“உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?’’
“ஒரு திருவிழாவுக்காகக் கூடிய ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.”
பத்திரிகையாளர் சமஸ் உடனான நேர்காணல் ஒன்றில் எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் அளித்த பதில் இது.
வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act, 1972) இயற்றப்பட்ட பிறகு நாடு முழுக்கப் பாதிக்கப்பட்ட பழங்குடிகளின் எண்ணிக்கை குறித்தும் அதற்கான நீதி வேண்டியும் இதுவரை எந்த அரசும் எந்த ஆணையமும் அமைத்ததில்லை. வனத்தில் வாழ்கிற உயிர்களைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டம் எனில், அந்தக் காட்டிலேயே தோன்றி அங்கேயே வாழ்ந்துவருகிற பழங்குடிகள் காட்டுயிர் இல்லையா எனும் சூழலியல் சார்ந்த கேள்வியை நாம் எழுப்பலாம். ஒய்ல்டு லைஃப் ப்ரடொக்ஷன் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு காரணங்களின் பேரால் அம்மக்களை இன்றளவும் துன்புறுத்திவருகிறது. காட்டை ஆக்கிரமித்து, காட்டைப் பாதுகாக்கும் மக்களைக் காட்டிலிருந்து வெளியேற்ற சத்தீஸ்கர், ஒரிஸா, கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் ஏராளம். இன்றைய மணிப்பூரில் அரங்கேறும் கொடுங்கோன்மை கூட இடஒதுக்கீடு சார்ந்தது என்றாலும் அதன் உள்ளார்ந்த நோக்கம் பழங்குடி வெளியேற்றம்தான். தற்போது சட்டமன்றத் தேர்தல் முடிந்து 3 மாநிலங்களில் அமோக வெற்றிபெற்ற பாஜக, சத்தீஸ்கரில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் என்பவரைத் துணை முதல்வராக்கியிருக்கிறது. பட்டியல் இனத்தவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது ஒருவகை என்றால், இதன் பின்னுள்ள அரசியல் மிக ஆபத்தானது.
யார் தீவிரவாதிகள், யார் காட்டை அழித்தார்கள்; அழிக்கிறார்கள், யார் சமூக விரோதிகள் என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்; கண்டித்திருக்கிறோம். அதிகாரங்களைக் குவித்து வைத்துக்கொண்டு அதை எளியவர்கள் மீது கட்டவிழ்த்துப் பெரு முதலாளிகளின் அடியாட்களாக அரசதிகாரம் செயல்பட்டுவருவது உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இந்தியாவில் சற்று மாறுபட்டுச் சீர்திருந்த அல்லது ஏமாற்று முதலாளித்துவம் எனக் கூறலாம். அதாவது, மக்களுக்குச் சலுகைகளை அறிவித்துவிட்டு வளங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பது. அல்லது அடக்குமுறைகளால் (பாசிசம்) அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது.
காடு – பழங்குடிகள் – மாவோயிஸ்டுகள் குறித்துப் பல்வேறு ஆக்கங்கள் வெவ்வேறு மொழிகளில் வந்துள்ளன. அவை அரச பயங்கரவாதத்துக்கு எதிரானதாக இருக்கும். அரசதிகாரத்துக்கு ஆதரவான ஆக்கங்களும் அவ்வப்போது (‘காந்தாரா’ போன்றவை) வருவதுண்டு. அவை வெகுஜன பரப்பை அடைந்து அதன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு முதலாளிகளிடம் தனது விசுவாசத்தை நிரூபிக்கும். போலவே, சமீபத்தில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற வெப் சீரிஸ் பார்க்கிற வாய்ப்பு அமைந்தது. அது ஓர் ஆவணப்படம்தான், எனினும் பார்ப்பவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாமல் சம்பவங்களைக் காட்சிகளாகச் சித்திரித்து வெகுஜன சினிமா பாணியில் மக்கள் பிரச்சினையைப் பேசியிருக்கிறது. வீரப்பனின் உரையாடலையொட்டி, நாடு முழுக்கப் பழங்குடிகள் மீதான வன்முறைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் எனும் நோக்கில் சிலவற்றை இந்த ஆவணத் தொடரோடு ஒப்பிடலாம்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றே வெகு மக்களால் அறியப்பட்ட வீரப்பன், தன் வரலாற்றைத் தானே சொல்லும் அரிய காணொளிகளோடு இந்தத் தொடர் வந்திருக்கிறது. ப.திருமாவேலனின் ஒரு கட்டுரை மிகப் பிரபலம். ‘பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியின் பொருளாதார பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருப்பார்; கலைஞருக்கு, ஆரூர்தாசுக்கு முந்தைய இடம் தமிழ் சினிமாவில் கதை வசனத்திற்குக் கிடைத்திருக்கும்; காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கை கொடுத்திருக்கும்’ என நீளும் அந்தக் கட்டுரை.
