“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்
ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…”
– லூனஸ் மத்தூப்
உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும் தைரியமாகவும் ஏற்றுக்கொள்கிறான் அப்படித்தான் இந்தக் கலைஞனின் மரணமும் என எண்ணத் தோன்றுகிறது.
“மக்களிடமிருந்து கற்றுக்கொண்டதை மக்களுக்கே சொந்தமாக்குவது மார்க்சியம். மக்களிடம் கற்றதைத் தனிச் சொத்துடமைபோல பணமாய், புகழாய், தனிநபர் வழிபாட்டுக்குறியதாய் ஆக்கிக்கொள்ளுவது முதலாளியம். நம்மில் பலபேர் அப்படியும் இப்படியும் வாழ்கிறோம். எப்படியிருப்பினும் வரலாற்றின் வெளிச்சத்திலிருந்து நம்மை ஒருபோதும் மறைக்க முடியாது” (‘இசைப்போர் 2’)
சமகாலத்தில் நம்மோடு வாழ்ந்து மார்க்சியத்தின் வலிமையையும், அம்பேத்கரியச் சிந்தனையையும் காலத்தின் சுவடுகளைப் பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும்படியான தேவையைத் தன் பாடல்களாலும் எழுத்துகளாலும், இடதுசாரி மேடைகள், தலித் இயக்க மேடைகள், இன்னும் முற்போக்கு இயக்க மேடைகள் என நீண்டு அதன் ஆயுளைச் சுருக்கிக்கொண்டது கலைகளின்வழி தம் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் வேரறுக்க தன் குரலைப் போர்வாளாகத் தூக்கிப்பிடித்ததின் விளைவா? அல்லது கலைக்கும் அரசியலுக்கும் இடைப்பட்ட ஜீவாதாரமான தொடர்பா? இன்னும் வியக்க வைக்கிறது இந்த மரணம்…
பொதுவாகவே அரசியல் புரட்சிகள் யாவும் சமூக, சமய கலை, இலக்கியப் புரட்சிகளையே முன்கண்டு வெகுண்டெழுந்திருக்கின்றன என்பதே வரலாறு முன்மொழியும் ஓர் உண்மை. ஆனால் இது எதிர்நிலையாக நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது அய்யா லெனின் சுப்பையாவின் கலைவழி பயணத் தடத்தில்…. குறிப்பிட்ட ஒன்றை உற்று நோக்கவும், அது தொடர்பானவற்றின் முக்கியத்துவத்தை மிகத் துல்லியமாக பார்த்து அணுகக்கூடிய கண்கள் கலைஞனுக்கு இருக்க வேண்டும். பொதுவாகவே தங்களைச் சுற்றியுள்ள வாழ்வில் சாதாரண மனிதர்களால் கவனிக்க இயலாத ஒன்றைத் தெரிவுசெய்ய அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படிக் கற்றுக்கொள்ள தவறியதால் என்னமோ தெரியவில்லை இந்த மாபெரும் மக்கள் கலைஞனை இழந்துவிட்டோமோ என்ற உருவகச் சொல்லாடல் அடையாளம் கண்டு கேட்கிறது.
வெறும் மக்கள் பாடகராக, கவிஞராக, நாடக எழுத்தாளராக இவரைப் பார்க்க முடியவில்லை, அதற்குமாறாக பரந்த அர்த்தத்தில் காற்றில் மிதக்கும் தம் மக்களுக்கான விடுதலை இசையை ஆயுதமாக்கிய கறுப்பினப் பாடகன் பால்ராப்சனாக, இசைப்போராளி ஹெலன் பொலாக்கா – வாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
2003இல் எனது முதுகலை வகுப்புத் தோழர் பெ. அருணகிரி நட்பால் கிடைத்த ஆளுமைதான் தோழர் லெனின் சுப்பையா. இவர் அறிமுகமே எனக்குள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இப்பொழுதெல்லாம் ஒரு பாடலைக் குறிப்பாக சினிமா வர்த்தகத்திற்காகப் பாடினாலே தலை வீங்கி நிற்கின்ற தன்மை பரவலாக இருக்கிறது. ஆனால் எத்தனை ஆண்டுகள், எத்தனை, மேடைகள், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதியச் சமூகத்தில், வர்க்க முரண்பாடுகளைக் கலைத்தொழிவதற்குத் தனித்துவத் தத்துவக் காரணியாகவே வாழ்ந்திருக்கிறார். எந்த ஒரு அக்ரகாரத்து ஆரோகணமும் தெரியாது, அவரோகணமும் தெரியாது. ஆனால் அதிகாரத்திற்கெதிரான இசையை உழைக்கும் மக்கள் கவனிக்கத்தக்கனவாய் உறுபெறச் செய்தவர்.
