ஜூலை 21 காலை அவரைச் சந்திக்கும்போது சமைத்துக்கொண்டிருந்தார். “எனக்கு நான்கு வயதில் குழந்தை இருக்கிறது” என்றவருக்கு வயது 44. மூன்று மாதங்களுக்கு முன்பு இக்குழந்தையின் பொருட்டே தன்னை உயிரோடு விட்டுவிடும்படி பாலியல் வன்முறையாளர்களிடம் அவர் மன்றாடியிருக்கிறார். “அதன் பிறகே, உன்னைக் கொல்லக் கூடாதென்றால் ஆடைகளைக் கழற்று என்று உத்தரவிட்டனர்” என்றார். வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த கும்பலால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அவமானமாகக் கருதப்படும் இச்சம்பவத்தின் தாக்கம் குறித்து நாட்டின் கடைக்கோடியில் வாழும் அவர் அறிந்தேயிருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் தொடங்கிய கலவரம் பற்றி தொடர்ந்து மௌனம் காத்துவந்த பிரதமர் மோடியும் ஒருவழியாகப் பேசிவிட்டார்.
வன்கொடுமையிலிருந்து தப்பியவரோடு தொலைபேசி வழியிலான உரையாடல்:
மே 4 அன்று என்ன நடந்தது?
நாங்கள் காங்போக்பி மாவட்டத்திலுள்ள பைனோம் கிராமத்தில் வசித்துவந்தோம். அன்று காலை, கலவரக் கும்பல் எங்கள் பகுதியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக மைதேயி சமூகத்தினர் சிலர் எச்சரித்து, எங்களைத் தப்பிப் போகச் சொன்னார்கள். பலர் காடுகளுக்குள் ஓடிவிட்டனர். எங்கள் குகி இனப் பெண்ணோடு என் குழந்தையை அனுப்பிவிட்டு, கணவரோடு தப்பிச் செல்வதற்குள் கும்பல் கிராமத்தைச் சூழ்ந்துவிட்டது. பிற கிராமங்களைச் சேர்ந்த குகியினரோடு கணவர் சென்றுவிட, நான் வேறு கூட்டத்தினரோடு சேர்ந்துகொண்டேன். அதுவொரு கெடுவாய்ப்பாக அமைந்துவிட்டது.
“உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் (மைதேயி) பெண்ணைச் சுராசந்த்பூரில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் (இந்தச் சர்ச்சை போலி காணொலியால் ஏற்பட்டது). உங்களுக்கும் அதே கதிதான்” என்று கும்பலில் இருந்த சிலர் கூறினர். எங்கள் கூட்டத்தில் இருந்த இளவயது பெண்ணின் தந்தையும் மகனும் அவர்களை எதிர்க்க, எங்கள் கண் முன்னே இருவரையும் கொன்றனர். “எனக்குக் குழந்தை இருக்கிறது. என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன். அப்படியானால் உன் ஆடைகளை அகற்று, இல்லையென்றால் எல்லோரையும் கொன்றுவிடுவோம் என்றனர். எங்களுக்கு வேறு வழியுமில்லை.
பிறகு என்ன நடந்தது?
நாங்கள் ஆடைகளைக் கழற்றிய பிறகு, சிலர் எங்களைப் பிடித்து நிர்வாணமாகவே நடக்க வைத்தனர். ஆயிரக்கணக்கானோர் கொண்ட கும்பல், தொடர்ச் சீண்டல்களுக்கு ஆளானோம். எங்களை அருகிலுள்ள வயலுக்கு இழுத்துச் சென்றனர். அப்போதும் ‘என் குழந்தைக்காகவேணும் என்னை விட்டுவிடுங்கள்’ என்று அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
அங்கிருந்து எப்படித் தப்பித்தீர்கள்?
உள்ளூர் மைதேயி ஆண்கள் சிலர் உதவினர். அவர்கள் குறுக்கிட்டு, தங்கள் சட்டைகளை எங்களுக்கு அணியத் தந்து, அங்கிருந்து உடனே செல்லுமாறு கூறினர். நாங்கள் அவர்களைக் கடந்து சென்றபோது சட்டை அணிந்திருந்த எங்களைச் சிலர் பரிகாசம் செய்தனர். இதைக் கண்ட இன்னும் சில மைதேயி ஆண்கள், சாலையோரத்தில் கிடந்த எங்கள் ஆடைகளை எடுத்துக்கொள்ள உதவினர். தன் தந்தையையும் மகனையும் இழந்த பெண், அவர்கள் சடலங்களின் அருகே சென்றாள். நானும் சென்றேன். மேலும் சென்றால் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று கும்பல் மிரட்டியது. “அவர்கள் இறந்துவிட்டனர். இருக்கும் நம் உயிரையாவது காப்பாற்றிக்கொள்ளலாம்” என்று கெஞ்சி, சடலங்களை அப்படியே விட்டுவிட்டு, அவளை அங்கிருந்து இழுத்துவந்தேன்.
Art by Negizhan
அவருடைய கணவரிடமும் உரையாடினோம்.
உங்கள் மனைவி வன்கொடுமைக்குள்ளாகும்போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?
அவர் சொன்னது போல் நான் வேறு கூட்டத்தினரோடு சென்றுவிட்டேன்.
அந்தக் கும்பலிடமிருந்து எப்படித் தப்பித்தீர்கள்?
நல்வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கும்பலில் இருந்த சில இளைஞர்களின் தந்தைகள் என்னுடைய நண்பர்கள். நான் கிராமத் தலைவரும் கூட. அதனால் அவர்கள் என்னை அடையாளங்கண்டு, “இவரை வேறு பக்கம் அழைத்துச் செல்கிறோம்“ என்று மற்றவர்களிடம் சொல்லி, கும்பலின் பார்வையிலிருந்து மறையும் தூரம் அழைத்துவந்து தப்பிப் போகுமாறு கூறினர். அப்படித்தான் உயிர் பிழைத்தேன்.
சாயிகுள் காவல் நிலையத்தில் புகாரளித்தது யார்?
நான்தான். சம்பவம் நடந்து இரு வாரங்களுக்குப் பிறகு மே 18ஆம் தேதி புகாரளித்தேன். நொங்போக் செக்மாய்தான் அருகிலிருந்த காவல் நிலையம். ஆனால், அங்கு செல்ல பயமாக இருந்தது. அதனால், நாங்கள் தப்பிச் செல்ல நினைத்த காட்டில் மனைவி, குழந்தையோடு சேர்ந்த பிறகு, காம்ஜோங் மாவட்டத்திற்குச் சென்றோம். அங்கு லைரம் குல்லன் கிராமத்தில் உள்ள தங்குல் நாகா குடும்பத்தினரின் வீட்டில் தஞ்சமடைந்தோம். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
அங்கிருந்து சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாமில் குடும்பத்தினரைத் தங்க வைக்கும் எண்ணத்தில் தேங்நௌபல் மாவட்டத்திற்குச் சென்றோம். என் மனைவி இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகு, காங்போக்பி மாவட்டத்திலுள்ள சாயிகுள் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால், அந்தக் காணொலி வெளியாகும் வரை ஒரு நடவடிக்கையும் இல்லை.
இந்திய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறீர்கள். இச்சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கார்கில் போரில் தேசத்தின் மாண்புக்காகச் சண்டையிட்டிருக்கிறேன். ஆனால், என் சொந்த நாட்டில் என் மனைவியின் மாண்பை என்னால் காக்க முடியவில்லை. என் நிலையைச் சொல்ல போதிய வார்த்தைகளும் இல்லை.
இரண்டு மாதங்களாகத் தொடரும் கலவரச் சூழலில், காணொலி வெளியான பிறகே பிரதமர் பேசியிருக்கிறார்.
எனக்கு அரசியல் புரிவதில்லை; நான் நாட்டுக்குச் சேவையாற்றியிருக்கிறேன். நான் பிரதமரிடம் வேண்டுவதெல்லாம் என் மனைவிக்கான நீதியை, என் மக்களுக்கான நீதியை மட்டுமே. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கிராமத்தில் சிறுதொழில் ஒன்றைத் தொடங்கினேன்; ஓய்வூதிய பணத்தைக் கொண்டு மினி டிரக் வண்டியை வாங்கினேன். இன்று என் வீடு இல்லை, மினி டிரக் கொளுத்தப்பட்டுள்ளது. அதனால் என் தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கும்பல் தாக்குதலின் அத்தனை சாட்சியங்களோடு நாங்கள் நிற்கிறோம். இவ்வன்முறைகளை வெளிக்கொண்டுவந்த அனைவருக்கும் நன்றி. நான் கேட்பதெல்லாம் எங்களுக்கான நீதியை மட்டுமே.
நன்றி: thewire.in