என் உடல் வளர்ந்தது,
மேல்நோக்கி,
என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி,
என் உடல் வளர்ந்தது
நான் கண் விழித்தேன்.
ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க,
ஒன்று மற்றொன்றாக மாறி,
இணைந்தும்,
பிரித்தும்.
நான் இனி கனவு காணப்போவதில்லை,
நான் அதிலிருந்து விழிப்பேன்,
மீட்கப்படுவேன்.
ஆன்மா இல்லாமல் என் உடல் வாழக் கற்றுக்கொண்டது.
நான் இறந்தேன்
நான் இறந்தேன்: அறிமுகமில்லாத பறவைகள் என் ஆன்மாவைச் சூழ்ந்தன,
என் ஆன்மாவை அவை எடுத்துக்கொண்டன.
என் உடல் சிதைந்தது, அழுகியது,
புழுக்கள் அதை உண்டன
அதன் மிச்சம் இப்போதிருக்கும் நான்…
m
Illustration : Rose Jaffe
என் சோர்ந்த உடலில்
நான் என் தேய்ந்த ஆன்மாவை அணிந்திருக்கிறேன்,
நான் புறப்படுகிறேன்.
தோல் காய்ப்பிலிருந்து எழும் எரிச்சலோடு முனங்கும்
ஒரு காலணியை அணிந்திருக்கும் கால் போல
என் உடல் என் ஆன்மாவோடு நன்கு பழகியிருந்தது,
நான் சொல்கிறேன், காத்திருங்கள்,
நாங்கள் அதை வேறொன்றைக் கொண்டு மாற்றிவிட மாட்டோம்
அது விலை உயர்ந்தது,
அது என் சோர்ந்த உடலுக்குப் பொருந்தாதது.
நான் என் தேய்ந்த ஆன்மாவை அணிந்திருக்கிறேன்.
இரண்டுக்கும் மத்தியில்
நான் ஒரு வாழ்நாள் இடைத்தரகன்.
அலைந்து திரியும் என்னிந்த வாழ்வில்
நான் உடலும் அல்ல, ஆன்மாவும் அல்ல.
l
சிரானுய்ஷ் ஓஹன்யான்: ஆர்மீனியாவின் மதத் தலைநகரான எட்ச்மியாட்ஜினில் பிறந்தார், எனினும் அவர் மதம் சார்ந்தவர் அல்லர். சிரானுய்ஷ் தன்னை ஓர் எழுத்தாளராகக் காட்டிக் கொள்வதில்லை. அவர் சக எழுத்தாளர்கள் மத்தியில் நடைபயணம் மேற்கொள்பவராகவும், சக மலையேறுபவர்கள் மத்தியில் விக்கிப்பீடியா ஆசிரியராகவும், சக விக்கிப்பீடியர்களிடையே ஒரு புரோகிராமராகவும், சக புரோகிராமர்கள் மத்தியில் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். யெரெவன் மாநில பல்கலைக்கழகத்தில் ரேடியோபிசிக்ஸ் & மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரது சிறுகதைத் தொகுப்பு Խորքում, (In the Depth, 2010).