அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சமூக நீதி அடையாளங்களை திமுக அரசு உருவாக்கி வருகிறது என்கிற பார்வை வலுப்படுவதற்கு இந்த அறிவிப்பையும் சொல்ல முடியும் என்ற அளவில் அது அமைந்திருந்தது.
தமிழ்நாட்டுக் கிராமங்களில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் கொண்ட சிற்றூர்களின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பாகும். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துவதற்காகச் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு மாவட்டத்தில் 3 ஊர்களுக்கு வீதம் ரூ.10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இதைக் குறித்து விளக்கியுள்ள அச்செய்திக்குறிப்பு சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களைப் பற்றிய விவரங்களைப் பழங்குடியின நல அலுவலர் மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநர் ஆகியோர் சேகரிக்க வேண்டும். அதன் பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் சரிசெய்த பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும்.
அதன்படி சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு மட்டும் இந்தப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் சென்னையைத் தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் 111 கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் இதற்கு அரசு ரூ.11,10,00,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சமத்துவ மயானம் பற்றிக் கூறப்படும் இந்த அறிவிப்பில் முக்கியமான விசயம் ஒன்று பொதிந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது அரசு பொது மயானம் என்பதைக் கட்டாயமாக்கவில்லை. மாறாக அவ்வாறு செயல்படும் ஊராட்சியை ஊக்கப்படுத்த விரும்புகிறது. அதற்காக வேண்டுகோள் விடுக்கிறது.
ஆனால், சமத்துவ மயானம் என்னும் திட்டத்தை அரசு கட்டாயமாக்கி அறிவித்திருக்க வேண்டும். அரசியல் சட்டப்படி அது தவறல்ல. பொது மயானத்தைக் கொண்டு வருவதுதான் அரசியல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் வழிமுறையாகும்.
நீண்ட காலமாகப் புரையோடிப் போய்விட்ட புண்ணுக்குத் தீவிர சிகிச்சை செய்தாலொழிய அது ஆறாது. சாதியென்னும் கொடுநோயை ஆற்ற கடுமையான சட்டத் தலையீடுகள் தேவை. சாதியைத் தீவிரமாகப் பாதுகாக்கும் இடங்களில் ஒன்று சுடுகாடு. கோயிலைக் காட்டிலும் இங்குதான் சாதி ஸ்தூலமாகத் தக்கவைக்கப்படுகிறது. இதற்காக ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றன. போராடியும் வருகின்றன. தமிழகத்தில் எத்தனையோ பாகுபாடுகள் கணக்கெடுக்கப்பட்டுத் தீவிரச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்- பட்டிருக்கின்றன என்றாலும் இந்த மயானப் பிரச்சினை கண்டு கொள்ளப்பட்டதே இல்லை. இறப்பு மனித ஆழ்மன உணர்ச்சியோடு தொடர்புகொண்டது என்பதால் பிற சிவில் உரிமைகள் பற்றி அழுத்தம் தந்தவர்கள் கூட இப்பிரச்சினை பற்றி அதிக அழுத்தம் தந்து பேசியதில்லை. ஆனால், இது எப்போதும் தலித் மக்களுக்குத் தலையாய பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. இதில் மற்றொரு நுட்பமான அரசியல் ஒளிந்திருப்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. பிராமண எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு என்று சுருங்கிவிட்ட தமிழகத்தில் பொது மயானம் கோரிக்கை கிராமப்புற பிராமணரல்லாத சாதிகளோடு முரண்படும் பிரச்சினை என்பதாலும் இதில் தீவிர அழுத்தம் உருவானதில்லை. தமிழக அரசு பொது மயானத்தைக் கட்டாயப்படுத்தாமல் ஊக்கப்படுத்த மட்டுமே விரும்புகிறது என்பது கூட இதன் பாற்பட்டதே.
பொது நீர்நிலை, பாதை, வீதி என யாவும் தனித்தனியானதாக இருக்கக் கூடாது என்பது இந்திய அரசியல் சட்டத்தின் விதிமுறை. மயானமும் இதில் அடங்கும்.
இப்பாகுபாடுகளைக் களைய அரசு வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பொதுவாக கிராமங்களில் மயானப் பாதைகளை – மயான இடங்களை எடுக்கும் போது அரசே கிராமங்களில் நிலவும் பாகுபாட்டிற்கேற்பத் தனித்தனியே இடங்களை எடுத்தாள்கிறது. மயானம் தொடர்பான வழக்கொன்றில் உயர்நீதிமன்றமே இப்பாகுபாட்டைக் கண்டித்திருக்கிறது. பொது மயானத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியும் இருக்கிறது. இவ்வாறான வழிகாட்டுதல் இருந்தும் கூட அரசு உறுதியான சட்ட தலையீடு செய்யத் தயங்குகிறது. ஏற்கெனவே ஆதிதிராவிடர் நலத்துறை நிதியிலிருந்தே மயானத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. அதைவைத்தே பொது மயானத்தைக் கோர முடியும்.
சட்ட ரீதியான கட்டாயம் என்றில்லாமல் ஊக்கம் என்று இருந்தால் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு இடங்களில் செயல்பட்டு விட்டுப் பிறகு கணக்குக்காகச் செயல்படும் இடங்களாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இவ்வாறு எத்தனையோ உதாரணங்கள் நம்மிடம் இருக்கின்றன. நேரடிச் சட்டத்தையே நடைமுறைப்படுத்தாமல் நீர்த்து போகச் செய்யக்கூடிய நிலைமை இருக்கும் நம் நாட்டில், ஊக்கத்தொகையால் நெடிய பாகுபாடு ஒன்றை மாற்றிவிட முடியும் என்று நம்புவது பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் சேதாரமில்லாமல் நடக்கிற காரியமாகிவிடும். எனவே, அனைத்துக் கிராமங்களிலும் பொது மயானம் கட்டாயம் என்ற சட்டத்தை இயற்ற அரசு முன் வரவேண்டும்.