சமூக வீரன் ஆம்ஸ்ட்ராங்

ஸ்டாலின் ராஜாங்கம்

குஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளாகவே இருந்தன. அதேபோல சமூகவலைதள அரசியல் சமூகத்திடையேயும் கனத்த மௌனம் நிலவியது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்தாவது நாளில் ஆம்ஸ்ட்ராங் வீடு தேடிவந்து துக்கம் விசாரித்துவிட்டுச் சென்றார். பின்னர் மற்ற மைய நீரோட்டக் கட்சிகள் வந்தன.

இந்த வருகைக்குப் பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கலாம் என்றாலும், சமூக வலைதள அழுத்தங்களை இதற்கான முக்கியக் காரணமென்று பலரும் குறிப்பிடுகின்றனர். அதுவும் உண்மைதான்.

முதலில் என்ன நடந்தது? அவர் கொல்லப்பட்ட செய்தி பரவியதும் ஒருபக்கம் காவல்துறையும், மறுபக்கம் ஆளும் கட்சியான திமுக இணைய அனுதாபிகளும் வேகவேகமாக அவர் ரவுடி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்கிற கதையாடல்களைப் பரப்பினர் (நேரடியாகவும், அந்தத் தொனியிலும்). அவ்வாறு சொல்வதன் மூலம் அவர் கொல்லப்பட வேண்டியவர் என்கிற தர்க்கம் கிடைத்தது. இதன் மூலம் அவர் கொலையை மட்டுமல்ல, அதைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிலிருந்தும் அரசைக் காப்பாற்றுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.

இத்தகைய கதையாடல் உண்மையா, பொய்யா என்பதைவிட இந்தச் சூழலில் அப்படியொரு கதையாடல் அதிகார சக்திகளுக்குத் தேவைப்படுகிறது என்பதே உண்மை. எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும் இவையே நடந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் மேன்மையைவிட இத்தகைய ‘கீழ்மை’யைச் சொல்லும்போது சாதி உளவியல் காரணமாகப் பொதுச் சமூகமும் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது.

ஆனால், தன்னைப் பற்றிய இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகம் தொடர்ந்து கடுமையாகப் போராடிவந்திருக்கிறது. தன்னைப் பற்றி வலிந்து கட்டமைக்கப்பட்ட பொய்களுக்கு எதிராகத் தனக்கான உள்மெய் கதையாடலை அது சொல்லத் தொடங்குகிறது.

அதிகாரச் சமூகம் கட்டமைக்கும் இத்தகைய பொய்க் கதையாடல்களுக்கு எதிராகத்தான் எளிய மக்களின் கதைப்பாடல்களும், சமூகக் கொள்ளையர்கள் பற்றிய கதைகளும் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகின்றன என்றாலும், அவை சமூக ஏற்பை அடையும்போது ஒடுக்கப்பட்டோருக்கான சிறுமீறலுக்கு இடமளித்துவிட்டு அவற்றை மீண்டும் தனக்கேற்பத் திரித்துக்கொள்கிறது என்பதையும் பார்க்கிறோம்.

m

ஆம்ஸ்ட்ராங் பற்றிய அதிகாரத்தின் கதையாடல் ஒருபுறம் என்றால், அதே நேரத்தில் சமூக வலைதளம் வழியாக ஒடுக்கப்பட்டோர் முன்வைத்த அவர் பற்றிய அனுபவங்கள் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. சரியாகச் சொல்ல வேண்டுமானால் அதிகாரம் உருவாக்கிய கதையாடலுக்கு மாற்றான கதையாடலாகத் திட்டமிடாமலே அவை அமைந்துவிட்டன.

‘ரவுடிகளுக்குரியதான’ வன்முறை, ஆயுதங்கள், ரத்தம், பழிக்குப் பழி, கொலை என்று எதுவும் அக்கதையாடல்களில் இல்லை. அதற்கு மாற்றாக கல்வி, நூல்கள், பேனா, நோட்டுப் புத்தகங்கள், மாணவர் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுதிகள் போன்றவையே அவற்றில் இருந்தன.

