“இலக்கியத்தில் சாதிக்க வேண்டுமானால் கீழ் வர்க்கத்தின் மொழியைக் கற்க வேண்டும்” – சித்தலிங்கையா

சந்திப்பும் கேள்விகளும் : பாவண்ணன், ஜி.கே.ராமசாமி, தேவராஜன் மொழிபெயர்ப்பும் தொகுப்பும் : பாவண்ணன்

கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் போராட்டம் எழுச்சி கொண்டது. போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கவிஞரான சித்தலிங்கையா, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. இவர் கவிதைகள் பாடல் தன்மை வாய்ந்தவை. கர்நாடகத்தின் மூலை முடுக்குகளெங்கும் இவர் பாடல்கள் ஒலித்துவருகின்றன. கவிதைகள் தவிர மூன்று நாடகங்களும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் வந்துள்ளன. நிறப்பிரிகைக்காக இவரைக் கண்டு பேச முடிவெடுத்ததும், தமிழவன்தான் இவருடன் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்றுத் தந்தார். சட்ட மேலவை உறுப்பினராகவும் இருக்கிற சித்தலிங்கையாவுடன் இந்த நேர்காணல் 20.03.94 அன்று சட்டமன்ற விடுதியில் அறை எண்.160இல் நிகழ்ந்தது. கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் தயங்காமலும் எளிமையாகவும் விடை கூறினார் சித்தலிங்கையா. அவருக்குள் ஓர் எளிய கிராமத்து மனிதன் வாழ்வதை எங்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. முழு நேர்காணலும் கன்னடத்தில் பதிவு செய்யப்பட்டுப் பின்பு தமிழில் பெயர்த்துத் தொகுக்கப்பட்டது.

நீங்கள் எழுதத் தொடங்கிய காலம், அப்போது இருந்த சமூகப் பின்னணி, உங்கள் படைப்பாக்கம் பற்றிச் சொல்கிறீர்களா?

ரொம்பச் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். பெரும்பாலும் நான் வளர்ந்த சூழல்தான் அதற்குக் காரணமாக இருக்குமோ என்னமோ. நான் ஒரு கிராமத்திலதான் பிறந்தேன். என் அம்மாவின் ஊர் அது. அங்கு சுற்றிலும் குன்றுகள், நதி. அது ஒரு நல்ல சூழல். எது செய்ய வேண்டுமெனினும் நாங்கள் நதிக்குத்தான் போய்த் தீரவேண்டும். அது ஒரு கவித்துவமான மனோபாவத்தைக் கொடுக்கும் சூழல் என்றுதான் சொல்ல வேண்டும். நதி, மண் குன்று, மரம், செடி என்று இயற்கையின்பால் ஒரு நாட்டத்தை இது எனக்குக் கொடுத்தது. படிப்படியாக அதனோடு சமூக அனுபவமும் சேர்ந்துகொண்டது. சமூகத்தில் நான் கண்ட மேல், கீழ் என்ற வேறுபாடு, வறுமை என்னை மிகவும் பாதித்தன. முக்கியமாக மக்களின் வேதனை. முதலில் நான் எழுதிய கவிதைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. இப்போதுகூட அவற்றின் மேல் மிகுந்த ஈடுபாடு ஒன்றும் இல்லை. ஆனால், கவிதைகள் எழுதும் போக்கில், இந்தச் சமூக அனுபவமும் சேர்ந்துகொண்டபோது முக்கியமாக இந்த வேதனையை நான் உணர்ந்தபோது புதுவகையான கவிதையை எழுதத் தொடங்கினேன்.

இலக்கியத்தை வரிசைப்படுத்தும்போது நிவ்ய காலம், நவோதயா காலம், நவ்யோத்தரா காலம், பண்டாய காலம், அதற்கப்புறம் தலித் காலம் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. தலித் இலக்கியத் தோற்றம், அதன் பின்னணி பற்றிச் சிறிது விளக்குகிறீர்களா?

இலக்கியத்தை வகைப்படுத்த வருகிறவர்கள் இது பண்டாய இலக்கியம், இது தலித் இலக்கியம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில், எழுதும்போது இது தலித் இலக்கியம், தலித் கவிதை என்று திட்டம் போட்டுக்கொண்டு எழுதத் தொடங்குவதில்லை. அப்படி எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், என்னைப் போன்றவர்கள் எழுதியவற்றைச் சிலர் தலித் இலக்கியம் என்று வகைப்படுத்தினார்கள். அப்படிக் குறிப்பிட்டதில் தப்பு எதுவுமில்லை. ஒரு பயிற்சிக்காக இலக்கியத்தை நவ்ய, நவோதயா என்றும் பண்டாய, தலித் என்றும் பிரித்துப் பார்ப்பது குற்றமில்லை. ஆனால், இந்த வகையையே அல்லது வகைப்படுத்துதலையே இலக்கியம் என்று நம்பிவிடக் கூடாது. இலக்கிய வகையை மனதில் வைத்துக்கொண்டு எழுதப் புகுந்தால் எதுவும் கவிதையாகாது. நாம் எழுதியவற்றை விமர்சகர்கள் எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்பது அவரவர்கள் உரிமை. ஆனால், நான் முதன்முதலில் தலித் போராட்டங்களில்தான் ஈடுபட்டேன். அதுதான் என் ஆரம்பக்களம். தலித்துகள் துயரம் அளவு கடந்தது. தலித்துகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், தலித்துகளுக்குச் சமூக உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, எல்லாரும் சேர்ந்து தலித் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

தலித்துகள் மத்தியில் விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் மனதில் இருந்தது. அதே நேரத்தில் மற்றவர்கள்பால் துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்று எண்ணவில்லை. பிற சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்களின் தொல்லைகள், வேலையின்மை ஆகிய பிரச்சினைகள், மற்ற சாதிகளில் இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் எங்களுக்குப் புரிந்திருந்தன. எல்லாச் சாதிகளிலும் இருக்கிற சுரண்டல் பற்றிய அறிவு நமக்கு இருக்கவே செய்கிறது. சுரண்டப்படுகிறவர்கள் குறிப்பாகப் பெண்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்றே நினைக்கிறோம். எல்லாரும் ஐக்கியமாகித்தான் சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், தலித்துகள் மத்தியில் போராட்டக் குணம் உள்ளது. மற்ற சாதி ஏழைகள் நடுவே ஒரு கோழைத்தனம் உள்ளது. அதோடு தம் சாதி உயர்ந்தது என்கிற போலிப் பெருமை உள்ளது. இப்போலிப் பெருமை குறையக் குறைய அவர்கள் நடுவில் ஒரு நல்ல பிரக்ஞை உருவாகும். அப்போது இச்சமூகத்தில் துன்பப்படுகிறவர்கள் அனைவரும் ஒன்றே என்கிற உணர்வு வரும். இது படிப்படியாகப் வரும். ஆனால், தலித்துகளுக்கிருக்கிற போர்க்குணம், மற்ற சாதிக்காரர்களிடம் காணப்படுவதில்லை. தலித்துகளிடம் ஒரு வேகம் உண்டு, உற்சாகம் உண்டு. இது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இதன் வழியாக முன்னேற்றம் நேருமா என்று அறிய வேண்டும். அதற்காக நாங்கள் செய்தோம். தலித்துகள் போராட்டம் தலித்துகள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். அதே சமயத்தில் வெறும் சாதிப் போராட்டமாக அது நின்றுவிடக் கூடாது. சாதியை மீறிய ஒன்றாக ஆக வேண்டும். சமூகக் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு காண்கிற –  சுரண்டப்படுகிற எல்லாருக்கும் ஒரு தீர்வைக் காட்டுகிற ஒன்றாகத் தலித் போராட்டம் எழ வேண்டும். தலித்துகள் போராட்டத்தில் நம் அனைவருக்கும் ஒரு விடிவு வரும் என்கிற நம்பிக்கையையூட்டும் வகையில் அது அமைய வேண்டும். இந்த எண்ணத்தோடு இதை நாங்கள் தொடங்கினோம்.

எந்த வருஷம்?

எழுபதுகளின் ஆரம்பத்தில் நாங்கள் இதைத் தொடங்கினோம். இது பற்றிய ஆய்வுகளுக்குப் பல கருத்தரங்குகள் நிகழ்த்தினோம், ஊர்வலங்கள் சென்றோம், மாநாடுகள் நடத்தினோம். மேலும் பற்பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினோம். தலித்துகளுக்கு எந்தவிதத்தில் துன்பம், கொடுமை, அநியாயம் நிகழ்ந்தாலும் அதற்காக நாங்கள் குரல் கொடுத்தோம். இதனால் நாங்கள் பலமுறை கைது செய்யப்பட்டோம். போலீஸ் கொடுமைகளுக்கு உள்ளானோம். நிலப்பிரபுக்களின் கொடுமை, முதலாளிகளின் கொடுமை, அரசியல் பிரபலங்களின் மறைமுகக் கொடுமை ஆகிய எல்லா வகையான கொடுமைகளுக்கும் உள்ளானோம். ஆனாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்தே வந்தது. இப்பின்னணியில்தான் எங்கள் இலக்கியமும் தோன்றியது. தலித்துகள் போராட்டத்தையும் நடத்திக்கொண்டு, எழுதிக்கொண்டும் இருந்ததாலோ என்னமோ, எங்கள் இலக்கியத்திற்குத் தலித் இலக்கியம் என்று பெயர் வந்தது. ஆனால், இதை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை.

தலித் இலக்கியத்தின் எல்லைகளையும் பரிமாணங்களையும் மேன்மேலும் விரிவாக்கினோம். தலித்துகளின் வேதனை என்பது மொத்த உலகத்தாரின் வேதனையாக ஆக வேண்டும். உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கொடுமை நிகழ்கிறது! வலி இருக்கிறது, வேதனை இருக்கிறது, வறுமை இருக்கிறது, அவர்களும் இத்துயரங்களில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளுக்கு இன்றும் சிலர் தடையாகவும் அங்கங்கே இருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறவர்கள் பக்கம் நாம் இருக்க வேண்டும். அவர்கள் எம்மொழியைச் சார்ந்தவர்களாக இருப்பினும், எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும், உலகத்தின் எப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் குரலாக நாம் ஒலிக்க வேண்டும். இது எங்கள் தலித்துகள் போராட்டத்தின் நோக்கம். இப்போராட்டத்தில் இருக்கும்போது எங்களுக்கு இலக்கியத்தின்பால் நாட்டம் இருந்தது. நான் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன், தேவனூரு கதைகள் எழுதினார்கள். இன்னும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதினார்கள். இன்னும் பலர் பாடல்களாக எழுதிப் பாடிக்கொண்டிருந்தார்கள். கூடவே பல தலித் விமர்சகர்கள் தோன்றினார்கள், பல அறிவுஜீவிகள் உருவானார்கள். தலித்துகள் போராட்டமும் எங்கள் இலக்கிய முயற்சிகளும் சேர்ந்தே வளர்ந்ததால் சுலபமாக இது தலித் இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது.

தலித் என்கிற பதத்துக்கு ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட என்கிற பொருள்கள் இருந்தாலும் புழக்கத்தில் சாதியைக் குறிக்கிற சொல்லாக மாறிவிட்டது. இதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?

சாதியைக் குறிக்கிற ஒன்றாக ‘தலித்’ என்கிற சொல்லைச் சுருக்கிவிடக் கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்க வேண்டுமே தவிர, சுரண்டலின் குறியீடாக ஆகிவிடக் கூடாது. சுரண்டல், கொடுமை, அக்கிரமங்களை எதிர்க்கிற குறியீடாக மலர வேண்டும். அவமானம், பாதுகாப்பின்மை, எதிர்ப்பு ஆகிய பொருள்களைத் தலித் என்கிற சொல் தர வேண்டும். தலித்துகளுக்குள்ளேயே இருக்கக்கூடிய சில முற்போக்கு இலக்கியவாதிகள், எலிட்டுஸ்டுகள் தலித் என்கிற சொல்லைப் பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர, அவர்களிடம் உண்மையான தலித் பிரக்ஞை இல்லை. தலித் பற்றிய கனவுகளும் இல்லை. உண்மையான தலித் சிக்கல்களுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

இப்போதிருக்கிற கல்வி நிறுவனங்களில் தரப்படுகிற கல்வியானது மறைமுகமாக மேல் சாதிக் கலாச்சார உன்னதங்களை உணர்த்துவதாகவும், அவை பற்றிய கனவுகளை ஊட்டுவதாகவும் இருக்கின்றனவே தவிர, அசலான மக்கள் கலாச்சாரக் கல்வி கிடைக்க சாத்தியமில்லை. மேல் சாதிக் கலாச்சாரக் கனவில் மூழ்குகிற ஒருவன் சுலபமாகவே தன் சொந்த அடையாளங்களை இழந்துவிடுகிறான். படித்து வேலைக்குச் செல்கிற பல தலித்துகள் இப்படித் தனித்துத் தள்ளிச் செல்வதையே பார்க்கிறோம். கலாச்சாரத்தின் சொந்த முகத்தைப் பாதுகாப்பது என்பது மாற்றுக் கல்வி முறையில் சாத்தியமாகுமா அல்லது வேறு ஏதேனும் வழிமுறை உண்டா?

நீங்கள் சொல்வது உண்மைதான். நம் கல்வி என்பதே மேல்சாதிக் கனவுக்கான கல்வியாகவே உள்ளது. மேல்சாதிக்காரர்களின் அனுபவங்கள், பெயர்கள், பண்டிகைகள் இவையே திரும்பத் திரும்பப் பாடமாக இருக்கின்றன. எல்லாப் பாடங்கள் வாயிலாகவும் திரளக்கூடிய கருத்து என்பது மேல் சாதிக்காரர்களின் கருத்தாகவே உள்ளது. கல்வி என்ற ஒன்று மட்டுமல்ல, தொலைக்காட்சி, வானொலி, சொற்பொழிவுகள், பத்திரிகைகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் எல்லாவற்றிலுமே இந்த நிலைதான். எந்தெந்த ஊடகங்களில் எப்படியெப்படி வாய்ப்புகள் கிடைக்குமோ, அப்படியப்படி யெல்லாம் மேல்சாதி நோக்கு என்பதைத் திணிக்கவே முயற்சி நடக்கிறது. இது தப்பு, இது கீழ்சாதிக்காரர்கள் நடுவில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிடுகிறது. இது ஒரு மனநோயாகவே உருவாகிவிடுகிறது.

ஒருபக்கம் இவர்களால் சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழவும் முடியவில்லை, சொந்தமாக யோசிக்கவும் முடியவில்லை. இன்னொரு பக்கம் இந்தத் தாழ்வு மனப்பான்மையால் வருகிற மனக்கோளாறு. இரண்டு விதமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். மொத்தத்தில் அவமானப்படுத்துகிற அமைப்பே தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது. எனக்குத் தனிப்பட்ட முறையில் தோன்றுவது, கல்வி என்பது சார்பற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். பூமியில் இருக்கின்ற ஒவ்வொன்றைப் பற்றிய அறிவைச் சார்பற்ற முறையில் பெறுவதற்கும் வளர்த்துக்கொள்வதற்குமான வழியாகக் கல்வி அமைதல் வேண்டும். ஆனால் தற்போது என்ன நடந்திருக்கிறது! அறிவு பெறும் கருவியாக ஆகியிருப்பது என்னமோ வாஸ்தவம். ஆனால், ஒரு சார்பான அறிவாக வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவின் நம்பிக்கைகளைத் திணிப்பதாக உள்ளது. இது யாருக்கும் புரிவதில்லை. அந்த அளவுக்கு இது மனதில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாற கல்வி, சார்பற்ற ஒன்றாக மாற வேண்டிய அவசியம் உள்ளது. இன்னொன்றையும் சொல்ல ஆசைப்படுகிறேன். கீழ்மட்டத்தில் வாழ்பவர்களிடமும் தலித்துகளிடமும் ஓர் அழகான, அசலான, கசடு சேராத பண்பாடு உள்ளது. ஆண் கடவுள்கள், பெண் கடவுள்கள், நடனம், கதைகள், பாட்டு, புராணங்கள், நம்பிக்கைகள், உலகப் பார்வை, பழக்க வழக்கங்கள் எல்லாமே அவர்களுக்கேயானதாகத் தனிப்பட்ட விதத்தில் உள்ளன. ஒரு தனிப்பட்ட அமைப்பாக அழகாக உள்ளது. ஆனால் இப்பண்பாட்டினைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

யார் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறீர்கள்?

கீழ்வர்க்கத்தவர்கள். இது நமது ஆட்டம், இது நமது கதை, இது நமது பாட்டு, இது நமது உணவு என்கிற உணர்வு இவர்களுக்கு இல்லை. இது மாறி இவர்களிடம் இவை பற்றிய அக்கறை வளர வேண்டும்.

