உளவியல் சிக்கல்களின் இயல்பு

பிரதீப்

(சென்ற ஆண்டு மார்ச் மாத இதழில் வெளியான ‘பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்கள்’ கட்டுரையின் இரண்டாம் பாகம்)

மிழ்த் திரைப்படத் துறை அதனளவில் தமிழ் வாழ்வியல் குறித்த அனைத்து உள்ளடக்கங்களும் திரையரங்கத்துக்குப் பொருந்தக் கூடியதுதான் என்று தன்னையே நம்பவைத்துக்கொண்டிருக்கிறது. ‘தரமான’ திரைப்படங்களை உருவாக்கும் தமிழ் இயக்குநர்கள் கூட இதைத் தீர்க்கமாக நம்புகின்றனர். ஒரு கதை திரைப்படமாக மாறுவதில் இருக்கும் பல தளங்களுள், அக்கதையின் நம்பகத்தன்மை, தமிழ் அறவியலுக்குள் (ethos) அதன் பொருத்தப்பாடு, உண்மையானவொரு திரைப்படத்திற்குத் தமிழ்ப் பார்வையாளர்களிடம் இருக்கும் ‘ஏற்பு’ என்பன போன்ற அருவமான அம்சங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, பெற்றோர் – பிள்ளை உறவு, சகோதர உறவு, நட்பு, காதல், தாத்தா / பாட்டி – பேரன் / பேத்தி உறவு இத்தியாதி. இவற்றின் மேல்மட்டத்தில் குடும்பம் சார்ந்த அறம், சமூகம் சார்ந்த அறம், அரசியல் சார்ந்த அறம் ஆகியவை இந்த உறவுமுறைகளின் நம்பகத்தன்மைக்கும், பார்வையாளர்களின் உள்ளார்ந்த ஏற்புக்கும் வித்திடுகிறது. மனிதர்களுக்கும் அவர்களை ஒன்றிணைக்கும் அறங்களுக்கும் இடையிலான இந்த மாபெரும் கட்டமைப்பு தனக்கேயுரிய விதங்களில் குறிப்பிட்ட சில சிந்தனைகளை ஏற்றும் பல சிந்தனைகளை நிராகரித்தும் வருகிறது. நிராகரிக்கப்பட்ட சிந்தனைகள், எதார்த்தத்தில் தமிழ் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டு இல்லாதபோதிலும் திரையில் அவற்றின் பிரதிநிதித்துவம் காணப்படாமலும் குரலற்றும் இருக்கும்படி நிர்பந்திக்கப்படுவதை நாம் காணலாம். அவை தொடர்ச்சியாக நமது வாழ்க்கைகளின் blindspotகளில் வசிக்கும்படி வற்புறுத்தப்படுகின்றன. இச்சிந்தனைகள் மீதான தொடர் இருட்டடிப்பு ஒரு சமூகமே ஒரு மாபெரும் அழுத்தல் இயந்திரமாக (Repressive Machine) உருமாற வகை செய்கிறது.

சமூகவியல் சார்ந்து இந்தப் போக்கை, சினிமா – பார்வையாளர்கள் என்ற தளத்திலிருந்து பார்க்கும்போது, தமிழ் இளைஞர்கள் பலர் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படுவதன் சித்தாந்த பின்னணிக்கு நம்மால் சுலபமாகச் சென்றுவிட இயலும். இந்த இடத்தில்தான் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் நாம் மேற்கோள் காட்டியிருந்த ‘negative thinking’ முக்கியத்துவம் வகிக்கிறது.

