தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தும் இருவருக்கிடையில் எத்தகைய மாற்றுக் கருத்துகள் இருப்பினும் ஒரு கருத்தில் உடன்படுவார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்தைவிடவும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலமாக விளங்குவதே. இதற்குத் தமிழ்நாட்டில் செயல்பட்டுவந்த ‘அறிவு இயக்க’மும் ஒரு காரணம். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் கல்வி, கல்வித் துறை இரண்டையும் விழிப்புணர்வோடு கவனிப்பர். இதனால்தான் இந்திய அரசு 2020இல் தேசியக் கல்விக் கொள்கையை(NEP 2020) அறிமுகம் செய்தபோது அதற்கெதிராக முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து ஒலித்தது. சில அரசியல் கட்சிகள் தேசியக் கல்விக் கொள்கை இந்தியைத் திணிப்பதால் நாங்கள் எதிர்க்கிறோம் என்றபோது, இங்கிருந்த சமூகநீதிக் கல்வியாளர்கள் தேசியக் கல்விக் கொள்கை இந்தியைத் திணிப்பதுடன், கல்வியைக் கடைச்சரக்காக்குவதாக மக்களிடம் அம்பலப்படுத்தினர்.
தற்போது தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு எதிர்ப்பதுபோல் வீறுகொண்டு எழுந்தார்கள். இதற்குப் பின்னால் திமுகவுக்குத் திட்டமில்லாமல் இல்லை. தமிழ்நாட்டு மக்களிடம் இயல்பிலேயே இருக்கும் கல்வி விழிப்புணர்வை வாக்காக்கப் பார்த்தார்கள். திமுக பொறுப்பேற்றதற்குப் பின்னால் தமிழ்நாட்டுக்கெனக் கல்விக் கொள்கையை உருவாக்குவதாகவும், தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிக்கிறோம் எனவும் அறிவித்து, தமிழ்நாடு கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கு ஒரு குழுவையும் அமைத்தது. அந்தக் குழுவில் முன்னர் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து முழங்கிய கல்வியாளர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரியும் ஒருவர்.
உமா மகேஸ்வரி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகச் சமூகநீதிக் கல்வி குறித்தும், அதற்கு நேரெதிராக உள்ள தேசியக் கல்விக் கொள்கை குறித்தும் ஊடகங்கள், புத்தகங்கள், மேடைகள் வாயிலாகச் செயலாற்றிவருகிறார். இவர் உறுப்பு வகித்த குழு தமிழ்நாட்டுக்கேற்ப கல்விக் கொள்கையை உருவாக்காமல், தேசியக் கல்விக் கொள்கையையே படியெடுக்கும் பணியைச் செய்தபோது முதல் ஆளாக அதிலிருந்து வெளியேறினார். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றிருக்கிறார். இவரைத்தான் தமிழ்நாடு அரசு சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. அவர் செய்த குற்றமென்ன? அரசின் சொல் கேட்கவில்லை, அரசைப் புகழ்பாடவில்லை.
2024 மார்ச் 06ஆம் தேதி நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளிக்கு விரைந்த பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் உமா மகேஸ்வரியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் கொண்டுவந்திருந்த கைக்கணினியில் (டேப்லெட்) இதுவரை தமிழ்நாடு கல்விக் கொள்கை என்ற பெயரில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திமுகவின் நடவடிக்கைகளைக் கண்டித்து, அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை ஒன்வொன்றாகக் காட்டி, அவற்றை நீக்கச் சொல்லியுள்ளார்கள். இவை அனைத்தும் அந்தப் பள்ளியில் பூட்டிய வகுப்பறை ஒன்றில் நடந்திருக்கிறது. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மனதைப் புண்படுத்திவிட்டதாகவும், அதற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் தருமாறும் கேட்டிருக்கின்றனர் அவ்வதிகாரிகள். உமா மகேஸ்வரியும் வருத்தம் தெரிவித்துக் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். இருந்தும் அவரைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பணியிடை நீக்கம் செய்திருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.
இதுவரைக்கும் தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்கும் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராகப் பேசியதற்காக தலைமை ஆசிரியர் ஒருவர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் எக்காலமும் நாங்கள் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறிவிட்டு, பாஜக ஆளும் மாநிலங்களைவிட முண்டியடித்துக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு கல்விக் கொள்கை என்ற பெயரில் நடைமுறைப்படுத்திட திமுக அரசு துடியாய்த் துடிக்கிறது. இதன் வெளிப்பாடாகப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் ‘ஸ்ரீ பிஎம்’ பள்ளிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கிறோம் என்று ஒன்றியக் கல்வித்துறைச் செயலருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கல்வித்துறை அமைச்சரும் மாநிலக் கல்விக் கொள்கைக்கு உட்பட்டுத்தான் ‘ஸ்ரீ பிஎம்’ பள்ளிகள் செயல்படும் என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.
உமா மகேஸ்வரியைப் பணியிடை நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் அவருக்கு நக்சலைட் முத்திரை அளித்துள்ளது ‘தினகரன்’ நாளேடு. எப்படி மக்கள் போராளிகளை நகர்ப்புற நக்சல்கள் எனக் கூறி ஒன்றிய பாஜக அரசு ஒடுக்குகிறதோ, அதே கணையைத் திமுகவும் தொடுக்கிறது. உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கத்தையும், பள்ளி வகுப்பறையில் அவருக்கெதிராக நடந்த மனித உரிமை மீறல்களையும், ஒரு பெண்ணின் கருத்துரிமைக்கு எதிராகவும் பல செயற்பாட்டாளர்களும் இயக்கத்தவர்களும் கண்டித்துப் பேசியதற்கும் எழுதியதற்கும் பிறகும்கூட திமுக அரசு அவருக்கு எதிரான நடவடிக்கையைத் திரும்பப் பெறவில்லை.
உமா மகேஸ்வரி, ஜவகர் நேசன் என தமிழ்நாடு கல்விக் கொள்கை உருவாக்கத்தில் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தலைவர் பொறுப்பு வரை அங்கம் வகித்தவர்கள் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையைத் தேசியக் கல்விக் கொள்கையின் மறுஅச்சுதான் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெளிவுபடுத்திவருகின்றனர். தேசியக் கல்விக் கொள்கை என்பது உலக வர்த்தகக் கழகங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் வடிவமைப்பு. தமிழ்நாடு கல்விக் கொள்கை என்பது தேசியக் கல்விக் கொள்கையின் மறுபதிப்பு. தேசியக் கல்விக் கொள்கையையும் அதை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் திமுக அரசின் செயலுக்கும் எதிராகக் குரல் கொடுத்த ஆசிரியரின் பக்கம் நின்று உரிமைக் குரல் எழுப்புவோம். அதன்வழி வருங்கால நம் சந்ததியினரின் கல்வியுரிமையை மீட்டெடுப்போம்.