அதுபோல, வீரப்பனைக் கைது செய்து என்கவுண்ட்டர் செய்யத் திட்டமிடவில்லையென்றால், அவர் சில உடும்புகளையோ, மான்களையோ வேட்டையாடி உணவாக்கி அல்லது விற்று ஓர் எளிய மனிதராய் வாழ்ந்திருப்பார். அல்லது தனது 14 வயதில் நக்சலாக மாறி – தான் சார்ந்த பழங்குடிகளைக் காக்க ஆயுதமேந்திய சீதாக்கா, பின்னாளில் வாக்கரசியல் ஜனநாயகத்தை நம்பி அரசியலுக்கு வந்து, இன்று அமைச்சராகப் பதவியேற்கும்போது வெகு மக்களால் கொண்டாடப்பட்டதைப் போல – வீரப்பனும் கொண்டாடப்பட்டிருப்பார். சாதாரண குற்றவாளிகளைச் சமூகம்தான் உருவாக்கும், தாதாக்களை அரசுதான் உருவாக்கும். அதில் இரண்டு வகை, அரசே உருவாக்குவது; அரசால் உருவாவது. வீரப்பன், இரண்டாம் வகை.
கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட வீரப்பனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டிருக்கலாம். இரு தரப்பிலும் சில இழப்புகளுக்குப் பிறகு, பொது மன்னிப்புக் கேட்டபோதும் அதைச் செய்திருக்கலாம். மாறாக வீரப்பனுக்குத் தொடர்ச்சியாக நெருக்கடியைத் தந்து தேடுதல் வேட்டை எனும் பேரில் பழங்குடி மக்களைத் துன்புறுத்தி, பாலியல் வல்லுறவு செய்து அரசு தன் அகோர முகத்தையும் காட்டி வரலாற்றைத் தங்களின் இரத்தக் கறை படிந்த பற்களால் எழுதியிருக்கிறது. அரசு அதிகாரிகள் எனும் பேரில், உரிய பாதுகாப்போடு சாவகாசமாகக் காட்டின் வளங்களைச் சுரண்டி வன உயிரினங்களைக் கொன்று கொழுக்கும் அதிகாரிகள் வாழும் நாட்டில், இந்தக் காட்டில் பிறந்து அதன் ஒவ்வோர் அசைவையும் கற்றுணர்ந்த பழங்குடிகளுக்கு உரிமையில்லையா எனும் கேள்வி எழாமல் இல்லை. பழங்குடிகள் வெளியேற்றத்துக்கு இந்தக் கார்ப்பரேட் அரசுகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு உதாரணமாக வீரப்பன் பாத்திர உருவாக்கத்தைக் காணலாம். வீரப்பன் சொந்த நெருக்கடிகளால் பதுங்க ஆரம்பித்து, பின் அது கடத்தல் அளவுக்கு வந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கையானது என்கிற உண்மையில், அதைப் பயன்படுத்தி வீரப்பனைக் கண்டுங்காணாமல் தேடுதல் வேட்டை எனும் பேரில் மலைவாழ் மக்களைத் துன்புறுத்துவதுதான் அரசின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கும் என்கிற உண்மையும் பெரும்பங்கு வகிக்கிறது.
காட்டிக்கொடுப்பவர்கள் யாராக இருப்பினும் பட்சபாதப்படாமல் கொல்கிறார் வீரப்பன். நடப்பில் தன்னை சாதிய அடையாளங்களோடு கொண்டாடுவதற்கு வீரப்பன் எந்த வகையிலும் இடம் தரவில்லை. மாறாக அவர், தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி என எதார்த்தமாகச் சொல்லும் அதேநேரம் வேட்டைதான் தனது முழு மூச்சென்கிறார். ஒருபக்கம் வீரப்பன் சாகசவாதியாகத் தெரிந்தாலும் மறுபக்கம் அவர் மீதான குற்றங்கள் அவரை ஆதரிக்கத் தடையாக உள்ளன. அதிரடிப் படையோடு மோதும் அவர், ஒருபோதும் பொது மக்களைத் தாக்கியதாகத் தெரியவில்லை. மாறாகத் தன்னைக் காட்டிக்கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கொல்லத் துணிகிறார். இது அவருக்குள் ஏற்பட்டிருந்த உளச்சிக்கல் என்றே கருத முடிகிறது. உயிர் வாழ்வது குறித்தான நெருக்கடி அவரைத் துரத்திக்கொண்டே இருப்பதால் தன்னை மூர்க்கனாக மாற்றிக்கொண்டு, காடு தனக்குச் சாதகமாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு சிறு குற்றங்களில் ஆரம்பித்து அதிகாரிகள் கொலை வரைச் செல்கிறது.
வன அதிகாரிகள் குறித்தும் அதிரடிப்படை குறித்தும் வீரப்பன் சொல்லும்போது, “தேடுதல் வேட்டை எனும் பேரில் அப்பாவி மக்களைக் கொன்று அவர்களில் சிலருக்கு எங்களின் சீருடையை அணிந்து வீரப்பன் கூட்டாளிகள் கொல்லப்பட்டனர் எனச் சொல்வார்கள். அது போலவே மறுநாள் செய்தியாக வரும்” என்பார். நாடு முழுக்க இதை ஓர் உத்தியாகவே அரசு கையாள்கிறது. 2012இல் சத்தீஸ்கர் மாநில பிஜாப்பூர் மாவட்டத்தில் சர்கேகுடா எனும் பழங்குடி கிராமத்தில் நுழைந்த மத்திய ரிசர்வ் போலீஸ், அம்மக்களைச் சுற்றிவளைத்துக் கொடூரமாகத் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். அதில் இருவருக்கு மாவோயிஸ்டுகளின் சீருடையை அணிவித்து, மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 19 பேர் பலி எனச் சொன்னார்கள். ஊடகங்களும் சந்திப் பிழை, அச்சுப் பிழை இல்லாமல் எழுதின. இப்படி அரசே ஒரு காரணத்தை உருவாக்கி மலைவாழ் மக்களை நெருங்கும். அம்மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்ட பல்வேறு நெருக்கடிகளைத் தரும். அரசு சார்ந்த ஆவணங்களைத் தர மறுத்தல் தொடங்கி பல்வேறு உரிமைகள் பறிக்கப்படும். ஜார்கண்ட்டில் 2017இல் ஏற்பட்ட பழங்குடிகளின் பட்டினிச் சாவுகளுக்கும் அரசுதான் காரணம். இப்படி நாடு முழுக்கப் பழங்குடி வெளியேற்றத்துக்கு அரசு எடுத்த முயற்சிகளைப் போல், வீரப்பன் தேடுதல் வேட்டையும் பழங்குடி வெளியேற்றச் சூழ்ச்சி எனலாம்.
தனி நபருக்குச் சமூக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என உண்டு. சமூக வாழ்க்கைக்குத் தன்னை முழுதாக ஒப்புக்கொடுத்தவர்களும் உண்டு. சரிபாதியாக வாழ்பவர்களும் உண்டு. வீரப்பன் வாழ்க்கை இரண்டிற்கும் மாறாக, தனிநபர் வாழ்க்கைக்காக ஆயுதமேந்தி அது சமூகத்தோடும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. துப்பாக்கிச் சூடு எவ்வாறு நடந்ததென நடித்துக் காண்பிப்பது, வனத்துறை அதிகாரியின் தலையைத் துண்டித்தது குறித்துச் சொல்வது, வனத்துறை அதிகாரி ஆடு திருடுவது பற்றிப் பேசுவது, தமிழக அரசியல் குறித்துப் பேசுவது என அத்தனையிலும் எள்ளல். ஒரு கொலையாளி, தான் செய்த கொலையை விவரிக்கும்போது அவன் மீது கோபமும் அச்சம்பவம் குறித்த அதிர்ச்சியும் வரும். ஆனால், வீரப்பன் சொல்கிற பாணி தனி ரகம். ஒரு கொலையை ரசிக்கவோ அதில் சிரிக்கவோ ஒன்றுமில்லைதான்.
மணல் மாஃபியாக்கள், கல்வித் தந்தை எனும் போர்வையில் உழலும் பெரு முதலைகள், காடுகளை அழித்துக் கோயில் கட்டியிருக்கும் சாமியார்கள் எனச் சமவெளி முழுக்கச் சூழலியலுக்கு எதிரான கார்ப்பரேட் முதலாளிகளே நிறைந்திருக்கிறார்கள். காட்டை நேசித்து, காட்டுக்கு நேர்மையாய் வாழும் மனிதர்களைத் துன்புறுத்தி அவர்களைச் சமூக விரோதிகளாக்கி, நக்சலைட்டுகளாக்கி அழித்தொழிக்கும் நடவடிக்கையைக் கையாள்கிறது அரசு. வீரப்பன் குற்றவாளிதான், தண்டிக்கப்பட வேண்டியவர்தான். ஆனால், அவரைக் குற்றவாளியாக்கித் தப்பித்த முதலாளிகள் இன்னமும் இங்கேதான் இருக்கிறார்கள். மாறாக வெகு சாதாரண மக்கள் மீதான சமூக நெருக்கடிகளை அரசும் / முதலாளிகளும் / பாசிஸ்டுகளும் தந்தபடியே இருக்கின்றனர். அரசால் பட்டியல்படுத்தப்பட்ட பட்டியலின / பழங்குடிகள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆளும் வர்க்கத்தாலும் சாதி இந்துக்களாலும் இன்றளவும் நடந்தேறுகிறது. மிகச் சிக்கலான மானுடப் பரப்பைக் கொண்ட இந்தியாவில், யாராக ஒன்றுகூடி யாருக்கான நீதியைப் பெறுவது எனும் கோட்பாட்டு யுத்தம் ஒருபுறமும், யார் கூடினாலும் கூடாவிட்டாலும் அரசும் பெரு முதலாளிகளும் ஒன்றுகூடி, சுரண்டல், சாதிய மோதல், மதக் கலவரங்கள் இன்னபிற கொடுங்கோன்மைகளை நிகழ்த்திக்கொண்டேயிருக்கின்றனர்.
வீரப்பன் இறப்பிற்குப் பிறகு அவரைப் பற்றி புனைவு, அபுனைவு ஆக்கங்கள் வெளிவருவதற்குக் காரணம் அவருக்கிருந்த புகழ் அல்லது அரசு உருவாக்கிய அத்தகைய பிம்பம். ஆனால், கொள்கைக்காக – மக்களுக்காக – களத்தில் போராடிய, ஆயுதமேந்தி தலைமறைவாக வாழ்ந்த, தன் படைபலத்தால் அரசை அச்சுறுத்திய எத்தனையோ போராளிகள் இங்கே இருந்திருக்கிறார்கள். இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களெல்லோரும் எந்த அரசாங்கம் வந்தாலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மானுட விடுதலைக்காகத் தங்கள் உயிர்களைத் துறந்தவர்கள். ஆனால் வீரப்பனோ, ஜெயலலிதாவை மட்டும்தான் எதிர்த்தார். கலைஞரை ஆதரித்தார். 1996 தேர்தலில் அதிமுகவின் தோல்வி, மிக முக்கியமாக ஜெயலலிதாவின் தோல்வி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற ஜெயலலிதா, தனது தோல்விக்கு வீரப்பனின் பேச்சும் ஒரு காரணம் என்று பேசியிருக்கிறார். அந்தத் தேர்தலில் அதிமுக மொத்தமாகவே 4 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. திமுகவுக்கு ஆதரவான ரஜினியின் குரலும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் பரவலாக விமர்சிக்கப்பட்டதும் அவர் மீதான அதிருப்தியாகி அதிமுகவின் அந்தப் படுதோல்விக்கு வழிவகுத்தது எனலாம். அதுமட்டுமல்லாமல், நில அபகரிப்பு, ஊராட்சி ஒன்றியத் தலைமைக்கு வண்ணத் தொலைக்காட்சி வாங்கியவை போன்ற ஊழல்கள் அதிமுக ஆட்சியில் நடந்ததால், ஜெயலலிதா மீது சுப்ரமணியசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதுவும் தேர்தலில் எதிரொலித்தது. இதில் ஜெயலலிதாவின் தோல்விக்கு வீரப்பன் காரணம் என்பது மிகச் சொற்பமான சதவிகிதம்தான். அவருக்கு இருந்த அரசியல் வாய்ஸ் அவ்வளவுதான். தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கிற சக்தியாக அவர் இருந்ததில்லை. மாறாக, சிறிய அளவு ஜெயலலிதா எதிர்ப்பையும் தனக்கான ஆதரவாக மாற்றும் அரசியல் அறிவு பெற்ற கலைஞர், வீரப்பனோடு பேச்சுவார்த்தை, பொது மன்னிப்பு வழங்க ஏற்பாடு என்கிற அளவில் வேலை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
வீரப்பனிடம் இருந்தது மக்கள் பிரச்சனைகளை ஒட்டிய அரசியல் பார்வை அல்ல. தனக்கான வியாபாரம், பாதுகாப்பு போன்றவற்றை ஒட்டிய நோக்கம். வீரப்பன் செய்த வியாபாரம் வீரப்பனால் செய்யப்பட்ட வியாபாரம் (இதில் வியாபாரம் என்பது வெறும் சந்தன மரங்களும் யானைத் தந்தங்களும் மட்டுமல்ல) எனப் பலவாறு அவருக்கான ஆதரவு பெருகியுள்ளது. சூழலியலுக்கு எதிராக, மரங்களை வெட்டியும் காட்டுயிர்ப் பெருக்கத்தில் பெரும்பங்கு வகிக்கிற யானைகளை வேட்டையாடியும் வியாபாரம் செய்த வீரப்பனை ‘வனக் காவலன்’ என்றதுதான் முரணானது.
காட்டில் பரிணமித்து வேட்டையாடித் திரிந்த மனிதன், காட்டிலிருந்து விலகி நகர நாகரிகத்திற்கு மாறிய பிறகு மீண்டும் காட்டிற்குப் போகவில்லை, காட்டையும் நேசிக்கவில்லை. எச்சமாக அங்கேயே இருப்பவர்களையும் வாழவிடுவதில்லை.
இக்கட்டுரை தொடங்கிய இடத்திலிருந்தே முடிக்கலாம். திருவிழாவிற்காகக் கூடிய மக்களைக் காரணங்கள் எதுவுமின்றிச் சுட்டுக் கொல்லும் துணை இராணுவம், காட்டின் மக்களைக் காட்டிலிருந்து வெளியேற்ற எந்த எல்லைக்கும் செல்லும்.