சினிமா அதன் பார்வையாளர்களுக்குள் நேரடியான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நாம் கூறவில்லை. மைய நீரோட்ட சினிமாவில் வெளிப்படும் தமிழ் வாழ்வியல் அறங்களின் ஒற்றைப் பரிமாணச் சிந்தனை, எவ்வாறு உளவியல் பாதிப்புக்கு உள்ளான தனிநபரின் நேர்மையான பிரதிநிதித்துவத்துக்குக் குந்தகம் ஏற்படுத்துகிறது என்பதையே கூறுகிறோம். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகால தமிழ் சினிமாவில் பாலியல் ரீதியில் ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதைகளை நாம் அதிகம் காணக்கூடிய நிலையில், மேற்கூறிய ஒற்றைப் பரிமாண கதைச் சொல்லலின் உள்ளார்ந்த அறமும் உளவியல் பாதிப்புக்கு உள்ளான தனிநபரின் உலகமும் என்ற முரணை முன்னணி இயக்குநர்கள் பலரும் இன்னும் கவனத்திற் கொள்ளவில்லை.

2021 – 22களில் மட்டும் ‘சாணிக் காயிதம்’, ‘கார்கி’, ‘அனல் மேலே பனித்துளி’, ‘குதிரைவால்’ (ஓர் ஆண் தனக்குச் சிறுவயதில் நிகழ்ந்த உளவியல் பாதிப்புக்கு அவன் வளர்ந்த பிறகு தீர்வு காண முயற்சிப்பது இதன் கதை), ‘செம்பி’ ஆகியவை தமது மையக் கதாபாத்திரங்கள் உளவியல் சிக்கலுக்கு உள்ளாவதை வெளிப்படையாக முன்வைத்த படங்கள். ‘சுழல்’, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் குறித்த தொடர். ‘கார்கி’, ‘அனல் மேலே பனித்துளி’, ‘செம்பி’ ஆகிய திரைப்படங்கள் அதன் மையக் கதாபாத்திரங்களுக்கு நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்திற்குச் சட்டத்தின் உதவியோடு நீதி பெறும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். ‘சாணிக் காயிதம்’, ‘குதிரைவால்’ ஆகியவை நிகழ்ந்த அத்துமீறலுக்கும் அநீதிக்கும் அதன் மையக் கதாபாத்திரங்களே தன்னிச்சையாகத் தீர்வு தேடிக்கொள்ள முயலும் விதத்தில் அமைந்தவை. ‘சுழல்’, துரதிருஷ்ட வசமாக, உண்மையில் ஒரு காவல் ஆய்வாளரின் கதையாகவே தோற்றம் தருகிறது. இப்படங்கள் குறித்து மேலும் விரிவாகக் காண்பதற்கு முன்னர், நிஜத்தில் பாலியல் அத்துமீறலும் வன்கொடுமையும் ஒரு தனிநபரையும் குழந்தையையும் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன என்று பார்ப்போம். இப்படங்களும் தொடர்களும் செயல்படும் தளம் எவ்வாறு யதார்த்தத்திலிருந்து வெகுதூரத்தில் உள்ளன என்பதைக் கணிக்க அது உதவும்.