ஆனால் மேல்சாதிப் பார்வை என்பது கீழ்ச் சாதிக்

காரர்களின் கடவுளை நாசப்படுத்தியது மட்டுமல்ல, சாப்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் நாசப்படுத்திவிட்டது. இன்று இறைச்சி உண்ணும் பழக்கம் உள்ளவன் கூட அதைத் திருட்டுத்தனமாக உண்ண வேண்டியிருக்கிறது. உண்ணும் பழக்கம் இருக்கிறவனாக இருந்தாலும் கூட, தனக்கு அப்பழக்கம் இல்லை என்று சொல்வது மேல்சாதிக்காரர்களுக்கு இப்பதில் சந்தோஷம் கொடுக்கும் என்பதால்தான். மொத்தத்தில் மேல்சாதிக்காரர்களின் சந்தோஷத்திற்காக உணவுப் பழக்கவழக்கத்தைக் கை

விடுவது மட்டுமல்ல, கடவுள்களையே மாற்றிக்கொள்கிறார்கள். தமது பெயர்களையும் மாற்றிக்கொள்கிறார்கள். இம்மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் காரணம் வெகு வேகமாக அவர்களுக்குள் இயங்கும் தாழ்வு மனப்பான்மைதான். மொத்தத்தில் அவர்கள் ஆளுமையே போலியான ஆளுமையாகிவிடுகிறது. இது தவறு.

ஒரு மனிதனை அவமானப்படுத்த நினைத்தால், அவனுடைய கடவுளை முதலில் அவமானப்படுத்தினால் போதும் என்று நினைத்துக்கொள்வேன். உன் கடவுள் போலி, மோசக்காரன் என்று சொன்னால் போதும், அம்மனிதன் உடனே சோர்வடைந்துவிடுகிறான். ஏனெனில், அவனது மரியாதை, பலம், திறமை எல்லாமே இருக்குமிடம் அக்கடவுள்தான். இது கற்பனையான எண்ணம்தான். ஆனால், அவனுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கடவுளையே இல்லை என்று சொல்லிவிட்டால் அவன் முழுக்க முழுக்க ஊக்கமிழந்து போகிறான். அதிலிருந்து அவனது ஆளுமை சிதையத் தொடங்குகிறது. அவனிடமுள்ள உற்சாகம் மடிந்துவிடுகிறது. வாழ்க்கை மேல் அவனுக்குள்ள கோபம், நம்பிக்கை அழிந்துவிடுகிறது. தினசரிப் பாடுகளை எதிர்கொள்கிற மனோதைரியம் அழிந்துவிடுகிறது.

நான் நாத்திகவாதம் பேசுகிறவன்தான். ஆனால், சமீப காலமாக இவை பற்றி யோசிக்கிறபோது இவற்றின் மேல் ஒருவகையான மதிப்புத் தோன்றுகிறது. சிலவற்றை அனுமானப்படுத்தி இச்சாதியினரைச் செயலிழக்க வைக்கிற மேல் சாதிப் பார்வையை நாம் அடையாளப்படுத்திக்

காட்ட வேண்டும். இன்னொன்றும் சொல்ல வேண்டும். நம் கடவுள்கள் எல்லாம் அவர்கள் கடவுள்களுக்கு வாகனங்களாக மாறிவிட்டன; அந்தக் கடவுள்களின் கோயில்களில் வாயில் காப்பாளர்களாக மாறிவிட்டன. தானே கடவுளாக ஓரிடத்தில் இருந்த ஒன்று, இன்னோரிடத்தில் இன்னொரு கடவுளுக்கு வாயில் காப்பவனாக ஆகிவிட்டது என்றால், இதன் பொருள் நம் ஜனங்களெல்லாம் அங்கே சென்று அடிமைகளாகிவிட்டார்கள் என்பதுதான். ஒருகாலத்தில் இம்மண்ணுக்கே சொந்தமாக இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கதிக்கு ஆளாகிவிடுகிறார்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நாசமாகிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்கத்தில் பெரியார் சொன்னதும் அம்பேத்கர் சொன்னதும் புதுவடிவில் வர வேண்டும்.

கீழ் வர்க்கத்தவர்களின் பண்பாடு மறுமலர்ச்சியுற்று எழுச்சி பெற்றால், மேல் வர்க்கத்தவர்க்கும் இது வழிகாட்டி ஆகும் என்பதால் அது சாதி அடிப்படையில் வர வேண்டும் என்பதில்லை. நான் இரண்டு வர்க்கங்களின் கடவுள் புராணங்களையும் படித்துள்ளேன். அவர்களுடைய கடவுள் புராணங்கள் எல்லாமே ஒருவிதமான ரெளடிகள் புராணங்களாக உள்ளன. அடித்துக்கொள்வது, கொல்வது, கடத்திக்கொண்டு போவது, திருடுவது எல்லாமே மேல்வர்க்கக் கடவுள்களின் வேலைகளாக உள்ளன. இருப்பதிலேயே மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டிருப்பது நம் கீழ் வர்க்கக் கடவுள்கள்தாம். அக்கடவுள்களையெல்லாம் அவர்கள் தம் சொந்த இலாபங்களுக்காக அழித்துவிட்டார்கள். இவற்றைக் கடவுள்களின் கதைகளாக நாம் பார்க்கத் தேவையில்லை. மனிதர்கள் கதைகளாகப் பார்க்க வேண்டும். இது ஒரு குறியீடாகக் கலாச்சாரத்தில் தங்கிவிட்டது, அவ்வளவுதான். இவற்றுக்கு இன்றைய சூழலில் புத்தெழுச்சி ஊட்டுவது நல்லது என்று தோன்றுகிறது.

தொடக்கத்தில் நீங்கள் சொல்லும்போது தலித்துகளிடம் சாதி பற்றிய எந்தப் பெருமையும் இல்லாததால் போர்க்குணம் இருப்பதாய்ச் சொன்னீர்கள். அதற்கப்புறம் தலித்துகளிடம் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவும் சொல்கிறீர்கள். இது முரணாக இல்லையா?

தாழ்வு மனப்பான்மை இருக்கும் நபர் யார் என்று பார்க்க வேண்டும். தலித்துகள் நடுவிலும் எலிட்டிஸ்டுகள் – மேட்டிமைவாதிகள் உள்ளார்கள். தாழ்வு மனப்பான்மை என்பது அவர்களுடைய பிரச்சினை. ஆனால், இந்த எலிட்டிஸ்டுகள்தாம் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். எந்தக் குழுவிலும் பணபலம் உள்ளவன், படித்தவன், அரசியல் பலம் உள்ளவன்தான் தலைவனாகிவிடுகிறான். இந்தத் தலைவர்கள்தாம் இப்பிரச்சினையால் தவிக்கிறார்கள். ஆனால், நிஜமான தலித்துகள் நடுவே இந்தப் பிரச்சினை இல்லை. அவர்கள் எந்தச் சூழலிலும் போர்க்குணத்தை விடாதவர்களாக இருக்கிறார்கள். போலியான இத்தலைவர்கள் மறைந்து அசலான தலித்துகள் குழுவிலிருந்து தம் பண்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற தலைமை தோன்ற வேண்டும். அவர்கள் தோன்றும்போதுதான் உயர்வுக்கு வழி தோன்றும். இல்லாவிட்டால் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக விளங்குகிற போலித் தலைவர்கள் கௌரவத்தையே குலைத்துவிடுவார்கள். தம் சொந்த இலாபத்துக்காக மொத்தச் சாதியையே விற்றாலும் விற்றுவிடுவார்கள். இவர்கள் முகங்களை அம்பலப்படுத்தும் காரியம் உடனடியாக நடக்க வேண்டும். அதன் பிறகுதான் உண்மைத் தலைவர்கள் தோன்றுவார்கள். அப்போதுதான் அசலான மனிதாபிமான மிக்கப் பண்பாட்டை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்ய முடியும்.

கர்நாடகத்தின் வடக்குப் பகுதியில் நான் ஒரு திருவிழாவைக் கவனித்திருக்கிறேன். அந்தப் பகுதியில் இருக்கிற ஜனங்கள் எல்லாம் திருவிழாவன்று கந்தலாடையைத்தான் அணிந்துகொள்ள வேண்டும், கந்தலாடையோடு ஊர்வலம் செல்ல வேண்டும். கொஞ்சம் பணம் இருக்கிறவன் கூட ஏழைகளோடு கந்தலை அணிந்துகொண்டு வர வேண்டும்.

எந்த ஊர்?

ராய்ச்சூர் மாவட்டத்தில். கந்தலை அணியவில்லை என்றால் அவனுக்கு அத்திருவிழாவில் கலந்துகொள்ளத் தகுதியில்லை. கந்தலோடு எல்லாரும் காட்டுக்குச் சென்று, சமையல் செய்து படைத்து, கல்லைக் கழுவி அதன்மேல் சாப்பாட்டைப் பரிமாறிக்கொண்டு ஒன்றாகச் சாப்பிட வேண்டும். ஒருவேளை, கந்தல் உடுத்திய சாமியார் எவராவது இருந்து மறைந்துவிட, அவரைக் கௌரவிப்பதற்காகப் பொதுமக்கள் அனைவரும் ஒருநாளில் இப்படிக் கூடிச் செய்பவர்களாக இருக்கலாம். வேறு ஏதாவது காரணமாகவும் இருக்கலாம். மொத்தத்தில், திருவிழாவில் ஒரு ஜனநாயகக் குணம் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி நம் பண்பாட்டில் ஏராளமாக உள்ளன. வருஷத்துக்கு ஒருமுறை கடவுளைச் செருப்பால் அடித்து வழிபடுகிற பண்டிகையும் கூட நம்மிடம் உண்டு.

உண்மைதான், தமிழகத்தில் சேலத்தில் கூட இப்படியொரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அப்பண்டிகைக்கே செருப்படித் திருநாள் என்றுதான் பெயர். அம்மனை வரிசையாக நின்று செருப்பால் அடிப்பதுதான் அப்பண்டிகையின் நோக்கம்.

எதிர்ப்புக்குணம் என்பதுதான் இப்பண்டிகையின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறப் பண்பாட்டில் மனிதர்கள் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று சொல்கிறோம். அதேபோல் அப்பண்பாட்டில், கடவுள் தவறு செய்தால் மனிதர்கள் தண்டிக்கிற குணமும் உண்டு. அதேபோல் இங்கும் ஓர் அம்மன் உண்டு. எல்லாரும் குறிப்பிட்ட நாளில் சென்று அம்மன் மேல் எச்சில் துப்புவார்கள். கடவுள் ஏதோ தவறு செய்திருக்கிறது, மனிதர்கள் அதற்குத் தண்டனை தருகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

பிராமணரல்லாதார் எழுச்சி என்பது தென்னிந்திய அளவில் தமிழகத்தில் தீவிரமாக இயங்கிவந்தும்கூட தலித் இலக்கியம் என்பது இப்போதுதான் பேசப்படுகிற ஒன்றாக உள்ளது. ஆனால், அப்படியோர் இயக்கம் பிரபலமாக இல்லாத நிலையில்கூட கர்நாடகத்தில் எழுபதுகளிலேயே தலித் இலக்கியம் தோற்றம் கண்டுவிட்டது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

பிராமணரல்லாதார் எழுச்சி என்பதைப் பொறுத்த அளவில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பிராமணரல்லாதவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே – அநேகமாக இந்தியாவிலேயே முதன்முறையாக – மைசூர் மகாராஜா காலத்தில் வழங்கப்பட்டது. இங்கு நடந்த இயக்கம் என்பது தமிழகத்தில் இருந்தது போன்ற எதிர்ப்புக் குணம் கொண்டதன்று; இருக்கிற சூழலிலேயே சில பயன்களைப் பெறுவது என்கிற அளவில் இயங்கியது. தலித்துகளுக்கான கல்வி என்பது முக்கியமான விஷயம். அதற்குத் தமிழகத்தைவிட கர்நாடகத்தில் வாய்ப்பு இருந்தது என்று எண்ணுகிறேன். மேலும் தலித்துகளுக்கு நடுவில் வேகமாக வளர்ந்த நடுத்தட்டு மக்கள் கூட்டமும் இன்னொரு காரணம். இவை இரண்டும் உறுதியாக இருக்கும் இடத்தில்தான் தலித் இயக்கமும் வலிமையாக இருக்கும். மகாராஷ்டிரத்தில் இவ்வியக்கம் தோன்றியதற்கும் இதுதான் காரணம். கர்நாடகத்தில் அப்போதுதான் தலித்துகள் மிக வேகமாக வளர்ந்துவரும் நேரம். தலித் இலக்கியத் தோற்றத்திற்கும் எழுச்சிக்கும் இவையெல்லாம் காரணங்கள்.

சாதி, மத பேதமற்ற சமத்துவச் சமுதாயம் காண்பதற்கான சீர்திருத்த இயக்கத்திற்கும், தலித்துகள் பிரச்சனைகளை முன்வைத்து எழுகிற தலித்துகள் போராட்டம் மற்றும் தலித்துகள் இலக்கியத்திற்கும் ஒற்றுமை உண்டா? அல்லது இரண்டுமே வேறு வேறு திசையில் இயங்குபவையா?

ஒருவகையில் இரண்டும் ஒன்றே. தலித்துகள் போராட்டம் கூட சாதி எதிர்ப்புப் போராட்டம்தான். தலித்துகள் இலக்கியம் கூட சாதி எதிர்ப்பு இலக்கியம்தான். அவை ஒருபோதும் சாதியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. தலித் இயக்கமோ அல்லது இலக்கியமோ சாதியை முன்வைத்துப் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு தலித்திற்கு அநியாயம் நடந்திருக்கிறது என்றால், அவன் தலித்தாக இருப்பதால் அது நடந்திருக்கிறது என்று பொருள். இக்கொடுமை, அக்கிரமத்தின் மூலவேர் சாதிதான். இதை எழுதுவதற்கு நோக்கம், ஒருபக்கம் தலித்துகள் மீதான கொடுமைகள் போக வேண்டும் என்பதும், மறுபக்கம் சாதி எண்ணம் அகல வேண்டும் என்பதும் ஆகும். ‘தலித்’ என்கிற அடையாளத்தைக் குறிப்பதன் நோக்கம் கவனத்தை ஈர்ப்பதற்குத்தான். ‘ஒரு வறியவனுக்கு நேர்ந்த கொடுமை’ என்கிற வாசகத்தில் அடர்த்தியில்லை. மிகவும் தட்டையாக உள்ளது. ‘ஒரு தலித்துக்கு நேர்ந்த கொடுமை’ என்பதில் அடர்த்தி உள்ளது. வேகம் உள்ளது. சாதியை முக்கியப்படுத்தி இது நடந்துள்ளது என்பதால்தான் இதைக்கூடக் குறிப்பிடுகிறோம். சமீபத்தில் மேலவையில், கலப்புத் திருமணம் செய்துகொண்டு தம் பிள்ளைகளை எச்சாதியின் கீழும் சேர்க்காமல் வளர்ப்பவர்களுக்கும் அப்பிள்ளைகளுக்கும் கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளிலும் ஐந்து விழுக்காடு இடஒதுக்கீடு தர வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தேன். இதைப் பரவலாகவே எல்லாரும் வரவேற்றார்கள். இன்றும் இதன்மேல் விவாதம் நிகழ்ந்துகொண்டுள்ளது. இது வளர்கிற பட்சத்தில் சாதியற்றவர்கள் எண்ணிக்கை வளரும் வாய்ப்பு உள்ளது. சாதி இருக்க வேண்டுமா, போக வேண்டுமா என்கிற சர்ச்சை ஒவ்வொரு வீட்டிலும் நடக்க வேண்டும். ஓட்டல்களில், பேருந்துகளில், கூடுமிடங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் எல்லாம் இது சர்ச்சையாக வேண்டும். ஒரு காலத்தில் – பெரியார் காலத்தில் – இது நடந்திருக்கலாம். ஆனால் அதோடு முடிந்ததாக அது இருக்கக்கூடாது. காலம்தோறும் நடக்க வேண்டும். புதிய புதிய கோணங்களில் இது நடந்துகொண்டிருக்க வேண்டும்.

இலக்கியத்திற்கான அழகியல் பற்றிப் பலரும் பல நேரங்களில் பேசுகிறார்கள். தலித் இலக்கியத்திற்கான அழகியலை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?

தனியான ஓர் அழகியல் மீது எனக்கு நம்பிக்கையில்லை. அழகியல் நோக்கிலிருந்து பார்க்கும்போது உண்மையான கலைத்தன்மை என்பது கீழ்வர்க்கத்திடம்தான் உள்ளது. எந்தப் பேச்சானாலும் அல்லது எதை வெளிப்படுத்த நேர்ந்தாலும் அவர்கள் வெளிப்படுத்துவது உவமைகள் மூலம்தான். திட்டு, பாராட்டு, கிண்டல் எல்லாமே உவமைகள் மூலம்தான், வக்கணையான பேச்சு மூலம்தான். இங்கிருக்கிற வாக்கியச் செட்டு மேல்சாதிகளிடம் இருப்பதில்லை. மேல் சாதிக்காரர்கள் போல எழுதும்போதுதான் கீழ் வர்க்கத்தவர்கள் கெட்டுப்போகிறார்கள். உண்மையில் சொந்த மரபு, சொந்த மொழி, சொந்தப் பண்பாடு, சொந்த வரலாறு எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு ஒரு கீழ் வர்க்கத்தவன் எழுதினானெனில், அவன் எழுத்தை மிஞ்ச முடியாது. மிக உன்னதமான இலக்கியங்கள் இவர்களிடமிருந்துதான் தோன்றும்.

மேல் வர்க்கத்தவர்கள் தம்மையும் தம் மொழியையும் வளர்த்துக்கொள்வதற்குக் கீழ் வர்க்கத்தவர்களையே சார்ந்திருக்க வேண்டும். அவர்கள் இலக்கியம் பெரும்பாலும் தத்துவ மட்டத்தில் இயங்குபவை. நம் இலக்கியம் உணர்ச்சி சார்ந்தவை, உயிருள்ளவை. இலக்கியம் என்பது தத்துவ மட்டத்திற்குச் சென்றுவிட்டால் அதுவொரு பாடப்புத்தகம் போலத்தான் ஆகும். வறுமையைப் பற்றி மேல் சாதிக்காரன் எழுதினால் அது பொருளாதாரப் புத்தகம் படித்தது போலத்தான் இருக்கும்; சாதி பற்றி எழுதினால் சமூகவியல் படித்தது போல இருக்கும்; மரம், செடி, காடு பற்றி எழுதினால் தாவரவியல் படித்தது போல இருக்கும். அதாவது அந்த அளவுக்கு அவர்கள் மொழி பலவீனமாகிவிட்டது.

இலக்கிய ரீதியாக அவர்கள் ஏதேனும் சாதிக்க விரும்பினால் கீழ் வர்க்கத்தினரிடமிருந்தே மொழியைக் கற்க வேண்டும். கீழ் வர்க்கத்தினரின் பாவனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும், பண்பாட்டைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் மொழி, கடவுள் சிந்தனையில் மூழ்கி மூழ்கித் தேய்ந்து தட்டையாகிவிட்டது. ஒரே பாட்டைத்தான் பல விதங்களில் பாட வேண்டும். அதை எத்தனை முறைதான் பாடுவது. சிவா, ராமா, கிருஷ்ணா என்று எவ்வளவு பாடுவது, அலுத்துவிடும். ஆனால், நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் கீழ் வர்க்கத்தைச் சேர்ந்த கடவுள்கள் ஏராளம், அவர்கள் பற்றிய கதைகள் ஏராளம். இந்திய இலக்கியத்திற்கு இனி ஏதேனும் கொடை என்றால் அது இந்தக் கலாச்சாரத்திலிருந்துதான் வர வேண்டும். எனவே தலித் இலக்கியம் என்பதற்குத் தனியான அழகியல் என்பது தேவையில்லை. நம்மைப் பற்றிச் சரியாகவும் தெளிவாகவும் தெரிந்துகொண்டு சிறந்த முறையில் படைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். வாழ்வு பற்றிச் சொந்த அனுபவம் எதுவுமற்ற நிலையில் மேல் சாதிக்காரர்கள் அழகியலுக்காக நம்மைத்தான் அண்டியிருக்க வேண்டும்.

வேதனை அல்லது வலி மிகுந்த சூழலிலிருந்து வெளிப்படுகிற எழுத்தாளன் அவ்வேதனைகளைத் தம் படைப்புகளில் பதிவு செய்கிறான். ஒரு நவீன இலக்கியவாதி அல்லது இன்று எழுத ஆரம்பிக்கிற எழுத்தாளன் தமக்குப் பிந்தைய இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்கும்போது அது வலிகளின் பாதையாக இருக்கிறது. குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் குறிப்பிட்ட சூழலில் எழுந்த வாழ்க்கைப் பிரச்சினையானது இன்றும் தொடர்கிற ஒன்றாக இருக்க, எழுத்து அதைக் கடந்துவிடுகிறது. புதிய எழுத்தாளனுக்கு அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் கூட இது இருக்கக்கூடும். இதை அவன் எப்படி எதிர்கொள்வது?

ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பிரச்சனைகள் மலிந்த சூழலால் பாதிக்கப்பட்டு, எழுத்தாளன் பிரச்சனையின் ஒரு படைப்பை உருவாக்குகிறான். பிரச்சனையின் தீவிரத்தை மக்கள் உணரும் வண்ணம் கலையுணர்வுடன் எழுதிய அவன் உணர்வைப் பாராட்ட வேண்டும். பிரச்சனையின் முடிவை அவன் கற்பனையாகப் படைக்கத் தேவையில்லை. ஒரு முடிவு சமூகப் போக்கில் நிகழும்போது, அது பதிவு பெற்றால் அது வேறு விஷயம். ஆனால் வலிந்து செய்தல் தேவையில்லை. போராட்டம் என்று இறங்கி அலைவதும் கூட அவ்வளவு முக்கியமில்லை. வலிந்து ஒரு தொழிற்சங்கவாதி போல முழங்க வேண்டியதில்லை. ஏற்கெனவே வெளியே திறமையான – அதே வழிவகைகளில் காலம் காலமாகப் பயிற்சி பெற்ற தொழிற்சங்கவாதிகள் இருக்கிறார்கள். அசலான அவர்கள் முன் இவர்கள் முழக்கம் எடுபடுவதில்லை. ஒருபக்கம் எழுத்தையும்விட்டு இன்னொரு பக்கம் தொழிற்சங்கவாதியாகவும் வெற்றிகரமாகச் செயல்பட முடியாமல் இரண்டுங்கெட்டானாகப் போக நேரும். இரண்டும் தனித்தனிக் களங்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இக்குழப்பம் இல்லாமல் இயங்கும்போது எங்கோ ஓரிருவரால் வெற்றிகொள்ள இயலும். ஆனால் அவர்கள் விதிவிலக்கானவர்கள். புது எழுத்தாளனுக்கு இத்தெளிவு அவசியம். அதே நேரத்தில் வெறும், கறுப்பு, கறுப்பு என்றோ சிவப்பு, சிவப்பு என்றோ எழுதுவதால் மட்டுமே ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது. கலைத்தன்மையோடு ஒரு படைப்பை உருவாக்கப் படைப்பாளி கடுமையான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும்.

எழுதிக்கொண்டிருக்கும்போது எழுத்தாளனை ஒருவித மனநிலை வாட்டியெடுக்கும்போது, ‘என்னடா இத்தனை எழுதுகிறோமே. இதனால் யாருக்காவது பயன் உண்மையிலேயே இருக்கிறதா’ என்று தோன்றும்போது நிச்சயம் குழப்பம் நேரும். அப்போது என்ன செய்வது?

இது தவிர்க்க இயலாதது. எழுத்தாளர்கள் அரசியல் போராட்டக்காரர்களாக இருக்க முடியாது அல்லது இருக்கக் கூடாது என்றில்லை. மிகப்பெரிய எழுத்தாளர்கள் சிலர் அப்படி இருந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சட்டசபை உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஜனாதிபதியாகக் கூட இருந்திருக்கிறார்கள். ஆனால், அத்தகையவர்கள் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை. இலக்கியமும் அரசியலும் போராட்டமும் சுயேச்சையான களங்களென்றே அவர்கள் இருந்தார்கள். போராட்டத்தில் இருக்கும்போது ‘நான் கவிஞன்’ என்று தோன்றும் எண்ணமும் அல்லது கவிதைகள் எழுதும்போது ‘நான் அரசியல்வாதி’ என்று தோன்றும் எண்ணமும் ஆபத்தைத்தான் விளைவிக்கும்.

பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவற்றை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?

பிராமண எதிர்ப்பு என்பதை அதன் தத்துவப் பின்னணியோடு புரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் பிராமணன் என்கிற காரணத்துக்காகவே அவனை ஒதுக்குவது அல்லது பிராமணனல்லாதவன் அல்லது தலித் என்ற காரணத்துக்காகவே அவனைக் கடவுளாகக் கொண்டாடுவது தவறு. அதாவது மேம்போக்காக ஒன்றை மலிவாக்கிப் புரிந்துகொள்வது பிழை. இந்த அமைப்புப் பற்றிய சரியான புரிதல் வேண்டும். இதன் பின்னணியில்தான் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஃபிரையர் இதுபற்றி conscientisation என்று சொல்வதுண்டு. இது உருவாகாத வரைக்கும் இதற்கு முடிவு இல்லை. பெயரளவில் மேம்போக்காக பிராமணன், பிராமணனல்லாதவன் தலித், தலித் அல்லாதவன் என்று சட்டகமிட்டு யோசிக்கத் தேவையில்லை. இப்பார்வை இலக்கியத்திற்குக் குந்தகத்தையே விளைவிக்கும். நிலப்பிரபு என்ற மாத்திரத்திலேயே எல்லாக் கெட்ட குணங்களுக்கும் உறைவிடமாகவும், கூலிக்காரன் என்ற மாத்திரத்திலேயே எல்லா நல்ல குணங்களுக்கும் உறைவிடமாகவும் சித்திரிப்பது சரியல்ல. இது சரியான பார்வை ஆகாது. எனவே பிராமணர், பிராமணரல்லாதார் என்பதை ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பிராமணிய மதிப்பீடுகள் பிராமணரல்லாதவர்களிடமே அதிகமிருக்கின்றன. இம்மதிப்பீடுகளால் எந்தப் பயனுமில்லை. இவற்றை உதற வேண்டும், ஏனைய சாதிக்காரர்களோடு பழக வேண்டும், அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று பிராமணனுக்கே முதலில் தோன்றும்போது, இம்மதிப்பீடுகளை உதறி, நிறுவப்பட்ட பிராமணியத் தன்மைகளிலிருந்து விலகி இருக்கிறான். ஆனால், தாழ்வு மனப்பான்மையால் பிராமணரல்லாதவன் பிராமணிய மதிப்பீடுகளைத் தழுவிக்கொள்கிறான். எனவே நோக்கம், வாழும் முறை, யோசிக்கும் முறை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில்தான் ஒருவனைப் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் எலிட்டிஸ்டுகளான சுரண்டல் குணமுடைய பிராமணரல்லாதவன் தலைமையில் பிராமணரல்லாதவர்கள் அணிதிரள்வதைத் தவிர்க்க முடியும். அதே நேரம் நல்ல உணர்வுகளுடைய பிராமணன் கண்டனங்களுக்கு உள்ளாவதும் தவிர்க்கப்பட முடியும். இதைத் தலித்துகள் நடுவிலும் பொருத்திப் பார்க்க முடியும். எலிட்டிஸ்ட் தலித்துகள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள். மொத்தத்தில் பொத்தாம் பொதுவாக ஒருவனைச் சாதிப் பின்னணியில் வைத்துப் பார்ப்பதைவிட, அவனது அக்கறை, உழைப்பு சார்ந்து பார்த்தல் முக்கியம்.

நாட்டுப்புறத் தேவதைகள் என்கிற உங்கள் ஆய்வு பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது பற்றிக் கொஞ்சம் சொல்கிறீர்களா?

அடிப்படையில் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இவ்வாய்வை மேற்கொள்ளும்போது ஒருவகையான ஆர்வம் பிறந்தது. முதலில் இக்கிராமத்துக் கடவுள்களை இதெல்லாம் ஒருவகையான மூட நம்பிக்கை, சுரண்டலின் குறியீடு என்றெண்ணி ஒதுக்கி வைத்திருந்தேன். ஒரு பத்து வருஷகாலம் கர்நாடகம் முழுக்கச் சுற்றியலைந்து கிராமத்துத் தேவதைகள் பற்றிய விவரங்களைச் சேகரித்தேன். தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிலும் அலைந்தேன். பீகார், மேகாலயா, கேரளம் போன்ற இடங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இக்கடவுள்கள் ஆய்வு, உழைக்கும் மக்களாகிய கீழ்ச்சாதிக்காரர்கள் எந்த அளவுக்கு மனிதாபிமானத்தோடு வாழ்கிறவர்கள், எந்த அளவு நியாயத்தின் பக்கம் நிற்பார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒரு காட்டுக்குள் இருக்கிற கடவுளைப் பார்ப்பதற்காக ஒருவன் என்னை அழைத்துச் சென்றான். அங்கு போனால் ஒரு சின்ன கல். சுற்றிலும் மரம், செடி அவ்வளவுதான். இதுதான் கடவுள் என்றான். கோயில் எதுவும் கட்டவில்லையா என்று கேட்டேன். கோயில் கட்டத் தமக்கும் ஆசைதான் என்றும் கட்டுவதற்கு ஏதேனும் முயற்சி எடுக்கும்போதெல்லாம் யார் மேலாவது சாமி வந்து கோயில் கட்டக்கூடாது என்று கடவுளே சொல்லிவிடுவதாகவும் சொன்னான். சாமி வந்து ஆடுபவனிடம், “ஏன் கோயில் வேண்டாம்” என்று கேட்கும்போது, “உங்கள் எல்லோருக்கும் வீடு இருக்கிறதா?” என்று கேட்டதாம். அப்போது யாரோ ஒருவன், “எனக்கு இல்லை” என்றானாம். “அப்படியென்றால் எனக்கும் வேண்டாம். உங்களுக்கு இருக்க இடமில்லாதபோது எனக்கு எதற்கு?” என்று கேட்டதாம். இது புராணம்தான். ஆனால், அவர்களின் அடிமன ஆசையைத் தெளிவாகச் சொல்கிறது.

எல்லோருக்கும் வீடு இருக்க வேண்டுமென்கிற மனிதாபிமானம் இதற்கு உந்துகோல். இன்னும் பல இடங்களுக்கும் சென்றுள்ளேன். பல இடங்களில் வெறும் கல்லே கடவுள். யார் மேலாவது சாமியாக வந்து பேசும்போது “எனக்குக் கோயில் கட்டக்கூடாது. நான் வெயிலில் காய வேண்டும். மழையில் நனைய வேண்டும். குளிரில் நனைய வேண்டும். நான் உங்களைப் போலவே வருந்த வேண்டும்” என்று சொல்லிவிடுகிறது. இதுவும் அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. ஓர் இடத்தில் வலுக்கட்டாயமாகக் கோயிலைக் கட்டிவிட்டார்கள். அதில் கடவுளுக்கு இஷ்டமில்லை. வாசலைக் கட்டும்போது, ரொம்பவும் திமிறி மறித்துவிட்டது. “என்னைப் போட்டு அடைக்காதே. நான் அடிக்கடி வெளியே சென்று வருகிறவன். எல்லாரையும் பார்த்துக்கொண்டிருப்பவன். வாசல் கதவு போடாதே” என்று தடுத்துவிட்டதாம். இந்த மாதிரி நிறைய கதைகள் உண்டு. சாராம்சமாகச் சொல்வதென்றால் இந்த நாட்டுப்புறக் கலாச்சாரம் மிகுந்த மனிதநேயம் உள்ளது. எல்லோருடைய சுக, துக்கங்கள்மேல் அக்கறை உள்ளது. அவற்றின் வெளிப்பாடுகளாக இக்கடவுள்களைக் காண முடியும். இந்த அம்சம்தான் என்னை மிகவும் ஈர்த்தது.

கடவுளை நம்புகிறவனுக்கும் சரி, நம்பாதவனுக்கும் சரி, அவரவர்களுக்கேயான சொந்தக் காரணங்கள் உண்டு. ஆனால் நம்புகிறவனும் நம்பாதவனும் எவ்வகையில் உறவு கொள்வது?

எந்தச் சூழல்களில் அல்லது எந்தச் செல்வாக்குக்கு உட்பட்டு ஒருவன் வாழ நேர்கிறதோ, அவனும் அப்படியே ஆகிறான். இப்போது நான் நாத்திகள். எனக்கிருந்த சூழல் அப்படி. இன்னொருவனுக்கு வேற மாதிரி இருக்கலாம். ஆனால் யாரும் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது, தவறாகப் பார்க்கக் கூடாது. நாத்திகன் என்ற மாத்திரத்தில் அவன் தன்னை மிகப்பெரிய அறிவாளி என்றோ, தலைவன் என்றோ எண்ணிக்கொள்ளத் தேவையில்லை. இருவருமே பரஸ்பரம் ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக்கொள்ள ஏராளமாக உள்ளன. என்னைப் பொறுத்தமட்டில் ஆத்திகனிடமிருந்தே நாத்திகன் நிறையக் கற்க முடியும் என்று தோன்றுகிறது. நாத்திகனாவதோ, ஆத்திகனாவதோ நான் ஏற்கெனவே சொன்னதுபோல அவர்களுக்குக் கிடைக்கிற சூழல், நண்பர்கள், படிப்பு, தத்துவத்தின் செல்வாக்கு ஆகியவற்றைப் பொறுத்துத்தான்.