தன் குடும்பம் மீளா வறுமையில் இருந்த போதிலும் நிறுவனங்களுக்குள் சிக்குண்டுப் போகாமல் நிதி நெடி கலந்த காற்றுக்கு எச்சரிக்கை மணியடித்தவர்.
வாழ்க்கையை உற்று நோக்கித் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கிய நொடியிலேயே வளர்ச்சியின் ஈடுபாடும் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் தொடங்கிவிடுகிறது. ஆனால் ஓர் உண்மையான கலைஞன் நேரிடையாகச் சேகரிக்க வேண்டியதும், பக்குவப்படுவதும் அவனே நோக்க வேண்டியது முக்கியமானது.
டால்ஸ்டாய் இதையே வாழ்க்கையிலிருந்து பெறப்பெற்ற பொதுக் கருத்துகள், கலைகளின் அடிப்படையில் ஒவ்வொன்றும் நிறைவானதாக அமைய வேண்டுமென்றால் ஒரு கலைஞன் புதியதைக் கண்டுபிடிப்பவனாக இருக்க வேண்டும். வேறு யாரும் கண்டிராத வகையில் அவன் புதிய புரட்சிகர உலகத்தைக் காண வேண்டும் என்கிறார். இதோடு நின்றுவிடாமல் மென்டல்சொனின் இசை அழகானது என்கிறார். ஏனென்றால் பீத்தோவனின் இசைபோல புதுமையாகவோ, தனிப்பட்டதாகவோ எதுவும் இல்லை. பீத்தோவனின் இசையில் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஒருவராலும் யூகிக்க முடியாது. அப்படித்தான்
- தமிழக வரைபடத்தில் மேலவளவைத் தேடுங்க….
- கலைஞரோட மகள் கனிமொழி….
- விடுதலைக்கு மரணமில்லை…
- பண்ணைபுரம் ஈன்றெடுத்த பாவலரே
போன்ற பாடல்களில் வரும் வரிகள் மென்டல்சொன்னை நினைவுபடுத்துகிறது.
ஒரு கலைஞன் எப்போதுமே ஏழ்மையைத் தன் தொண்டைக் குழிக்குள் இறக்கிவிடக்கூடாது. அப்படி நுழையும் பட்சத்தில் அது வியாபாரத் தன்மையின் தொடக்கப்புள்ளியாக அமைவதற்குச் சாதகமாகிவிடும், அதுவே மரணப் புள்ளியாகவும் முடிவுறுகிறது.
தற்காலச் சூழலில் குறைந்தபட்சம் ஐந்து கலைஞர்களை ஒருங்கிணைத்து இரண்டு நிகழ்வுள் ஆரோக்கியமாகத் தரமுடியவில்லை. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கடுமையான பண நெருக்கடி அதிலேயும்கூட ஒரு நிகழ்விற்கு மொத்தமே மூன்றாயிரத்திலிருந்து அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் இதில் தபேலா கலைஞர்,
கீ. போர்டு கலைஞர், தவில் கலைஞர், ஒரு பெண் பாடகி, ஒரு ஆண் பாடகர் என வாங்கிய பணத்தைக் கலைஞர்களுக்குப் பிரித்துக் கொடுத்தாலே கையில் எஞ்சியிருப்பது வெறுங்கை மாத்திரமே. “அறிவே உன் பெயர்தான் அம்பேத்கராம்” எழுதிய கையில் வேறு என்ன இருக்க முடியும். இவை அனைத்துமே அக வாழ்வின் இயல்பான துயரத்தன்மையிலிருந்து கிளைக்கின்றன. கொண்ட கொள்கையின்பால் வாதத்தைத் தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்ததால் சமூகச் சொந்தங்களே முரண்பட்டு ஓட, ஓட விரட்டியது.
“தமிழகத்திலாவது கட்டியிருந்த 18-கோவணத்தில் 3 கோவணத்தை மாத்திரமே உருவினார்கள். ஆனால் இங்கு (புதுச்சேரி) முழுக் கோவணத்தையுமே உருவிக்கிட்டாங்களே” என்று வலியைப் பகிர்ந்துகொண்டது கண்முன்னே இன்னும் நிற்கிறது.
“என் மகன் ஸ்பார்டகஸ் மருத்துவராக வேண்டியவன். ஆனால் முடியவில்லை. காரணம் புதுச்சேரி என்னை வந்தேறிதலித் ஆக்கிவிட்டது. வந்தேரிகளுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிவிட்டது. என் இரண்டாவது மகன் கார்க்கிக்கு எங்க ஊர் (மதுரை) பக்கம்தான் பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கேம்பா. இங்க எனக்கு எந்தச் சொந்தமும் இல்லாமப் போயிடுச்சி. ஒருவேளை என் மகனுக்குத் திருமணம் முடிவாயிடுச்சின்னா மதுரப் பக்கமே போயிடலாமுன்னு நெனைக்கிறேம்பா…” என்று கண்கலங்கியது இன்னமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
18-ம் நூற்றாண்டில் அருணாச்சல கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனையில் சுந்தர காண்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட சீதை தனது கணவனின் வருகைக்காக ஓலமிட்டு அழுது புலம்புவாள். அப்போது கவிராயர் சீதை துன்புறுவதாகப் பாடுகிறார்.
“பறையர் ஊரிலே சிறையிருந் யென்னை
புரிந்து கைதொடுவாரோ?” 26
அதாவது, இராவணன் கவர்ந்து செல்லப்பட்ட அயோத்தி நகரின் குறுநில மன்னன் ராமனின் மனைவி சீதையானவள் இராவணன் தனது பலமான தொடைமீது தன்னை ஏந்திக்கொண்டு கவர்ந்து சென்று பறையர் ஊராக அழைக்கப்படும் இலங்கைத் தீவில் தன்னைச் சிறை வைத்திருந்தமையாலும் அத்தீவில் குடியிருப்பவர் பறையர் குடிகளான தீட்டுப்படிந்தவர் என்பதாலும் சத்திரிய சாதியினறான தனது தலைவன் ராமன் தன் மீது இரக்கம் கொண்டு தன் கை தொடுவானோ இல்லை பரிதவிக்க விடுவானோ? என்ற கவிராயரின் கூற்று தோழர் லெனின் சுப்பையா உட்பட்ட அனைத்து வந்தேரிகளுக்கும் பொருத்தப் பாடாக இருக்கிறது.
அறிஞர் மார்க்ஸ் சொல்லுவது போல கானாங்கோழி முட்டைக்குப் பதிலாகக் கல்லை வைத்தாலும் அதையும் அடைகாக்கத்தான் செய்யும், வேலையின் விரயத்தன்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் செய்து முடிக்கும். அதன் செயலின் நோக்கத்தோடு, இயல்பூக்கத்தையும் முடுக்குவனவாய் அமையப் பெற்றிருக்கும்…
இறக்கை முறிக்கப்பட்ட கானாங்கோழியாக சமூகக் கலை லட்சியத்தை மூச்சு உள்ளவரை தம் மக்களுக்கு விதைத்துச் சென்ற பரிசில் பெறா பாணன் எங்கள் தோழர் லெனின் சுப்பையா (தலித்).
An Artist must be an authentic creator…
and in very essence a revolutionary…
a man as dangerous as a guerilla…
because of his creat power of communication…
– Victor LiDio Jara