‘மானுட பரிணாமம்’ என்றொரு சொற்பொழிவில் “இந்திய தேசத்தில் பொருளாதாரத்தை விடவும் தீவிரமாகப் பங்காற்றுவது கலாச்சாரம்தான்” என ஆய்வாளர் ராஜ் கௌதமன் சொல்வார். கலாச்சாரம் தான் இந்தியச் சமூகத்தை வழிநடத்துகிறது என்பதைப் பல ஆய்வறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். அக்கலாச்சாரம் எதனடிப்படையில் கட்டமைக்கப் பட்டது என்பதை விடவும் எதன் மூலமெல்லாம் கட்டமைக்கப்பட்டது என்பது முக்கியமான ஒன்றாகும். இதிகாசங்கள், புராணங்கள் என இன்றறியப்படும் யாவும் நாயக சாகசம் அல்லது மானுட வாழ்வின் கருப்பொருளைக் கொண்டவையாக மேலோட்டமாகக் கருதப்படுகிறது என்றாலும் அதன் உள்ளார்ந்த அம்சங்கள் யாவும் சமூகத்தைக் கட்டமைக்கும் ஏற்றத்தாழ்வு கருத்தியல்களைப் பரப்பத்தான் என்பதை இருபதாம் நூற்றாண்டில் சமூகச் சீர்திருத்தவாதிகள் பேசியதையும் எழுதியதையும் இயக்கச் செயல்பாடுகள் வழியாக முன்னெடுத்ததையும் நிறையவே அறிந்திருப்போம். அவ்வாறு அறிந்துகொண்டதன் மூலம் மறுத்துப் பேசுவதினால் மட்டுமே முதலில் பரப்பப்பட்ட ஏற்றத்தாழ்வு கருத்தியல்களால் விளைந்த மானுட உளவியல் மாறக்கூடுமா என்றால் நிச்சயமாக மாறாது. அப்படியே மாறினாலும் ஒரு கால் இங்கேயும் மறுகால் அங்கேயுமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் பல அரசியல் போக்குகளை இன்று பார்த்தபடியிருக்கிறோம்.
ஆக, மறுப்பது – எதிர்ப்பதைக் காட்டிலும் புதிதாய் ஒன்றை நிறுவுவது அல்லது இருக்கும் படிமங்களுக்கு வேறொரு நேர்மறை அர்த்தத்தைக் கற்பிப்பது, அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது, எழுதுவது, வெகுஜன உளவியல்களுக்குள் அவற்றை ஊடாடவிட்டு ஏற்கெனவே இருக்கும் உளவியல் கட்டமைப்பைக் கலைத்துப்போட்டு மறுகட்டுமானத்திற்கான சாத்தியங்களை உண்டு பண்ணுவதுதான் மாற்றத்திற்கான முதல் வழியாகும். இப்படியான சூழலில் பூர்வம், தன்வரலாறு, ஞாபகம் இவைதான் உலக அளவிலேயே திரும்பத் திரும்ப வெகுஜன உளவியலை அசைத்துப் பார்க்கும் இருபதாம் நூற்றாண்டின் முதன்மையான கருத்தியல் கச்சாப்பொருள்களாய் உருவாகி இருக்கிறது. முக்கியமாகச் சினிமாக்களில். பிறகு புனைவு எழுத்துகளில் தத்தமது வரலாற்றை நேர்செய்துகொள்வது அவசியமானதாக இருக்கிறது. உலகின் பல இனங்களும் இந்தப் பண்பாட்டு வரலாறுகளில் கவனம் செலுத்திவருகின்றன. குறிப்பாகச் சமகாலத்தில் சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கீழ்மையாக நடத்தப்படும் உலகளாவிய பல பூர்வகுடி இனங்களும் தங்களது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் இறங்கி இருக்கின்றன.
அப்படி, இந்திய அளவில் உரிமைகளை முன்வைத்து வரலாற்றை நேர்செய்ய களம் இறங்கியவர்களுள் முதன்மையானவர்கள் மகாத்மா ஜோதி ராவ் பூலேவும் பண்டிதர் அயோத்திதாசரும். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் இயங்கியவர்கள், வெவ்வேறு மொழி, நிலங்களைச் சார்ந்தவர்கள் ஆயினும் இருவரும் தலித் – பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்கு வலுவான பாதைகளை அமைத்துக் கொடுத்தவர்கள். இருவரின் கருத்தியலும், வரலாற்றாய்வும் இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்டியல் சாதி மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்கிற புள்ளியில் ஒன்றிணைகின்றனர். இவை எதேச்சையாக அமைந்தவை அல்ல என்பதை இந்திய வரலாற்றை நேர்மையாக அணுகுகிற யாரும் உணரலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then