இங்கு கர்நாடகத்தில் பயம்தான் கடவுள் தோற்றத்துக்குக் காரணம் என்பார்கள். பயம் குறையும்போது கடவுள் ஈடுபாடும் குறையும். திருடர்கள் கொள்ளையடித்துவிடுவார்கள் என்கிற பயம், நோய் வந்து இறந்துவிடுவார்கள் என்கிற பயம் மக்களிடத்தில் அதிகமாகும்போது கடவுள் ஈடுபாடும் அதிகமாகிறது. மானசீகமான ஒருவகை ஆறுதல் கிடைக்கிறது என்பதுதான் காரணம். இடையில் காவல்துறை மிகச் சிறந்த முறையில் இயங்கிய ஒரு காலகட்டத்தில் இந்த ஈடுபாடு குறைந்திருந்தது. ஆனால், இப்போது மீண்டும் அதிகமாக இருக்கிறது. காவல்துறை நம்புதற்குரிய ஒன்றாக இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் தீரவில்லை. இவை மீண்டும் கடவுள் ஈடுபாட்டைத்தான் வளர்க்கும். இப்பிரச்சினைகள் தீராத வரைக்கும் இதை மாற்ற முடியாது.

நாட்டுப்புறக் கலாச்சாரம் தலித் இலக்கியத்துக்கு வழங்கிய சாரத்தைப் பற்றிச் சொல்கிறீர்களா?

இந்தச் சமூகத்தில் ஒரு சமமற்றத்தன்மை உள்ளது. மேல், கீழ் என்கிற உணர்வு உள்ளது. தலித்துகள் மேல் அடக்குமுறை உள்ளது. தலித்துகளுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது. இவற்றைப் பேசுகிற தலித் இலக்கியம், இவற்றிலிருந்து மாறி வேறொரு சிறந்த சமநிலை வாய்ந்த சமூகத்தைக் கட்ட விழைகிறது. அதுவே தலித் இலக்கியத்தின் கனவாக இருக்கிறது. இந்தச் சமநிலையும் உன்னதமும் ஒருகாலத்தில் இருந்ததுதான். அதுவே மீண்டும் திரும்ப வேண்டும் என்று இப்போது விரும்புகிறோம். முன்பு இருந்த காலத்தின் கலாச்சார வெளிப்பாட்டின் ஒருவகைதான் நாட்டுப்புற இலக்கியம். புராதனக் கம்யூனிசக் கால மனநிலைதான் இந்த இலக்கியம். ஒவ்வொரு சடங்கையும் கூர்ந்து கவனித்தால் இது புரியும். சாதாரணமாகத் திருவிழா என்பதுகூடச் சமூகத்தில் ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையில் வந்த சடங்குதான். எதையுமே கூடி ஒன்றாக மகிழ்வுடன் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் இதன் ஆதாரம். மேல்தட்டுக் கலாச்சாரத்தில் ஒருவன் அல்லது ஒருத்தி ஆடினால், அதை நூறு பேர் உட்கார்ந்து பார்ப்பார்கள். ஒருவன் அல்லது ஒருத்தி பாடினால் அல்லது குழல் ஊதினால் அதை நூறு பேர் உட்கார்ந்து கேட்பார்கள். ஆனால், நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் அப்படியில்லை. எப்போதும் ‘ஒருவன்’ என்கிற விஷயமே இல்லை. ஆடினாலும் எல்லாரும் சேர்ந்து ஆட வேண்டும். பாடினாலும் வாத்தியம் இசைத்தாலும் எல்லாரும் சேர்ந்து இசைக்க வேண்டும். மொத்தத்தில் ‘எல்லாரும் சேர்ந்து’ என்பது முக்கியமாக இருந்தது.

நான் என்பதை விடுத்து நாங்கள் என்று மாறுவது சமூகத்தில் ஆரோக்கியமானதொரு குறியீடு. ‘நான்’ என்பதைப் பிராமணிய அல்லது உயர்ஜாதிக் கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டால், ‘நாங்கள்’ என்பதை நாட்டுப்புறக் கலாச்சாரம் என்று எடுத்துக்கொள்ளலாம். அதனால்தான் அவர்கள் யாரும் நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் வருவதில்லை. போனால் சொர்க்கத்திற்கு எல்லாரும் போவது, இல்லாவிடில் எல்லாரும் நரகத்துக்குப் போவது என்பதுதான் இவர்கள் உத்தேசம். உயர்ந்த இத்தகைய நாட்டுப்புறக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான் நாட்டுப்புற இலக்கியம். நம் கனவுக்கு இக்கலாச்சாரம் முன்மாதிரியாக இருப்பதால், இவ்வகை இலக்கியங்களில் இருந்தும் தலித் இலக்கியம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.

தலித் போராட்டத்திற்கு முன்னோடி என்று கர்நாடகத்தில் யாரைச் சொல்லலாம்?

அப்படி ஒருவரை மட்டும் பெயர் சொல்ல முடியாது. ஐந்தாறு பேரைக் குறிப்பாக முன்னோடிகள் என்று சொல்லலாம். தேவனூரு மகாதேவ, கிருஷ்ணப்பா, நான், இன்னும் ஒன்றிரண்டு பேர் இப்படி குழுவாகத்தான் சொல்ல முடியும். தனிப்பட்ட ஒருவரைச் சொல்ல முடியாது. முக்கியமாக எல்லாரும் எழுத்தாளர்கள். தலித் எழுத்தாளர்களே தலித் இயக்கத்தை நிறுவியவர்கள்.

தலித் இலக்கியத்தின் இன்றைய நிலை என்னவென்று சொல்கிறீர்களா?

இந்தப் பதினைந்து இருபது வருஷங்களில் தலித் இலக்கியத்தில் மிக நல்ல படைப்புகள் வந்துள்ளன. இலக்கியத்தைவிட விழிப்புணர்ச்சி வெகுவான அளவில் தோன்றியுள்ளது. ஆனால், விணீstமீக்ஷீ றிவீமீநீமீ என்று சொல்கிற அளவில் எதுவும் வரவில்லை. உயர் வகை இலக்கியம் உடனே வந்துவிடாது என்று எண்ணுகிறேன். அதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும். பொறுமையாக வருவதே நல்லது என்றும் தோன்றுகிறது. பக்குவம், வாழ்க்கை பற்றிய பார்வை, எழுத்துத் திறமை, பொறுப்பு எல்லாமே கூடி வர வேண்டும்.

‘கடவுள்’ என்ற மாத்திரத்திலேயே விலகிவந்த காலம் ஒன்றுண்டு. அங்கே திருவிழா நடக்கிறது, யாரோ பூசாரி வந்திருக்கிறான் என்றால் ‘அவன் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது. நான் நாத்திகன்’ என்று சொல்லிவிட்டுப் போன காலமும் உண்டு. அது சிறிது குறைந்திருக்கிறது என்பதே நம் வளர்ச்சியின் அடையாளம். நம் கலாச்சாரம் என்பது என்ன என்று மறுபடியும் பார்க்க இது உதவுகிறது. இன்றைய தேதி வரையில் தலித் கலாச்சாரத்தில் பிராமணப் பூசாரி வரவில்லை. படித்த எலிட்டிஸ்டுகளான தலித்துகள் மட்டுமே பிராமணப் பூசாரிகளை வரவழைக்கிறார்களே தவிர, ஏனையோர்க்கு வேறு பூசாரிகள் இருக்கிறார்கள். எங்களுக்குச் சொந்தமான பூசாரிகள் எங்களிடமே இருக்கிறார்கள். தர்ஸப்பா, ஜோகப்பா என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களே வந்து எந்தச் சடங்காக இருந்தாலும் நடத்தித் தருகிறார்கள். அவர்கள் கன்னடத்திலேயே மந்திரம் சொல்கிறார்கள்.

உங்கள் தொடக்க காலப் போராட்டங்களுக்கு உதவுவதாக அல்லது உத்வேகம் ஊட்டுவதாக வேற்று மொழி இலக்கியங்கள் ஏதேனும் இருந்ததா? அல்லது வேற்று மாநிலத் தலைவர்கள் அல்லது அவர்கள் பற்றிய செய்திகள் செல்வாக்கு செலுத்துவதாக இருந்தனவா?

