இந்தியாவில் அட்டவணை மற்றும் பழங்குடி மக்கள் சாதியின் பெயரால் பல நூற்றாண்டு இன்னலைச் சந்தித்துவருகிறது. 1947ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்பு கடந்த 75 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நடைபெற்றுள்ளது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் சாதியின் கோரப்பிடியில் இருந்து விடுபட்டார்களா என்றால் நிச்சயம் இல்லை. அட்டவணை மக்களின் சமூக மாற்றத்திற்குப் பல வழிகளில் முன்னேற்றம் அடைவது இன்றியமையாதது. அதில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு முக்கியமானவை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சமூகப் பணி காரணமாக அட்டவணை மற்றும் பழங்குடி சமூகத்தினர் மத்திய, மாநில நிர்வாகங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு பெற்று கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளனர். ஆனால், பெரும்பான்மை அட்டவணை மக்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. ஆகையால் பெருமளவு மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்தான் உள்ளனர். மற்றோர் அவலம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இடஒதுக்கீட்டினைச் சரிவர அமல்படுத்துவதில்லை. குறிப்பிட்ட சதவீதம் மட்டும் அமல்படுத்திவிட்டு மற்றதை மோசடி செய்யும் நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் நிர்வாக ரீதியான இடஒதுக்கீட்டை அட்டவணைச் சமூகம் பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அரசியல் அதிகாரமும் அதன் பிரதிநிதித்துவமும் அட்டவணைச் சமூக மக்களுக்குப் பத்தில் ஒன்றுகூட பல இந்திய மாநிலங்களில் கிடைப்பதில்லை. இதற்குச் சமூகநீதி மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாடே முன்னுதாரணமாகும். தமிழ்நாட்டின் இரு திராவிட அரசுகளிலும் கட்சிகளிலும் அட்டவணை மக்களைப் புறக்கணித்தே வருகின்றனர். அட்டவணைச் சமூகம் முன்னேற இடஒதுக்கீடு மட்டும் போதுமானதல்ல. மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு, பொருளாதாரப் பகிர்வு ஆகியவை அட்டவணைச் சமூகங்கள் பெறுவதே சமூகத்தளத்தில் சாதி இந்துக்களுக்கு, பிராமணர்களுக்கு இணையான நிலையைப் பெற வழிவகுக்கும். ஆட்சியாளர்களாகச் சாதி இந்துக்களும் பிராமணர்களும் ஆளும் சூழலில் அட்டவணைச் சமூக மக்கள் சொற்பமாக அரசின் பணியாளர்களாக வாய்ப்புப் பெறுவதால் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடாது. தமிழ்நாட்டை சமூகநீதி மாநிலம் என்றும் வடஇந்திய மாநிலங்களைப் பிற்போக்கு மாநிலம் என்றும் கூறும் அபத்தம் பல ஆண்டுகளாக நிலவிவருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் சமூகநீதியில் அட்டவணைச் சமூகத்தினர் உள்ளடங்கியவர்கள் இல்லை என்பதே நூறு சதவீத யதார்த்த உண்மையாகும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மற்றும் சாதிக்கொடுமைகள் தீவிரமாக இருக்கும் பல வடஇந்திய மாநிலங்களில் அட்டவணைச் சமூகத்தைச் சேர்ந்த பலர் முதல்வராக உருவாக முடிகிறது. இதே வேளையில் தமிழகத்தில் திராவிட அரசு, கட்சிகளில் முக்கியப் பதவிகளிலும் பொறுப்புகளிலும் கூட அட்டவணைச் சமூகத்தினர் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றனர். ஆனால் சமூகநீதி மாநிலம் என்கிற கூப்பாடு மட்டும் குறைவில்லாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
தமிழகம் என்பது சமூகநீதி மாநிலம் என்ற பொய்ப்பிம்பம் ஆளும் சாதி இந்து திராவிடக் கட்சிகளாலும் திராவிட அமைப்புகளாலும் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. திராவிட ஆட்சியில் அட்டவணைச் சமூக மக்களுக்கான நிர்வாகத் திட்டங்களை நிறைவேற்றாமல் புறக்கணிப்பதும் அதிகாரத்திலும் கட்சியிலும் உரிய பிரதிநிதித்துவம் தராமலும் இதுவரை திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் நடந்துவருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி அட்டவணைச் சமூகத்தினர் கேள்வி எழுப்பினால் நியாயமற்ற விளக்கங்களையும் அவதூறுகளையும் திராவிடக் கட்சியினரும் சிந்தனையாளர்களும் அளிக்கின்றனர். நியாயமான கேள்விகளுக்கு நியாயமற்ற விளக்கங்கள் அளிப்பதின் மூலம் அரசியல் பின்விளைவுகளைத் திராவிடக் கட்சிகள் வரும்காலங்களில் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வன்கொடுமை வழக்குகளில் சாதி இந்துக்களுக்கு ஆதரவான போக்குதான் திராவிட ஆட்சிகளில் இதுவரை நிலவிவருகிறது. தமிழகம் வன்கொடுமை நடக்கும் இந்திய மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது என்பது திராவிட ஆட்சியாளர்களின் சாதி இந்து ஆதரவு நிலைப்பாட்டை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. வன்கொடுமை நடக்கும் நேரங்களில் திராவிடத் தலைமைகள் மவுனத்தையே கடைப்பிடிக்கின்றனர். அட்டவணை மக்களின் தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் திராவிடக் கட்சிகள் தங்களின் கைப்பாவையாக வைத்துள்ளனர். இதன் காரணமாக வன்கொடுமைகளுக்கு எதிராகத் திராவிடத் தனித்தொகுதி உறுப்பினர்கள் வாய் திறந்த வரலாறு இல்லை.
அட்டவணைச் சமூக முன்னேற்றத்துக்குத் திராவிட இயக்கமே காரணம் என்கிற அபத்தமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் திராவிடம் என்ற சிந்தனையே அட்டவணைச் சமூகத்தைச் சேர்ந்த அயோத்திதாசர், ஜான் ரத்தினம் போன்ற தலைவர்களால் முன்மொழியப்பட்டு நிலை பெற்றதாகும். திராவிட இயக்கங்கள் எந்தவொரு கிராமங்களிலும் அட்டவணைச் சமூகக் கொடுமைக்கு எதிராகக் களம் கண்டது கிடையாது. நிர்வாக ரீதியாக அட்டவணைச் சமூகத்தவர்கள் பெறும் உரிமைகளுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. திராவிட ஆட்சிகள் தமிழகத்தில் நடைபெற்று 55 ஆண்டு காலத்தில் அதனுடைய அட்டவணைச் சமூக விரோதப் போக்கினைத் திராவிட இயக்கமோ அல்லது திராவிடம் என்ற பெயர்கொண்ட எந்த அமைப்பினரும் கேள்விக்குட்படுத்தியதில்லை. திராவிட அரசில் நிர்வாக ரீதியில் அட்டவணைச் சமூகத்திற்கு மறுக்கும் பொருளாதார, அரசியல் உரிமைகள் குறித்தும் இதுவரை திராவிட இயக்கங்கள் வாய்திறந்த வரலாறு இல்லை. சாதி ஒழிப்பும் நாத்திகமும் வன்கொடுமைகளுக்கும் எந்தவித நடைமுறைத் தீர்வோ இல்லை. திராவிடக் கட்சிகளின் அட்டவணைச் சமூக விரோத போக்கினை மறைக்கவே திராவிட இயக்கங்கள் பயன்பட்டுவருகின்றன என்பதே உண்மையாகும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then