மாணவர்களுக்குத் தங்க இடம் கொடுத்தார், நோட்டுப் புத்தகம் வாங்கித் தந்தார், பிரச்சினையின்போது உதவினார், பலர் வழக்கறிஞராவதற்கு உதவி புரிந்தார் என்பதான செய்திகள் பலராலும் திரும்பத் திரும்ப நினைவுகூரப்பட்டன. அவரை அறிந்தவர்களுக்கு இவை எவையும் மிகையில்லை என்பது தெரியும்.

ஒருவர், அவர் தனக்குப் புத்தகம் வாங்கி அனுப்பியதைக் குறிப்பிட்டார். ஒருவர், அவரிடமிருந்த புத்தகத்தையே தனக்கு அளித்ததைப் பற்றி எழுதினார். இன்னொருவர், அவர் வீட்டில் தன்னை அமர வைத்து பாபாசாகேப் அம்பேத்கர் நூல்களைத் தொகுதி வாரியாக – பக்கம் வாரியாக எடுத்துக் காட்டிப் பேசியதை எழுதினார். தான் எழுதிய அம்பேத்கர் தொடரைப் படித்துவிட்டுத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார் என்று ஒரு தலித் அல்லாத நண்பர் எழுதினார். தன்னுடைய உரையொன்றைக் கேட்டுவிட்டு அழைத்துப் பேசினார் என்றெழுதினார் மற்றொருவர். தானெழுதிய நூலொன்றின் பல நூறு பிரதிகளைக் காசு கொடுத்து வாங்கி விநியோகித்தார் என்றெழுதினார் எழுத்தாளர் ஒருவர்.

அவருடைய பழைய உரைகளின் வீடியோ துண்டுகள் சுற்றில் வந்தன. அவை எல்லாவற்றிலும் படிப்பது பற்றியே அவர் பேசியிருந்தார். ஒரு பேச்சிலும் வெட்ட – குத்த அழைக்கும் வன்முறை விளிப்பு அவரிடமில்லை. ஒரு பேச்சில் சட்டைப் பையிலிருக்கும் பேனாவை அம்பேத்கரின் பேனாவாகக் கூறி, அதுதான் நம்மைத் தலைநிமிர வைத்தது என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். மற்றொரு பேச்சில் தன்னை வரவேற்கக் கட்டப்பட்ட பேனருக்கான செலவில் மாணவர்களுக்கு உதவி செய்திருக்கலாம் என்கிறார்.

இத்தனைக்கும் அரசியல் சமூகம் அவரை முற்றிலும் புறக்கணித்துவந்தது. (அவரும் அதற்கு மெனக்கிட்டதில்லை.) 24 மணி நேர செய்தி சேனல்களின் எந்த விவாத நிகழ்ச்சியிலும் அவர் அழைக்கப்பட்டதில்லை. இந்த வெளிச்சம் விழும் மைய நீரோட்டத்திலிருந்து விலகி எங்கோ ஓரிடத்தில் யாருக்கோ ஒரு வேலையை அவரால் செய்து தர முடிந்திருக்கிறது. அதன் பிரதிபலிப்பை அவர் மரணத்தின்போது பார்க்க முடிந்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சக அமைப்புகளின் தொண்டர்கள் தவிர யாரென்றே தெரியாத எளிய மக்கள் அஞ்சலி செலுத்த வந்துகொண்டே இருந்தார்கள். நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருந்தார்கள். அவர்களில் குடும்பப் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் இருந்தனர். பல மதத்தவர் இருந்தனர். அடக்கத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால் உடலைப் பார்க்க முடியாமல் போனவர்களும் உண்டு. அடக்க ஊர்வலத்தின்போது ஆங்காங்கு நின்ற மக்கள் அஞ்சலி செலுத்தி வழியனுப்பினர். மாலை தொடங்கிய இறுதி ஊர்வலம் இருபதுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டரைக் கடக்க நடுநிசியைத் தாண்டியது. அவரை அடக்கம் செய்த பிறகும் புதைமேட்டிற்குச் சென்று முகம் தெரியாத பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தியபடியே இருக்கிறார்கள்.