அம்பேத்கரின் செல்வாக்கைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெரியாரின் செல்வாக்கும் இருந்தது. மார்க்சியத் தத்துவமும் உதவியது. நாராயண குருவின் செல்வாக்கும் உண்டு. ‘ஒன்றே சாதி, ஒன்றே தெய்வம்’, ‘சாதியைக் கேட்காதீர்கள், சாதியைச் சொல்லாதீர்கள்’ என்ற அவர் வாக்கியங்கள் மறக்க முடியாதவை. அப்புறம் ஆப்பிரிக்க இலக்கியம். உண்மையில் முதலில் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்தேன். அவ்வியக்கத்தில் நானும் ஒரு செயல்வீரன். பெரியாரைப் பெங்களூருக்கு அழைத்துவந்து கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அவரோடு பேசி விவாதித்திருக்கிறோம்.

மறுபடியும் இலக்கியத்தைப் பற்றி. தலித் இலக்கியத்தில் இது இதுதான் வரலாம், இது இதெல்லாம் வரக்கூடாது என்கிற வரையறை ஏதேனும் இருக்கிறதா?

எதுவாக இருந்தாலும் அது இலக்கியமாக இருக்க வேண்டும். முத்திரை குத்திக்கொண்டு எழுதுவதே தலித் இலக்கியத்தை ஓர் எல்லைக்குள் சுருக்கிவிடும். ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொருவிதமான வாழ்வு இருக்கிறது, பிரச்சனை இருக்கிறது. அதை அவன் எழுதிக்கொண்டே செல்ல வேண்டும். தன் பின்னணியை, தனது சமூகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து, அப்புறம் அதை இலக்கியமாக வெளிப்படுத்த முயல வேண்டும். இப்போது ஓர் எதிர்ப்புக் கவிதை எழுதப் போகிறேன் என்றோ ஒரு காதல் கவிதை எழுதப் போகிறேன் என்றோ உட்கார்ந்து எழுதமுடியாது. எழுதினாலும் அதில் எதிர்ப்பும் இருக்காது, காதலும் இருக்காது. முதலில் ஒவ்வொருவனும் தன்னை வெளிப்படுத்த எழுதத் தொடங்க வேண்டும். அவ்வெளிப்பாடு என்பது அவன் சார்ந்த சமூக வெளிப்பாடாகிறது. இத்திசையில் நம் செயல்பாடு அமைய வேண்டும்.

இந்திய அளவில் மார்க்சிய இயக்கங்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் செயல்படு களங்கள் குறித்த பார்வை ஒன்றுபடுகிறதா அல்லது வேறு வேறா?

மார்க்சியத் தத்துவத்திற்குத் தலித்துகள் நண்பர்களே. உலகம் முழுமைக்கும் உள்ள பாட்டாளித் தோழர்களுக்கு ஒரு தத்துவத்தை வகுத்துக்கொடுத்தது மார்க்சியம். தலித் இயக்கத்துக்கு இந்தத் தத்துவம் மிகவும் உதவியானது. மார்க்சியத்துக்கு எதிரானது தலித்துகளுக்கும் எதிரானது. உதாரணமாக பொருளாதாரத் தாராளவாதம், காட், டங்கல் ஆகிய மார்க்சியத்துக்கு எதிரான கொள்கைகள் எல்லாமே, தலித்துகளுக்கும் எதிரானவையே.

தனியார்மயமாக்கல் என்பது தந்திரமாகத் தலித்துகளை ஒதுக்கும் செயல். இடஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்புகளில் இருந்து நின்றுபோகும். தனியாரை சில விஷயங்களில் இருக்கிற சட்ட விதிகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்பதால் தலித்துகளின் வேலைவாய்ப்புப் பறிபோகிறது. அடுத்து பொருளாதாரத் தாராளவாதத்திலும் இதே நிலைதான். தலித்துகள் அடிப்படையில் உழைப்பாளிகள், தொழிலை ஆரம்பிக்க மூலதனமற்றவர்கள். மூலதனம் இல்லாததாலேயே திறந்துவிடும் பொருளாதாரக் கொள்கையால் தலித்துகளுக்கு எந்தப் பயனுமில்லை. பயன் ஒருபக்கம் இல்லாதிருந்தாலும் இன்னொரு பக்கம் ஆபத்தே உள்ளது.

உண்மைதான். இந்தியாவில் உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் பெரிய முதலாளிகள் காட், டங்கல் பற்றி ஆதரவாகப் பேசுவதன் காரணமே இவற்றின் மூலம் அமலில் இருக்கிற இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டிவிட முடியும் என்பதுதான். ஆனால், எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதனால் பாதிப்பு உண்டாகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், உலக முதலாளிகளோடு எந்த இந்திய முதலாளியும் போட்டி போட முடியாது. இந்திய உற்பத்திகள் திருப்பி அனுப்பப்படும்; உலக அளவில் இவர்களுக்கு மதிப்பு குறையும். உலகில் இந்திய முதலாளிகள் சூத்திரர்களாகவே இருப்பார்கள். இந்த வகையில் இவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

மாநில அளவில் சிறப்பாகச் செயல்படுகிற தலித் இயக்கங்கள் இருக்கும்போது, தேசிய அளவில் ஏன் இன்னும் தோன்றவில்லை?

தோன்றும். அதற்கான ஆரம்பம்தான் இத்தகு இயக்கங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் அப்படியொரு பெரிய இயக்கம் வரும்.

மாநிலப் பிரிவினைவாதம் எழும் சூழலில் தலித்தின் நிலை என்ன?

தலித்துகளை ஒருவகையில் நிஜமான தேசியவாதி என்றுதான் சொல்ல வேண்டும். ஒருகாலத்தில் தீண்டாமை என்பது இத்தேசம் முழுக்கப் பரவிய வியாதியாக இருந்தாலும், அதுவே இன்றைய நிலையில், இன்னொரு வகையில் சட்டென்று ஐக்கியமாக உதவுகிறது. காஷ்மீருக்குச் சென்று அல்லது டில்லிக்குச் சென்று நான் தலித் என்றால் இன்னொரு தலித் அவனுக்கு உதவிட ஓடிவருவான். நம்மை ஒருகாலத்தில் அவமானப்படுத்திய குறியீடே, நம்மை ஒன்றிணைக்கும் சக்தியாக மாறிவிட்டது. இவ்வகையில் நிஜமான தேசிய இனம் எது என்றால் ‘தலித்’தான்.

சமீபத்தில் கன்ஷிராம் பேசும்போது இடஒதுக்கீடு என்பது வெறும் ஊன்றுகோலாகத்தான் இருக்கும். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதே உண்மையான விடுதலையைக் கொடுக்கும் என்று சொல்லியுள்ளார். இந்த அமைப்பில் தேர்தல்கள் மூலம்தான் ஆட்சி பிடிக்கப்படுகிறது. ஒருவேளை நாமே 200 அல்லது 300 எம்.பிக்கள் வென்று நாடாளுமன்றத்துக்குச் சென்று ஆட்சியைப் பிடித்தாலும், அது அதிகாரத்தைக் கைப்பற்றியதாகுமா?

இது பூர்ஷ்வா அமைப்புதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த அமைப்பில் இருக்கிற வழிகளை நாம் முற்றுமாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. வேண்டுமானால் அவற்றைப் பயன்படுத்தி முடிக்கவில்லை என்றும் சொல்லலாம். அவற்றில் நாம் இறங்கவேயில்லை. அவற்றில் இறங்கி, பயன்படுத்தி முடிக்கும்போதுதான் இன்னொரு மேல்நிலைக்குச் செல்ல இயலும். இந்த அமைப்புக்குள் இருக்கிற எல்லாத் தீர்வுகளும் வழிகளும் முடிந்த பிறகு அடுத்த அமைப்புக்குள் செல்வது ஒருவகையில் பயன் கொடுக்கும். கன்ஷிராம் பேச்சு இந்த நோக்கத்தைக் கொண்டதாக இருக்கக்கூடும். நாம் இந்த நாடாளுமன்றத்தை முழுக்கப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் சக்தியை நம் பக்கம் திருப்பிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ‘நாடாளுமன்றமே போலி’ என்று சொல்லத் தேவையில்லை. ஒருவகையில் சிலர் முகங்களைத் தோலுரித்துக் காட்டவும் இது உதவும்.

(நிறப்பிரிகை, நவம்பர் 1994)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger