பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு

இளவேனில்

தொடக்கத்துக்கு முன்:

வியக் கலையின் முழுமையான வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இன்றைய மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் தோற்றத்துக்கு முன் செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், சில வருடங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் ரைசிங் ஸ்டார் குகைகளில் கண்டடையப்பட்ட ஹோமோ நலேடி எனும் மனித இனம் குறித்த தொல்லியல் தரவுகளும் படிமங்களும், ஹோமோ நலேடிகள் கற்களைக் கொண்டு குறியீடுகளைக் குகைப் பாறைகளில் வரைந்ததற்கான ஆதாரங்களை நிறுவுகின்றன. இதே அளவுகோள் இந்திய ஓவியக் கலைக்கும் பொருந்தும். நம்மிடம் தற்போதிருக்கும் தரவுகளின்படி மத்தியபிரதேசத்தின் தாராகி – சட்டன் மலையில் கண்டடையப்பட்ட இரண்டு லட்சம் வருடங்கள் பழைமையான பாறை ஓவியங்களிலிருந்து இந்திய ஓவியங்களின் வரலாறு தொடங்குவதாய்க் கொள்ளலாம்.

இந்த நெடிய பயணத்தில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த, குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்டத்துடன் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட்டுப் பேச வேண்டியிருக்கும். அரச கோபுரங்களையும் கோயில்களையும் மட்டுமே தரிப்பிடமாகக் கொண்டிருந்த இந்திய ஓவியக் கலை, இந்திய விடுதலைப் போராட்டத்துடன் உருவான கலை இயக்கங்களின் வாயிலாகத் தனக்கான விடுதலையையும் கண்டடைந்தது. அதுவே நவீன இந்தியக் கலையின் தொடக்கமாகவும் பொற்காலமாகவும் இருக்கிறது.

இந்திய நவீன ஓவியக் கலை: ஓர் அறிமுகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தங்களின் நிர்வாகத் தேவைகளுக்காகக் காலனிய அரசு உருவாக்கிய கலைப் பள்ளிகள், இந்தியர்களுக்கு கோயில்களையும் அரச மாளிகைகளையும் தாண்டிய ஓவியங்களின் பரிணாமங்களை, வகைமைகளை அறிமுகப்படுத்தின. இந்திய விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய சுதந்திர வேட்கையின் காரணமாக பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய கலைப் பள்ளிகளில் பயின்ற பல ஓவியர்கள் காலனியத்தின் அதிகார தேவைகளை நிராகரித்து, இந்தியச் சுதந்திர போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். அதேநேரம் காலனிய கலைப் பள்ளிகளின் வாயிலாக அறிமுகமான ஐரோப்பிய ஓவியக் கலை, நவீன இந்திய ஓவியர்களில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஐரோப்பிய ஓவியக் கலையின் தாக்கத்தினால் அதுவரை இந்திய நிலப்பரப்பில் உருவான ஓவியங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அழகியல், வகைமை, கருப்பொருட்களைக் கொண்ட ஓவியங்கள் உருப்பெற்றன – குறிப்பாக, கடவுளரை விடுத்து மக்களையும், அவர்கள் மனதையும், புறவுலகையும் கொண்ட ஓவியங்கள் உருவாக ஆரம்பித்தன.

நவீன ஓவியங்களுடன் தோன்றிய பல்வேறு கலை இயக்கங்கள், பின்காலனிய ஓவியக் கலைக்கான ஆணிவேராக மாறின. முக்கியமாக, கீழ்க்காணும் ஐந்து இயக்கங்களைச் சொல்லலாம்.

  • வங்கக் கலைப் பள்ளி
  • பம்பாய் முற்போக்கு கலைஞர்கள் குழு
  • கேரளா ரேடிகல்ஸ்
  • பெண்ணியக் கலை இயக்கம்
  • மெட்ராஸ் கலை இயக்கம்

வங்கக் கலைப் பள்ளி

நவீன இந்திய ஓவியக்கலை வங்கக் கலைப் பள்ளியின் வருகையுடன் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான இவ்வியக்கம் நவீன ஓவியங்களுக்கு மட்டுமல்லாது இந்தியத் தேசிய அடையாளங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும் அதனூடாக விடுதலை வேட்கையைத் தூண்டியதிலும் நெடிய பங்களிப்பைச் செய்திருக்கிறது. வங்கக் கலைப் பள்ளியின் தாக்கம் ஓவியத்தைக் கடந்து இசை, எழுத்து, நாடகம் என்று மற்ற கலை வெளிகளிலும் பிரதிபலித்தது.

இந்தக் காலகட்டத்தின் ஓவியங்கள் இந்தியக் கலாச்சார புனைவுகளையும், நவீன ஓவிய வடிவங்களையும் இணைத்து உருவாகின. குறிப்பாக, அபனிந்திரநாத் தாகூர் மற்றும் அவரது மாணவர்களில் ஒருவரான நந்தலால் போஸ் முதலானோரின் ஓவியங்கள் இந்தியப் புராணங்களுக்குப் புது வடிவம் கொடுத்தன. மேலும், அப்புராணக் கதைகளைத் தாண்டிப் புதிய பார்வைகளை வெளிப்படுத்தின. மேற்கத்திய ஓவிய வடிவங்களின் தாக்கத்தை விடுத்து, நவீன இந்திய ஓவியக் கலைக்கான அழகியலை முகலாய, ராஜபுத்திர கலைகளிலிருந்து கண்டடைய முனைந்தன.

அபனிந்திரநாத் தாகூரின், ‘இந்தியத் தாய்’ எனும் ஓவியம் சுதந்திர போராட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது, இன்றுவரை அந்த ஓவியமே நவீன இந்திய ஓவியங்களின் அடையாளமாகவும் நிற்கிறது. நந்தலால் போஸ், அப்துர் ரஹ்மான் சுக்தாய் போன்றோர் ஜப்பானிய மற்றும் சீனக் கலைகளின் தாக்கத்தில் தங்கள் ஓவியங்களை வரைந்தனர்.

இன்றுவரை வங்கக் கலைப் பள்ளியிலிருந்து உருவாகும் புதிய ஓவியர்கள், இந்தியக் கலைக்குப் புதிய பாதைகளை உருவாக்குகின்றனர். வங்கக் கலை இயக்கத்தின் குறிப்பிடத்தக்க விடயம், உலகம் முழுவதும் பெரும் கவி ஆளுமையாக அறியப்படும் ரவீந்திரநாத் தாகூரும் இக்கலைப் பள்ளியைச் சார்ந்த முக்கிய ஓவியர்களில் ஒருவர் என்பதே.

‘Tonga’ – M.F.Husain

பம்பாய் முற்போக்கு கலைஞர்கள் குழு

இந்திய விடுதலைக்குப் பின் பம்பாயில் உருவான முற்போக்கு கலைஞர்கள் குழுவை, ‘இந்தியக் கலை உலகில் ஒரு புதிய விடியலைக் குறிக்கிறது’ என்றார் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த். வங்கக் கலைப் பள்ளியின் தேசிய அடையாளங்களை விட்டு விலகி, புதிய திசையை நோக்கிப் பயணிக்க விரும்பிய பிரான்சிஸ் நியூட்டன் சூசா, எம்.எஃப். ஹுசைன், ஹரி அம்பாதாஸ் கதே போன்ற எட்டு ஓவியர்கள் இணைந்து முற்போக்கு கலைஞர்கள் குழுவை உருவாக்கினர். அதுவரையிலான கலை வெளிப்பாட்டின் எல்லைகளைக் கடந்த இவர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைத் தங்கள் ஓவியங்கள் வழியாகக் கொண்டாடியது மட்டுமல்லாது, இந்தியச் சமூக அறநெறிகளையும் கேள்விக்குட்படுத்தினர்.