2022ஆம் ஆண்டின் முடிவில் வெளியான உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 20% பேர் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறது. சுமார் 5.6 கோடி இந்தியர்கள் மனச்சோர்வுக்கு (Depression) ஆளாவதாகவும், 3.8 கோடி இந்தியர்கள் பதற்றச் சிக்கலுக்கு (Anxiety Disorder) ஆளாவதாகவும் அதன் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், 2012இலிருந்து 2030க்கு இடைப்பட்ட காலத்தில் உளவியல் சிக்கல்களினாலேயே இந்தியாவிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் வெறும் 9,000 உளவியல் மருத்துவர்களே இருப்பதாக இந்திய உளவியல் அமைப்பு (Indian Psychiatric Society) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் நூறாயிரம் தனிநபர்களுக்கு ஓர் உளவியல் மருத்துவர் கூட இந்தியாவில் இல்லை. அந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி நூறாயிரம் தனிநபர்களுக்குக் குறைந்தது மூன்று உளவியல் மருத்துவர்களாவது இருக்க வேண்டும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியச் சமூகத்துக்குத் தேவையாய் இருக்கும் உளவியல் மருத்துவர்களின் எண்ணிக்கையை முழுமையாக அடைய இன்னும் 42 வருடங்களும், போதுமான உளவியல் மருத்துவச் செவிலியர்களை அடைய 74 வருடங்களும், உளவியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் (Psychiatric Social Workers) எண்ணிக்கையை அடைய 76 ஆண்டுகளும் தேவைப்படுவதாக இந்திய உளவியல் அமைப்பு கூறுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் உளவியல் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை எந்தவிதக் குழப்பங்களுமின்றித் தெளிவுபடுத்துகின்றன. இவை வெறும் மனச்சோர்வையும், பதற்றச் சிக்கல்களையுமே உளவியல் நெருக்கடிகளாக ஆவணப்படுத்தியிருப்பதை நாம் காணலாம். இவையிரண்டும் பெருவாரியான உளவியல் பிரச்சினைகள் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் இரண்டு பிரதான நோய்க்கூறுகளாகும் (Symptoms). உளவியல் மருத்துவத்தை மேற்கொண்டே ஆகவேண்டிய பிரச்சினைகளாக இருக்கும் மனச்சிதைவு நோய் (Schizophrenia), MPD, BPD போன்ற நோய்களுக்கும் கூட இவைதான் துவக்கநிலை நோய்க் கூறுகளாக விளங்குகின்றன. இதனால் மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களுக்குள் தீவிர உளநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வடிகட்டி பட்டியலிடும் செயற்பாட்டில் குழப்பங்களும் தடங்கல்களும் நிலவுகின்றன. பாலியல் அத்துமீறலைக் காவல்துறையில் வழக்காகப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல், உளவியல் மருத்துவர்களை அணுகுவதாலேயே பாதிக்கப்பட்டவர்கள் மீது சமூகம் கொள்ளக்கூடிய stigma ஆகிய காரணங்களால், இந்தியச் சமூகத்தில் அதிகரித்துவரும் உளவியல் சிக்கல்களைப் பொதுச் சூழலில் வெளிப்படையாக அறிவிக்கும் சாத்தியப்பாடுகளும் நாளடைவில் குன்றிவருகின்றன. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் ஏதேனுமொரு பாலியல் அத்துமீறலையோ வன்கொடுமையையோ தானாக அனுபவித்தோ அல்லது அனுபவித்த ஒருவருடன் பரிச்சயம் கொண்டோ இருந்தும் கூட, தகுந்த ஆவணங்களுடனும் புள்ளிவிவரங்களுடனும் உளவியல் சிக்கல்களின் இருப்பை அறுதியிட்டுக் காண்பிக்க முடியாத சூழல்தான் இங்கு நிலவுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து வளர்பருவத்தை அடைவதற்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள்தான் சமகால திரைப்படங்களில் அதிகம் பேசப்படுகின்றன. ஒரு மனிதர் எந்த வகையான அதிர்ச்சிகரமான பின்புலங்களும் இல்லாமல் வளர்ந்துவிட்டால், அதாவது தனது 25 – 30 வயதை உளவியல் பிரச்சினைகளற்று கடந்துவிட்டால், படிப்பு மற்றும் பொருளாதார ரீதியில் அவர்கள் பூர்த்தியடைந்துவிடும் பட்சத்தில், அதற்குப் பின்னர் சமூகம் தோற்றுவிக்கும் துன்பங்களை அத்தனிநபரே கையாண்டுவிடக் கூடிய உளவியல் தளவாடங்களை அவர்கள் கைக்கொண்டிருக்க அநேக வாய்ப்புகள் உள்ளதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி வளர்ந்த தனிமனிதர்களையும் நிலைகுலையச் செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடிய இரண்டு பிரதான கூறுகளாகப் போர் ஈடுபாடும், பாலியல் வன்கொடுமையுமே விளங்குகின்றன. இவற்றுள் முன்னதில் பெருவாரியாக ஆண்களும் பின்னதில் பெருவாரியாக பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக உளவியல் மருத்துவர் ஜூடித் ஹெர்மன் (Judith Herman) கூறுகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் போர்ச் சூழலால் பாதிப்புக்கு உள்ளான ஆண்கள் குறித்தும் போரினால் அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும் பிரதிநிதித்துவம் செய்வது தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. தமிழகத்தை மீறி இந்திய நாடும் கூட தொடர் போரில் ஈடுபடாத நாடாக இருக்கும் காரணத்தினால் போர் உருவாக்கும் உளவியல் சிக்கல்கள் குறித்து உரையாட வேண்டிய காலம் இதுவாக இருக்க முடியாது.

