஷராவதி பேச வந்தாள். எங்கே இருக்கிறார் தாத்தா. உயிர் பிரிந்து எத்தனை நேரமானதோ… ‘அய்யோ… அம்மாவுடன் அப்பாவும் போய்விட்டார்’ என்று கத்தினாள் ஷராவதி. இது எல்லோருக்கும் கிடைக்கும் சாவல்ல. இருவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று ஜனம் பேசிக்கொண்டார்கள்.

தாத்தாவும் அம்மம்மாவும் போன பிறகு அந்த வீடு ஒருவகையில் வெறிச்சோடிக் கிடந்தது. வீடு வெறிச்சோடிக் கிடந்தது என்பதைவிடவும் நடு முற்றத்துச் சுவர் அநாதையானது போலத் தோன்றியது. அம்மம்மா உயிரோடிருந்தபோதெல்லாம் அவ்வளவு பேசும் அந்த வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தால் என்ன கதி என்று தோன்றும். ஒருமுறை வேகமாகக் காற்றும் மழையும் வந்து தொழுவத்துக் கூரை ஓடுகள் எல்லாம் பறந்து போயிருந்தன. கீழச்சேரி மஞ்சன் வீடு அந்தக் காற்று மழை அடித்த வேகத்திற்கு இடிந்து போனது. அதேபோல இந்த வீட்டுச் சுவரும் இடிந்து போனால் அம்மம்மா என்ன செய்வாள். அல்லது வீட்டிற்குச் சுவர்களே இல்லாமல் இருந்தால் அவள் கதி என்னவாகும்…? என்றெல்லாம் தோன்றும். ஆனால், இப்போது அம்மம்மா இல்லை. சுவர் மட்டும் அப்படியே இருக்கிறது.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த செய்தி. தற்போது அம்மம்மாவின் மூத்த மருமகள், என்றால் ராமசந்திரனின் மனைவியும் இப்படிச் சுவர் அருகே நின்று பேசுகிறாள். தேநீர் வேண்டுமென்றால் சுவரிடமே கேட்கிறாள். அம்மம்மாவை விடவும் உரக்கச் சத்தம் போட்டுக்கொண்டு தரையைத் தட்டுகிறாள் என்று.

… என்றால் இப்போதும் அங்கே சுவர் இருக்கிறது…!

m

1. அங்கணம் – இரண்டு தூண்களுக்கு இடையிலான தொலைவு

2. யக்னேஷ்வரன் – கரிய நிற சிவன்

3. மூட்டுத்துணி – தூமை துணி

4. புகிடி – ஒருவகை ஆபரணம்

5. ரண்டி – வசைச் சொல்

6. சிராத்தம் – பிராமண வழக்கு – கருமாதி

ஆசிரியர் குறிப்பு:

பாரதி ஹெக்டே : பத்திரிகையாளர், எழுத்தாளர். வட கர்நாடகாவின் சித்தாபூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். புனைவு, வேளாண்மை, சினிமா, வாழ்க்கை வரலாறு போன்ற விஷயங்களில் நான்கு படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஆறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

கே.நல்லதம்பி : ஒரு தனியார் கம்பெனியில் வியாபாரப் பிரிவின் அகில இந்திய மேலாளராகப் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மொழிபெயர்த்துவருபவர். மொழிபெயர்ப்புக்கான கேந்த்ர சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!