நவீனமடையாத சிந்தனை

மலக்குழி மரணங்கள் பற்றித் தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை மரணம் நிகழும்போதும் அது வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்ததைப் போல அறிக்கைகள் வெளியிடப்படுவதோடு மாற்றுத் திட்டங்களும் முன்மொழியப்படுகின்றன. 2022 ஆகஸ்ட் நீலம் இதழில் தமிழகத்தின் மலக்குழி மரணங்கள் குறித்துப் புள்ளிவிவரத்துடன் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவிலேயே அதிக மலக்குழி மரணங்கள் நிகழும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசமும் தமிழகமும் திகழ்கின்றன. தமிழகத்தின் நிலவியல் அமைப்பு மற்றும் அதன் வரலாற்றுக்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு, வடக்கை விட தெற்கு முற்போக்கானது என்று பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டதும் அவற்றுள் ஒன்று. அதன்படி தமிழகத்தில் இருக்கும் தனித்துவமான குரல்கள், கூட்டுப் போராட்டம், வரலாறு என அனைத்தையும் மறந்து இங்கே இயல்பாய் நிகழும் முன்னேற்றத்தையெல்லாம் திராவிட மாடல் கணக்கில் சேர்ப்பவர்கள் மலக்குழி மரணங்களையும் வேங்கைவயலையும் சேர்க்காததுதான் ஆச்சரியம்.

28.02.2023 அன்று ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ என்கிற அறிவிப்பின் கீழ் பாதாளச் சாக்கடையில் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வதைத் தவிர்த்திடவும், மலக்குழி மரணங்களைத் தவிர்த்திடவும் திமுக அரசு  திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. அதன்படி தலித் தொழில்முனைவோர்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள Dalit Indian Chamber of Commerce and Industry ( DICCI) என்கிற அமைப்போடு ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் தொழில் முனை

வோர்களாக்குவதற்கான முன்னோடித்திட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கையால் மலம் அள்ளுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதை இயந்திரத்தின் துணைகொண்டு செய்வதற்கு அரசு ஓர் அமைப்போடு இணைந்து அவர்களுக்குக் கருவிகளை வழங்குதல், பயிற்றுவித்தல், மானியத்தோடு கூடிய கடன் வழங்குதல் உள்ளிட்டவற்றைச் செய்யவிருக்கிறது. தூய்மைப் பணியில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகநீதி உரையாடல்களைத் திமுக அரசு கவனிக்குமேயானால், முதலில் தூய்மைப் பணியாளர்கள் அனைவருமே தலித்துகள் அல்ல என்று சொல்லப்படுவது கவனத்திற்குள்ளாகி இருக்க வேண்டும். அதேபோல, அத்தொழிலைச் செய்வோரில் தலித்துகள் பெரும்பான்மையாக இருப்பது தற்செயலானதும் அல்ல. தமிழக அரசின் பணியிடங்களில் பிரிவு ‘டி’ யில் மட்டுமே பெரும்பான்மையாக தலித்துகளைப் பணியில் இருத்துவதும் இதர ஏ, பி துறைகளில் சொற்பமான அளவு மட்டுமே தலித்துகள் ஊழியர்களாக இருப்பதும், தமிழக வரலாற்றில் புதிதன்று. ஆக தூய்மைப் பணியாளர்களாக இருப்பதற்குத்தான் தலித்துகள் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமே அவர்களுக்குப் பெருமளவு ஒதுக்கப்பட்டுவருகிறது. இத்தகைய புறக்கணிப்புகளால்தாம் தலித்துகள் அதில் பெருமளவு ஈடுபடுத்தப்படுகிறார்களே ஒழிய, அத்தொழில் தலித்துகளுக்கானது அன்று.

அப்படியான சிந்தனை பொதுச் சமூகத்தில் உலவினாலும் அதைக் களைந்து முக்கியத் துறைகளில் தலித்துகளைப் பணியமரச் செய்வதுதான் முன்னேற்றமே ஒழிய, கையால் மலம் அள்ளுபவர்களின் கைகளில் தொழில் முனைவோர் என்கிற பெயரில் நவீனக் கருவிகளை மாற்றாகக் கொடுப்பதல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் தூய்மைப் பணியாளர்களாக இருக்கும் பட்சத்தில் தலித் தொழில் முனைவோர்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்போடு அரசு ஒப்பந்தம் போடுவதின் மூலம் இதை ஒரு தலித் தொழிலாக அரசு அங்கீகரித்திருக்கிறது. இட ஒதுக்கீடு, அரசு மானியங்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றின் பயனாளியாக இருப்பவர்கள் தலித்துகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும்தாம். அறிவுப்புலத்தில் மட்டுமே இவை பேசப்படுகின்றன. ஆனால், அரசுத் திட்டங்களைக் கொண்டு முன்னேறுபவர்கள் தலித்துகள் மட்டுமே என்கிற கருத்தே சமூக வெளியில் நிலவுகிறது. அதை உடைத்தெறிய வேண்டிய காலத்தாலான பணி இருக்கையில் அரசின் இம்மாதிரி திட்டங்களால் இன்னும் மூன்று தலைமுறைக்குத் தலித்துகள் குறித்தான பொது மதிப்பீடு வலுவாக்கப்படும்.

இதற்குப் பதிலாக அரசின் இன்னபிற ஒப்பந்தத் தொழில்களில் தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு அவை கண்காணிக்கப்பட வேண்டும். கல்வியோடு நின்றுவிடும் இடஒதுக்கீடு முறை கறாராக அரசு துறைகளில் பின்பற்றப்பட வேண்டும். இன்னபிற அரசு திட்டங்களிலும் தலித்துகளைப் பங்குதாரராக உள்ளிழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அதைத் தலித்துகளுக்கென்று மத்தியத் தொகுப்பில் ஒதுக்கப்பட்ட நிதி, திட்டங்களைச் சாராமல் மாநிலத்திற்கென்று தனித்துவமான சமூகநீதி திட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் மத்தியத் தொகுப்பிலிருந்து தலித்துகளுக்கு ஒதுக்கப்படுவதையே தலித்துகளுக்குச் சேராத வண்ணம் பார்த்துக்கொள்கிறது தமிழக அரசு. இவற்றையெல்லாம் உள்வாங்கி அறிவியல், சமூகம், பொருளாதார ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் சீர்திருத்தங்களைச் செய்வதைத் தவிர்த்து நவீனம் என்கிற பெயரில் அதே தொழிலைத் தலித்துகள் செய்வதை அரசு ஊக்குவிக்கக் கூடாது. பள்ளிக்கல்வியோடு குலத்தொழிலும் அவசியம் என்று குலத்தொழிலை நவீனப்படுத்த விரும்பிய இராஜகோபாலச்சாரியின் அறுபதாண்டுக்கு முந்தைய சிந்தனைக்கும் வாளிக்குப் பதில் இயந்திரப் பொத்தானைத் தலித்துகள் கையில் கொடுக்கும் சமகாலத் திட்டத்திற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger