ரச்சி
பச்சிலை பறிக்கச் சென்றவள்
வீடு திரும்பவில்லையா?
கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது
அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று…
தொளுகழலெரிச்சோடு
வாசற்படி பார்த்து நின்றான்
பழஞ் சாம்பவன்
உச்சியில் இருவாட்சியும்
பின்னலில் தாழையும் சூடி
பச்சிலை சகிதம் நுழைந்தாள்
அடியேய்…
கொடுஞ் சாம்பவச்சி
மாற்றான் காட்டில்
மனமுவந்து யெப்படிப் பறித்தாய்
வேட்டுவச்சி
நீர் நிலை கடக்கும் நேரமது
அவள் தாண்டி ஓரம்பு எனைத் தீண்டுமா?
இரு விசும்பு அதிர மின்னிய
கணப் பொழுதில்
தாழையோடு
சேர்த்தணைத்திருந்தான்
பழஞ் சாம்பவன்.
மண்டா
காவாளையும் கஞ்சங்கோரையும்
மண்டிக் கிடந்த படுங் கரம்பது
அகல உழுவதே ஆழ உழலாமென
ஒன்றுக்கு இரண்டு சாலோட்டி
விதைத்தாயிற்று
வெரலாட்டும் மொளைக்குமெனச்
சொல்லியே கொடுத்தான் கமிட்டிக்காரன்
மானாவரிப் பயிரில் மக்க மசுராக் கிடைக்கும்
எவன் வூட்டுப் பன்னிடா யிது
வடவண்டக் கோடியிலிருந்து விரட்டு
ஆலக்கள்ளியோரம் குத்திச் சொறுவ
ஒப்பன் ஒக்காந்திருக்கான்
மொத்தமா நிண்டுச்சுன்னா
தப்புக்கல்லக்கூட மிஞ்சாது
சாமியாவது கீமியாவதெனக்
குண்டியில் சொறுவி
குடலை உருவியிழுத்தது சுளுக்கி
கைல கிய்ல குத்திக்காம
பரணிலிருந்தெடுத்து
தெக்கேரி மோட்டிலிருக்கும்
தங்கையனிடம் கூர்த் தீட்டுவதே உத்தமம்.
கவிஞர் கள்ளுக் கலையன்
பெருமைக்குப் பிள்ளை பெற்று
புடுக்கை யறுத்துக் கையில் கொடுத்தானாம்
ஆக்கங் கெட்ட ஆகாவளிக்கு
தலையை நீட்டி – அள்ளிக்
கட்டிக்கொண்டதுதான் யென்ன
நாளுங் கிழமையதுவுமா
உசுர்நெல மறைக்கக் கூட
துண்டு துணிக்கு வக்கில்லை
நாசமத்ததை யெழுதிதான்
என்ன லாவம்
மூலக்கடிச்சானுக்கு மட்டும்
எவள் சாண்டையை வார்த்துத் தருகிறாள்
வரட்டும் ராத்திரிக்குக்
கட்டுத்தறி கவி பாடும்
கட்டிலுமா?
பெறத்தியாள்
கொட்டியுந் தாம்பரையும்
கொளத்தடச்சிப் பூத்திருக்கு
குளுரத் தலமொழுகி
தாம் பொறந்த கோட்டக்கிப்
போய் நின்னாள்
கோட்டக்கிச் சொந்தக்காரி
கோட்டான் வருதுயிம்பா
கோலெடுத்து ஓட்டுயிம்பா
அல்லியுந் தாம்பரையும்
அழவா பூத்திருக்கு
அலறத் தலமொழுகி
அரம்மணக்கித் தான் போனாள்
ஆந்த வருதுயிம்பா
அலக்கெடுத்து ஓட்டுயிம்பா
ஒண்ட வந்த சக்களத்தி
ஆத்தைக் கண்டால் சூத்து கழுவுவதும்
அம்மியைக் கண்டால் மிளகாய் அரைப்பது மெதற்கு
தானா வந்ததைத்
தாயாக் கெடுத்தாளாம்
வீணாப் பேச்சென்ன
சோலி மயிறப் பார்ப்பதே சரி.