பார்த்துப் பார்த்து
இந்நாளிலா என்னைக் காண வருகிறாய்
சித்தார்த்தா!
நல்லதுதான் நல்ல நாள்தான்
நான் அந்த மறைவிடத்திலேயே
நின்றுகொண்டிருக்கிறேன்
எவ்விடத்தில் உன்னைப் பிரிகிறேனோ
அவ்விடத்தில்
உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்றாய்
நீ வாய்மை தவறாதவன் உண்மைதான்!
இது என்ன திடீர் பருவ கால மாற்றம்
மக்களின் கண்ணீர் வெள்ளமா
வீதிகள் எங்கும் ஆறுகளாய்…
தெரிந்தபோது மனம் துடித்தது
இந்தக் கண்ணீர் வெள்ளத்தை
எப்படி நீந்துவாய் சித்தார்த்தா..
நீ அப்படியேதான் இருக்கிறாய்
ஞானியாய்
நான்தான் வாக்கு மாறியவள்
நின் திடீர் வருகையால்
எனக்குள் தேவையற்ற ஆனந்தம்
அறை என்னை வெளியே தள்ளியது
நிலா முற்றம் சேர்ந்தபோது நிம்மதி குலைந்தது
மக்கள் மன்னர் சுத்தோதனர்
அரற்றி அழுத கண்ணீர் மேலும் பெருகியது
இந்தக் கண்ணீர் ஆற்றை
எப்படி நீந்திக் கடக்கப் போகிறாய்
சித்தார்த்தா
பிறவி ஆற்றினை நீந்திப்
பேருடல் பெற்ற உனக்கு
இந்தச் சோகக் கடலெல்லாம்
ஒன்றுமே இல்லைதானே
வா என் சித்தார்த்தா
நான் காத்திருக்கிறேன்
எப்படி உன்னை வரவேற்பேன்
கண்ணால் பார்த்து
வா என்பேனோ
அல்லது ஞானஒளி வீசிடும்
உன்முகம் பார்த்துத் தேர்வேனோ
என்னிலும் கண்ணீர் வெள்ளம்!
அன்பிற்குக் கண்ணீர் விடாத
உலகோரும் உண்டுகொல்
நானும் அவரைக் கண்ணீர் வெள்ளத்தில்
வீழ்த்துவனோ
வேண்டாம் அது
ஒரு புன்னகை
ஒரு கைக்கோர்ப்பு
அல்லது மெல்லிய அரவணைப்பு
எப்படியாவது அவர் பிறவிப் பயண
உயிர்ச் சோர்வை நீக்குவேன்
இதோ ராகுலும் அருகில் வந்துவிட்டான்
உன் மகனை எப்படிக் கண்டுகொள்வாய்
என் சித்தார்த்தா
அருள் சுரக்கும் உன் கண்களினால்
அவனைத் தழுவிக்கொள்வாயா
இந்த முத்த நாளில் அவனுக்கும் சில முத்தங்கள்
உனக்கேயான அந்த நிலையான
இதழ்களால் முத்த முறுவல் செய்வாயா?
பாவம் அவனுக்கு ஒன்றாவது கொடு
அப்பா கொடுத்தார் என்று
அதை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பான்!
வாசலில் உன் அருளோசைக் கேட்கிறதே
சாதாரண யாசகன் குரலில்
யாசகம் நிறைந்திருக்கும்
உன் யாசகம் அப்படியல்ல!!!
வாய்நிறைந்த அருள் வாழ்த்தைப் பெற்றுக்கொண்டு
இருப்பது எதுவோ அதுவே போதும்
என்கிற வார்த்தைதானே அது…
illustration : Sanjay Sable
இன்னும் வரவில்லை என் சித்தார்த்தன்
உலகமே முதல் பணி, வீடெதற்கு என்பவன்
இருந்தும் வருவான்
கொடுத்த வாக்கைக் கொண்டாட
கட்டிப் பிடிப்பதுவோ
காலில் விழுந்து
கடவுளே என்றழைப்பதுவோ
என்ன கொடுநிலை என
சுத்தோதனர் திகைத்து நிற்க
கண்களும் இதயமும் படபடக்க
காரணங்களை எண்ணுமுன்னே
யசோதரா முன்
முனியாகிய சித்தார்த்தன் எழுந்தருள
வட்டில் நிறைந்திருக்கும்
மும்மணிச் சரணங்கள்
யசோதரையின் அறையெங்கும் வழிந்தன
அன்னையும் மகனும் அதையே எடுத்துத் தூவி
அய்யனை வரவேற்றார்
மும்மணிச் சரணமிட்டார்
யசோதரா என்றழைத்தார் சாக்கியமுனி
‘என் சித்தார்த்தா வாராய்’ என்று
யசோதரை அருகில் வர
இது என்ன ரசனைமிகு காட்சியா
யார் இவர்
கடவுள்தான் எந்தன் தந்தையா
ராகுலனும் மனம் சிலிர்க்க
வட்டில் நிறைந்திருந்த
மும்மணிச் சரணங்களை முத்தங்களாக்கி
அவர்க்களித்தார்
சாக்கிய முனி
இந்த முத்தநாளின் கவனம் எல்லாம்
காடேகும் வரைக்கும்
என் நெஞ்சில் நிலைத்து வைப்பேன்
என் சித்தார்த்தா
என்று சொன்னாள் யசோதா…
எப்படியோ
இந்த முத்தநாளின் ஏமாற்றை
நீ மறக்க மாட்டாய்
அப்படித்தானே என் யசோதரா
சித்தார்த்தனும் பூடகமாய்ப்
புன்முறுவல் செய்தார்
அருள் செலுத்தும்படிக்கு முன்பு ஆகியிருந்தது
என் வாழ்க்கை
அதை வாழ்ந்திருந்தேன்
அப்படியே இன்றும் பிறந்தேன்
முனிவர்க்கு வாழ்தல் இனிது
மானிடர்க்குக் காதல்தானே பெரிது
எங்கே போவாய் என்னைவிட்டு
இன்னும் காத்திருக்கிறேன்
இது என்றும் வாடாத சித்திரப்பூ
வா என் சித்தார்த்தா
நீ மறுபடியும் வருவாய்தானே….