ஆனால், பாலியல் வன்கொடுமை இங்கு புரையோடிப் போயுள்ளது. வயது வேறுபாடுகளின்றி தனிநபர்களை – குறிப்பாக பெண்களை – பாதிக்கும் சிக்கலாக உள்ளது.

ஒரு தனிநபர் உடல் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல் அவரது உள்ளத்தைப் பிரத்யேகமான சில சீரழிவுப் பாதைகளுக்குள் செலுத்துகிறது. அது அவர்தம் உடல் மீது ஒருவித பாதுகாப்பின்மையைத் தோற்றுவிக்கிறது. இந்தச் சீரழிவுப் பாதையின் முதற்சுவடாகப் பிரிவு நிலை விளங்குவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, தனது உடல் பாதிப்புக்கு உள்ளாகும்போது, அது தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறொன்றாகத் தோற்றம் தரும் நிலை. உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையில் நிகழும் இந்தப் பிரிவு நிலை வெகுகாலம் நீடிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவரின் உள்ளம், நிகழ்ந்த அத்துமீறலுக்குப் பிந்தைய காலங்களில் கைக்கொள்ளும் புறவுலக அனுபவங்களை, ஒருநிலையற்று, இந்தப் பிரிவு நிலையோடே உள்வாங்கும் நிலை ஏற்படுகிறது.

பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அந்தப் பாதிப்பை நிகழ்த்தியவர் வாழும் அதே சூழலில் தொடர்ந்து வசிக்கும்படி வற்புறுத்தப்படும்போது (chronic trauma) அந்த உளப் பிரிவு நிலை மேலும் வீரியம் பெற்று சீரிய உளவியல் நோய்களான மனச்சிதைவு நோய், MPD போன்றவையாக உருமாற அனேக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதன்படி ஒருமுறை உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காட்டிலும் குற்றம் நிகழ்த்தியவர் வாழும் அதே சூழலில் தொடர்ச்சியாக வாழச் சொல்லி நிர்பந்திக்கப்படும் நபர்களின் நிலை கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. அவற்றுக்கான சிகிச்சைக் காலமும் குற்றமிழைத்தவருடன் அத்தனிநபர் கொண்டிருந்த உறவின் கால அளவைக் காட்டிலும் பலமடங்கு நீள்கிறது. பாதிப்பு நிகழ்ந்த சூழலிலேயே தொடர்ந்து வாழ வேண்டிய நெருக்கடி பெரும்பான்மையாகக் குடும்பங்களுக்குள்ளேயே நிகழ்வதால், குறிப்பாக, இந்தப் புள்ளியில்தான் பெண்களுக்கு நிகழும் வீட்டு வன்முறை / வன்கொடுமை ஆகியவை சமூக – உளவியல் சிக்கல்கள் மத்தியில் முக்கியத்துவமிக்க ஒன்றாகக் கருதப்பட வேண்டியுள்ளது.

