ஊர் திரும்புதல்
ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று
யாரோடு கதைக்கிறாய்?
யாருமில்லாத வீடொன்றின் கதவை
ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்?
கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை
உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்.
ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்கள் வாழ்ந்தனரே.
வெறித்த வீதிகளில் வெய்யில் நடமாடுகிறது.
சாகக் காத்திருக்கும் முதியவர்களைப்போல
தென்னைகள்.
வெறுங்கைகளை விண்ணோக்கி நீட்டும்
விரல்களுடன் மாமரங்கள்.
எப்போது திரும்பி வந்தாலும் ஒரு குடை நிழல் தரும்
பனைகள்.
வெடித்துப்போன கிணற்றுச் சுவரில்
ஓர் ஆலமரம் காணியை உயிர்ப்பிக்கிறது.
மணல் அளைந்த கைகளிலும்
வெறுந்தரை மிதித்துத் திரிந்த கால்களிலும்
அந்நியம் ஊர்கிறது.
அறிந்தவர் தெரிந்தவரைக் காணும்போது
புலம்பெயர்ந்த காலத்தின் நீளம் தெரிகிறது.
m
Illustration: Oswaldo Guayasamin
அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…
நான் மணந்து திரியும் பூனை.
நீ நீரில் துடித்துப் பாயும் மீன்.
அலைகளை எத்தி எத்தி விளையாடும் குட்டிப் பையனான குழப்படி மீன்.
என் பதின்பருவத்தின் நீண்ட நூலில் படபடக்கிறேன்.
காலக் கடப்பில்
கற்பனைகளின் ஓவியங்கள் நிறங்கள் பூசி நிற்கின்றன.
ஊறிய பேரீச்சையின் உதடுகளால் முத்திய வாசனை
ஆடைகளிலிருந்து நீங்கவில்லை.
ஞாபகத் தெப்பத்தைத் தூக்கியெறியும் புயல்.
சுருக்கமாக எழுதினால் நான் வழமை போலில்லை.
விட்ட இடத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் நம்மோடு.
நினைவுகளின் வெதுவெதுப்பில்
இரகசியங்களைப் பொதிந்த பெட்டகத்துள் சுடரெழுந்தலைகிறது.
என்னை நானே தள்ளி நின்று பார்க்கிறேன்
பெரியவளின் பாவனையில் சலித்துப்போனேன்.
மலைகளும் கடல்களும் நெருக்கியபோது
துள்ளிப் பாய்ந்து காற்றேகி…
மெதுமெதுவெனும் மென்காலமது.
என் பாதங்களைச் சுமந்த மடியில்
நீர்ப்பூக்களின் குளிர்மை அலையடித்தது.
கூட நகரும் நிலவின் தோற்றப்பாடாய்
அவ்வொளி சொரியும் இப்பொழுதுகள்.