தனது ஒரு பாதத்திற்குத்
தனது மற்றொரு பாதம் எவ்வளவு ஆறுதலாய்…
தனது ஒரு காயத்திற்கு
தனது மற்றொரு காயம் எவ்வளவு
அனுசரணையாய்…
நிலத்தை எந்த நிலத்தில் புதைக்க…
நிலம் புகாரின்றிக் குப்புறக்கிடக்கிறது.
நிலத்தின் பாதவெடிப்பில்
இருளண்டிக் கிடக்கிறது சூரியன்.
அதன் உச்சிமுடி பிடித்திழுத்து
உதிக்கச் செய்கிறேன்.
ஒன்று கிழக்கில் உதித்தால்
மற்றொன்று மேற்கிலிருந்தும் உதிக்கும்.
♦
என்ன அவசரம்
என்னைத்தான் என்னிலிருந்து கழற்றிக்கொண்டிருக்கிறேனே…
சீக்கிரம் சீக்கிரம்…
சும்மா அதட்டாதே…
இதோ இந்த முகத்தை அணிந்து கொள்.
அவசியம் அணிந்தே ஆகணுமா…
என்ன என்றுமில்லாத புதிதாகக் கேள்வி…
துவைத்துக் காயவைத்துள்ள
முகத்தை நோக்கி அம்மா என்று ஓடி வருகிறது குழந்தை.
துவைத்துக் காயவைத்துள்ள
குழந்தையின் முகத்தை அள்ளி முத்தமிடுகிறாள் அம்மா.
துவைத்துக் காயவைத்த மணற்துகள்களாய் முகமூடிகள்
ஏதோ ஒரு துகளில் என் அசல்
ஏதோ ஒரு துகளில் உன் அசல்
செல்லமே என்றேனும் கண்டெடுத்தால்
என்னை எனக்கே காட்டிக்கொடு.
என்ன அவசரம்
என்னைத்தான் என்னிலிருந்து கழற்றிக்கொண்டிருக்கிறேனே…
♦
எங்கே இப்போது சிரி என்கிறாய்
கழுத்தை நெறித்தபடி.
சிரித்தேன்…
உடல் நடுங்க கண்கள் சிவக்க
இப்போது சிரி
இப்போது சிரி என்று
குரல்வளையை ஓங்கி ஓங்கி மிதிக்கிறாய்…
அவ்வளவு கீழ்ப்படிதலுடனே உம் விருப்பத்திற்கிணங்கச் சிரிக்கிறேன்…
இப்போது கூட பார்
தண்டவாளத்தில் உடலைக் கிடத்தித் துண்டாடிவிட்டு
நிலம் நடுங்க எவ்வளவு பெரிய
ஊலையிட்டபடி
எங்கே இப்போது சிரி என்கிறாய்…
பேரன்பனே என் பிணத்தைத் தோண்டி எடுத்து மறுபடி மறுபடி கொன்றாலும்…
மறுபடி மறுபடி உனக்கு வழங்க சிரிப்பைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை.
அய்யய்யோ நண்பா வலிக்கும் எமக்கு
உனது உடலை நீயே கொன்று கொண்டாலும்…