எத்தகைய மாற்றுக் கதையாடல்கள் இவை! அதிகார பீடங்கள் எழுப்ப முயன்ற கதையாடல்களுக்கு இவற்றில் பதில் இருக்கின்றன. அதிகார வர்க்கத்தினர் உருவகப்படுத்திய அரிவாளுக்கு எதிராக மக்களின் கதையாடல்களில் புத்தகமும், வன்முறையற்ற வாழ்வுக்கான அறிவும் நிரப்பப்பட்டிருந்தன.

அவரை அடக்கம் செய்ய சென்னையில் இடமளிக்காமையைக் கூட இந்த ரவுடி கதையாடலின் தொடர்ச்சியிலேயே பார்க்க முடியும். அவருக்கிருந்த ரவுடி பிம்பம் கூட எளிய மக்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுவோர் உளவியல் பலமாக இருந்தது என்பதே உண்மை. அத்தகைய பலம் இக்கொலை மூலம் காலி செய்யப்பட்டிருக்கிறது என்பதே அவர் ஆதரவாளர்கள் குரல்களின் அடிநாதமாக இருக்கிறது. அவரைச் சட்ட ஒழுங்கு எல்லைக்குள் மட்டும் இருத்திப் பேசுவோரால் ஒருபோதும் இந்த உளவியலைப் புரிந்துகொள்ள முடியாது.

அரசும் மைய நீரோட்ட ஊடகங்களும் புறக்கணித்தாலும் வெகுமக்களின் நினைவுகளில் ஆம்ஸ்ட்ராங் அரசியல் வீரராக மட்டுமல்லாமல் சமூக வீரராக நிலைபெற்றுவிட்டார் என்பதையே வெகுமக்களின் கதையாடல்கள் காட்டுகின்றன. இனி அவர் பற்றிய வரலாறு அவரிலிருந்து அமையாது. வெகுமக்களின் நினைவுகளிலிருந்து கதையாக – பாடலாக – நினைவுகளாக உலவும். பொதுவாக, உலகமெங்குமே சேரிகளுக்கும் குற்றச் செயற்பாடுகளுக்கும் இடையே தொடர்பும், அதன் அரசியலும் பேசப்பட்டிருக்கின்றன. கறுப்பின வரலாற்றில் இதனை விரிவாகப் பார்க்க முடியும். சேரிகளைக் குற்றவுலகம் என்பதாகப் பிம்பப்படுத்துவது அதிகாரச் சக்திகளின் மகத்தான புனைவு. மால்கம் எக்ஸ் அங்கிருந்துதான் தோன்றுகிறார். மெத்த படித்தவர்கள் தராத உணர்ச்சியை அவர்தான் கறுப்பர்களுக்குத் தந்தார். எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக – பொத்தாம் பொதுவாக – தனி நபர்கள் சார்ந்து மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. அந்த ஜனங்கள் அடர்ந்த – தேவைகள் பூர்த்தி செய்யப்படாத சிறிய உலகத்திற்குள் பல தலைவர்கள் இருப்பர். அவர்கள் அரசோடு கொண்டிருக்கும் தொடர்பைக் காட்டிலும் மக்களோடு கொண்டிருக்கும் நெருக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் தேசம் / மாநிலம் தழுவிய பெரிய அரசியல் பிரச்சினைகளை விடவும் அன்றாடத்தோடு தொடர்புடைய சிறிய பிரச்சினைகளைப் பேசியவர்களாக இருப்பார்கள். இப்பிரச்சினைகள் பெரும்பாலும் உள்ளூர் அளவிலானவை. எனவே, உள்ளூர்ப் பிரச்சினைக்கேயுரிய சண்டை, வழக்கு போன்றவற்றோடு இணைய வேண்டியவர்களாக இருந்துவிடுகிறார்கள். இதனாலேயே ‘வெளியே’ இருப்பவர்களுக்குத் தெரிவதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்துவிடுகிறார்கள். இவ்விடத்தில் அவர்கள் மீது அரசும் ஊடகங்களும் தரும் அர்த்தங்களிலிருந்து விலகி தங்களுடைய உள்ளூர் அனுபவத்திலிருந்து வேறோர் அர்த்தத்தைத் தருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் மீதான பிம்பங்களை இவ்வாறும் உப்பக்கம் காண முடியும்.

m

இவ்வாறு அவரைச் சமூக வீரன் என்று கூறுவதால் “நவீன அரசியலுக்கு வெளியே இயங்கியவர், மக்களின் வழக்காற்றால்தான் நினைவுகூரப்படுவார்” என்று மட்டுமே பொருள்படுத்துவதாக நேரடி அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. பெருஞ்சமூகத்திற்கேற்ற பெருங்கதையாடல் கட்டமைக்கப்படும் வெகுஜன சமூகத்தில் என்ன நடக்கும்? என்ன நடக்கிறது? என்பவற்றைச் சுட்டவே இவை குறிப்பிடப்பட்டது. மற்றபடி ஆம்ஸ்ட்ராங் அரசியல்ரீதியாக – கருத்தியல் ரீதியாக ஒரு நவீனர். நவீன மதிப்பீடுகளை ஏற்றவர். அவர் வலியுறுத்திய பேனா, புத்தகம், வாசிப்பு என யாவும் நவீனத்தின் யோசனைகளே. பாரம்பரியத்தின் சுமையை நவீனத்தின் துணை கொண்டு அழித்தொழிப்பதைப் பேசிய அம்பேத்கரிய நம்பிக்கையை ஏற்றவர். நவீனத்தை ஏற்ற கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். மரபில் தலித்துகளுக்கு எதுவும் இருந்ததில்லை, நவீனக் கல்வி வந்த பிறகே தலைநிமிர்ந்தோம் என்பதே அவர் பார்வையாக இருந்திருக்கிறது. இது முற்றிலும் நவீனத்தின் பார்வையாகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கென்று சாதியச் சமூகத்தால் ஒதுக்கித் தரப்பட்டவற்றை விலக்கி நவீனமான அடையாளங்களை ஏற்க வேண்டுமென்பது அவரது புரிதலாக இருந்திருக்கிறது. அவரின் வெண்ணிற ஆடை, நன்கு மழிக்கப்பட்ட முகம், ஆபாசமோ – வன்முறையோ இல்லாத நிதானமான பேச்சு போன்ற அடையாளங்களே அதற்குச் சான்று. தலித்துகள் தங்களை நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே அவரின் விருப்பமாக இருந்திருக்கிறது. மரபான மனுவிற்கு எதிராக பாபாசாகேப்பால் எழுதப்பட்ட நவீனமான இந்திய அரசியல் சட்டத்தைத் தொடர்ந்து வலிறுத்திப் பேசிவந்தார். அவர் பண்டிதர் அயோத்திதாசரின் பங்களிப்பை ஏற்றவர் என்றாலும், அவரில் செயற்பட்டது பாபாசாகேப்பின் செல்வாக்கு கொண்ட பௌத்தம்தான். எனவே அவரை, சமகாலத்தின் நவீன அரசியலுக்குரிய எல்லாத் தகுதியோடும் நம்பிக்கையோடும் இயங்கிய ஆளுமை என்று கூற முடியும். அவர் உயர்த்திப் பிடித்த இந்த மதிப்பீடுகளை அவருக்கான பொது அரசியல் வரலாற்றிற்குள் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்களின் ஆளுமை தவிர்க்க இயலாததாக மாறிவிடும்போது ஒன்று உள்வாங்குதல், இரண்டு அழித்தல் என்கிற இரண்டு வழியிலேயே ஆதிக்கச் சமூகம் செயற்பட்டிருக்கிறது. உள்வாங்கியமைக்கு உதாரணங்களாக “ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு உருமாற்றம் அடைதல், இருவேறு சாதியினருக்கு இடையில் பிறந்தார்கள் என்றாக்குதல்” ஆகியவற்றைக் கூறலாம்.

