ஒருவேளை
நாம் ஒவ்வொருவரும்
நம் இதயங்களை
இழக்க நேரிடும்
என்று
போர் நிறுத்த வேளையில்
மூழ்கியபடி
நாங்கள் உதிரி இருதயங்களை
உற்பத்தி செய்கிறோம்.
நழுவுகிற விளிம்பில்
வாழ்வின் மதிப்பு குறித்து
நிச்சயமற்றவர்களாயிருக்கிறோம்.
ஆனாலும்
நம்பிக்கையை
ஒரேயடியாகக் குண்டுகளை வீசி
தகர்க்க முடியாதெனத் தெரிகிறது.
போரின் நுண்ணிய
விவரங்களோ
விஷ வாயுவோ
நம் குருதியை
உறைய வைப்பதை
நம்மால் தடுக்க முடியாது.
பயத்தினைப்
பற்றிக்கொண்டு
அதை மொத்தமாக
நம் சதையிலிருந்து
சுண்டி எறிவதற்குக் கூட முடியாது.
இறைவா,
எங்களுக்குள்ளிருக்கும்
பதற்றத்தின் துடிப்பு
அணுக்கத்தில் வெடிக்கும்
வெடிகுண்டை விடச் சத்தமானது.
ஆனால்
போர்முழக்கம்
அறவே இல்லை என
இவ்வுலகை எப்படி
நம்ப வைக்கப் போகிறாயென
என்னிடம் சொல்.
வாழிடங்கள்
நகர்ந்து நகர்ந்து
அதன் கற்களை (பிள்ளைகளை)
உடற்பாகங்களினதும்
ஞாபகத்தின் சிதிலங்களினதும்
பின்னால் விட்டுச் செல்வதாய்த்
தனித்த விவரங்கள்
எங்கள் பாதங்களை
ஓரிடத்தில் உறுதியுற ஊன்றுகின்றன.