அடைக்கப்பட்ட சட்டகங்களில் முற்போக்கு கலைஞர்கள் குழுவினரின் ஓவியங்கள் வெளிவரவில்லை, மாறாக அக்கலைஞர்கள் கடவுள், அரசு, தேசியம் எனும் எல்லைகளைக் கடந்தனர். க்யூபிஸம், சிம்பாலிஸம் போன்ற மேற்கத்திய ஓவிய வகைமைகளை இந்திய நிலப்பரப்பில் வரைய முனைந்தனர். பிரான்சிஸ் நியூட்டன் சூசாவின் ‘இந்திய இளவரசி’, எம்.எஃப். ஹுசைனின் ‘டோங்கா’ போன்ற ஓவியங்கள் இந்தக் குழுவின் அடையாளங்களாக இன்றுவரை திகழ்கின்றன.

இந்த இயக்கத்தின் அடையாளங்களில் ஒருவரான எம்.எஃப்.ஹுசைன் பலரும் அறிந்தவரே. இன்றைய இந்திய அரசியல், சமூகச் சூழலின் ஆரம்பப் புள்ளியாக இருந்த தொண்ணூறுகளின் வலதுசாரி அரசியலால் பாதிக்கப்பட்ட முதலாமானவர்களில் ஒருவர். வலதுசாரிகள் உண்டாக்கிய வன்முறையின் காரணமாக உயிருக்கு அஞ்சி இந்தியாவை விட்டு வெளியேறினார்.

குறைந்த காலங்களே இயங்கினாலும், முற்போக்கு கலைஞர்கள் குழு உண்டாக்கிய தாக்கம் சமகால ஓவியங்களிலும் பிரதிபலிக்கிறது.

தி கேரளா ரேடிகல்ஸ்

சமூகநீதி, சமத்துவம் என்று தீவிர மார்க்சிய சிந்தனையின் ஊடாக, கேரளத்தின் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுச் சமூகம் ஒன்றிணைந்து, நெருக்கடிக் காலத்துக்குப் பின் உருவாக்கிய தி கேரளா ரேடிகல்ஸ், தென்னிந்திய நவீன கலை இயக்கங்களில் மையமான இடத்தைப் பெறுகிறது. குறிப்பாக, கேரளத்தின் கலை – கலாச்சார வெளியில் மாறுதல்களை நிகழ்த்தியது.

கே.ஜி.சுப்பிரமணியன் போன்ற ஆளுமைகளால் நிரம்பிய இந்தக் குழு, ரிம்ஸான், மதுசூதனன், கிருஷ்ணகுமார் என்று நீண்ட வரிசையைக் கொண்டு இயங்கியது. கிருஷ்ணகுமாரின் ‘வீர நாயகனின் இருண்ட சோகமான ஆன்மா’, மனித இருப்பின் அபத்தங்களைச் சொல்லும் கரியால் வரையப்பட்ட மதுசூதனனின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் என்று முக்கிய ஓவியங்களை வரிசைப்படுத்தலாம்.

பெண்ணியக் கலை இயக்கம்

அம்ரிதா ஷெர் – கில்லின் வருகையுடன் இந்தியாவின் நவீன பெண்ணியக் கலை இயக்கம் தொடங்கியது. ஹங்கேரிய – சீக்கிய வம்சாவளியில் பிறந்த அம்ரிதா, பாரிஸில் ஓவியக் கலை பயின்றார். 1930களில் வெளிப்பட்ட அம்ரிதாவின், சமூக நாணங்களை உடைத்தெறிந்த தன்னோவியங்கள் மற்றும் லெஸ்பியன் உறவுகள் பற்றிய ஓவியங்கள் இந்தியக் கலாச்சார வெளிகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. 28 வயதில் எதிர்பாராமல் நிகழ்ந்த அவரின் மரணத்துக்குப் பின் பெண்ணியக் கலை இயக்கம் புதிய எல்லைகளைக் கடந்தது.