ஒருவரின் ஆளுமையைச் சிதைப்பதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று பெண் சபலமுடையவர்களாகக் காட்டுவது, இரண்டு முறைகேடர்களாகக் காட்டுவது. முதலாவது போக்கை மரபான கதைகளில் பார்க்கலாம். மகளையே திருமணம் செய்துகொண்ட பறையன் போன்ற கதைகளை உதாரணங்களாகக் கூறலாம். இரண்டாவது போக்கை இன்றைய பொருளில் ரவுடிகள் – வன்முறையாளர்கள் என்று கூறப்படுவதைக் காட்டலாம். ஆம்ஸ்ட்ராங் என்னும் ஆளுமையைச் சிதைக்க அரசதிகாரமும் ஊடகங்களும் கையாண்ட உத்தி இதுதான். தமிழ்நாட்டு அரசியலில் இதுபோன்ற வாதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. இரவுடியிசம் என்பது இன்றைய அரசியல் அதிகாரத்திற்கான மாபெரும் செலாவணி. இரவுடிகளைக் கையாள்வதிலிருந்தே இங்கு பல கட்சிகளின் ஆயுள் நிலைத்திருக்கிறது. அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரத்திற்கு வந்திருக்கும் வரலாறு அங்கிருந்து ஆரம்பித்ததாக இருக்கிறது. வலுத்தவன் சொல் அம்பலம் ஏறும் என்பதற்கு உதாரணம் இதுதான். அதிகார பலத்தைக் கொண்டு ரவுடிகள் புனிதராகியிருப்பதும், புனிதர்கள் ரவுடிகள் ஆக்கப்பட்டிருப்பதும்தான் இன்றைய வரலாறு. ஏழைச் சொல் அம்பலம் ஏறாததால்தான் மக்களின் வழக்காற்றையேனும் நாம் துணைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுச் சமூகம் ஏற்றிய அடையாளத்திற்கு எதிரான போராட்டத்தைத் தன் செயற்பாடுகள் வழியாக ஆம்ஸ்ட்ராங் நிகழ்த்திவந்தார். நிகழ்ந்ததற்கும் சொல்லப்பட்டதற்கும் இடையிலான பெரும் முரண் அதில் இருக்கிறது. அதாவது, ரவுடி என்போர் பற்றிய பொதுப் பிம்பம் என்ன? ஏமாற்றுபவன், கொலையாளன் போன்றவைதாம். அதாவது மக்களைத் துன்பத்தில் தள்ளி இன்பம் காண்பவர், கருணையற்றவர் என்றெல்லாம் அர்த்தங்கள் விரிகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் மாற்றுவதற்கான தத்துவத்தையும் செயற்பாடுகளையும் கொண்ட சமயம் பௌத்தம். கொலையாளிகளையும் திருடர்களையும் மனமாற்றிய கதையாடல்களைக் கொண்டது பௌத்தம். ஆம்ஸ்ட்ராங் பௌத்த மதத்தைத் தழுவியதோடு அதைப் பற்றித் தொடர்ந்து பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பௌத்தத்தின் உள்ளடக்கத்திற்கு எதிராக அவரைப் பிம்பப்படுத்தியது எத்துணை பெரிய முரண். ஆம்ஸ்ட்ராங் பற்றி இன்றைக்கு எளிய மக்கள் கூறும் “உதவியவர்” என்பன போன்ற நினைவுகூரல்களை இப்பின்னணியில் புரிந்துகொள்ளும்போது அவர் பற்றிய புகழாரங்களின் அர்த்தம் மேலும் ஆழமுள்ளதாகிறது. உண்மையில் அவரை வன்முறையாளன் என்று சொல்லியதுதான் வன்முறை.

