வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய
கடல் குருத்து மணல் துகள்களை
உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும்
அதிகாலையின் அதான் ஓசையை
நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின்
அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை
ஊருக்கென விதிக்கப்பட்ட
நமக்குப் பிடித்தமான தின்பண்டங்களை
இன்றோடு தொலைத்தோம்
குழந்தைகள் பிரிய மனசில்லாமல்
சிவப்பேறிய கண்களால் கையசைக்கிறார்கள்
கோடை விடுமுறை தீர்ந்து போவதற்குள்
வானத்துக்கும் கடலுக்கும் இடையிலான
எல்லைகளைக் கடந்த குதூகலிப்போடு
நேசத்தின் சிறு சிறு முடிச்சுகளோடு
வீடெங்கும் நினைவுகளை விதைத்தபடி
படிதாண்டுகிறார்கள்
விமானம் நீலக்கடல் தாண்டி
பருத்த பெரு மலைகள் தாண்டி
கரும்பச்சை காட்டு மரம் தாண்டி
தாளாப் பெரும் மனச்சுமையோடு பறக்கிறது
நமக்கென்று இருந்த நிலம்
நமதென்று நம்பிய தீவு
சிறுகச் சிறுக உடைகிற போது
பதற்றமடைகிறேன்.
அடுத்த கோடை விடுமுறையில்
ஊர் திரும்பும் போது
இந்த மகிழ்ச்சியின் நிறைய கணங்களை
நீங்கள் இழக்க நேரிடும்
பழகிக்கொள்ளுங்கள்
இங்கு
இதைவிடவும் மிகச் சிறப்பானதொரு விடுமுறைக்கு
அல்லது இதே போன்றதொரு விடுமுறைக்கு
என்னால் வாக்குறுதி தரமுடியாமைக்கு
என்னை மன்னியுங்கள்
என் குழந்தைகளே.