லீலா முகர்ஜி, பி.பிரபா, அனிலா ஜேகப், மெகர் அப்ரோஸா என்று நீளும் நவீன ஓவியர்களின் பட்டியல், இருபதாம் நூற்றாண்டில் உலகெங்கும் மேலோங்கிய பெண்ணிய இயக்கத்தின் நீட்சியாக இந்திய ஓவிய வெளிகளையும் ஆக்கிரமித்தது. இந்தியச் சமூகத்தின் பெண்களுக்கெதிராக நிகழும் வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்களாக ஒலித்த இவ்வோவியங்கள், பெண் உடலைக் கலாச்சாரச் சட்டகங்களிலிருந்து மீட்க முனைந்தன. நளினி மாலினியின் ‘தொல்குடி குறித்த பழைய வாதங்கள்’, அம்ரிதாவின் ‘கயிற்றுக் கட்டிலின் மீதிருக்கும் பெண்’ போன்ற ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

‘Women on Charpai’ – Amrita Sher Gill

மெட்ராஸ் கலை இயக்கம்

1960களில் தோன்றிய மெட்ராஸ் கலை இயக்கம், இந்தியாவின் ஏனைய இயக்கங்களிலிருந்து வேறுபட்டு, பிராந்திய அடையாளங்களை முன்வைத்து இயங்கியது. தேவி பிரசாத் ராய் சௌத்திரியால் முன்னெடுக்கப்பட்டு, பின்பு கே.சி.எஸ். பணிக்கர், என். விஸ்வநாதன் போன்றவர்களால் வளமையடைந்த இவ்வியக்கம், இந்தியத் தேசிய – ஐரோப்பிய வடிவங்களை நீக்கி பிராந்தியம் சார்ந்த பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களை நுண்கலை மற்றும் வடிவ ஓவியங்களின் வழி அடைந்தது.

மெட்ராஸ் கலை இயக்கத்துக்கு, கே.சி.எஸ். பணிக்கர் ஆற்றிய பெரும் பணி குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவரது ஓவியங்கள் உருவாக்கிய உலகமும் வெளியும் பின் வந்த ஓவியர்களுக்குப் பெரும் உந்துதலாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமட்டுமல்லாது, அவரது பெரும் உழைப்பில் உருவான சோழ மண்டலம் கலைஞர்கள் கிராமம், மெட்ராஸ் கலை இயக்கத்தின் இன்றுவரையிலான அடையாளமாகத் திகழ்கிறது.

அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் 1850இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பள்ளி (அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை) மெட்ராஸ் கலை இயக்கத்துக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது. இன்றுவரை மெட்ராஸ் கலை இயக்கத்தைச் சார்ந்த பெரும்பான்மையான கலைஞர்கள் அரசு கவின் கலைக் கல்லூரியின் மாணவர்களே.

கே.சி.எஸ்.பணிக்கர், என்.விஸ்வநாதன், ஆதிமூலம், டி.கே.பத்மினி, அல்பான்ஸோ அருள் தாஸ் என்ற நீண்ட வரிசையைச் சொல்ல முடியும். இந்த இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த ஆரம்பகால ஓவியங்களாக கே.சி.எஸ்.பணிக்கரின் ‘வார்த்தைகள் மற்றும் சின்னங்கள்’, வெங்கடபதியின் ‘அடர்ந்த காடு’ போன்றவை விளங்குகின்றன.

தொடக்கம்

காலனியத்துக்குப் பின்னான இந்திய நிலப்பரப்பின் ஓவியக் கலை, அதுவரை தன்னைப் பூட்டிக்கொண்ட சட்டகங்களை விடுத்துப் புதிய திசைகளை நோக்கி விரிய ஆரம்பித்தது. நவீன ஓவியக் கலைக்குத் தொடக்கமாக இந்திய விடுதலைப் போராட்டமும், அதனுடன் சேர்ந்து தொடங்கிய வங்கக் கலை இயக்கமும் இருந்தன. விடுதலைக்குப் பின்னான வருடங்களில் பம்பாய், கேரளா, மெட்ராஸ் என்று விரிந்த அதன் திசை, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பல ஓவியர்களை உருவாக்கியது.

அந்த ஓவியர்களில் ஒருசிலரை அறிமுகம் செய்வதே இந்தத் தொடரின் நோக்கமாகும்.

தூரிகையை எடுத்து, கித்தானில் ஒரு கோடு வரைவதையே, இந்தத் தேசத்தில் துணிச்சலான செயலாகக் கருதுகிறேன் – தையப் மேத்தா.

(தொடரும்…)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!