தொடர் உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் மனிதர்கள் அந்தப் பாதிப்பை உண்டாக்கியவர்களோடு நெருங்கி வாழும் நிலைக்குத் தள்ளப்படும்போது, அச்சூழல் அவருக்கு வழங்கும் பாதுகாப்புணர்வு, நிகழ்ந்த அந்தப் பாதிப்பினாலேயே உடைபட்டுப் போகிறது. அதிலும் குற்றம் நிகழ்த்தியவர் தந்தையாகவோ நெருங்கிய குடும்பத்தினராகவோ இருக்கும் பட்சத்தில், குடும்பங்கள் ஒரு தனிமனிதருக்கு – குழந்தைக்கு – வழங்கும் சமூகம் சார்ந்த நம்பிக்கை உணர்வுகள் முற்றிலும் சிதையும் வாய்ப்பும் ஏற்படுகிறது. மேலும், குற்றமிழைத்தவர் சமூகக் கட்டுமானத்தின் பிரதிநிதியாகவும் இருக்கும் பட்சத்தில் பாதிப்படைந்தவருக்கு அக்கட்டுமானங்களின் மீதே நம்பிக்கையற்றுப் போகிறது. குற்றமிழைத்தவரை அக்கட்டுமானத்திலிருந்து தனியாகப் பிரித்து அணுக அவர்களால் இயலாது. அப்படி அணுகச் சொல்லி அவர்கள் மீது சமுதாயமும் பிற ஆண்களும் வைக்கும் எதிர்பார்ப்பும் கூட கை உடைந்தவரை மூட்டைத் தூக்கச் சொல்லி வற்புறுத்துவதற்கு இணையானதே.

பெருவாரியாக, இங்கு கணக்கில் வராத பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகாரப் புள்ளியில் இருக்கும் நபர்களாலேயே நிகழ்த்தப்படுவதால், அந்த அதிகாரம் குறிக்கும் சமூகக் கட்டுமானங்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக நம்பிக்கையிழந்து சமூகத்திலிருந்து தாம் அந்நியப்பட்டுவிட்டதாகவே உணர்கின்றனர். இந்தக் கட்டுமானம் ஒரு சிறிய நிறுவனத்திலிருந்து, இந்திய அரசியல் சாசனம் வரையிலும் கூட நீளலாம்.

Illustration : Li-Ying Chen

இந்த இடத்தில்தான் பாதிக்கப்பட்டவர்கள், நிகழ்ந்த சம்பவத்திலிருந்து சிறிய ஆசுவாசத்தை அடைய முனையும் நோக்கில், சக மனிதர்களை எதிர்கொள்ளும் சூழல்களையே முற்றிலும் ஒதுக்கிவிடும் இடத்திற்குச் செல்கின்றனர். சக மனித ஈடுபாடு மட்டும்தான் எந்தவித உளவியல் சிக்கலையும் கையாள ஒருவருக்கு இருக்கும் முதல் வழிமுறை என்றாலும், உளவியல் சிக்கல்களுக்கேயுரிய முரண்களைப் போல, நிகழ்ந்த துன்பத்திற்குத் தீர்வு எந்த மனிதருடனும் தொடர்பற்றுத் தனிமையில் இருப்பதுதான் என்று பாதிக்கப்பட்டவர்கள் தம்மையே உளமார நம்பவைக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.

சமூக ஒதுக்கம் இப்பிரச்சினையின் ஒரு முனை என்றால், அவர்களின் உள்ளத்தில் நிகழ்ந்த பிரிவு நிலை நடந்த அத்துமீறல் சம்பவத்தை மறக்காமலும் பலவந்தமாக மறக்கவும் முயற்சிக்கும் குதர்க்கமான உள எதிர்நிலைக்குப் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்கிறது. பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு வயது வித்தியாசங்கள் இல்லை என்று முன்னரே கூறியிருந்தோம். அப்படியிருக்க, அவரவரது உள முதிர்ச்சிக்கேற்ப, அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் கனவுகளாகவும் பிரமைகளாகவும் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன. மனிதர்கள் மீதும் சமுதாயக் கட்டுமானங்கள் மீதும் இருக்கும் நம்பிக்கை உடைந்த பிறகு, அவர்களின் உள முதிர்ச்சியானது, தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அதீத சிந்தனைகளுக்குச் சென்று அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனவேயொழிய, அன்றாட வாழ்க்கையை மனத்திடத்துடன் கைக்கொள்ள உந்துவதில்லை; அந்தத் தற்கால முதிர்ச்சி நிலையிலேயே அவர்களைத் தேங்கச் செய்துவிடுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் தங்களுக்குள் கொண்டிருக்கும் ‘தான்’ என்ற படிமம் உடைந்தும், மறுபுறம் சமூகக் கட்டுமானங்கள் மீதான பிடிப்பை இழந்தும் இருக்கையில், அவர்களது உலகமும் அவர்கள் எண்ணும் நிலைகளும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விதங்களில் அவர்களைச் சென்றடைகின்றன. தான் எதிர்கொள்ளும் சிக்கலையும் தன்னுள் உதித்திருக்கும் சிதிலமடைந்த தனது உலகத்தையும் வார்த்தை வழியாக விவரிக்கும் வழிகளை அவர்கள் இழக்கின்றனர். எண்ணங்களை வார்த்தைகளாக்கும் தன்மையை முழுமையாக இழந்து, அவர்களுக்குத் தெரியும் பிரமைகளும் கனவுகளும் வார்த்தைகளாக மாறாமல் வெறும் காட்சிகளாகவே குவிந்து அவர்களை நிலைகுலையச் செய்கிறது. இந்தத் தன்மையைச் சமுதாயத்தில் வேறெங்கும் காண இயலாமல் போகும்போது, உளவியல் மருத்துவம் பெருவாரியாகச் சென்றுசேராத இந்தியா போன்றவொரு நாட்டில், திரைப்படங்களிலும் அவ்வுடைந்த உலகத்தைக் காண இயலாமல் அவர்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்.

தனக்கு நிகழ்ந்த உளவியல் வன்கொடுமையிலிருந்து உளவியல் சிகிச்சையின் உதவியோடு மீண்ட பிறகு, அந்நிகழ்வையும் அச்சமயம் தனக்கிருந்த உடைந்த மனநிலையையும் சிறுகதையாகவோ நாவலாகவோ சிலர் எழுத முன்வந்துள்ளது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏட்ரியென் கேரி ஹர்லி (Adrienne Carey Hurley) தனது ‘Revolutionary Suicide – And other desperate measures’ நூலில் இரண்டு நாவல்களை மேற்கோள் காட்டுகிறார்.

ஒன்று, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் உச்சிடா ஷுங்கிக்கு (Uchida Shungiku) எழுதிய ‘ஃபாஸா ஃபக்கா’ (Father Fucker) என்ற நாவல். மற்றொன்று அமெரிக்க நாவலாசிரியர் டோரதி ஏல்லிசன் (Dorothy Allison) எழுதிய ‘Bastard out of Carolina’ என்ற நாவல்.

இந்த நாவல்கள் வெளியானபோது, அந்தந்த நாடுகளின் எழுத்து வட்டங்களால் மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. நாவல்களுக்கென வகுக்கப்பட்டிருக்கும் ஒழுங்குகளுக்குள் இதன் கதைகள் பொருந்தவில்லை என்பது சக எழுத்தாளர்கள் வைத்த பிரதான விமர்சனங்களுள் ஒன்று. சுவாரசியமாக, இவ்விரு நாவல்களும் அவை வெளியான ஆண்டில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அதிகப் பதிப்புகள் கண்ட புத்தகங்களாகும்.

ஊடகவியலாளர்கள் சிலர் இவ்விரு எழுத்தாளர்களிடமும் நாவலை அவர்கள் எழுதிய விதம் குறித்துக் கேட்டபோது, ‘தாம் எதிர்கொண்ட முதல் சவால், நிகழ்ந்த அத்துமீறலைச் சிறுகதை வடிவமாகவோ நாவலாகவோ மாற்றுவதற்குத் தேவைப்படும் மொழி தங்களிடம் இல்லாமலிருப்பதாக உணர்ந்ததுதான் என்றனர்.’ அந்நாடுகளின் எழுத்துலகம், இவ்விரு எழுத்தாளர்களிடம் உள்ள குறையாகக் குறிப்பிட்டது, வாசிப்பனுபவத்தில் அவர்களுக்கிருக்கும் போதாமையைத்தான். ஆனால் நிதர்சனமோ, உளவியல் சிக்கலின் மூலக்கூறே நிகழ்ந்த சம்பவத்தை வார்த்தை வடிவத்துக்கு மாற்ற அனுமதியாமல் இருப்பதுதான். இதைப் பெருவாரியான உளவியல் நிபுணர்கள் உறுதி செய்வதை நாம் காணலாம். இவற்றின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது நிஜவுலக அனுபவங்களைக் கதைகளாகப் புனைய முயலும்போது அங்கு இரண்டு சிக்கல்கள் நிலவுகின்றன. அவை:

  • நிகழ்ந்த அத்துமீறலை மொழி வடிவத்திற்கு மாற்றுவதில் இருக்கும் இயல்பான சிக்கல்.
  • வார்த்தை வடிவத்தை அடையவே துன்பப்படும்போது, அக்கதைகள் இலக்கிய ஒழுங்கு விதிகளுக்குப் பொருந்தும்படி இருக்கச் சொல்லி வற்புறுத்தப்படுவது.

இந்த நீண்ட திசைதிருப்புதல் நமக்கு விளக்குவது என்னவென்றால், அத்துமீறலுக்கு உள்ளானவர்களின் உலகமும், உலகம் குறித்த அவர்களின் பார்வையும், சராசரி மனிதரின் உலகம் / உலகப் பார்வையைப் போல இருப்பதில்லை. அவை பெரும்பாலும் சிதிலமடைந்த தனிக் கூறுகளாக இருக்கின்றன. அக்கூறுகள் தனித்தனி நினைவுப் படிமங்களாகக் கலந்துகிடக்கின்றன. அப்படிமங்கள் நேர்க்கோடாக இல்லாமல் முன்பின் நிலையிலேயே அவர்களால் நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுப் படிமங்களை உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காட்டிலும் வேறெவராலும் சரிவர அர்த்தங்கொள்ள இயலாது. அப்படியே பாதிக்கப்பட்டவர் தமது உலகத்தைப் பிறருக்கு விவரிக்க முன்வந்தாலும், அதை நிகழ்த்துவதற்கான ஊடகத்தின் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போகிறது.

ஒரு கதை உளவியல் பாதிப்புக்கு உள்ளான ஒருவரை மையப்படுத்தும்போது அதன் கதையாக்கம் ஒரு பிரதான சிக்கலைச் சந்திக்க வேண்டியுள்ளது. அக்கதை பார்வையாளர்களைச் சென்று சேர, அது நேர்க்கோடாகவே விவரிக்கப்பட வேண்டுமென்ற வற்புறுத்தல்.

தமிழ்ப் பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் திரையரங்கில் பார்க்கும்போது இருக்கும் மனநிலையும் ஓடிடிகளில் பார்க்கும்போது இருக்கும் மனநிலையும் சற்று வேறுபட்டு விளங்குகிறது. திரையரங்கம் என்று வரும்போது, கொண்டாட்ட கலாச்சாரத்தின் காரணமாக அது பார்வையாளர்கள் தங்களின் உள்ளங்களை முழுமையாகத் திறக்க அனுமதி வழங்குவதில்லை. ஓடிடி படங்களைக் காணும்போது இந்த உளநிலை இல்லாமலிருப்பதன் காரணமாக, திரையரங்கில் வெற்றிபெறக் கூடிய சில திரைப்படங்கள் ஓடிடிகளில் கவனம் பெறாமல் போய்விடுகின்றன. அதே சமயம் ஓடிடிகளில் மனித உள்ளம் சார்ந்த உலகளாவிய படைப்புகளுக்கு அதிகக் கவனம் கிடைக்கிறது. நமது கட்டுரைக்கென எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களும், தொடர்களும் பெரும்பாலும் ஓடிடிகளில் வெளியானதாலேயே அவை அதிக கவனம் பெற்றிருக்கின்றன என்று நம்மால் நிச்சயம் கூற முடியும்.

திரையரங்கம் – ஓடிடிகளில் படம் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு நிகழும் இடம் சார்ந்த மாற்றத்தைத் தமிழ்ப் படைப்பாளிகளால் சரிவர புரிந்துகொள்ள இயலாமல் போனதாலோ என்னவோ தொடர்ச்சியாகத் தங்களின் படங்களைத் திரையரங்குகளுக்கே முதலில் தயார் செய்கின்றனர். கொரோனா காலகட்டம் போல திரையரங்க வாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் போகும்போது மட்டுமே அவை ஓடிடிகளை அடைகின்றன. இந்தப் பாரபட்சம் காரணமாக, என்னதான் இயக்குநர்கள் பாலியல் சிக்கல்கள் – ஒடுக்குமுறையைப் பேசுபொருளாக்கும் திரைப்படமொன்றை உருவாக்க முயன்றாலும், அவை திரையரங்கப் போலி நனவு மனம் (Theatrical False Consciousness) கோரும் நேர்க்கோட்டுவாத கதைச் சொல்லல்படி இருக்க வேண்டுமென்றே கருதுகின்றனர்.

பார்வையாளர்களின் கவனக்காலம் கணிசமாகக் குன்றிவருகிறது என்பதை இன்று பல இயக்குநர்களும் ஏற்பதை நாம் காணலாம். ஆனால், அவர்கள் அதையொரு சிக்கலாகப் பாவிக்கும் இடம் என்றுமே ஓடிடிகளில் படம் பார்க்கும் வழக்கத்தைச் சுற்றியிருக்கின்றனவேயொழிய அவர்கள் அதைத் திரையரங்கப் பார்வையின்போது பொருத்துவதேயில்லை. அந்தக் குறுகிய கவனக்காலம் ஓடிடிகளில் படத்தைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பின்பு காணும் போக்கை வரவேற்கிறது என்றால், திரையரங்கத்தில் அது பார்வையாளர்களின் ஏற்பின்மையாகவும் வெளிப்படையான வசைச் சொற்களாகவும் வெளிப்படுவதைக் காணலாம். மேலும், திரையரங்க வெளியீட்டில் தென்படும் இலாப அளவையே இவர்கள் வரவேற்பதால், உளவியல் சிக்கல்கள் குறித்த திரைப்படங்களை ஓர் இயக்குநர் உருவாக்க முன்வந்தாலும், அவை திரையரங்கப் பார்வையாளர் பரப்புக் கோரும் இக்குறைந்த கவனக்காலத்துக்குப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட நிர்பந்திக்கப்படுகின்றன. ஆக, எந்தவிதமான கதைக் கருவைக் கொண்டிருந்தாலும், ஒரு வெற்றிப்படம் திரையரங்கத்துக்குப் பொருந்துவதாகக் கருதப்படும் நேர்க்கோட்டுவாதக் கதைச் சொல்லலைக் கொண்டிருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. (‘நேர்க்கோட்டுவாதம்’ என்று நாம் குறிப்பதும் கூட மனித உள்ளத்தின் குதர்க்கங்கள் – சுறுக்குகளைக் கதையாக மாற்றுவதில் பலருக்கு இருக்கும் தயக்கம்தான். புரியாத படமொன்றை எடுத்துவிட்டு அதைக் கலைப்படம் என்று அழைப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறும் பல முன்னணி தமிழ் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவது என்னவென்றால், தமது புரிதலுக்கு அப்பாற்பட்ட கதைகள் தம்மைப் போலவே பார்வையாளர்களுக்கும் புரியாது என்ற அனுமானம் மட்டுமே.)

கதையின் எந்தவோர் அம்சத்தை சுருக்குகளோடு (complexity) மாற்ற ஓர் இயக்குநர் முன்வந்தாலும் அவை இந்த நேர்க்கோட்டுவாதக் கதைச் சொல்லலை உடைக்காத வண்ணம் இருக்க வேண்டுமென்ற தேவையை இயக்குநர்கள் மட்டுமல்லாது, தயாரிப்பாளர்களும் முன்வைக்கின்றனர். இந்தப் போக்கு தோற்றுவிக்கக் கூடிய இடர்ப்பாடு வேறெந்தக் கதைக் கருக்களைக் காட்டிலும், பாலியல் அத்துமீறல் கதைகளுக்குப் பெரும் குந்தகத்தை விளைவிப்பதாக உள்ளது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!