m

ஆம்ஸ்ட்ராங்கை “மெட்ராஸின் வீரன்” என்கின்றனர். அவர் கொலைக்கு நீதி கேட்டு நடந்த பேரணியில் கூட “மெட்ராஸ் எங்களுடையது” என்று குறிப்பிட்டார் பா.இரஞ்சித்.

இதனை நேரடியாகப் பொருள் எடுத்துக்கொண்டு “இவர்கள் மற்றவர்களை விலக்குகின்றனர்” என்று கூறுகின்றனர். மெட்ராஸைத் தலித்துகளோடு சேர்த்துக் கூறுவதற்கு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. மெட்ராஸில் பல்வேறு சாதியினர் வாழ்கின்றனர், அதில் அவர்களுக்கும் உரிமையுண்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மெட்ராஸின் உருவாக்கத்திலும், இருப்பிலும் முக்கிய பங்கு வகித்த ஒரு சமூகக் குழுவின் இருத்தலுக்குத் தொடர்ந்து சிக்கல் வரும்போது இத்தகைய குரல் எழவே செய்யும். இது ஆதங்கம் மட்டுமல்ல, ஆதாரப்பூர்வமானதுங்கூட. தலித் மக்களின் எழுச்சிக்கு மெட்ராஸ் எப்போதும் மையமாக இருந்திருக்கிறது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலவுரிமைக்காக, சென்னை கலெக்டருக்கு எதிராகப் பூந்தமல்லி தலித்துகள் கலகம் செய்தனர். வரலாற்றில் அது ‘பறையர் கலகம்’ என்றழைக்கப்படுகிறது. நவீன அரசியல் அறிமுகமானபோது அதில் பிராமணர்கள் ஒருபக்கம் ஆதிக்கத்தைத் தக்க வைக்க முயன்றபோது, மெட்ராஸ் தலித்துகளே சமூகநீதி அரசியலைக் கட்டமைத்தார்கள். நவீன அரசியலில் தலித்துகளின் முதல் எழுச்சி மெட்ராஸிலேயே நடந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே வெகு மக்களைத் திரட்டி மாநாடு, பேரணி போன்றவற்றை ரெட்டைமலை சீனிவாசன் மெட்ராஸில்தான் நடத்தினார். தலித்துகளில் பாவலர்களும் புலவர்களும் இருந்து நூல்களை அச்சிட்டதும், அரங்கேற்றம் செய்ததும் மெட்ராஸில்தான். இதழ்களைத் தொடங்கி நடத்தியதும் மெட்ராஸில்தான். பாபாசாகேப் அம்பேத்கருக்கு முன்பு ஒடுக்கப்பட்டவர்களின் பூர்வ சமயம் பௌத்தமே என்பதை அறிவித்து அயோத்திதாசர் சங்கம் அமைத்தது மெட்ராஸில்தான். நீதிக்கட்சியின் வெற்றிக்கு வழி சமைத்துத் தந்த ஸ்பர்டாங்க் சாலை கூட்டம் (1947) எம்.சி.ராஜா உள்ளிட்ட தலித் தலைவர்களின் முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் மெட்ராஸில் வெற்றி பெற வேண்டுமானால் மீனாம்பாளின் உதவி தேவை என்று கருதப்பட்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவரின் மிகுதியான பங்களிப்பால் அமைந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் பலி நடராஜன் என்னும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவே இருந்தார். சிவசண்முகம் பிள்ளையும், தந்தை என்.சிவராஜும், வை.பாலசுந்தரமும் மெட்ராஸின் மேயர்களாக இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் கால வெற்றிக்கு மெட்ராஸ் சேரிகளே காரணமாக இருந்தன. ஆரிய சங்காரன் திராவிடர் கழகத்திலும், ஆ.சக்திதாசன் திராவிடர் முன்னேற்றக் கழகத்திலும் செயற்பட்டு வெளியேறியவர்களே. திமுகவின் இரண்டு வலிமையான தலைவர்களாக இருந்த சத்தியவாணி முத்துவும், இளம்பரிதியும் மெட்ராஸைச் சேர்ந்தவர்களே. தலித்துகளை மையமாக வைத்தே பட்லர்கள் சங்கம், குடிசை வாழ்வோர் சங்கம், கை ரிக்க்ஷா இழுப்போர் சங்கம் போன்றவை மெட்ராஸில் இருந்தன. இந்த அளவிற்கு இருந்த தலித்துகள் மெட்ராஸில் அதிகாரம் பெற்றவர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து வாழ்வாதாரத்திற்குப் போராடக் கூடியவர்களாக இருக்கின்றனர். நீதிக்கட்சி காலத்தில் நடந்த புளியந்தோப்பு கலவரத்தில் தலித்துகள் மிகுதியாகப் பாதிக்கப்பட்டனர். பறையர்களை மெட்ராஸை விட்டு வெளியேற்ற வேண்டுமென நீதிக்கட்சி பரிந்துரைத்தது. மெட்ராஸ் சேரிகள் தீயினுக்கு இரையாதல், அப்புறப்படுத்தல் என்ற பிரச்சினையைத் தொடர்ந்து சந்தித்துவருகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் போன்ற ஒருவரின் இருப்பு அவர்களுக்கு உதவுமானால் அதனை எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. இவ்விடத்தில் ஆம்ஸ்ட்ராங் மீது கட்டப்படும் எதிர்மறை பிம்பத்தை மக்கள் மதித்ததில்லை. அதைத்தான் அவர் இறப்பின்போது திரட்சியாகப் பார்த்தோம். ஆம்ஸ்ட்ராங் மெட்ராஸ் முழுக்கக் கட்சியை வைத்திருந்தவர் அல்ல என்றாலும், அவர் இருப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் பலமாக இருந்தது. இவ்விடத்தில் ஆம்ஸ்ட்ராங் ஒரு குறியீடு. குறியீட்டின் வெவ்வேறு அடையாளங்களை ஆங்காங்கு பரப்பி வைத்திருந்தார். ஒடுக்கப்பட்டவனின் இத்தகைய இருப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. மெட்ராஸ் நீதிமன்ற பார் கவுன்சில் அவர் செல்வாக்கில் இயங்குகிறது. அச்சுறுத்தல் நீக்கப்படுமானால் ஆதிக்கக் கரங்கள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கிவிடும். இக்கொலையில் குறிப்பிட்ட நபர்கள், கட்சிகள் என யாரும் இருக்கலாம். ஆனால், எல்லாச் சூழலும் சேர்ந்து நிகழ்த்திய வன்முறையாகவே இவற்றைச் சொல்ல முடியும். இத்தகைய குறியீட்டைக் காலி செய்வதன் மூலம் இம்மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்பியிருக்கிறார்கள். இவ்விடத்தில் மெட்ராஸை உரிமை கோருவது, இழந்த குறியீட்டை மீட்பதாகிறது. இவ்வாறு ஆம்ஸ்ட்ராங் பற்றியும், அவரை முன்வைத்து ஒடுக்கப்பட்டோர் அரசியல் பற்றியும் ‘புறமெய்’ வரலாறு கட்டமைக்கப்படுகிறது. அவற்றைக் கட்டுடைத்து ‘உள்மெய்’ வரலாற்றை முன்வைப்பதும் அவருக்குச் செய்யும் அஞ்சலிதாம்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger