சாதி இந்துக்களுக்குத் திருவிழா கொண்டாட்டத்திற்கான பொருட்களாக ஒடுக்கப்பட்டோரின் உடைமைகளும் உயிர்களும் தேவைப்படுகின்றன. தங்களுக்குக் கீழிருப்பவர்கள் என்று கருதக்கூடிய மக்கள் குழுவினரைத் துன்புறுத்துவதிலும் உடைமைகளை அழிப்பதிலும் கொலை செய்வதிலும் பெறுகின்ற இன்பம்தான் தங்களுடைய மகிழ்ச்சி என்கிற மனநிலையைச் சாதி அமைப்பிடமிருந்து பெற்றிருக்கிறார்கள் சாதி இந்துக்கள். அந்தச் சமூக அமைப்பை மாற்றியமைத்திருக்க வேண்டிய சமூக சனநாயக நடைமுறைகளும் முயற்சிகளும் ஒரு கட்டத்தைத் தாண்ட முடியாமல் தேங்கி நிற்கின்றன. இந்த ஒரு கட்டம் என்பது சாதி இந்துக்களின் நலனுக்கு உகந்தது என்பதால் தாண்டாமலே இருக்கிறார்கள். இந்தப் போதாமையை,
இட ஒதுக்கீடு மட்டும்தான் சமூக நீதி என்கிற போர்வையைப் போர்த்தி மறைத்து வருகிறார்கள். மற்ற பிரச்சினைகளைப் பேசுவது சாதி இந்துகளுக்குச் சிக்கலானவை என்பதால் அதை இங்கு பேசாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்தப் பொங்கல் தினத்தையொட்டி திருவண்ணாமலை வீரளூர், மதுரை, விழுப்புரம் என்று தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் தலித் மக்கள்மீது ஆதிக்க வகுப்பினரால் வன்முறைகள் ஏவி விடப்பட்டிருக்கின்றன.
வீரளூர் அருந்ததியர் காலனியில் பொதுப் பாதையில் பிணம் தூக்கிச் சென்றதற்காக அங்கிருந்த வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. நாகரிகச் சமுதாயம் என்று நம்மை நாமே சொல்லிக்கொள்ளும் நிலையில் சாதி வெறியின் பரிணாமம் குறைவதற்குப் பதிலாக அழுத்தம் பெற்று வருகிறது என்பதையே இது காட்டுகிறது. அண்மையில் கூட பொது மயானம் பற்றி நீதிமன்றம் பேசியிருக்கக் கூடிய நிலையில் எந்த ஊரிலும் மயானப் பாதைகள் கூட ஒன்றாக இல்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது. சாதி இந்துக்கள் பயன்படுத்தக்கூடிய பாதை பொதுவான பாதை என்றும் தலித்துகள் பயன்படுத்தக்கூடிய பாதை காலனிப் பாதை என்றும் எல்லா ஊர்களிலும் அழைக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசே அனுமதிக்கிறது.
வீரளூரில் அரசு அதிகாரிகளே இந்த நடைமுறையை ஏற்று அதன்படி நடக்க வேண்டுமெனப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
தலித் மக்களும் அதனை ஏற்க வேண்டும் என்று சட்டத்திற்குப் புறம்பாக எதிர்பார்த்துள்ளனர். இதனாலேயே பிரச்சினை அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, தர்மபுரி நத்தம் காலனி தாக்குதல் போல தலித் மக்களின் வீடுகள் மற்றும் வீடுகளிலுள்ள பொருட்களை அடித்துச் சூரையாடியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்கவில்லை. மாறாகப் பாதிப்பை ஏற்படுத்திய மக்களை மட்டும் பார்த்துச் சென்றார்கள் என்று தலித் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வீரளூர் தாக்குதலுக்கு முந்தைய நாளில் கூட ஆதமங்கலம் என்ற ஊரில் ஜல்லிக்கட்டுப் பார்க்கச் சென்ற தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அந்தச் சட்டமன்ற தொகுதி ஆளும் கட்சி எம்எல்ஏ வின் சொந்தச் சாதியினர் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிகாரம் தருகிற உளவியல் பலம் இது. மொத்தத்தில் அங்கிருந்த அரசு நிர்வாகமும் ஆளும் கட்சித் தரப்பும் ஆதிக்கச் சாதியினர் தரப்பைப் பகைத்துக்கொள்ளத் தயாரில்லை என்பது வெளிப்படை. வன்முறைகள் நடந்த எல்லா இடங்களிலும் காவல்துறை ஒரேவிதமான நடைமுறையைக் கையாண்டிருக்கிறது. அதாவது, ஒரு தரப்பு மட்டும் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மட்டுமல்லாமல் தலித் மக்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது இரண்டு தரப்பாரிடமும் பேசி வழக்கைத் திரும்பப் பெறச் செய்து பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியாகும். இந்த வன்முறைகளுக்கு எதிராகத் தலித் இயக்கங்கள் போராட்டம் செய்கின்றன; புகார் அளிக்கின்றன; வழக்குத் தொடுக்கின்றன; விவாதிக்கின்றன. ஆனால், இவற்றில் எதையுமே செய்யாமல் ஆதிக்கச் சாதிகள் அரசு நிர்வாகத்தைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கின்றன. ஆளும் கட்சியைப் பணிய வைக்கின்றன. இதுதான் சாதி ஆதிக்கத்தின் பண்பு.
இதையெல்லாம் விட இந்த வன்முறைகளைச் செய்யச் சாதிச் சங்கப் பனியன்களை அணிந்துகொண்டு கூட்டம் கூட்டமாக ஆதிக்கச் சாதியினர் இயல்பாகச் சென்றுகொண்டிருப்பதைக் காணொளிகளில் பார்க்க முடிகிறது. மதுரை உச்சரிச்சான்பட்டியில் தலித் இளைஞரைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். இத்தகைய மந்தைச் சூழல் யாருக்கும் எத்தகைய பதற்றத்தையும் தரவில்லையெனில் இறந்துபோனவர்களை விட வாழ்ந்துகொண்டிருப்பவரைப் பற்றித்தான் நாம் அதிக கவலைப்பட வேண்டியிருக்கிறது.
எல்லோரும் பண்டிகைகளைக் கொண்டாடும் போது இந்த மக்கள் மட்டும் தங்கள் மீதான தாக்குதல்களை நினைத்துப் புகாரளிக்க ஓடக்கூடியவர்களாகவும் கைகூப்பிக் கெஞ்சக் கூடியவர்களாகவும் எப்போது தாக்குதல் நடக்கும் என்று அஞ்சக்கூடியவர்களாகவும் ஏன் இருக்க வேண்டும்? இந்த நிலைக்கு என்ன காரணம்? இங்கு என்ன பிரச்சினை என்பதோ, பிரச்சினைகளுக்கான காரணங்கள் எவை என்பதோ யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரியும். இவற்றில் என்ன தலையீடு செய்யப் போகிறோம்? இதுவரை என்ன வகையான தலையீடு செய்திருக்கிறோம்? இதற்கு என்ன தீர்வு? என்பவற்றைப் பேச வேண்டும்; செயற்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் இங்கில்லை.
நடந்தவற்றையே மீண்டும் மீண்டும் விளக்கிக்கொண்டிருப்பதிலிருந்து நாம் வெளியேற வேண்டிய வேளை இது. இவ்வாறு நாம் எதிர்பார்த்தாலும் இந்த விசயத்தைப் பேச வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம் என்பதும் எதார்த்தமாக இருக்கிறது.