அம்பேத்கருக்கும் தமிழகத்திற்கும் மிக நெருக்கமான உறவு உண்டு. தமிழகச் சமூக அரசியல் வரலாற்றில் அம்பேத்கரும், அவரின் சமூக. அரசியல் வரலாற்றில் தமிழகமும் ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றியிருப்பதை வரலாறு நெடுகக் காணலாம். அவர் வாழ்ந்த காலத்திலேயே ரெட்டைமலை சீனிவாசன், பெரியார், என்.சிவராஜ் உள்ளிட்டத் தமிழகத் தலைவர்கள் பலர் அவரின் பல செயல்பாடுகளில் இணைந்தும், ஆதரித்தும் வினையாற்றியுள்ளனர் என்பதால் அம்பேத்கருக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவும், நெருக்கமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை, அம்பேத்கரின் மதம் என்னும் கருத்தாக்கம் குறித்த பார்வை, பௌத்தம் தழுவியதற்கான காரணம், அக்காலச் சூழல், தம்மத்தைக் கட்டமைத்த பாங்கு முதலானவை குறித்து ஆய்வு செய்தோம். அத்துடன் நில்லாமல், தமிழ்ச் சூழலில் அம்பேத்கரின் நவயானா பௌத்தம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது, இன்றும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதனடிப்படையில் பார்த்தால், தமிழ்ச் சூழலில் அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தத்தோடும், பெரியாரிய – திராவிடச் சிந்தனை மரபோடும் ஒப்பிட்டு ஆய்வு செய்த நாம் மூன்றாவதாக, தமிழ்த் தேசியச் சிந்தனை மரபை அம்பேத்கரின் நவயானா பௌத்தத்தோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. திராவிடச் சிந்தனையைப் போலவே தமிழகத்தை ஆட்கொண்டிருக்கும் தனித்ததொரு சிந்தனை மரபு தமிழ்த்தேசியச் சிந்தனை மரபாகும். தமிழ்ச் சூழலில் தமிழ்த் தேசிய அரசியலின் தாக்கம் யாராலும் புறக்கணிக்க முடியாத அளவு வலிமையானதாக உள்ளது. அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தமும், பெரியாரிய – திராவிடச் சிந்தனை மரபும் தமிழ் மண்ணில் பௌத்தத்திற்கு ஆதரவுப்போக்கைக் கொண்டிருந்தவை. இரண்டு ஆதரவுப் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை முன்னரே விரிவாகக் கண்டோம். ஆனால், மூன்றாவதாக உள்ள தமிழ்த்தேசிய மரபு பௌத்தத்திற்கு ஆதரவானதா அல்லது எதிரானதா என்பது குறித்துப் பலருக்குப் பல வகையில் சந்தேகங்கள் இருக்க வாய்ப்புண்டு. ஆகையால், தமிழ்த்தேசிய மரபு பௌத்தம் குறித்துக் கொண்டிருக்கும் பார்வையை விவாதிப்பதன் ஊடாக, நவயானா பௌத்தத்தை எந்தளவிற்கு அது ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் இங்கு ஆய்வு செய்கிறோம்.
மேலும், நீலம் இதழில் இவ்வாய்வுக் கட்டுரையை எழுதத் தொடங்கிச் சில பகுதிகள் வெளியிடப்பட்டுத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். இவ்வேளையில், தமிழரின் தாய் மதம், தமிழர் மீதான இந்து மத அடையாளம் குறித்த விவாதங்கள், தமிழகத்தில் எழுப்பப்படுவதன் ஊடாக இப்பொருள் குறித்து விவாதிப்பது மிகப் பொருத்தமாகவும், இன்றைய இன்றியமையாத தேவையாகவும் அமைகின்றது. ஆகையால், தமிழ்ச் சூழலில் அம்பேத்கரின் நவயானா பௌத்தத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துவரும் நாம் தமிழ்த்தேசியச் சிந்தனை மரபுடனும் அத்தத்துவத்தை ஒப்பிட்டு ஆய்வுசெய்யத் தலைப்படுகிறோம். இந்த ஒப்பீட்டு ஆய்வைத் தமிழ்த் தேசியம் பற்றிய வரையறையிலிருந்து தொடங்கலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then