ஓரி… ஓரி…
ரோந்துக்காரனைப் போல்
பாதை போகிற இடமெங்கிலும் பார்த்தாயிற்று
உறும நேரத்தில் வயசுக்கு வந்த
பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு
ஒரு செறுக்கிப் பயலும் கேட்கவில்லை
வடக்குவெளி இலுப்பைத் தோப்பு
தெற்கே மரக்காயங் கொல்லை
கீழ்ப்பகுதி அவுரித் தொட்டியென
எங்கு தேடியும் அகப்படவில்லை
காலனிக்காரன் தொரசாமி மொவனாடு
ராசா வாய்க்கால் முழுங்கிப் புதரில் கண்டதாய்ச் சொன்னதுதான் தாமதம்
கள்ளுக் கலையத்தில் விழுந்த கொளவிபோல் மிதந்தாள்
நாச்சியார் குளத்தில்
எல்லை மினி இட்டு வந்து
தண்ணியில அமுக்கிருச்சென
ஊர்ப் பேச்சாயிற்று.
வடக்கு மலையான்
நாயக்கன் பள்ளம்
செங்கமலத்து நாயகி சந்நிதானத்தில்
கெழங்கு மஞ்சள் தொங்கும் தாலியை
கல்லாங்குளத்துத் தாமரையும்
நெய்வேலி காட்டாமணக்கின் மேலமர்ந்த தவிட்டுக்குருவியும்
நம்மிருவர் அரவம் கேட்டு
தலை தூக்கி நின்ற உடும்பும்
சாட்சியாய் வைத்துக் கட்டினேன்
ஆத்தா வூட்டு அரம்மணக்கி
கொண்டவங் கோடியே மேலெனக் கிடந்தவள்தான்
ஆவாத பொண்டாட்டி
கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்னு ஆச்சு
ஏழு கன்னிக் கோயிலில் அறுத்து வீசி
ஒட்டுமில்லை உறவுமில்லையெனச் சென்றவள்
கல்லங்குறிச்சி கலியபெருமாளுக்குக்
குடும்பத்தோடு மொட்டைபோட வந்திருந்தாள்
கந்த விலாஸ் விபூதியும் செஞ்சாந்தும் விற்குமென்னால்
என்ன பெரிதாகக் குடும்பம் நடத்தியிருக்க முடியும்.
பூனக்கண்ணி
இலுப்பைக் கொட்டைகள் பொறுக்கி
வீடு திரும்பியிருந்தோம்
மேற்கே பாப்பார வீரன் கோயில் பக்கம் மேயும்
முட்டிக்காலிட்ட ஆடுகளை
ஓட்டி வரச் சொல்லியிருந்தாள் அம்மா
சவுக்கை மெலாறுகளை ஒரு சேரக் கட்டி
காராம் பழத்தைச் சும்மாட்டுத் துண்டில் சுற்றி
படியவாரி இறுகப் பின்னிய ஒற்றைச் சடையோடு
ஓடை வழியாய் வந்த பூனக்கண்ணிக்கு
ஆலக்கள்ளிப் பூ தந்து
பிசு பிசுத்த கன்னத்திலிட்ட முத்தத்தை
வம்பாரை மர நிழலில் வீற்றிருந்த
மழை தரும் மாணிக்க ராசா
சலனமேதுமில்லாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.